என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம்.
    • காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை ராகுல்காந்தி முடிவு செய்வார்

    தமிழ்நாட்டில் 2026 ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளாக திமுக, அதிமுக கூட்டணியை இறுதிசெய்துவிட்டன. ஒருசில கட்சிகள் மட்டுமே இன்னும் கூட்டணியை அறிவிக்கவில்லை.

    நாடாளுமன்ற தேர்தலின்போது உருவான திமுக தலைமையிலான இந்தியக் கூட்டணியே தொடரும் என திமுக தரப்பும், காங்கிரஸும், அதில் இடம்பெற்றுள்ள மற்ற கூட்டணி கட்சிகள் கூறினாலும், திமுக- காங்கிரஸ் இடையே உரசல் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் திமுக-காங்கிரஸ் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. திமுக மதுரை வடக்குத் தொகுதி எம்எல்ஏ தளபதி, 'வார்டுகளில் பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்' என பேசியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    "மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோர் இன்று அதில் பங்கு வேண்டும். இதில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இந்த தேர்தலில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என அவர்கள் நினைக்கிறார்கள். இவையெல்லாற்றையும் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை 'சீட்'டே கொடுக்கக்கூடாது. நாம் இல்லாவிட்டால் இந்தியா கூட்டணியே கிடையாது. ஒரு தொகுதிக்கு 3000, 4000 ஓட்டு தான் இருக்கிறது. வார்டுகளில் பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்" என மதுரையில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திமுக எம்எல்ஏ கோ.தளபதி பேசியிருந்தார்.

    இது கூட்டணிக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்த இவரின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக மதுரை வடக்கு தொகுயில் போட்டியிட கார்கேயிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தார். மேலும் அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது எனவும் தெரிவித்திருந்தார். 

    இந்நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணியும் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,  

    "திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள், நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது? காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை எமது தலைவர் ராகுல்காந்தி முடிவு செய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை.

    அதே போல காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம். அமைதி காக்கிறோம்.

    கூட்டணியின் கண்ணியம் கருதி இதுவரை நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கூட பேசவேண்டிய இடத்தில் தான் பேசியிருக்கிறேன். வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள். அதே கண்ணியத்தை நீங்களும் கடைபிடிப்பதுதான் நல்லது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதலமைச்சர் அவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • நடக்கப்போவது என்.டி.ஏ. Vs தமிழ்நாடு தேர்தல்.
    • அடிமைகளை வைத்துக்கொண்டு டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆளலாம் என பாஜக நினைக்கிறது.

    தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் திமுக மகளிர் அணி சார்பில் 'வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல மாநாடு' இன்று மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  

    "தஞ்சை என்பது திராவிட இயக்கத்தின் கோட்டை. சாதி ஆதிக்க ஒழிப்பு மட்டுமே திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கமல்ல. பெண் விடுதலைதான் நமது அடிப்படை. சாதியால் உயர்வு, தாழ்வு இல்லை என்பதையும், ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்று நடத்துவதும் தவறானது என்பதை உணர்த்தத்தான் உருவாக்கப்பட்டது திராவிட இயக்கம்.

    முதலமைச்சராக எனது முதல் கையெழுத்து மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்குத்தான். ஸ்டாலின் பேருந்து எனவே மக்கள் அதற்கு பெயர்வைத்துள்ளனர். அதுதான் அந்தத் திட்டத்திற்கான வெற்றி. புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என பலத்திட்டங்களை பெண்களுக்காக நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

    பெண்கள் கேட்காமலேயே அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. மகளிர்தான் எப்போதும் பவர்ஹவுஸ். பெண்களையும், இளைஞர்களையும்தான் நான் அதிகம் நம்புகிறேன். இரண்டு நாட்களுக்கு முன் தமிழ்நாடு வந்த மோடி ஏராளமான பொய்களை சொல்லிவிட்டு சென்றுள்ளார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். இந்திய மாநிலங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் என்பதை அடித்துச் சொல்கிறேன். 

    பிரதமர் மணிப்பூரை மறந்துவிட்டார். 260 மணிப்பூரில் கொல்லப்பட்டுள்ளனர். உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். மூன்று ஆண்டுகளாக அங்கு இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரை ஆட்சிசெய்தது பாஜகதான். டபுள் என்ஜின் ஏன் மணிப்பூரை காப்பாற்றவில்லை?

    பாஜக ஆளும் மணிப்பூர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இருந்துதான் நாட்டுக்குள் போதைப் பொருள் பரவுகிறதென ஆதாரப்பூர்வமாக வெளிவரும் செய்தியை பிரதமர் படிப்பதில்லையா? தோற்ற கூட்டணியை புதுப்பித்துவிட்டு, பிரதமர் பில்டப் கொடுத்திருக்கிறார். அந்தக் கூட்டணியில் இருக்கும் அனைவரும், ஒன்றிய விசாரணை ஆணையத்தில் சிக்கி, அந்த வாஷிங் மிஷின் நம்மையும் வெளுக்காதோ எனும் நட்பாசையில் இருக்கிறார்கள்.

    இதே கூட்டணி 2019 மற்றும் 2021ல் தோல்வியுற்றது. பின்னர் 2024ஆம் ஆண்டு இரண்டு தனித்தனியாக பிரிந்து பிறகு சேர்ந்துக்கொள்ளலாம் என மறைமுக கூட்டணியில் வந்தனர். ஆனால், எந்த கெட்டப்பில் வந்தாலும், உங்களுக்கு கெட் அவுட் தான் என தமிழ்நாடு மக்கள் சொல்லிவிட்டனர். தற்போது மீண்டும் உடைந்ததை ஒட்டிக்கொண்டு புதிதாக என்.டி.ஏ. என வந்திருக்கிறார்கள்.

    அதிமுக-பாஜக கூட்டணி ஒரு கட்டாயக் கூட்டணி. மிரட்டலால், உருட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி. அமித்ஷாவால் திணிக்கப்பட்ட கூட்டணி. இந்த அடிமைகளை வைத்துக்கொண்டு டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆளலாம் என பாஜக நினைக்கிறது. ஆனால் அவர்களுக்கான பதிலடியை தமிழ்நாடு மக்கள் தருவார்கள்.

    நடக்கப்போகும் தேர்தல், என்.டி.ஏ. Vs மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தேர்தல் கிடையாது. நடக்கப்போவது என்.டி.ஏ. Vs தமிழ்நாடு தேர்தல். நான் என்னைவிட அதிகம் நம்புவது தமிழ்நாட்டு மக்களைத்தான். நாங்கள் உங்களை எப்போதும் சந்திக்க வேண்டும். நீங்கள் எப்போதும் எங்களுக்கு துணைநிற்க வேண்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள்". என தெரிவித்தார். 

    • ஆண்டுமுழுவதும் ஆளுநர்களுக்கு ரூ.700 கோடி செலவுசெய்து கொண்டிருக்கிறோம்.
    • தமிழ்நாடு ஆளுநருக்கு குடியரசு என்றால் என்னவென்றே தெரியாது.

    தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டிக்கு அருகிலுள்ள திருமலைசமுத்திரம் பகுதியில் "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    இதில் பேசிய கனிமொழி, 

    "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே பெண்களுக்கான ஆட்சியை நடத்தமுடியும் என உங்களுக்கு நன்றாக தெரியும். யார் வேண்டுமானாலும் சொல்லலாம், நான் பத்தாயிரம் கொடுக்கிறேன், 2 ஆயிரம் கொடுக்கிறேன், குலவிளக்கு திட்டம் என எதை வேண்டுமானாலும் சொல்லலாம், எதை சொன்னாலும் எதுவும் வராது என அனைவருக்கும் தெரியும். ஆனால் மகளிர் உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு வரும்.

    தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் டபுள் எஞ்சின், டபுள் எஞ்சின் எனக் கூறுகிறார்கள். எனக்கு தெரிந்த அந்த எஞ்சின் வேலைசெய்யாத என்ஜினாகத்தான் உள்ளது.தேராத, பழுதடைந்த என்ஜினாகத்தான் இருக்கிறது. குஜராத்தில் மொத்த அரசு மருத்துவக்கல்லூரிகள் ஆறுதான். ஆனால் தமிழ்நாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் உள்ளன.

    அதற்கான படுக்கை வசதிகள் கிட்டதட்ட 1 லட்சத்தை தொட்டுக்கொண்டு இருக்கின்றன. அதுபோல் தமிழ்நாட்டில்தான் தொழில்வளர்ச்சி அதிகம். கிட்டத்தட்ட 38 ஆயிரம் தொழிற்சாலைகள் மேல் இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. அதில் 42% பெண்கள் பணிபுரிகின்றனர்.

    மின்னணு ஏற்றுமதியில் முதல் இடம். ஜவுளி ஏற்றுமதியில் முதலிடம். வேறு எந்த டபுள் எஞ்சினும் இதில் இல்லை. பெண்களுக்கான குற்றங்களும் அங்குதான் அதிகம். சமூக முன்னேற்றக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம். பெரிய மாநிலங்களில் முதலிடம் தமிழ்நாடுதான்.

    இன்று ஒரு டாலருக்கு 92 ரூபாய் நாம் கொடுக்கவேண்டும். யார் எந்த கனவில் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அதற்கான பாடத்தை தமிழ்ப் பெண்கள் கூறுவார்கள். தமிழ்நாடு ஆளுநருக்கு குடியரசு என்றால் என்னவென்றே தெரியாது. ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையில் தமிழ்நாடு உரையை வாசிக்காததற்கு ஏதேனும் ஒரு காரணம். வரவில்லை என்று முன்னரேக் கூறலாம். ஆனால் மக்கள் தேர்ந்தெடுத்த அரசை அவமதிக்க வேண்டும் என்று செய்யும் நிலையை பார்க்கிறோம்.

    ஆளுநர் உரை வேண்டாம் என அரசியலமைப்பை மாற்றவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் என்னை பொறுத்தவரை ஆளுநரே வேண்டாம். அவர்களால் எந்தப் பலனும் இல்லை. இதனைத்தான் திமுகதான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறது. ஆண்டுமுழுவதும் ஆளுநர்களுக்கு ரூ.700 கோடி செலவுசெய்து கொண்டிருக்கிறோம். இதனை எத்தனை பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு பயன்படுத்தலாம்.

    தேர்தல் நேரத்திற்கான சுற்றுலா பிரதமர்தான் மோடி. சமீபத்தில் தமிழ்நாட்டில் பேசிய பிரதமர் அனைத்துக் கட்சிகளின் பேரையும் கூறினார். ஆனால் அதிமுகவின் பெயரை குறிப்பிடவில்லை. திமுகவிற்கு என்ன கவலை என்றால், கடைசிவரை அதிமுக சொல்லாத பெயராகவே போய்விடப் போகிறது. ஜாக்கிரதையாக இருங்கள். கட்சியின் பெயரையே நிராகரிக்கும் இடத்தில் அதிமுகவின் கூட்டணி உள்ளது.

    தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களை ஆளாக்கிய கட்சிக்கு துரோகம் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்." என தெரிவித்தார். 

    • தேர்தல் வரும்போதெல்லாம் பிரதமர் மோடி தமிழகம் வருவது வழக்கம்.
    • சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு உள்ளது.

    திருச்சி செங்கிப்பட்டியில் நடைபெறும் டெல்டா மண்டல திமுக மகளிரணி மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மாதத்திற்கு ஒரு மாநாடு, சந்திப்பை நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. இந்தி திணிப்புக்கு எதிராக பெண்களை திரட்டி போராடியவர்கள் இந்த மண்ணை சேர்ந்தவர்கள் தான்.

    தேர்தல் வரும்போதெல்லாம் பிரதமர் மோடி தமிழகம் வருவது வழக்கம். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு உள்ளது.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெறும் முதல் 4 இடங்களில் உள்ள மாநிலங்களை ஆள்வது பாஜக தான். பாஜகவின் முரட்டு அடிமையை நம் கண் முன் காட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி.

    இந்தி திணிப்புக்கு எதிராக பெண்களை திரட்டி போராடியவர்கள் இந்த மண்மை சேர்ந்தவர்கள் தான்.

    மகளிருக்கான அரசு என்பது தான் திராவிட மாடல் அரசுக்கான அடையாளம்.

    திராவிட மாடல் பார்ட்-2க்கு மக்கள் தயாராிவிட்டார்கள். நாம் தான் மீண்டும் வெல்வோம். நாம தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.

    பில்கிஸஅ பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தது பாஜக.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும்.
    • அன்புதலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன்.

    மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று தலைவர் கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன் என்றும், தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புதலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன்.

    தன்மான காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார தீமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலில் அவரது ரசிகர்களை கட்டுப்படுத்த முடிகிறதா?
    • அறையிலேயே அமர்ந்து அரசியல் செய்தால் எப்படி?

    தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து மாநிலத்தின் ஆளுங்கட்சியான திமுகவை மட்டுமே விமர்சித்தார். பாஜக தங்கள் கொள்கை எதிரி என்றுக் கூறிகொண்டாலும், அக்கட்சியின் பெயரைக் கூட பயன்படுத்தவில்லை என பல விமர்சனங்கள் எழுந்தது. மேலும் தமிழ்நாட்டின் மற்றொரு பெரும்கட்சியான அதிமுகவை தாக்கி எந்தவொரு கருத்தையும் முன்வைக்கவில்லை. இதற்கு விளக்கமளிக்கும் விதமாக கடந்தமுறை பேசிய விஜய், களத்தில் இருக்கும் கட்சிகளோடு மட்டும்தான் மோதல் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் நேற்று மாமல்லபுரத்தில் நடந்த அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், அதிமுகவை "ஊழல் சக்தி" என்று விஜய் நேரடியாக விமர்சித்தார். முன்னாள் ஆட்சியாளர்கள் பாஜகவிற்கு அடிமையாக இருந்திருக்கிறார்கள், அவர்களை நம்பிப் பிரயோஜனம் இல்லை என்றும் குறிப்பிட்டார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் அண்ணாவின் கொள்கைகளை மறந்து மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருவதாகத் தெரிவித்தார்.

    இதற்கு அதிமுக தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. நேற்று விஜய்யை விமர்சித்து அதிமுக ஐடி விங் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை விடப்பட்டது. பாஜக தலைவர்களும் பலர் விஜய்யை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் இந்தப் பேச்சு குறித்து பதிலளித்துள்ள அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,

    "அரசியலுக்கு வருகிறார், புதுமுகம் வரட்டும் என நினைத்தோம். நான் உண்மையாக அவரை வரவேற்றேன். ஆனால் யார் ஆதரித்தோமோ, எங்கள் காதையே கடித்தால் நாங்கள் சும்மா இருப்போமா? 41 பேர் இறந்துள்ளனர். எங்காவது இதுபோல் நடந்ததுண்டா? முதலில் அவரது ரசிகர்களை கட்டுப்படுத்த முடிகிறதா? உலகத்தில் எங்கும் கிடையாது, இறந்தவர்களின் அழைத்து வீட்டில் துக்கம் விசாரிப்பது.

    இது தமிழ்நாட்டில் புதிது. இதுதான் விஜய்யின் புதிய திட்டம். ஒரு புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளார். அரசியல் இயக்கம் தொடங்கிவிட்டு, அறையிலேயே அமர்ந்து அரசியல் செய்தால் எப்படி? இப்போது இருக்கும் புகழை வைத்து அப்படியே மக்களிடம் ஓட்டை வாங்கிவிடலாம் என நினைக்கிறீர்கள். அரசியல் இயக்கம் தொடங்கினாலே மக்களுக்கு களத்தில் சென்று பணியாற்றவேண்டும். பாருங்கள் இப்போதுதான் வந்தார், களத்தில் இறங்கி எவ்வாறு வேலைசெய்கிறார் என மக்கள் பேசவேண்டும்.

    வாயில் வடைசுடுவார். ஒவ்வொரு வீட்டிலும் ஓட்டு உள்ளதா? எந்த வீட்டில் உள்ளது? எத்தனை வீட்டிற்கு சென்று இவர் பார்த்தார்? கணக்கெடுத்தாரா? எல்லாம் பில்டப்தான், கதாநாயகனாக இருந்தவருக்கு பில்டப்தான் கொடுப்பார்கள்" என தெரிவித்துள்ளார். 

    • சுமார் 30 கிலோ எடை கொண்ட 60 மூட்டை பீடி இலை மூட்டைகள் மொத்தம் 1800கிலோ இருந்தது தெரிய வந்தது.
    • போலீசார் வருவதை அறிந்து கொண்டு கடத்தலில் ஈடுபட்டவர் நபர்கள் பைபர் படகுடன் தப்பி ஓடினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட கியூபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமசந்திரன் பிரம்ம நாயகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா, கேப்ரியல் ஆகியோர் தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இரவு முழுவதும் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் திருச்செந்தூர் காயல்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் வழியில் இன்று அதிகாலை 3.15 மணிக்கு சந்தேகத்திற்கு இடமாக வந்த லோடு வாகனத்தை நிறுத்தி அதில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது இலங்கைக்கு படகுமூலம் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 60 மூட்டை பீடி இலை மூட்டைகள் மொத்தம் 1800கிலோ இருந்தது தெரிய வந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் சாத்தான்குளம் சவுந்தரபுரம் பகுதியை சேர்ந்த கற்பக ராஜேஸ்வரன் (40) என்பவரை கைது செய்தனர். போலீசார் வருவதை அறிந்து கொண்டு கடத்தலில் ஈடுபட்டவர் நபர்கள் பைபர் படகுடன் தப்பி ஓடினர்.

    கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், சரக்கு வாகனம் மற்றும் கைது செய்யப்பட்ட டிரைவர் ஆகியோர் தூத்துக்குடி சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

    கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் ஆகும். 

    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    31 மற்றும் 01-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    நாளை மற்றும் நாளை மறுநாள் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    29 மற்றும் 30-ந்தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சிக்கு புராண வரலாறு உண்டு.
    • வருகிற 1-ந்தேதி 10-ம் திருநாளன்று தைப்பூச மண்டபத்தில் இறங்கி சுவாமி-அம்பாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4-ம் நாளான இன்று பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி வேத பட்டர்கள் வீதி, வீதியாக சென்று நெல் சேகரித்தனர். அந்த நெல், நெல்லையப்பர் கோவில் சன்னதி முன்பு வைக்கப்பட்டது.

    அங்கு பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட வைபவம் அதாவது நெல் இருந்த இடத்தை சுற்றி மழை பெய்ததற்கு அடையாளமாக தண்ணீர் தெளிக்கப்பட்டது.

    நெல் இருந்த மேடையில் மட்டும் தண்ணீர் படாமல் இருந்தது. அப்போது அந்த நெல் மேடைக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில், பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா வருதல் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் பேஸ்கார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சிக்கு புராண வரலாறு உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையப்பர் கோவில் பட்டர்கள் வீடு, வீடாக சென்று நெல் யாசகமாக பெற்றனர்.

    அந்த நெல்லை, நெல்லையப்பர் கோவில் முன்பு காய வைத்து விட்டு, தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அப்போது திடீரென்று பலத்த மழை பெய்து, வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் பதறிய பட்டர்கள் தாங்கள் காயவைத்த நெல் மழையில் நனைந்து தங்களுக்கு சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் போய்விடுமோ என்ற மனவேதனையுடன் நெல்லையப்பர் கோவிலுக்கு வந்தனர். அங்கு அவர்கள் பார்த்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.

    தங்கள் காயவைத்த பகுதியில் மட்டும் மழை பெய்யாமல், அதை சுற்றி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாக புராண வரலாறுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை நினைவு படுத்தும் வகையில் ஆண்டு தோறும் நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    வருகிற 1-ந்தேதி 10-ம் திருநாளன்று தைப்பூச மண்டபத்தில் இறங்கி சுவாமி-அம்பாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. மறுநாள் (2-ந்தேதி) சந்தி விநாயகர் கோவில் அருகே திருக்காட்சி வைபவமும், வருகிற 3-ந்தேதி நெல்லையப்பர் கோவில் வெளி தெப்பத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.

    • மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
    • முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் வட்டம், உடையநாச்சி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 45) என்பவர் கடந்த 24-ந்தேதி இரவு கட்டிடப் பணி நடந்து கொண்டிருந்த அவரது வீட்டிற்கு மின்விளக்குப் போட முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    உயிரிழந்த ரமேஷ் என்பவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • கடந்த தேர்தலில் பெறப்பட்ட மனுக்களுக்கு எந்தவிதமான தீர்வும் காணப்படவில்லை.
    • தி.மு.க. என்ற திமிங்கலம் அனைத்து கட்சிகளையும் விழுங்கி வருகிறது.

    திருப்பூர்:

    இந்து மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜுன் சம்பத் திருப்பூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

    தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்றைய தின கூட்டத்தில் ஊழல் இருக்காது, எனது ஆட்சியில் ஊழலை அனுமதிக்க மாட்டேன் என பேசி உள்ளார். லஞ்ச ஊழல் இல்லாத ஆட்சி என்பது வெற்றுப்பேச்சு .

    தி.மு.க. எல்லா சாதனைகளையும் செய்து விட்டதாக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிக்கிறார். இது மிகப்பெரிய பொய். சாராய விற்பனை மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதன்மையாக உள்ளது. அவரின் குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் தொழில்கள் நம்பர் ஒன்னாக உள்ளது. நிம்மதியாக வீட்டில் உறங்குங்கள். மக்கள் உங்களை இந்த தேர்தலில் தோற்கடித்து வீட்டில் தூங்க வைப்பார்கள்.

    கடந்த தேர்தலில் பெறப்பட்ட மனுக்களுக்கு எந்தவிதமான தீர்வும் காணப்படவில்லை. இந்த முறை உங்கள் கனவை நனவாக்குகிறோம் என்று சொல்கிறார்கள். மக்களை ஏமாற்றுவது மட்டும்தான் தி.மு.க.வின் வேலை. பிப்ரவரி 15-ந்தேதி இந்து மக்கள் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. தி.மு.க. அரசு அகற்றப்பட வேண்டும். அதற்காகத்தான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் இன்று தி.மு.க.வில் ஐக்கியமாகிவிட்டது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் தி.மு.க.வில் போட்டியிட்டு தி.மு.க.வாக மாறிவிட்டார். ம.தி.மு.க.வும் தி.மு.க.விடம் ஐக்கியம் ஆகிவிட்டது. தி.மு.க. என்ற திமிங்கலம் அனைத்து கட்சிகளையும் விழுங்கி வருகிறது என்றார். 

    • நமது ஆட்சியில் ஏற்கனவே பல சாதனைகளை படைத்து விட்டோம்.
    • இனி அந்த சாதனையை மிஞ்சும் அளவிற்கு மேலும் பல சாதனைகளை படைக்க போகிறோம்.

    தஞ்சாவூா்:

    ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர முக்கிய ஆதரவாளராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்.

    இவர் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ. பன்னீர்செல்வத்தின் அமைப்பிலிருந்து விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இதற்காக வைத்திலிங்கம் தனது ஒரத்தநாடு சட்டமன்ற எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் .

    இதையடுத்து தஞ்சை செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்று வரும் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் தனது ஆதரவாளர்கள் 10,000-க்கும் மேற்பட்டோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநாட்டு பந்தல் அருகே இதற்காக தனியாக அமைக்கப்பட்ட மேடைப்பந்தலில் நடைபெற்ற விழாவில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ வரவேற்றார். துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்தார். அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    தி.மு.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரால் இணைக்கப்பட்ட அனைவரையும் மனதார வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வரும் வழியில் நான் பேச வேண்டிய அவசியமில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த இணைப்பு விழாவில் கூடிய கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்த்த போது பேசவில்லை என்றால் அது சரியாக இருக்காது. அதனால் அனுமதி வாங்கி பேசினேன்.

    இது இணைப்பு விழாவா அல்லது இணைப்பு விழா மாநாடா என்று நினைக்கும் அளவிற்கு பிரமாண்டமாக அமைந்துள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையில் வைத்திலிங்கம் பணியாற்றி உள்ளார்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பிரிந்தது. வைத்திலிங்கம் மனவேதனையுடன் காணப்பட்டார். சட்டசபையில் கூட அவர் கவலையுடன் தான் இருந்தார். இதனை நான் அப்போதே பார்த்தேன். சுய மரியாதை முக்கியம் என உணர்ந்து தற்போது வைத்திலிங்கம் தி.மு.க.வில் லேட்டாக இணைந்துள்ளார். லேட்டாக இணைந்தாலும் லேட்டஸ்டாக இணைந்து விட்டார்.

    தேர்தல் நெருங்கி விட்டது. நாம் மிகப்பெரிய வெற்றி பெற போகிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்று திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் அமைப்போம்.

    நமது ஆட்சியில் ஏற்கனவே பல சாதனைகளை படைத்து விட்டோம். இனி அந்த சாதனையை மிஞ்சும் அளவிற்கு மேலும் பல சாதனைகளை படைக்க போகிறோம். தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என்று பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர் கல்வி துறை அமைச்சர் கோவி செழியன், டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×