என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • நமது ஆட்சியில் ஏற்கனவே பல சாதனைகளை படைத்து விட்டோம்.
    • இனி அந்த சாதனையை மிஞ்சும் அளவிற்கு மேலும் பல சாதனைகளை படைக்க போகிறோம்.

    தஞ்சாவூா்:

    ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர முக்கிய ஆதரவாளராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்.

    இவர் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ. பன்னீர்செல்வத்தின் அமைப்பிலிருந்து விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இதற்காக வைத்திலிங்கம் தனது ஒரத்தநாடு சட்டமன்ற எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் .

    இதையடுத்து தஞ்சை செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்று வரும் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் தனது ஆதரவாளர்கள் 10,000-க்கும் மேற்பட்டோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநாட்டு பந்தல் அருகே இதற்காக தனியாக அமைக்கப்பட்ட மேடைப்பந்தலில் நடைபெற்ற விழாவில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ வரவேற்றார். துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்தார். அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    தி.மு.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரால் இணைக்கப்பட்ட அனைவரையும் மனதார வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வரும் வழியில் நான் பேச வேண்டிய அவசியமில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த இணைப்பு விழாவில் கூடிய கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்த்த போது பேசவில்லை என்றால் அது சரியாக இருக்காது. அதனால் அனுமதி வாங்கி பேசினேன்.

    இது இணைப்பு விழாவா அல்லது இணைப்பு விழா மாநாடா என்று நினைக்கும் அளவிற்கு பிரமாண்டமாக அமைந்துள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையில் வைத்திலிங்கம் பணியாற்றி உள்ளார்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பிரிந்தது. வைத்திலிங்கம் மனவேதனையுடன் காணப்பட்டார். சட்டசபையில் கூட அவர் கவலையுடன் தான் இருந்தார். இதனை நான் அப்போதே பார்த்தேன். சுய மரியாதை முக்கியம் என உணர்ந்து தற்போது வைத்திலிங்கம் தி.மு.க.வில் லேட்டாக இணைந்துள்ளார். லேட்டாக இணைந்தாலும் லேட்டஸ்டாக இணைந்து விட்டார்.

    தேர்தல் நெருங்கி விட்டது. நாம் மிகப்பெரிய வெற்றி பெற போகிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்று திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் அமைப்போம்.

    நமது ஆட்சியில் ஏற்கனவே பல சாதனைகளை படைத்து விட்டோம். இனி அந்த சாதனையை மிஞ்சும் அளவிற்கு மேலும் பல சாதனைகளை படைக்க போகிறோம். தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என்று பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர் கல்வி துறை அமைச்சர் கோவி செழியன், டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய மாவட்ட தலைவர்கள் நியமனத்திலும் சர்ச்சைகள் எழுந்தது.
    • 5 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப் படாது என்று கூறப்படுகிறது.

    தமிழக காங்கிரசில் புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் கடந்த வாரம் வெளியானது. கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களைத் தவிர மொத்தம் 71 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.

    இவர்களில் 6 பேர் மட்டும் ஏற்கனவே மாவட்டத் தலைவர் பதவியில் இருந்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் புதியவர்கள். புதிய மாவட்ட தலைவர்கள் நியமனத்திலும் சர்ச்சைகள் எழுந்தது.

    இது பற்றி மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் கூறும் போது, 'புதியதாக நியமிக்கப்பட்டு உள்ள மாவட்ட தலைவர்களின் பணிகள் 6 மாதம் கண்காணிக்கப்படும். திருப்தி இல்லை என்றால் அவர்கள் மாற்றப்படுவார்கள்' என்றார்.

    இந்தநிலையில் தற்போது புதிதாக மாவட்ட, மாநில நிர்வாகிகள் நியமனமும் நடைபெற உள்ளது. மாநில நிர்வாகிகளை பொறுத்த வரை துணை தலைவர்கள், பொதுச் செயலாளர், செயலாளர்கள் உள்பட சுமார் 200 பேர் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இவர்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என்று கூறப்படுகிறது.

    புதிய நிர்வாகிகள் பெயர் பட்டியலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த வாரத்திற்குள் இந்த பட்டியல் இறுதி செய்யப்பட்டு மேலிட ஒப்புதலுடன் அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். தேர்தல் அறிவிப்பு வருவதற்குள் அனைத்து பொறுப்புகளிலும் நிர்வாகிகளை நியமித்து தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்த தமிழக காங்கிரசார் திட்டமிட்டு உள்ளார்கள். புதிதாக 150 பேருக்கு மேல் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

    ஏற்கனவே மாவட்ட தலைவர்களாக இருந்து அனுபவம் மிக்கவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்காத நிலையில் அவர்களுக்கு மாநில நிர்வாக பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்படாது என்றும் மாவட்ட தலைவர் பதவியில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர்கள் மட்டும் மாநில நிர்வாகிகளாகவும் நியமிக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.

    • பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விஜய்வசந்த் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
    • காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    நாடு முழுவதும் இன்று 77-வது குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் உழைப்பாளர் சிலை அருகே கவர்னர் ஆர்.என்.ரவி தேசியகொடி ஏற்றினார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள், கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியகொடி ஏற்றப்பட்டது.

    அந்த வகையில், நாகர்கோவில் வெட்டுர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விஜய்வசந்த் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார தலைவர்கள் செல்வராஜ், அசோக்ராஜ், தங்கம் நடேசன், பால்துரை, மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான், மயிலாடி நகர தலைவர் நடேசன், காங்கிரஸ் அமைப்பு சாரா துறை மாவட்ட ராதாகிருஷ்ணன், மண்டல தலைவர்கள் செல்வன், சிவபிரபு, மாமன்ற உறுப்பினர் அனுஷா பிரைட், வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு அரசு ஊழியர்களை ஏமாற்றி விட்டார்.
    • அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியே சொல்லி இருக்கிறார்.

    நெல்லை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. இன்று நெல்லையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்பதற்காக பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் அது மாநாடாகவே அமைந்துவிட்டது. இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்தாத அளவுக்கு இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்றார்கள். நிச்சயமாக உறுதியாக தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.

    தே.மு.தி.க. மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் அணி எங்களது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பாக ஒரு வார காலத்துக்குள் பதில் கிடைக்கும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழக முதலமைச்சர் முழுக்க முழுக்க பொய்யான தகவல்களை வழங்கி வருகிறார். தேர்தல் வருவதால் தி.மு.க.விற்கு பயமும், நடுக்கமும் வந்து விட்டது.

    பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு அரசு ஊழியர்களை ஏமாற்றி விட்டார். இதன் மூலமாக அவர் அரசு ஊழியர்களுக்கு திருநெல்வேலி அல்வாவை கொடுத்துள்ளார். யாரையும் யாருக்கும் அடிமையாக வைக்கக்கூடிய கட்சி பா.ஜ.க. இல்லை. அனைவரும் சுதந்திரமாக செயல்படலாம்.

    தமிழக வெற்றிக்கழகத்தில் எத்தனை மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள் என்பது கூட அதன் தலைவருக்கு தெரியாது. விஜய்க்கு பா.ஜ.க. எந்த அழுத்தமும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பா.ஜ.க.வில் ஊழல் இல்லை. தீய சக்தி இல்லை. ஆகையால் பா.ஜ.க.வை பற்றி விஜய் பேசி இருக்க மாட்டார்.

    தி.மு.க.வை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என ஒற்றை எண்ணத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒரே குடைக்குள் வர வேண்டும் என்பதே எனது விருப்பம். அந்த வகையில் தான் டி.டி.வி. தினகரனும் எங்கள் கூட்டணிக்கு வந்துள்ளார். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியே சொல்லி இருக்கிறார் என்றார். 

    • தம்பி விஜய்க்கு இன்னும் அனுபவம் போதவில்லை.
    • NDA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விஜய் எந்த பிரச்சனையும் இல்லாமல் அரசியல் செய்யலாம்.

    மாமல்லபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய விஜய், "ஊழல் சக்தி அ.தி.மு.க. இனி தமிழ்நாட்டை ஆளவே கூடாது" என்று அதிமுகவை முதல்முறையாக கடுமையாக தாக்கி பேசினார்.

    இதற்கு விஜய் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி என்று அதிமுக ஐடி விங் பதிலடி கொடுத்தது. இந்நிலையில், இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் தமிழிசைஇடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அவர், "தம்பி விஜய்க்கு இன்னும் அனுபவம் போதவில்லை. தனித்து விடப்பட்டதால் இப்படி பேசுகிறார் என்று நினைக்கிறேன். அவர் இப்படி பேசுவதால் NDA கூட்டணியின் பலம் குறைந்துவிட போவதில்லை. NDA கூட்டணி நிச்சயம் வெற்றி பெரும். போட்டி என்பது திமுக கூட்டணிக்கும் NDA கூட்டணிக்கும் தான்.

    விஜய்க்கு திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற ன்னம் இருந்தது என்றால்... விஜய் ஒரு 0 மாதிரி... தனியா இருந்தா மதிப்பு கிடையாது. ஆனால் அதே 0 ஒருவர் கூட இருந்தால் அதுக்கு மதிப்பு உண்டு.

    NDA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விஜய் எந்த பிரச்சனையும் இல்லாமல் அரசியல் செய்யலாம். ஆனால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கரூர் சம்பவத்தை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.

    • எந்தவித ஆயுதமும் இல்லாமல் இந்த தேசத்திற்கு மகாத்மா காந்தி விடுதலையைப் பெற்றுத் தந்தார்.
    • காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை வீடு தோறும் எடுத்துச் செல்ல இருக்கிறோம்.

    சென்னை:

    இந்திய குடியரசின் 77-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசியதாவது:-

    பா.ஜ.க தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி வருகிறது. பா.ஜ.க.வினர் முதலில் வரலாறு படிக்க வேண்டும். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் இந்த தேசத்தின் வரலாற்றைப் படிக்க வேண்டும்.

    எந்தவித ஆயுதமும் இல்லாமல் இந்த தேசத்திற்கு மகாத்மா காந்தி விடுதலையைப் பெற்றுத் தந்தார். அகிம்சை முறையில் யாத்திரைகள், பேரணிகள் நடத்தி மகாத்மா காந்தியடிகள் போராடியது பிரிட்டிஷ்காரர்களைக் கலங்கடிக்கச் செய்தது.

    இதெல்லாம் தெரியாத பா.ஜ.க அரசும், பா.ஜ.க தலைவர்களும், மோடியும் வரலாறு தெரியாமல் வரலாற்றுப் பிழைகளைச் செய்து வருகிறார்கள்.

    இந்தக் குடியரசு தினத்தில் நாம் சபதம் ஏற்போம். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியை காங்கிரஸ் கட்சி தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை வீடு தோறும் எடுத்துச் செல்ல இருக்கிறோம்.

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சிதைக்க நினைக்கும் பிரதமர் மோடி அரசை எதிர்த்து வருகிற 2-ந்தேதி முதல் பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறோம்.

    சென்னை, கன்னியாகுமரி, கோவை, திருச்சி உள்ளிட்ட பல மண்டலங்களை உருவாக்கி, மண்டலங்கள் வாரியாகப் பாத யாத்திரை மேற்கொள்ள இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து சேவாதள தலைவர் குங்பூ விஜயன் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

    முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், மாநிலத் துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், இதயத்துல்லா, பொதுச்செயலாளர் எஸ்.ஏ.வாசு, சுமதி அன்பரசு மாவட்டத் தலைவர்கள் கராத்தே ஆர்.செல்வம், ஜெ.டில்லிபாபு, திலகர், கவுன்சிலர் சுமதி புத்தநேசன், மாநிலச் செயலாளர் அகரம் கோபி, எம்.ஜி.ராம்சாமி, கராத்தே ரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் அண்ணா நகர் தொகுதி 2-வது சர்க்கிள் சார்பில் எம்.ஆர்.ஏழுமலை தலைமையில், மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் எம்.எம்.டி.ஏ.கோபி, தேசியக்கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், பூக்கடை ஏ.தேவேந்திரன், எம்.தி.சேகர், என்.தாமஸ், பாலன், சண்முகம், காடகிருஷ்ணன், ராகுல் காந்தி, சுபாஷ், லெனின் குமார், சந்தன் பாபு, ஈஸ்வரன், சந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    • தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர், அமைச்சர்கள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • முதல்வரும், துணை முதல்வரும் இன்று மாலை தஞ்சையில் நடக்கும் திமுக மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

    கவர்னர் ஆர்.என்.ரவி கிண்டியில் உள்ள அவரது மாளிகையில் குடியரசு தினத்தையொட்டி தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று மாலை 4.30 மணிக்கு தேநீர் விருந்து நடைபெறுகிறது.

    குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

    மேலும், தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர், அமைச்சர்கள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல்வரும், துணை முதல்வரும் இன்று மாலை தஞ்சையில் நடக்கும் திமுக மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

    அதனால், முதலமைச்சர் பங்கேற்காதது உறுதியான நிலையில் அமைச்சர்களும் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் அதிகாரிகள் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளனர்.

    திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரின் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அழுத்தமா? நமக்கா? அழுத்தத்திற்கெல்லாம் அடங்குகிற ஆளா நான் என்று விஜய் தெரிவித்தார்.
    • சிபிஐ விசாரணை நெருக்கடி குறித்து விஜய் இவ்வாறு தெரிவித்தார்.

    மாமல்லபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய விஜய், "அழுத்தமா? நமக்கா? அழுத்தத்திற்கெல்லாம் அடங்குகிற ஆளா நான்" என்று தெரிவித்தார்.

    ஜனநாயகம் சென்சார் பிரச்சனை, கரூர் கூட்டநெரிசல் தொடர்பான சிபிஐ விசாரணை நெருக்கடி குறித்து விஜய் இவ்வாறு தெரிவித்தார்.

    இந்நிலையில், திருச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "ஒரு நடிகர் இப்போது கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவர் இன்றையைக்கு அவருடைய செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசுகிறபோது, 'அழுத்தத்திற்கு நான் ஒருபோதும் பயப்படமாட்டேன்' என்று வீரவசனம் பேசியிருக்கிறார். அவர் எப்படி ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றவர் என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். ஒரு சினிமா படம் வெளியாகாமல் போனதற்காக அவரும் அவரது தந்தையும் முதலமைச்சரிடம் கைகட்டி நின்றி என்றைக்கும் நான் உங்களுக்கு எதிரி இல்லை என்றெல்லாம் சொல்லி... அழுத்தத்திற்கு பயந்து கைகட்டி நின்றவர் தான் இன்று வீர வசனம் பேசுகிறார்" என்று தெரிவித்தார்.

    • 2026-ல் ஆட்சி மாற்றம் உறுதி.
    • தமிழக முதலமைச்சராக விஜய் வருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் குழு மணி பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன். 1972-ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியபோதே அதில் தன்னை இணைத்துக்கொண்டார். மக்களின் கவனத்தை ஈர்க்கும் அரசியல் களப்பணிகளில் ஈடுபட்டு தன்னை முன்னிலைப்படுத்திய அவர், எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் அ.தி.மு.க. ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்த போது ஜெயலலிதா அணியில் இடம் பெற்றார்.

    கடந்த 1991-ல் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வேளாண்மை துறை அமைச்சரானார். பல்வேறு மனக்கசப்புகளால் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறிய அவர் 2001-ல் தமிழர் பூமி என்ற புதிய கட்சியை தொடங்கினார். ஆனாலும் அதன் செயல்பாடுகள் நீடிக்கவில்லை.

    அதன் பின்னர் தே.மு.தி.க.வுக்கு சென்ற கு.ப.கிருஷ்ணன், மீண்டும் தாய் கழகமான அ.தி.மு.க.வில் இணைந்தார். கட்சியும் அவரை ஏற்றுக்கொண்டு 2011 சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

    ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பி.எஸ்.சின் கை ஓங்கும் என்ற நம்பிக்கையில் அவரது தலைமையிலான அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் இணைந்து செயல்பட்டார். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகி மவுனம் காத்த அவர் நேற்று சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    இதுகுறித்து கு.ப.கிருஷ்ணன் கூறுகையில், அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க எவ்வளவோ முயற்சிகள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டும் கடைசி வரை அது நிறைவேறவில்லை. மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை கூட அவர்கள் பயன்படுத்தவில்லை. அந்த அளவுக்கு அ.தி.மு.க. பா.ஜ.க.விடம் அடிபணிந்துள்ளது.

    ஆனால் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை தனது கூட்டங்களில் பயன்படுத்துகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை தருவேன் என்று எங்கள் தலைவர்களை உயர்த்தி பிடித்து பேசுகிறார். அவர்களை போன்ற பெரிய தலைவர்களுடன் பணியாற்றிய எனக்கு விஜய்யுடன் பணியாற்றுவதில் எந்த நெருடலும் இல்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்கள் எந்த பக்கம் இருக்கிறார்களோ அந்தப்பக்கம் தான் நாமும் இருக்க வேண்டும். மனதில் இருப்பதை சொல்லி நிறைவேற்ற முடியும் என கருதுகிறேன். வேறு எனக்கு பதவி ஆசை கிடையாது என்றார்.

    தி.மு.க. கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க.வும் வலுவான கூட்டணி அமைத்துள்ளதே எனக் கேட்டதற்கு, நீங்களும், நானும் இங்கே தான் இருப்போம். களத்தில் வேடிக்கை பார்ப்போம். 2026-ல் ஆட்சி மாற்றம் உறுதி. தமிழக முதலமைச்சராக விஜய் வருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.

    • அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • தற்போது அணையில் 56.63 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வந்து கொண்டு இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன் மாதம் 12-ந்தேதியில் இருந்து ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை தண்ணீர் திறக்கப்படும். அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும்.

    இந்த ஆண்டு போதிய தண்ணீர் இருந்ததால் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைந்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர்வரத்தை விட பல மடங்கு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 93.63 அடியாக குறைந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 47 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 56.63 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது.

    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வரும் தண்ணீர் நாளை மறுநாள் (28-ந்தேதி)யுடன் நிறுத்தப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நீர்வளத்துறை சார்பில் அறிவிக்கப்படும்.

    • சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பையை மதுரை மாநகரம் முதலாவதாக தட்டி சென்றுள்ளது.
    • 2-ம் பரிசு திருப்பூர் நகரத்துக்கும், 3-ம் பரிசு கோவை மாவட்டத்திற்கும் கிடைத்தது.

    சென்னை:

    மதநல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோட்டை அமீர் பெயரால் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கத்தை திருப்பூர் மாவட்டம் பூநூல் காடு 3-வது வீதியில் வசித்து வரும் மு.கலிமுல்லா என்பவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு தின விழாவில் வழங்கி கவுரவித்தார்.

    அவருக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையும், சான்றிதழும் வழங்கப்பட்டது. கலிமுல்லா காங்கேயன் வட்டம், கணபதிபாளையம் கிராமத்தில் தனக்கு சொந்தமான 3 சென்ட் அளவுள்ள நிலத்தை விநாயகர் கோவில் கட்டுவதற்காக தானமாக வழங்கி உள்ளார். கோவில் கட்டுவதற்காக ரூ.3 லட்சம் நன்கொடையும் அளித்துள்ளார்.

    இவர் ஆர்.எம்.ஜே. ரோஸ் கார்டன் முஸ்லீம் சமாத் மசூதி சபா கமிட்டி தலைவராக செயல்பட்டு வருகிறார். 60-க்கும் மேற்பட்ட முறை ரத்த தானம் செய்துள்ளார். இவரை பாராட்டி கவுரவிக்கும் வகையில் கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது.

    அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஜி.வீரமணிக்கு வழங்கினார்.

    விருதுடன் பரிசுதொகை ரூ.5 லட்சம், தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளி பதக்கத்தையும் வழங்கினார். இந்த விவசாயி வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்பட்ட நவீன தொழில்நுட்ப பயிற்சிகளின் மூலமாக திருந்திய நெல்சாகுபடி முறையை நன்கு கற்று அதன் அடிப்படையில் நெல் சாகுபடியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

    இவர் செய்த சாகுபடியால் ஹெக்டருக்கு 14,925 கிலோ நெல் மகசூல் கிடைக்கப் பெற்றது. இது மாநிலத்திலேயே முதன்மையாக இருப்பதால் இந்த விருது இவருக்கு கிடைத்து உள்ளது.

    போலி மதுபான ஆலை, கள்ளச்சாராயம் கடத்தல் ஆகியவற்றை கண்டறிந்து சிறப்பான நடவடிக்கை மேற்கொண்ட 5 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    1.விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பி.நடராஜன், 2.ஆரோவில் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் எம்.சத்திய நந்தன், 3. சின்ன சேலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.மணிகண்டன், 4. கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கே.நடராஜன், 5. சேலம் மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு ஏட்டு வி.பி.கண்ணன்.

    சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பையை மதுரை மாநகரம் முதலாவதாக தட்டி சென்றுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்ஸ்பெக்டர் பூமிநாதனிடம் கோப்பையை வழங்கினார்.

    2-ம் பரிசு திருப்பூர் நகரத்துக்கும், 3-ம் பரிசு கோவை மாவட்டத்திற்கும் கிடைத்தது. இதற்கான கோப்பையை இன்ஸ்பெக்டர் பிரேமா, சின்னகாமனன் பெற்றுக் கொண்டனர்.

    • செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் உங்கள் மகள் பிறந்ததில் இருந்தே முதலீடு செய்யலாம்.
    • இந்த திட்டம் மகளின் படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளை சமாளிக்கும்

    பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் நலனுக்காக சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு 2015ம் ஆண்டு தொடங்கியது.

    கடந்த பத்தாண்டுகளாக இந்த திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் இன்னும் பலருக்கும் இந்த திட்டம் குறித்த பொது விவரங்கள் தெரியவில்லை. அதன் காரணமாகவே இந்த திட்டத்தில் இன்னும் எண்ணற்றோர் இணையாமல் உள்ளனர்.

    பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பெற்றோர்கள் பணத்தை சேமிப்பது அவசியமாகும்.

    செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் உங்கள் மகள் பிறந்ததில் இருந்தே முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் மகள்களின் பெயரில் கணக்கு தொடங்கலாம்.

    செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ்,18 ஆண்டுகளுக்குப் பிறகு, பாதித் தொகையைத் திரும்பப் பெறலாம். 21 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம். மகளின் படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளை சமாளிக்கும் வகையில் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கில் ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.250 முதலீடு செய்ய வேண்டும். இதில் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதனுடன் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் இந்தக் கணக்கில் ரூ.1.5 லட்சத்துக்கான வரிச் சலுகையும் கிடைக்கும்.

    செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், ஒருவர் தனது குழந்தை பிறந்த உடனேயே SSY திட்டத்தில் ஒரு கணக்கைத் திறந்து, மாதா மாதம் ரூ.10,000 முதலீடு செய்து வந்தால் தோராயமான 8% வட்டி வருமானத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 60 லட்சம் கிடைக்கும்

    எதிர்காலத்தில் வட்டி விகிதங்கள் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ கடைசியில் கிடைக்கும் தொகை மாறக்கூடும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்

    ×