என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பையை மதுரை மாநகரம் முதலாவதாக தட்டி சென்றுள்ளது.
- 2-ம் பரிசு திருப்பூர் நகரத்துக்கும், 3-ம் பரிசு கோவை மாவட்டத்திற்கும் கிடைத்தது.
சென்னை:
மதநல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோட்டை அமீர் பெயரால் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கத்தை திருப்பூர் மாவட்டம் பூநூல் காடு 3-வது வீதியில் வசித்து வரும் மு.கலிமுல்லா என்பவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு தின விழாவில் வழங்கி கவுரவித்தார்.
அவருக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையும், சான்றிதழும் வழங்கப்பட்டது. கலிமுல்லா காங்கேயன் வட்டம், கணபதிபாளையம் கிராமத்தில் தனக்கு சொந்தமான 3 சென்ட் அளவுள்ள நிலத்தை விநாயகர் கோவில் கட்டுவதற்காக தானமாக வழங்கி உள்ளார். கோவில் கட்டுவதற்காக ரூ.3 லட்சம் நன்கொடையும் அளித்துள்ளார்.
இவர் ஆர்.எம்.ஜே. ரோஸ் கார்டன் முஸ்லீம் சமாத் மசூதி சபா கமிட்டி தலைவராக செயல்பட்டு வருகிறார். 60-க்கும் மேற்பட்ட முறை ரத்த தானம் செய்துள்ளார். இவரை பாராட்டி கவுரவிக்கும் வகையில் கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது.
அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஜி.வீரமணிக்கு வழங்கினார்.
விருதுடன் பரிசுதொகை ரூ.5 லட்சம், தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளி பதக்கத்தையும் வழங்கினார். இந்த விவசாயி வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்பட்ட நவீன தொழில்நுட்ப பயிற்சிகளின் மூலமாக திருந்திய நெல்சாகுபடி முறையை நன்கு கற்று அதன் அடிப்படையில் நெல் சாகுபடியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
இவர் செய்த சாகுபடியால் ஹெக்டருக்கு 14,925 கிலோ நெல் மகசூல் கிடைக்கப் பெற்றது. இது மாநிலத்திலேயே முதன்மையாக இருப்பதால் இந்த விருது இவருக்கு கிடைத்து உள்ளது.
போலி மதுபான ஆலை, கள்ளச்சாராயம் கடத்தல் ஆகியவற்றை கண்டறிந்து சிறப்பான நடவடிக்கை மேற்கொண்ட 5 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
1.விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பி.நடராஜன், 2.ஆரோவில் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் எம்.சத்திய நந்தன், 3. சின்ன சேலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.மணிகண்டன், 4. கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கே.நடராஜன், 5. சேலம் மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு ஏட்டு வி.பி.கண்ணன்.
சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பையை மதுரை மாநகரம் முதலாவதாக தட்டி சென்றுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்ஸ்பெக்டர் பூமிநாதனிடம் கோப்பையை வழங்கினார்.
2-ம் பரிசு திருப்பூர் நகரத்துக்கும், 3-ம் பரிசு கோவை மாவட்டத்திற்கும் கிடைத்தது. இதற்கான கோப்பையை இன்ஸ்பெக்டர் பிரேமா, சின்னகாமனன் பெற்றுக் கொண்டனர்.
- செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் உங்கள் மகள் பிறந்ததில் இருந்தே முதலீடு செய்யலாம்.
- இந்த திட்டம் மகளின் படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளை சமாளிக்கும்
பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் நலனுக்காக சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு 2015ம் ஆண்டு தொடங்கியது.
கடந்த பத்தாண்டுகளாக இந்த திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் இன்னும் பலருக்கும் இந்த திட்டம் குறித்த பொது விவரங்கள் தெரியவில்லை. அதன் காரணமாகவே இந்த திட்டத்தில் இன்னும் எண்ணற்றோர் இணையாமல் உள்ளனர்.
பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பெற்றோர்கள் பணத்தை சேமிப்பது அவசியமாகும்.
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் உங்கள் மகள் பிறந்ததில் இருந்தே முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் மகள்களின் பெயரில் கணக்கு தொடங்கலாம்.
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ்,18 ஆண்டுகளுக்குப் பிறகு, பாதித் தொகையைத் திரும்பப் பெறலாம். 21 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம். மகளின் படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளை சமாளிக்கும் வகையில் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கில் ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.250 முதலீடு செய்ய வேண்டும். இதில் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதனுடன் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் இந்தக் கணக்கில் ரூ.1.5 லட்சத்துக்கான வரிச் சலுகையும் கிடைக்கும்.
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், ஒருவர் தனது குழந்தை பிறந்த உடனேயே SSY திட்டத்தில் ஒரு கணக்கைத் திறந்து, மாதா மாதம் ரூ.10,000 முதலீடு செய்து வந்தால் தோராயமான 8% வட்டி வருமானத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 60 லட்சம் கிடைக்கும்
எதிர்காலத்தில் வட்டி விகிதங்கள் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ கடைசியில் கிடைக்கும் தொகை மாறக்கூடும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
- வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
- பல இடங்களில் சாலைகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இரவிலும், அதிகாலையிலும் பனியின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பரவலாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை திடீரென பலத்த மழைகொட்டியது. பின்னர் மழை ஓய்ந்து இருந்த நிலையில் நேற்று மாலை முதல் மீண்டும் சாரல் மழையாக நீடித்தது. பின்னர் இரவு கனமழையாக கொட்டித்தீர்த்தது. இரவு முழுவதும் விடிய,விடிய மழை பெய்தது.
நேற்றுஇரவு பெய்த பலத்த மழையின் காரணமாக கோயம்பேடு மேம்பாலம், மதுரவாயல் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. கனமழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இன்று காலை முதல் சில இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை நீடித்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
திருமழிசை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளவேடு, நசரத்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. நீண்ட நேரமாக இடைவிடாமல் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடியது. பல இடங்களில் சாலைகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
அப்பகுதியில் மழைநீர் வடிகால் வசதி போதிய அளவில் இல்லாததே தண்ணீர் பாதிப்பிற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். உடனடியாக மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதேபோல் திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை நீடிக்கிறது.
நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு 210 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் தற்போது 3078 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து குடிநீர் தேவைக்கு 184 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.
இதேபோல் சோழவரம் ஏரிக்கு 71 கனஅடி தண்ணீர் வருகிறது. மொத்த கொள்ளளவான 1081 மி.கன அடியில் 518 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 50 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மொத்த கொள்ளளவான 3645 மி.கன அடியில் 3432 மி.கன அடி தண்ணீர் உள்ளது. பூண்டி ஏரிக்கு 50 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரி முழு கொள்ளளவான 3231 மி.கனஅடி முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
- பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது.
- பெரியார் பிராமணர்களை இனப்படுகொலை செய்ய வேண்டுமென பொது வெளியில் உறக்க பேசியவர்
பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களான ரஞ்சனி, காயத்ரி சகோதரிகளுக்கு பதம் ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா சமூக கருத்துக்களையும், மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தி கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.
சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டதற்கு ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "ஈ.வெ.ரா எனப்படும் பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம். கிருஷ்ணா முன்வைத்துள்ளார். பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது.
பெரியார் பிராமணர்களை கூட்டாக இனப்படுகொலை செய்ய வேண்டுமென பொது வெளியில் உறக்க பேசியவர். சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளை கொண்டு பேசியவர். ஆபாசமாக பேசுவதை சமூகத்தில் இயல்பான ஒரு விஷயம்தான் என்ற கருத்தைத் திணிக்க நினைத்தவர் பெரியார்" என்று உண்மைக்கு புறம்பான அவதூறு கருத்துக்களை தெரிவித்தனர்.
பெரியார் குறித்த ரஞ்சனி, காயத்ரியின் இந்த கருத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்தனர்.இது தொடர்பாக எழுத்தாளரும் திமுகவின் செய்தித் தொடர்பாளருமான சல்மா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கர்நாடக இசைப் பாடகர்கள் ரஞ்சனி, காயத்திரிக்கு எத்தனை ஆணவம். இது பெரியார் மண்" என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாக வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு வருகிற 31-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
- 4 ரத வீதிகளிலும் முத்துக்குமார சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசம் முதன்மையானதாகும்.
இந்த திருவிழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்வதுதான். அதன்படி இந்த வருடத்துக்கான தைப்பூசத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி கொடிக்கட்டி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகளுக்கு பின்பு காலை 9.30 மணிக்கு மேல் கொடியேற்றத்துக்கான விழா தொடங்கியது.
வேல், மயில், சேவல் உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவில் உட்பிரகாரமாக வலம் வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவில் கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு இன்று இரவு புதுச்சேரி சப்பரத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் தைப்பூச விழாவில் வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாக வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு வருகிற 31-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று மாலை வெள்ளித் தேரோட்டம் ரத வீதிகளில் நடைபெறும். மணக்கோலத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மறுநாள் (பிப்ரவரி 1-ந் தேதி) தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு தோளுக்கினியாளில் சண்முக நதியில் எழுந்தருளி தீர்த்தம் வழங்கும் நிகழ்வும், மாலை 4 மணிக்கு திருத்தேரேற்றம் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம் நடக்கிறது.
4 ரத வீதிகளிலும் முத்துக்குமார சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். பிப்ரவரி 2-ந் தேதி இரவு 8 மணிக்கு தங்க குதிரை வாகனத்திலும், மறுநாள் 3-ந் தேதி இரவு 9 மணிக்கு பெரிய தங்கமயில் வாகனத்திலும் வீதி உலா நடைபெறும். பிப்ரவரி 4-ந் தேதி தெப்பத்தேர் திருவிழாவுடன் கொடி இறக்கம் நடைபெற்று தைப்பூசத்திருவிழா நிறைவுபெறும்.
தைப்பூசத்தை முன்னிட்டு தற்போதே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பழனி கோவிலுக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இன்று அதிகாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்த நிலையிலும் பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வரும் நாட்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் 30-ந் தேதி முதல் பிப்ரவரி 3-ந் தேதி வரை 5 நாட்களுக்கு மலைக்கோவிலில் நடைபெறும் தங்கரத புறப்பாடு இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4-ந் தேதி முதல் வழக்கம் போல் தங்கரத புறப்பாடு நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தங்கம் தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.
- தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,025-க்கும் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் தங்கம் புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.

தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 375 ரூபாய்க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
25-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000
24-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000
23-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,400
22-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600
21-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
25-1-2026- ஒரு கிராம் ரூ.65
24-1-2026- ஒரு கிராம் ரூ.365
23-1-2026- ஒரு கிராம் ரூ.345
22-1-2026- ஒரு கிராம் ரூ.340
21-1-2026- ஒரு கிராம் ரூ.345
- 77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது .
- எடப்பாடி பழனிசாமி குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பா அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "
நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய குடியரசு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, இந்திய அரசியலமைப்பு அளித்த சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயரிய கோட்பாடுகளின் அடிப்படையில் நமது இந்திய மக்களாட்சி தொடர்ந்து வலுப்பெறும் வகையில் செயல்பட இந்த நன்னாளில் உறுதியேற்போம்.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- படிவங்களை வாங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- 87 ஆயிரத்து 579 பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அதில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டுள்ளனர். தற்போது வாக்காளராக சேர்வதற்கு வருகிற 30-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இடம் மாறி சென்ற வாக்காளர்கள், அந்த இடத்திற்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் எண் 6-ஐ அளித்து தங்களை வாக்காளராக மீண்டும் சேர்த்துக்கொள்ள முடியும். இந்த படிவங்களை வாங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் உதவி புரிந்து வருகின்றனர். அந்த வகையில், இதுவரை 15 லட்சத்து 65 ஆயிரத்து 454 பேர் தங்களை வாக்காளராக சேர்த்துக்கொள்வதற்கு புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதேபோன்று, 87 ஆயிரத்து 579 பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளதாகவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், குடியரசு தின விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி, கவர்னரை வரவேற்றார்.
இந்தியாவின் 77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே இன்று குடியரசு தின விழா நடைபெற்றது.
தமிழக போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், குடியரசு தின விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவரை தொடர்ந்து ராணுவ வாகன அணிவகுப்புடன் கவர்னர் ஆர்.என்.ரவி, விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி, கைகுலுக்கி வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து காலை 8 மணியளவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- சி.எம்.டி.ஏ., குரு ராகவேந்திரா நகர், சீனிவாச நகர், நடராஜ் நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (27.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
அடையாறு: கெனால் பங்க் சாலை, புற்றுநோய் மருத்துவமனை, காந்தி நகர், கெனால் குறுக்குத் தெரு, விவேக் ஷோரூம், கிரசண்ட் அவென்யூ, காமராஜ் கல்லூரி, பம்பிங் ஸ்டேஷன், மலர் மருத்துவமனை, மல்லிபூ நகர், கருணாநிதி தெரு, பாண்டிச்சேரி சாலை, வரதாபுரம் லேக் வியூ சாலை, இந்திரா நகர், காமராஜ் அவென்யூ, டீச்சர்ஸ் காலனி, ஜஸ்டிஸ் ராமசாமி அவென்யூ, கஸ்தூரிபாய் நகர், ECR மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
வடபெரும்பாக்கம்: சி.எம்.டி.ஏ., குரு ராகவேந்திரா நகர், சீனிவாச நகர், நடராஜ் நகர், 200 அடி சாலை, ஆதிநாத் நகர், இபிஎம் நதி, ஜி ஸ்கொயர், வள்ளி பூங்கா, ராமலட்சுமி கல்யாண மண்டபம் சாலை, ஏரிக்கரை, பாலாஜி நகர், ஓமக்குளமேடு, கில்பர்ன் நகர், ஆர்ஆர் நகர், சாரங்கபாணி நகர், சண்முகசுந்தரம் நகர், சீதாபதி 1 முதல் 5-வது தெரு வரை, MRH சாலை.
- வேற்றுமையில் ஒற்றுமை என்பது நூற்றாண்டுகள் கடந்த நாட்டுணர்வுப் பண்பு.
- இந்தியாவின் ஒவ்வொரு மொழியும், இனமும், பண்பாடும் தனித்துவமானவை.
சென்னை:
நாடு முழுவதும் 77-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
பரந்துபட்ட இந்தியா! எண்ணற்ற மொழிகள் இனங்கள், பண்பாடுகள், நம்பிக்கைகள் தழைக்கும் நாடு.
வேற்றுமையில் ஒற்றுமை என்பது நூற்றாண்டுகள் கடந்த நாட்டுணர்வுப் பண்பு.
நாம் அனைவரும் சுயமரியாதை உணர்வுடன், நம்பிக்கையுடன் சுதந்திரத்துடன் வாழும்போது ஒட்டுமொத்த இந்தியாவும் ஒருசேர உயர்கிறது.
இந்தியாவின் ஒவ்வொரு மொழியும், இனமும், பண்பாடும் தனித்துவமானவை. அவை ஒன்றை ஒன்று மதித்து வளப்படுத்துகின்றன.
நமது பலம் என்பது ஒற்றைத்தன்மை அல்ல, பன்முகத்தன்மையே. அந்த பன்முகத்தன்மை காக்கப்படுவதே இந்தியாவைக் காக்கும்.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைப் போற்றுவோம்! பெருமிதத்துடன் என் மனமார்ந்த குடியரதின நல்வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.






