என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

புதிதாக 150 பேருக்கு மேல் வாய்ப்பு- காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியாகிறது
- புதிய மாவட்ட தலைவர்கள் நியமனத்திலும் சர்ச்சைகள் எழுந்தது.
- 5 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப் படாது என்று கூறப்படுகிறது.
தமிழக காங்கிரசில் புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் கடந்த வாரம் வெளியானது. கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களைத் தவிர மொத்தம் 71 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்களில் 6 பேர் மட்டும் ஏற்கனவே மாவட்டத் தலைவர் பதவியில் இருந்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் புதியவர்கள். புதிய மாவட்ட தலைவர்கள் நியமனத்திலும் சர்ச்சைகள் எழுந்தது.
இது பற்றி மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் கூறும் போது, 'புதியதாக நியமிக்கப்பட்டு உள்ள மாவட்ட தலைவர்களின் பணிகள் 6 மாதம் கண்காணிக்கப்படும். திருப்தி இல்லை என்றால் அவர்கள் மாற்றப்படுவார்கள்' என்றார்.
இந்தநிலையில் தற்போது புதிதாக மாவட்ட, மாநில நிர்வாகிகள் நியமனமும் நடைபெற உள்ளது. மாநில நிர்வாகிகளை பொறுத்த வரை துணை தலைவர்கள், பொதுச் செயலாளர், செயலாளர்கள் உள்பட சுமார் 200 பேர் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இவர்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என்று கூறப்படுகிறது.
புதிய நிர்வாகிகள் பெயர் பட்டியலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த வாரத்திற்குள் இந்த பட்டியல் இறுதி செய்யப்பட்டு மேலிட ஒப்புதலுடன் அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். தேர்தல் அறிவிப்பு வருவதற்குள் அனைத்து பொறுப்புகளிலும் நிர்வாகிகளை நியமித்து தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்த தமிழக காங்கிரசார் திட்டமிட்டு உள்ளார்கள். புதிதாக 150 பேருக்கு மேல் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
ஏற்கனவே மாவட்ட தலைவர்களாக இருந்து அனுபவம் மிக்கவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்காத நிலையில் அவர்களுக்கு மாநில நிர்வாக பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்படாது என்றும் மாவட்ட தலைவர் பதவியில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர்கள் மட்டும் மாநில நிர்வாகிகளாகவும் நியமிக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.






