என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

"டபுள் என்ஜின் ஏன் மணிப்பூரை காப்பாற்றவில்லை?" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- நடக்கப்போவது என்.டி.ஏ. Vs தமிழ்நாடு தேர்தல்.
- அடிமைகளை வைத்துக்கொண்டு டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆளலாம் என பாஜக நினைக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் திமுக மகளிர் அணி சார்பில் 'வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல மாநாடு' இன்று மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
"தஞ்சை என்பது திராவிட இயக்கத்தின் கோட்டை. சாதி ஆதிக்க ஒழிப்பு மட்டுமே திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கமல்ல. பெண் விடுதலைதான் நமது அடிப்படை. சாதியால் உயர்வு, தாழ்வு இல்லை என்பதையும், ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்று நடத்துவதும் தவறானது என்பதை உணர்த்தத்தான் உருவாக்கப்பட்டது திராவிட இயக்கம்.
முதலமைச்சராக எனது முதல் கையெழுத்து மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்குத்தான். ஸ்டாலின் பேருந்து எனவே மக்கள் அதற்கு பெயர்வைத்துள்ளனர். அதுதான் அந்தத் திட்டத்திற்கான வெற்றி. புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என பலத்திட்டங்களை பெண்களுக்காக நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
பெண்கள் கேட்காமலேயே அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. மகளிர்தான் எப்போதும் பவர்ஹவுஸ். பெண்களையும், இளைஞர்களையும்தான் நான் அதிகம் நம்புகிறேன். இரண்டு நாட்களுக்கு முன் தமிழ்நாடு வந்த மோடி ஏராளமான பொய்களை சொல்லிவிட்டு சென்றுள்ளார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். இந்திய மாநிலங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் என்பதை அடித்துச் சொல்கிறேன்.
பிரதமர் மணிப்பூரை மறந்துவிட்டார். 260 மணிப்பூரில் கொல்லப்பட்டுள்ளனர். உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். மூன்று ஆண்டுகளாக அங்கு இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரை ஆட்சிசெய்தது பாஜகதான். டபுள் என்ஜின் ஏன் மணிப்பூரை காப்பாற்றவில்லை?
பாஜக ஆளும் மணிப்பூர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இருந்துதான் நாட்டுக்குள் போதைப் பொருள் பரவுகிறதென ஆதாரப்பூர்வமாக வெளிவரும் செய்தியை பிரதமர் படிப்பதில்லையா? தோற்ற கூட்டணியை புதுப்பித்துவிட்டு, பிரதமர் பில்டப் கொடுத்திருக்கிறார். அந்தக் கூட்டணியில் இருக்கும் அனைவரும், ஒன்றிய விசாரணை ஆணையத்தில் சிக்கி, அந்த வாஷிங் மிஷின் நம்மையும் வெளுக்காதோ எனும் நட்பாசையில் இருக்கிறார்கள்.
இதே கூட்டணி 2019 மற்றும் 2021ல் தோல்வியுற்றது. பின்னர் 2024ஆம் ஆண்டு இரண்டு தனித்தனியாக பிரிந்து பிறகு சேர்ந்துக்கொள்ளலாம் என மறைமுக கூட்டணியில் வந்தனர். ஆனால், எந்த கெட்டப்பில் வந்தாலும், உங்களுக்கு கெட் அவுட் தான் என தமிழ்நாடு மக்கள் சொல்லிவிட்டனர். தற்போது மீண்டும் உடைந்ததை ஒட்டிக்கொண்டு புதிதாக என்.டி.ஏ. என வந்திருக்கிறார்கள்.
அதிமுக-பாஜக கூட்டணி ஒரு கட்டாயக் கூட்டணி. மிரட்டலால், உருட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி. அமித்ஷாவால் திணிக்கப்பட்ட கூட்டணி. இந்த அடிமைகளை வைத்துக்கொண்டு டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆளலாம் என பாஜக நினைக்கிறது. ஆனால் அவர்களுக்கான பதிலடியை தமிழ்நாடு மக்கள் தருவார்கள்.
நடக்கப்போகும் தேர்தல், என்.டி.ஏ. Vs மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தேர்தல் கிடையாது. நடக்கப்போவது என்.டி.ஏ. Vs தமிழ்நாடு தேர்தல். நான் என்னைவிட அதிகம் நம்புவது தமிழ்நாட்டு மக்களைத்தான். நாங்கள் உங்களை எப்போதும் சந்திக்க வேண்டும். நீங்கள் எப்போதும் எங்களுக்கு துணைநிற்க வேண்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள்". என தெரிவித்தார்.






