search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விஜய் கட்சியின் கொள்கைகளை ஏற்று இளைஞர்கள் சென்றால் மகிழ்ச்சியே: சீமான்
    X

    விஜய் கட்சியின் கொள்கைகளை ஏற்று இளைஞர்கள் சென்றால் மகிழ்ச்சியே: சீமான்

    • நான் வைக்கும் தத்துவம் ஈர்த்து நாம் தமிழர் கட்சிக்கு வந்தாலும் மகிழ்ச்சியே.
    • என்.ஐ.ஏ. சோதனை மூலம், தி.மு.க. பரப்பி வந்த, பா.ஜ.க.வின் பி டீம் நாம் தமிழர் என்ற கூற்று பொய்யாகி உள்ளது.

    நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் விஜய் தொடங்கி உள்ள கட்சி பெயரில், திராவிடம் என்பது இடம் பெறவில்லை. எனவே இந்த திராவிட கருத்தியலை, அவருக்கு முன்பாக நாம் தமிழர் கட்சி, தமிழரசு கட்சி எதிர்த்து வருகிறது.

    திராவிடம் என்பது தேவைப்படாது, அதனை கடந்து தமிழ் சமூகம் வந்து விட்டது. திராவிடம் என்று அரசியல் செய்ய முடியாது. திராவிட அரசியல் வீழ்ச்சி அடைந்து வருகிறது.

    அதிகளவில் இளைஞர்கள் நாம் தமிழர் கட்சி நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் தடையாக இருக்காது. அவர் வைக்கக்கூடிய தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் அங்கு சென்றால் மகிழ்ச்சி.

    நான் வைக்கும் தத்துவம் ஈர்த்து நாம் தமிழர் கட்சிக்கு வந்தாலும் மகிழ்ச்சியே. விஜய்யின் ரசிகர்கள் அதிகளவில் நாம் தமிழர் கட்சியில் உள்ளனர். நான் விஜய்யின் ரசிகனாக இருப்பேன். ஆனால் நாம் தமிழருக்குதான் வாக்களிப்பேன் என்று சொல்லி வருகின்றனர். இதில் எந்த குழப்பமும் இல்லை.

    தமிழக காவல்துறை செய்ய வேண்டிய வேலையை என்.ஐ.ஏ. செய்திருக்கிறார்கள் என்று எச்.ராஜா சொல்லி இருப்பது தேர்தல் நேரத்து விளையாட்டு. நாம் தமிழர் கட்சியினர் மீது வைக்கப்பட்டு உள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பது என்.ஐ.ஏ.விற்கு தெரியும். இவ்வளவு நாட்கள் அமைதி காத்து விட்டு, தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு விசாரணை எதற்காக என்பதும் அனைவருக்கும் தெரியும்.

    இந்த என்.ஐ.ஏ. சோதனை மூலம், தி.மு.க. பரப்பி வந்த, பா.ஜ.க.வின் பி டீம் நாம் தமிழர் என்ற கூற்று பொய்யாகி உள்ளது. தற்போது தமிழகத்தில் பா.ஜனதா பூஜ்யமாக உள்ளது என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். இதனை நாங்கள் முன்பிருந்தே சொல்லி வருகிறோம். ஆனால் தி.மு.க.தான் மக்களை பயமுறுத்தியது. சீமானுக்கு வாக்களித்தால் பா.ஜ.க.வுக்கு சென்று விடும் என்று முதல்வர் கூறி வந்தார். இப்போது அவரே கூறுகிறார் பா.ஜனதா பூஜ்யம் என்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×