search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்யாறு அருகே மதுக்கடை முன்பு விவசாயியை கல்லால் தாக்கி கொன்ற வாலிபர் தற்கொலை
    X

    செய்யாறு அருகே மதுக்கடை முன்பு விவசாயியை கல்லால் தாக்கி கொன்ற வாலிபர் தற்கொலை

    செய்யாறு அருகே மதுகடை முன்பு கல்லால் தாக்கி விவசாயியை கொலை செய்த வாலிபர் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பிரம்மதேசம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் பாஸ்கரன் (வயது 45). விவசாய கூலி தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி ஜீவா. இவர்களுக்கு விஜயபிரதாப், விக்னேஸ்வரன் என்று 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில், பாஸ்கரனுக்கு மது பழக்கம் இருந்தது. தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் இவர் மீது பொது சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட 3-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும், ஜெயிலுக்கு சென்று ஜாமீனில் வெளியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், பிரம்மதேசம் டாஸ்மாக் கடையில் கடந்த 19-ந் தேதி இரவு பாஸ்கரன் மது அருந்தினார். டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள ஓட்டல் சரியான வியாபாரம் இல்லாததால் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்தது. இந்த ஓட்டலுக்கு பக்கத்து அறை திறந்து கிடந்தது.

    மது குடித்த பிறகு, போதையில் தள்ளாடியபடி சுற்றித் திரிந்த பாஸ்கரனை, மர்ம நபர்கள் திறந்து கிடந்த அறைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு வைத்து பாஸ்கரனை பாறாங்கல்லால் முகம் மற்றும் தலையில் சரமாரியாக தாக்கி படுகொலை செய்து விட்டு தப்பினர்.

    மறுநாள் காலை (20-ந் தேதி) ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த பாஸ்கரனின் உடலை மீட்டு பிரம்மதேசம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    கொலையாளிகளை பிடிக்க செய்யாறு டி.எஸ்.பி. குணசேகரன் மேற்பார்வையில் தூசி இன்ஸ்பெக்டர் சாரதி தலைமையில் பிரம்மதேசம் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

    விசாரணையில், விவசாயி பாஸ்கரன் கொலையில் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் விநாயகம் (வயது 21) என்ற வாலிபருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் தலைமறைவாகி இருந்தார். விநாயகத்தை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

    இந்த நிலையில், வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே சாலையோரம் நேற்று ஒரு வாலிபர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். மூச்சு பேச்சின்றி கிடந்த அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சிகிச்சை பலனின்றி வாலிபர் இறந்தார். அவர், மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட வாலிபர், செய்யாறு அருகே மதுக்கடை முன்பு கொலை செய்யப்பட்ட விவசாயி பாஸ்கரனின் கொலையில் தேடப்பட்டு வந்த விநாயகம் என்பது தெரியவந்தது. உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இதையறிந்த தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியபோது, பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. தற்கொலை செய்த விநாயகம் மேஸ்திரி வேலை செய்து வந்தார். இவரது குடும்பத்துக்கும் கொலையுண்ட பாஸ்கரனுக்கும் முன்விரோதம் இருந்தது.

    அடிக்கடி இருத்தரப்பினரும் மோதிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் விநாயகத்தின் உறவினரான மணிகண்டன் என்பவரை, விவசாயி பாஸ்கரன் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மணிகண்டன், விநாயகத்திடம் கூறினார்.

    இதை கேட்டவுடன் அவர் ஆத்திரமடைந்தார். சம்பவத்தன்று, டாஸ்மாக் கடையில் விநாயகம் மது அருந்துவதற்காக சென்றார். அப்போது அங்கு விவசாயி பாஸ்கரன் மது அருந்திக் கொண்டிருந்தார். அவரை, பார்த்தவுடன் விநாயகம் கொதித்தெழுந்தார்.

    மது குடித்துவிட்டு தள்ளாடி நடந்த பாஸ்கரனை தரதரவென வெளியே இழுத்துச் சென்ற விநாயகம், ஓட்டல் அருகே திறந்து கிடந்த அறையில் தள்ளி பாறாங்கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்தார். பின்னர் தலைமறைவானார்.

    காவேரிப்பாக்கம் சென்ற அவர், போலீஸ் தன்னை நெருங்கிவிட்டதை தனது நண்பர்கள் மூலம் தெரிந்துக் கொண்டு, அச்சமடைந்தார். பின்னர், மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

    விவசாயி கொலையில் உடந்தையாக இருந்ததாக தற்கொலை செய்து கொண்ட விநாயகத்தின் நண்பனான கிருஷ்ணன் மகன் தமிழ்ச் செல்வனை (24) நேற்றிரவு போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×