search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செய்யாறு"

    • கடந்த ஆட்சி காலத்தில், பாலாற்றின் குறுக்கே 7 தடுப்பணைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    • ஈசூர், வள்ளிபுரம் பகுதியிலும் என இரண்டு தடுப்பணைகள் உருவாக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    பருவமழையின் போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் செய்யாறு, பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி தண்ணீர் வீணாகி வந்தது. இதனை தடுக்கும் வகையிலும், தண்ணீரை ஆற்றில் தேக்கி வைக்கும்படியும் பாலாறு, செய்யாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பது விவசாயிகள் நீண்ட காலகோரிக்கையாக இருந்தது.

    மாவட்டத்தில் பாயும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டினால் குடிநீர் ஆதாரம் மற்றும் விவசாய பணிகளுக்கு பெரிதும் உதவும் என விவசாய சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆட்சி காலத்தில், பாலாற்றின் குறுக்கே 7 தடுப்பணைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழையசீவரம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் வாயலூர் பகுதியிலும், ஈசூர்,வள்ளிபுரம் பகுதியிலும் என இரண்டு தடுப்பணைகள் உருவாக்கப்பட்டது.

    இதேபோல் மாகரல் கிராமப் பகுதியில் செல்லும் செய்யாற்றின் குறுக்கே ரூ.8 கோடி மதிப்பில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் அந்த பகுதிகளின் ஆற்றுப்படுகையில் மழை நீர் தேங்கி, குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. மேலும் விவசாயிகளுக்கும் பெரிதும் உதவியது.

    இந்த நிலையில் உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட சிலாம்பாக்கம் - புதுப்பாளையம் கிராமங்களுக்கு இடையே செல்லும் செய்யாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.35 கோடியே 21 லட்சம் மதிப்பில் கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் உத்திரமேரூர் எம்.எல்.ஏ.சுந்தர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தடுப்பணைக்கான பணிகளை தொடங்கி வைத்தார். இந்த பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த தடுப்பணை பணிகளை வருகிற பருவ மழைக்கு முன்னர் முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர். தற்போது தடுப்பணை பணி 50 சதவீதம் முடிந்து உள்ளது.

    சிலாம்பாக்கம் - புதுப்பாளையம் இடையே செய்யாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிலாம்பாக்கம், வெங்காரம், ஒழுகரை, மாகரல் ஆகிய கிராமங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுப்பாளையம், அரசாணை பாளையம், வயலாத்தூர், உள்ளிட்ட கிராமங்கள் என மொத்தம் சுமார் 1,623 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, சிலாம்பாக்கம் - புதுப்பாளையம் இடையே செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என்பது சுற்றி உள்ள கிராமமக்களின் நீண்ட நாள்கோரிக்கை ஆகும். இந்த தடுப்பணையால் ஆற்றில் வீணாக செல்லும் தண்ணீர் தேங்கும். இதன் மூலம் சுற்றி உள்ள விவசாயிகள் பலன் அடைவார்கள். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். விவசாயம் ஆண்டு முழுவதும் நடைபெறும்.

    தற்போது இந்த தடுப்பணை பணிகள் மெதுவாக நடந்து வருகிறது. இப்பணிக்காக செல்லும் வழித்தடங்கள் முறையாக இல்லாததால், பணிகள் தாமதமாகவும் அவ்வப்போது நிறுத்தப்படுகிறது. இதனை விரைவு படுத்தி வருகிற பருவமழைக்கு முன்னர் தடுப்பணை பணிகளை முழுவதும் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×