என் மலர்
இந்தியா
- விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், சுமார் 15 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- கொல்லப்பட்ட நாய்களின் உடல்கள் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் புதைக்கப்படுகின்றன.
தெலங்கானாவில் சமீபத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துகளின் தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற, கடந்த ஒருவாரத்தில் பல கிராமங்களில் 500 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெருநாய்கள் விஷ ஊசி மற்றும் விஷம் கலந்த உணவு மூலம் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
காமரெட்டி மாவட்டத்தில் உள்ள பவானிபேட்டை, பல்வாஞ்சா, ஃபரித்பேட்டை, வாடி மற்றும் பண்டாரமேஷ்வரபள்ளி உள்ளிட்ட கிராமங்களில் தெரு நாய்கள் திட்டமிட்டு கொல்லப்படுவதாக விலங்கு நல ஆர்வலர் அதுலபுரம் கௌதம் (35) என்பவர் ஜனவரி 12 அன்று அளித்த புகாரின்மூலம் இந்த செய்தி வெளிவந்துள்ளது. கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மட்டும் சுமார் 200 நாய்கள் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்தந்த கிராமத் தலைவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்தச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ஐந்து கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் நாய்களை கொலைசெய்ய பணியமர்த்தப்பட்ட கிஷோர் பாண்டே உட்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொல்லப்பட்ட நாய்களின் உடல்கள் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளன. பின்னர் கால்நடை மருத்துவக் குழுக்களால் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். "இறப்புக்கான சரியான காரணம் மற்றும் பயன்படுத்தப்பட்ட விஷத்தின் வகையைக் கண்டறிய உள்ளுறுப்பு மாதிரிகள் தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன," என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
"கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற தேர்தலுக்கு முன்னதாக, சில வேட்பாளர்கள் தெருநாய் மற்றும் குரங்கு தொல்லையை ஒழிப்போம் என்று கிராம மக்களுக்கு உறுதியளித்துள்ளனர். அதன்பேரில் தற்போது இந்த கொலைகள் நிகழ்த்தப்படுவதாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில், ஜனவரி 6 முதல் 9 வரை ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஷயம்பேட்டை மற்றும் அரேபள்ளி கிராமங்களில் சுமார் 300 தெரு நாய்களுக்கு விஷம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், இரண்டு பெண் பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களது கணவர்கள், கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் உட்பட ஒன்பது பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- கிராமப்புறங்களில் தகுதியான பெண்களை தேர்வு செய்து துப்பாக்கிச்சுடும் பயிற்சியை இந்திய ராணுவம் அளிக்கிறது.
- பயங்கரவாதிகள் நாட்டிற்குள் நுழைய வாய்ப்புள்ளதால் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் மலைகளுக்கு மிக அருகில் வசிக்கும் கிராமங்களில் உள்ள பெண்களுக்கு இந்திய ராணுவம் துப்பாக்கிச்சுடும் பயிற்சி அளித்து வருகிறது.
பயங்கரவாதிகள் நுழைந்தால் எதிர்த்து போராட கிராமப்புற ஆண்களுக்கு முன்னதாக ராணுவம் துப்பாக்கிச்சுடும் பயிற்சி அளித்திருந்தது.
கடும் குளிர்காலங்களில் வேலைக்காக கிராமப்புற ஆண்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லும்போது பெண்கள், முதியோர் தனியாக உள்ளனர்.
கடும் குளிர், ஆண்கள் துணையின்றி பெண்கள் இருப்பதை பயன்படுத்தி பயங்கரவாதிகள் நாட்டிற்குள் நுழைய வாய்ப்புள்ளதால் பயிற்சி அளிக்கப்பட்டது.
கிராமப்புறங்களில் தகுதியான பெண்களை தேர்வு செய்து துப்பாக்கிச்சுடும் பயிற்சியை இந்திய ராணுவம் அளிக்கிறது.
துணிச்சலான பெண்களை தேர்வு செய்து கிராம பாதுகாப்பு காவலர்கள் என்ற பெயரில் அவர்களுக்கு ராணுவம் அங்கீகாரம் வழங்குகிறது.
பயங்கரவாதிகளை எதிர்த்து போராடுவது, கிராமத்தில் உள்ளவர்களை காப்பது, ராணுவத்திற்கு தகவல் அளிப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
- வழக்கமாக பொங்கல் பண்டிகை அன்று பங்கு சந்தை செயல்படும்
- நாளை எவ்வித பங்கு வர்த்தகமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதே நாளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாநகராட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், நாளை மும்பை மாநகராட்சியில் தேர்தல் நடைபெற உள்ளதால் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை எவ்வித பங்கு வர்த்தகமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக பொங்கல் பண்டிகை அன்று செயல்படும் பங்கு சந்தைக்கு இந்தாண்டு உள்ளாட்சி தேர்தலால் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 1971 இந்திய-பாகிஸ்தான் போரில் ஆற்றிய பங்கிற்காக வீர சக்ரா விருது பெற்றவர் அருண் பிரகாஷ்
- அருண் பிரகாஷ் 2004 முதல் 2006 வரை கடற்படைத் தளபதியாகப் பணியாற்றினார்
பீகாரை தொடர்ந்து 2 ஆம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, சத்தீஷ்கர், கோவா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிக்பார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களிலும் அக்டோபர் 27 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் தனித்தனியே வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதனால் 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50.90 கோடியாக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 44.40 கோடியாக குறைந்துள்ளது.
இந்நிலையில் கோவாவின் SIR திருத்தத்தின் ஒரு பகுதியாக ஓய்வுபெற்ற முன்னாள் கடற்படை தலைவர் அருண் பிரகாஷ் நேரில் ஆஜராகி தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 12 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கணினி பிழை காரணமாக முன்னாள் கடற்படை தலைவர் அருண் பிரகாஷுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள் குறித்து அருண் பிரகாஷ் அதிருப்தி தெரிவித்தார்.
1971 இந்திய-பாகிஸ்தான் போரில் ஆற்றிய பங்கிற்காக வீர சக்ரா விருது பெற்ற அருண் பிரகாஷ், ஜூலை 31, 2004 முதல் அக்டோபர் 31, 2006 வரை கடற்படைத் தளபதியாகப் பணியாற்றினார். பின்னர், அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மற்றும் தேசிய கடல்சார் அறக்கட்டளை ஆகியவற்றில் பதவிகளை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பொங்கல் உலகளாவிய அளவில் சர்வதேச பொங்கலாக மாறி உள்ளது.
- விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
புதுடெல்லி:
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதில் பிரதமர் மோடி மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இதுபோல இந்த ஆண்டும் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பொங்கல் விழா இன்று காலை தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் பொங்கலிடப்பட்டது.
இந்த விழாவில் நீதிபதிகள், பல உயரதிகாரிகள், பல்வேறு துறை வல்லுனர்கள், திரை பிரபலங்கள், பத்திரிகைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்றனர். தோழி கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டார். நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். வணக்கம். பொங்கல் நல்வாழ்த்துகள் என கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
* பொங்கல் உலகளாவிய அளவில் சர்வதேச பொங்கலாக மாறி உள்ளது.
* தமிழக மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில் மகிழ்ச்சி.
* விவசாயிகளுடனான உறவை பிரதிபலிக்கும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை உள்ளது.
* கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பொங்கல் கொண்டாடப்பட்டது.
* விவசாயத்தை போற்றும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை உள்ளது.
* விவசாயிகளுக்கும் தமிழர்களுக்கும் இருந்த தொடர்பை பற்றி பேசுகிறது திருக்குறள்.
* விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
* விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
* சுற்றுச்சூழலை பாதுகாப்பதே எங்களின் முதல் நோக்கமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஊழல் மற்றும் லஞ்சத்தை குறைக்கவோ அல்லது நமது நிர்வாகத்திலிருந்து அகற்றவோ முடியாது.
- இளைஞர்களிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா வேண்டுகோள் விடுத்தார்.
ஊழலை கட்டுப்படுத்த நாட்டின் இளைஞர்கள் தங்கள் பெற்றோர்கள் ஊழல் வழிகளில் ஈட்டும் செல்வத்தைத் தவிர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா வேண்டுகோள் விடுத்தார்.
2018 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டம், 1988 இன் பிரிவு 17A அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதி பி.வி. நாகரத்னா தீர்ப்பளித்தார். இருப்பினும், மற்றொரு நீதிபதி விஸ்வநாதன் இது அரசியலமைப்பிற்கு எதிராக வில்லை என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
அப்போது பேசிய நாகரத்னா, "நம் நாட்டின் இளைஞர்களும் குழந்தைகளும் தங்கள் பெற்றோர்கள் வருமானத்திற்கு அப்பால் ஊழல் மூலம் சம்பாதிக்கும் செல்வதை தவிர்க்க வேண்டும். அது தேசத்திற்கும் செய்யும் ஒரு சிறந்த சேவையாக இருக்கும்
ஒருவரின் பேராசை மற்றும் பொறாமை மனப்பான்மையைக் கட்டுப்படுத்தி, மனதிலிருந்து அழிக்க வேண்டும். இல்லையெனில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பதற்கு வழிவகுக்கும் ஊழல் மற்றும் லஞ்சத்தை குறைக்கவோ அல்லது நமது நிர்வாகத்திலிருந்து அகற்றவோ முடியாது. இத்தகைய போக்குகளைக் கட்டுப்படுத்தக்கூடிய வழிகளில் ஒன்று, ஆன்மீக மனநிலையை வளர்த்து மேம்படுத்துவதாகும். இதன் விளைவாக பொருள் சார்ந்த ஆசையில் இருந்து விடுபட்டு தேசத்திற்கு சேவை செய்வதில் கவனம் செலுத்த வைக்கும்" என்று தெரிவித்தார்.
சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்தில் கூட இதே போன்றதொரு கருத்தை தான் கூறியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- மனித உழைப்பிற்கு இயற்கையின் இசைவிற்கும் இடையிலான நெருக்கத்தை காட்டும் பண்டிகை.
- உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
* மனித உழைப்பிற்கு இயற்கையின் இசைவிற்கும் இடையிலான நெருக்கத்தை காட்டும் பண்டிகை.
* உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.
* வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளத்தை பொங்கல் பண்டிகை திகழ்கிறது.
* இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களாலும் பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.
* பொங்கல் பண்டிகை சர்வதேச விழாவாக கொண்டாடப்படுவது மட்டற்ற மகிழ்ச்சி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சீன கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர்.
- சீனக்குழுவினர் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபாலேவை சந்தித்துப் பேசினர்.
புதுடெல்லி:
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழுவின் சர்வதேச துறையின் துணை மந்திரி சன் ஹையன் தலைமையிலான குழு டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்குச் சென்றது. அங்கு பா.ஜ.க. பொதுச் செயலாளர் அருண்சிங் தலைமையிலான குழுவுடன் ஆலோசனை நடத்தியது. மேலும் சீன குழுவினர் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபாலேவையும் சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கேரா கூறியதாவது:
சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பா.ஜ.க, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு இடையே மூடிய அறைக்குள் நடந்த சந்திப்பின் போது பேசப்பட்டது என்ன என்பது குறித்து பகிரங்கமாக வெளியிட வேண்டும்.
மத்திய அரசு சாராத ஆர்எஸ்எஸ் அமைப்பை அரசு கொள்கையைக் கட்டுப்படுத்த அனுமதிக்கப்படக் கூடாது.
எந்தவொரு அரசியல் கட்சியும் வேறொரு நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல் கட்சியுடன் சந்திப்பதில் அல்லது உரையாடலில் ஈடுபடுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
பல ஆண்டுகளாக, சீனாவுடன் காங்கிரஸ் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக பாஜ கூச்சலிட்டு வந்தது. இப்போது அவர்களே மூடிய அறைக்குள் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற கூட்டங்களின்போது மீண்டும் மீண்டும் சீன மீறல்கள் குறித்த பிரச்சனையை பா.ஜ.க. எழுப்புகிறதா? லடாக் எல்லையிலும், எல்லை கட்டுப்பாட்டு பகுதியிலும் 2020க்கு முந்தைய நிலையை மீட்டெடுப்பது பற்றி அவர்கள் பேசுகிறார்களா? எல்லைக் கட்டுப்பாடு அருகே சீன ராணுவ கட்டுமானம் மற்றும் கிராமங்களை கட்டுவது அதிகரித்து வருகிறதே?
உண்மையில், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாஜவின் 'லால் சலாம்' ஆகிவிட்டன. மோடி அரசில் நமது பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை கடுமையாக சமரசம் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் தேசிய நலன்களை சேதப்படுத்துவது பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கையின் சாராம்சமாகிவிட்டது.
சீன வெளியுறவு மந்திரி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை போலவே, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த அவர்கள் தலையிட்டதாகக் கூறினார். ஆனால் இந்த விவகாரத்தில் மோடி முழுமையான மவுனத்தைக் கடைப்பிடித்து வருகிறார்.
மோடி சீன கம்யூனிஸ்ட் குழுவை பா.ஜ.க. அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். பா.ஜ.க, சீன கம்யூனிஸ்ட் குழுவுடன் தொடர்ச்சியான உறவைப் பேணி வருகிறது என தெரிவித்தார்.
- 45 வயதான நிதின் நபின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
- ஐந்து முறை எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாஜக-வின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா இருந்து வருகிறார். இவரது பதிவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் மாற்று தலைவர் தேர்வு செய்யப்படாமல் உள்ளது. பீகார் மாநிலத்தில் இருந்து 5 முறை எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் நபி கடந்த ஆண்டு பாஜக-வின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அக்கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 19-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால், ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார். இல்லை என்றால், பாஜக தலைமையகத்தில் தேர்தல் நடைபெறும்.
நிதின் நபி (வயது 45), மறைந்த முன்னாள் பாஜக தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நபின் கிஷோர் பிரசாத் சின்ஹா மகன் ஆவார். நிதின் நபின், சித்தாந்த ரீதியாக ஆழமான வேரூன்றியவரும், அமைப்புக்கு முழுமையாக அர்ப்பணிப்பு கொண்டவருமான ஒரு ஆற்றல்மிக்க தலைவர் என்று பாஜக கருதுகிறது. மேலும், இவர் ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து வந்தவர்.
ஜே.பி. நட்டா 2019-ம் ஆண்டு பாஜக-வின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். அமித் ஷாவின் தேசிய தலைவர் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், 2020 ஜனவரியில் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
- முன்னாள் கணவர், மேரி கோம் கடந்த காலங்களில் தமக்குத் துரோகம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
- நிதி தொடர்பான அனைத்து புகார்களும் பொய்யானவை என்றும் ஓன்லர் திட்டவட்டம்
குத்துச்சண்டையில் ஆறுமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் இந்திய வீராங்கனை மேரி கோம். மேரி கோமிற்கு 4 குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் ஓன்லர் கோம். இந்த தம்பதி கடந்த 2023ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். இதனிடையே சமீபத்தில் விவாகரத்து குறித்துப் பேசியிருந்த மேரி கோம், தனது முன்னாள் கணவர் தன்னை பணரீதியாக ஏமாற்றியதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மேரி கோமின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள அவரது முன்னாள் கணவர், மேரி கோம் கடந்த காலங்களில் தமக்குத் துரோகம் செய்ததாக தெரிவித்துள்ளார். மேரி கோம் 2013-ல் ஒரு ஜூனியர் குத்துச்சண்டை வீரருடனும், 2017 முதல் வேறொருவருடனும் உறவில் இருந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் மேரி கோமின் கோடிக்கணக்கான பணத்தையோ அல்லது சொத்துக்களையோ தான் ஏமாற்றவில்லை என்றும், அவர் சுமத்தியுள்ள நிதி தொடர்பான அனைத்து புகார்களும் பொய்யானவை என்றும் ஓன்லர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மேலும் "நான் அவரை மன்னிக்க முடியும், ஆனால் அவர் எனக்குச் செய்ததை என்னால் மறக்க முடியாது" என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். ங்களின் நான்கு குழந்தைகளும் தற்போது விடுதியில் தங்கிப் படிப்பதாகவும், மேரி கோம் அவர்களுக்குக் கல்விக்கட்டணம் செலுத்தினாலும், அவர்களை வளர்த்ததில் தனக்கு முக்கியப் பங்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அதன்படி 1520 ரூபாய், 1240 ரூபாய், 960 ரூபாய் என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- ஆர்.ஏ.சி. அல்லது பகுதி அளவு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் ஆகிய வசதி கிடையாது.
பிரதமர் மோடி வருகிற 17-ந்தேதி படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வகை்கிறார். இந்த ரெயில் கவுகாத்தி- கொல்கத்தா இடையே இயக்கப்பட இருக்கிறது.
ஏசி 1, ஏசி 2, ஏசி 3 வகுப்புகளை கொண்ட இந்த ரெயிலில் பயணம் செய்வதற்கான உத்தேச கட்டணத்தை ரெயில்வே அமைச்சர் கடந்த 1-ந்தேதி வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்திய ரெயில்வே, டிக்கெட் விலை குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி 1520 ரூபாய், 1240 ரூபாய், 960 ரூபாய் என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆர்.ஏ.சி. அல்லது பகுதி அளவு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் ஆகிய வசதி கிடையாது.
1 கி.மீ. தூரத்தில் இருந்து 400 கி.மீ. தொலைக்கு ஒரே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 400 கி.மீ. தூரத்திற்கு குறைவான இடத்திற்கு பயணம் செய்ய வேண்டுமென்றாலும், முழுத் தொகையை செலுத்த வேண்டும்.
400 கி.மீ. தொலைவிற்குப் பிறகு ஒரு கி.மீ. தூரத்திற்கு 3 ரூபாய் அடிப்படையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
தற்போதைய அறிவுறுத்தல்களின்படி பெண்கள் ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு, மூத்த குடிமக்கள் ஒதுக்கீடு மற்றும் பணி அனுமதிச் சீட்டு ஒதுக்கீடு மட்டுமே இருக்கும். வேறு எந்த இட ஒதுக்கீடும் பொருந்தாது.
- உண்மையான வாக்காளர்களை மொத்தமாக நீக்கியுள்ளனர்.
- அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு கோடி பேரை நீக்க பாஜக- தேர்தல் ஆணையம் கூட்டணி முடிவு செய்துள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநில முதல்வராக மம்தா பானர்ஜி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கையை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையருக்கு மூன்று முறை கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது:-
ஒருதலை பட்சமாகவும், தேர்தல் பவுதி அதிகாரிகள் (EROs) அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியும், SIR நடவடிக்கையின்போது, வரைவு வாக்காளர்கள் பட்டியலில் இருந்து 54 லட்சம் பேரை நீக்கிவிட்டனர். உண்மையான வாக்காளர்களை மொத்தமாக நீக்கியுள்ளனர். அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படாததால், தங்களது பெயரை உறுதி செய்துக் கொள்ள அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
தேர்தல் ஆணையம் டெல்லியில் இருந்தபடியே, பாஜக-வால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி பெயர்களை நீக்கியது. இந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள், SIR தரவுகளில் உள்ள பெயர்ப் பொருத்தமின்மையைக் கணக்கில் எடுத்துக்கொண்டன. திருமணத்திற்குப் பிறகு தங்கள் குடும்பப் பெயரை மாற்றிய பெண்களின் பெயர்களை அவர்கள் நீக்கிவிட்டனர்.
பாஜக- தேர்தல் ஆணையம் கூட்டணி இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து மேலும் ஒரு கோடி வாக்காளர்கள் பெயர்களை நீக்க முடிவு செய்துள்ளது.






