என் மலர்tooltip icon

    இந்தியா

    • மும்பையின் 227 வார்டுகளில் 1,700 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
    • 1.03 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.

    மகாராஷ்டிராவில் மும்பை, புனே உட்பட 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மொத்தம் 2,869 இடங்களுக்கு 15,931 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மும்பையின் 227 வார்டுகளில் 1,700 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு மட்டும் 1.03 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.

    பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலை 7.30 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணிக்கு நிறைவடையும். தேர்தலை முன்னிட்டு சம்பந்தப்பட்ட மாநகராட்சிப் பகுதிகளில் இன்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    இத்தேர்தலில் தாக்கரே சகோதரர்களுக்கும், பாஜக-சிவசேனா கூட்டணிக்கும் இடையே பெரும் போட்டி நிலவுகிறது.

    இதனிடையே மாநகராட்சி தேர்தலில் முறைகேடு நடப்பதாக சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார. மேலும், இது ஜனநாயகத்தை கொலை செய்வதற்கான முயற்சி என கடுமையாக சாடியுள்ளார்.

    • இந்தப் பொங்கல் நன்னாள், நம் அனைவரது வாழ்விலும் புதிய ஒளியை ஏற்றி வைக்கட்டும்.
    • நாம் அனைவரும் சாதி, மத பேதமின்றி ஒன்றிணைந்து செயல்பட ஊக்கமளிக்கட்டும்

    இன்று தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "உழைப்பின் உன்னதத்தையும், இயற்கையின் கொடையையும் போற்றும் உன்னதத் திருவிழாவான இந்தப் பொங்கல் நன்னாள், நம் அனைவரது வாழ்விலும் புதிய ஒளியை ஏற்றி வைக்கட்டும்.

    இந்த அறுவடைப் பண்டிகை, மக்களிடையே நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் பகிரப்பட்ட செழிப்பு ஆகிய பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என விழைகிறேன்.

    ஒரு சமூகம் முழுமையான வளர்ச்சியை அடைய வேண்டுமானால், அங்கு சமத்துவமும் நீதியும் நிலைபெற வேண்டும். அந்த வகையில், இந்தப் பொங்கல் திருநாள்:

    அனைவருக்கும் சமமான நீதி கிடைக்கவும், ஒவ்வொரு மனிதரும் தகுந்த கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்யவும், அனைவரது நல்வாழ்விற்காகவும் நாம் அனைவரும் சாதி, மத பேதமின்றி ஒன்றிணைந்து செயல்பட ஊக்கமளிக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார். 

    • இந்த நைலான் நூலால் அறுபட்டு 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
    • சீன மாஞ்சாவால் ஏற்படும் உயிரிழப்புகளை "கொலைக்கு இணையான குற்றம்" எனப் பதிவு செய்ய உத்தரவு

    மகர சங்கராந்தி கொண்டாட்டங்களின் போது இந்தியா முழுவதும் சீன மாஞ்சா (Chinese Manja) எனப்படும் தடைசெய்யப்பட்ட நைலான் நூலால் கடந்த இரண்டு நாட்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில், நைலான் சரத்தால் தொண்டை அறுப்பட்டு, ரகுபீர் தகத் என்ற 45 வயது நபர் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு இறந்தார். உத்தரப்பிரதேசதம் ஜான்பூரில் சமீர் ஹாஷ்மி என்ற 28 வயது மருத்துவர், இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் உயிரிழந்தார். ஜான்பூர் நகரில் இதே போன்ற மற்றொரு விபத்தில் ஒரு இளைஞர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

    இதேபோல தெலங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அவதேஷ் குமார் (38) என்ற புலம் பெயர் தொழிலாளி, இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி உயிரிழந்தார். கர்நாடகாவின் பீதர் மாவட்டத்தில், சஞ்சுகுமார் ஹோசமானி (48) என்பவர் தனது மகளை விடுதியிலிருந்து அழைத்து வரச் சென்றபோது, மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இந்தியாவில் சீன மாஞ்சா விற்பனை மற்றும் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், சந்தைகளில் அதன் சட்டவிரோத விற்பனை தொடர்கிறது. இதனால் இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட இந்த நைலான் நூலால் அறுபட்டு 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், சீன மாஞ்சாவால் ஏற்படும் உயிரிழப்புகளை "கொலைக்கு இணையான குற்றம்" எனப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விஷயத்தை தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, குழந்தைகளால் பறக்கவிடப்படும் பட்டங்கள் பெற்றோரால் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தது.. நீதிபதிகள் விஜய் குமார் சுக்லா மற்றும் அலோக் அவஸ்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, சீன மாஞ்சாவை முழுமையாக தடை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

    தடைசெய்யப்பட்ட நூலைப் பயன்படுத்தி பட்டம் விடுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

    • மொத்தம் 2,869 இடங்களுக்கு 15,931 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
    • 12 மாவட்ட ஊராட்சிகள் மற்றும் 125 ஊராட்சி ஒன்றியங்களுக்கு பிப்ரவரி 5 அன்று தேர்தல் நடைபெறும்.

    மகாராஷ்டிராவில் மும்பை, புனே உட்பட 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மொத்தம் 2,869 இடங்களுக்கு 15,931 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மும்பையின் 227 வார்டுகளில் 1,700 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு மட்டும் 1.03 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.

    பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலை 7.30 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும். தேர்தலை முன்னிட்டு சம்பந்தப்பட்ட மாநகராட்சிப் பகுதிகளில் இன்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  இத்தேர்தலில் தாக்கரே சகோதரர்களுக்கும், பாஜக-சிவசேனா கூட்டணிக்கும் இடையே பெரும் போட்டி நிலவுகிறது.

    மேலும் மாநிலத் தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி 12 மாவட்ட ஊராட்சிகள் மற்றும் 125 ஊராட்சி ஒன்றியங்களுக்கு பிப்ரவரி 5 அன்று தேர்தல் நடைபெறும். இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளைமுதல் முதல் ஜனவரி 18 வரை நடைபெறும். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 7 அன்று நடைபெறும்

    • பொங்கல் திருநாளை முன்னிட்டு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
    • பொங்கல், உங்கள் இலக்குகளை நிறைவேற்ற புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வழங்கட்டும்.

    இன்று தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பொங்கல் திருநாளை முன்னிட்டு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மக்களை ஒன்றிணைத்து, நம் சமூகத்தில் அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்கும் பொங்கல் பண்டிகையைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், உழைப்பின் மரியாதையையும் நினைவூட்டும் இந்தத் திருநாள், நமது பண்பாட்டின் உயரிய மதிப்புகளை பிரதிபலிக்கிறது. இந்தப் பொங்கல், உங்கள் இலக்குகளை நிறைவேற்ற புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வழங்கட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், நலமும் கிடைக்க வேண்டும் என மனப்பூர்வமாகப் பிரார்த்திக்கிறேன்.

    மேலும், பிரதமர் மோடி மற்றொரு பதிவில், " சோம்நாத் சுயமரியாதைப் பெருவிழாவை முன்னிட்டு அண்மையில் நான் சோம்நாத்திற்குச் சென்றிருந்தபோது, நான் சந்தித்த மக்கள், காசி தமிழ் சங்கமம், சௌராஷ்ட்ர தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகளைப் பாராட்டினார்கள். இன்று சிறப்புமிக்க பொங்கல் பண்டிகையின் போது, காசி தமிழ் சங்கமத்தின் வளர்ச்சி குறித்தும், 'ஒரே பாரதம் உன்னத பாரதத்தின்' உணர்வை அது எவ்வாறு வலுப்படுத்துகிறது என்பது பற்றியும் எனது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 2,500-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
    • தொடர் போராட்டங்களால் ஈரானில் இணைய சேவை, வான்வெளி போக்குவரத்து முடங்கியது.

    புதுடெல்லி:

    ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.

    ஈரானில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 2,500-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்க முடிவு செய்துள்ளது.

    தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் இணைய சேவை, வான்வெளி போக்குவரத்தும் முடங்கியது.

    இந்தப் போராட்டங்களால் நாடு முழுவதும் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அங்கு வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய அரசு கடந்த 5-ம் தேதி எச்சரிக்கை விடுத்தது. மேலும் ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என இந்தியர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

    இந்நிலையில், ஈரானில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாவதை அடுத்து, இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவித்தது.

    இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஈரானில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என மீண்டும் ஒருமுறை தீவிரமாக அறிவுறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளது.

    • பஞ்சாப் மாநில முதல்வர் இங்கிலாந்து, இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளார்.
    • மத்திய வெளியுறவுத்துற அமைச்சகம் அனுமதி கொடுக்கவில்லை எனத் தகவல்.

    முதலீட்டை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் செல்ல பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் மற்றும் தொழில்துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா ஆகியோருக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி வழங்க மறுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    மேலும், இதுபோன்ற அனுமதி மறுப்பு இது முதல்தடவை அல்ல எனவும் தெரிவித்துள்ளது.

    பிப்ரவரி மாதம் முதலமைச்சர் பகவத் மான் மற்றும் தொழில்துறை அமைச்சர் இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் செல்ல உள்ளனர். அவர்களுடன் சில அரசு அதிகாரிகளும் செல்ல உள்ளனர். அனுமதி கொடுக்கப்பட்டால் சரியான தேதி இறுதி செய்யப்படும். எனினும் மத்திய அரசு அரசியல் அனுமதி கொடுக்க மறுத்துள்ளது. காரணம் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.

    வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள சீனியர் தலைவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து அரசியல் அனுமதி பெறுவது அவசியமாகும்.

    • நோயாளிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்கள் மற்றும் சிதறும் உணவுத் துண்டுகள் காரணமாகவே எலிகள் அதிகளவில் வருகின்றன
    • உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனைகளில் எலிகள் உலா வருவது இது முதல்முறையல்ல.

    உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மருத்துவக் கல்லூரியில் ஒரு வார்டில் எலிகள் சுற்றித்திரியும் வீடியோ ஒன்றை காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

    அந்தப் பதிவில், 

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோண்டா மருத்துவக் கல்லூரியின் இந்தக் காட்சியைக் கவனியுங்கள். இங்கே, மனிதர்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டில், எலிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. குண்டாகவும், மெலிந்தும், உருண்டையாகவும்... என அனைத்து வகையான எலிகளும் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த மருத்துவக் கல்லூரி வார்டு மனிதர்களுக்கானது அல்ல, எலிகளுக்கானது என்பது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்துகிறது." எனக் குறிப்பிட்டுள்ளது. 

    கோண்டா மருத்துவக் கல்லூரியின் எலும்பியல் வார்டில், நோயாளிகளின் படுக்கைகளுக்கு அருகிலும், ஆக்சிஜன் குழாய்கள் மீதும் எலிகள் ஓடும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா நிரஞ்சன் மருத்துவக் கல்லூரி முதல்வரை நேரில் அழைத்து விளக்கம் கேட்டுள்ளார். உடனடியாக வார்டில் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    நோயாளிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்கள் மற்றும் சிதறும் உணவுத் துண்டுகள் காரணமாகவே எலிகள் அதிகளவில் வருவதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனைகளில் எலிகள் உலா வருவது இது முதல்முறையல்ல. பலமுறை இதுபோன்ற புகார்வது எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது. 

    இதேபோல், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மற்றும் ஜபல்பூர் மருத்துவமனைகளிலும் சமீப காலங்களில் எலித் தொல்லை மற்றும் நோயாளிகளை எலிகள் கடித்த புகார்கள் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

    • இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 155.62 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
    • ஜனவரி முதல் டிசம்பர் வரையில் இந்தியா 19.75 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

    சீனாவின் சுங்கத்துறை வருடாந்திர வர்த்தக தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் வர்த்தக பற்றாக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

    * இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 155.62 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

    * கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரையில் இந்தியா 19.75 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது 9.7 சதவீதம் அதிகமாகும்.

    * அதேவேளையில் சீனா இந்தியாவுக்கு 135.87 அமெரிக்க டாலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது 12.8 சதவீதம் அதிகமாகும்.

    * ஆனால் இந்தியா- சீனா வர்த்தகத்தில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 116.12 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. 2023-க்குப் பிறகு 2-வது முறையாக வர்த்தக பற்றாக்குறை 100 பில்லியன் டாலருக்கு மேல் தாண்டியுள்ளது.

    * 2024-ல் வர்த்தக பற்றாக்குறை 99.21 பில்லியன் டாலராக இருந்தது. சீனா 113.45 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்த நிலையில், இந்தியா 14.24 பில்லியனுக்கு ஏற்றுமதி செய்திருந்தது.

    • மகாத்மா காந்தி பட்டியலின மக்களை ஹரிஜன்ஸ் என அழைத்தார்.
    • அதன் பொருள் கடவுளின் மக்கள் என்பதாகும். எனினும் அம்பேத்கர் அவ்வாறு அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    அரியானா மாநிலத்தின் அனைத்து துறைகளின் அலுவலக தொடர்புகளில் ஹரிஜன், கிரிஜன் வார்த்தைகளை பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என அரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    பொதுவாக பட்டியலின மக்களை, பழங்குடியின மக்களை குறிப்பிட ஹரிஜன் மற்றும் கிரிஜன் சொற்கள் பயன்படுத்தப்படுகிறது.

    அனைத்து துறை செயலார்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் " இந்திய அரசியலமைப்புச் சட்டம் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரைக் குறிக்க இந்தச் சொற்றொடர்களைப் பயன்படுத்துவதில்லை" என்று அந்தக் கடிதத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் மாநில அரசால் ஆய்வு செய்யப்பட்டபோது, சில துறைகள் மேற்கூறிய அறிவுறுத்தல்களைக் கடுமையாகப் பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கவிட்டது.

    மகாத்மா காந்தி பட்டியலின மக்களை ஹரிஜன்ஸ் என அழைத்தார். அதன் பொருள் கடவுளின் மக்கள் என்பதாகும். எனினும் அம்பேத்கர் அவ்வாறு அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர்களை தலித் என அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    • 9,000 முதல் 10,000 வரையிலான மருத்துவ மேற்படிப்பு இடங்கள் வீணாவதை நாம் அனுமதிக்க முடியாது
    • SC, ST மற்றும் OBC பிரிவு மாணவர்களுக்கு, இந்தத் தேர்ச்சி சதவீதம் 40-லிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில், மருத்துவ மேற்படிப்புக்கான காலியிடங்கள் ஏராளமாக இருப்பதால் NEET-PG 2025-க்கான தகுதி மதிப்பெண்களை (Cut-off) மத்திய அரசு செவ்வாய்க்கிழமை குறைத்துள்ளது. 

    "மாற்றியமைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி, பொதுப்பிரிவு மற்றும் EWS (பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்) மாணவர்களுக்கான தகுதித் தேர்ச்சி சதவீதம் 50-லிருந்து 7-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 45-லிருந்து 5-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

    SC, ST மற்றும் OBC பிரிவு மாணவர்களுக்கு, இந்தத் தேர்ச்சி சதவீதம் 40-லிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதில் எதிர்மறை மதிப்பெண் முறை உள்ளதால், அவர்களுக்கான தகுதி மதிப்பெண் 800-க்கு -40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கலந்தாய்வு மற்றும் சேர்க்கைக்கான தகுதியை விரிவுபடுத்துவதற்காக, மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வுகள் வாரியம் அனைத்துப் பிரிவினருக்குமான தகுதித் தேர்ச்சி சதவீதத்தை மாற்றியமைத்து இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு சுமார் 2.4 லட்சம் மாணவர்கள் NEET-PG தேர்வெழுதிய போதிலும், தகுதி மதிப்பெண் அதிகமாக இருந்த காரணத்தால் ஆயிரக்கணக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் சுமார் 65,000 முதல் 70,000 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன. இதில் ஏழில் ஒரு பங்கு இடங்கள் காலியாக விடப்பட்டால், அது போதனா மருத்துவமனைகளை (மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்து செயல்படும் மருத்துவமனைகள்) பலவீனப்படுத்தும் என்றும், குறிப்பாகப் பயிற்சி மருத்துவர்களை பெரிதும் நம்பியுள்ள அரசு மருத்துவமனைகளில் சுகாதார சேவையைப் பாதிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பெருமளவிலான இடங்கள் காலியாவதைத் தவிர்க்க, தகுதி மதிப்பெண்களை முறையாக மாற்றியமைக்கக் கோரி இந்திய மருத்துவச் சங்கம் கடந்த ஜனவரி 12-ம் தேதி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியிருந்தது. அதனையொட்டி தொடர்ந்தே இந்தத் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்த தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரிய அதிகாரிகள், "இந்த நுழைவுத் தேர்வு ஒரு தரவரிசைப் பட்டியலை உருவாக்குவதற்காகத்தானே தவிர, ஏற்கனவே MBBS மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களின் தகுதியை மறுமதிப்பீடு செய்வதற்காக அல்ல" என்று கூறினர்.

    மேலும், "9,000 முதல் 10,000 வரையிலான மருத்துவ மேற்படிப்பு இடங்கள் வீணாவதை நாம் அனுமதிக்க முடியாது" என்றும் தெரிவித்தார். தகுதிச் சதவீதத்தை இவ்வளவு அதிகமாகக் குறைப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகும் என்பதை ஒப்புக்கொண்ட அதிகாரி, அதே சமயம் மாணவர் சேர்க்கை சுழற்சி ஏற்கனவே தாமதமாகிவிட்டதைச் சுட்டிக்காட்டினார்.

    "முன்பெல்லாம் தகுதி மதிப்பெண்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டன. ஆனால் இந்த முறை நாம் தாமதமாக இருக்கிறோம். இப்போது எங்களின் முக்கிய நோக்கம் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதும், நாட்டின் மருத்துவ வளங்கள் வீணாவதைத் தடுப்பதும் தான்" என்று அவர் தெரிவித்தார்.

    "தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம்", தகுதி மதிப்பெண் மாற்றம் என்பது தேர்வு மதிப்பெண்களையோ அல்லது தரவரிசையையோ மாற்றாது என்றும், யார் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்கள் என்பதை மட்டுமே தீர்மானிக்கும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. ஏற்கனவே தகுதி பெற்ற மருத்துவர்களை வரிசைப்படுத்தவே இந்த 'பெர்சென்டைல்' முறை பயன்படுத்தப்படுகிறது. அனைத்து மேற்படிப்பு இடங்களையும் நிரப்புவதற்கு போதுமான விண்ணப்பதாரர்கள் இருப்பதை உறுதி செய்யவே தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், சுமார் 15 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    • கொல்லப்பட்ட நாய்களின் உடல்கள் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் புதைக்கப்படுகின்றன.

    தெலங்கானாவில் சமீபத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துகளின் தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற, கடந்த ஒருவாரத்தில் பல கிராமங்களில் 500 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெருநாய்கள் விஷ ஊசி மற்றும் விஷம் கலந்த உணவு மூலம் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    காமரெட்டி மாவட்டத்தில் உள்ள பவானிபேட்டை, பல்வாஞ்சா, ஃபரித்பேட்டை, வாடி மற்றும் பண்டாரமேஷ்வரபள்ளி உள்ளிட்ட கிராமங்களில் தெரு நாய்கள் திட்டமிட்டு கொல்லப்படுவதாக விலங்கு நல ஆர்வலர் அதுலபுரம் கௌதம் (35) என்பவர் ஜனவரி 12 அன்று அளித்த புகாரின்மூலம் இந்த செய்தி வெளிவந்துள்ளது. கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மட்டும் சுமார் 200 நாய்கள் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அந்தந்த கிராமத் தலைவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்தச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ஐந்து கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் நாய்களை கொலைசெய்ய பணியமர்த்தப்பட்ட கிஷோர் பாண்டே உட்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

    கொல்லப்பட்ட நாய்களின் உடல்கள் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளன. பின்னர் கால்நடை மருத்துவக் குழுக்களால் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். "இறப்புக்கான சரியான காரணம் மற்றும் பயன்படுத்தப்பட்ட விஷத்தின் வகையைக் கண்டறிய உள்ளுறுப்பு மாதிரிகள் தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன," என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    "கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற தேர்தலுக்கு முன்னதாக, சில வேட்பாளர்கள் தெருநாய் மற்றும் குரங்கு தொல்லையை ஒழிப்போம் என்று கிராம மக்களுக்கு உறுதியளித்துள்ளனர். அதன்பேரில் தற்போது இந்த கொலைகள் நிகழ்த்தப்படுவதாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

    இந்த மாத தொடக்கத்தில், ஜனவரி 6 முதல் 9 வரை ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஷயம்பேட்டை மற்றும் அரேபள்ளி கிராமங்களில் சுமார் 300 தெரு நாய்களுக்கு விஷம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், இரண்டு பெண் பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களது கணவர்கள், கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் உட்பட ஒன்பது பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

    ×