என் மலர்
இந்தியா

பா.ஜ.க. அலுவலகத்தில் சீன கம்யூனிஸ்ட் குழுவுக்கு என்ன வேலை?: காங்கிரஸ் தாக்கு
- சீன கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர்.
- சீனக்குழுவினர் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபாலேவை சந்தித்துப் பேசினர்.
புதுடெல்லி:
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழுவின் சர்வதேச துறையின் துணை மந்திரி சன் ஹையன் தலைமையிலான குழு டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்குச் சென்றது. அங்கு பா.ஜ.க. பொதுச் செயலாளர் அருண்சிங் தலைமையிலான குழுவுடன் ஆலோசனை நடத்தியது. மேலும் சீன குழுவினர் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபாலேவையும் சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கேரா கூறியதாவது:
சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பா.ஜ.க, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு இடையே மூடிய அறைக்குள் நடந்த சந்திப்பின் போது பேசப்பட்டது என்ன என்பது குறித்து பகிரங்கமாக வெளியிட வேண்டும்.
மத்திய அரசு சாராத ஆர்எஸ்எஸ் அமைப்பை அரசு கொள்கையைக் கட்டுப்படுத்த அனுமதிக்கப்படக் கூடாது.
எந்தவொரு அரசியல் கட்சியும் வேறொரு நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல் கட்சியுடன் சந்திப்பதில் அல்லது உரையாடலில் ஈடுபடுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
பல ஆண்டுகளாக, சீனாவுடன் காங்கிரஸ் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக பாஜ கூச்சலிட்டு வந்தது. இப்போது அவர்களே மூடிய அறைக்குள் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற கூட்டங்களின்போது மீண்டும் மீண்டும் சீன மீறல்கள் குறித்த பிரச்சனையை பா.ஜ.க. எழுப்புகிறதா? லடாக் எல்லையிலும், எல்லை கட்டுப்பாட்டு பகுதியிலும் 2020க்கு முந்தைய நிலையை மீட்டெடுப்பது பற்றி அவர்கள் பேசுகிறார்களா? எல்லைக் கட்டுப்பாடு அருகே சீன ராணுவ கட்டுமானம் மற்றும் கிராமங்களை கட்டுவது அதிகரித்து வருகிறதே?
உண்மையில், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாஜவின் 'லால் சலாம்' ஆகிவிட்டன. மோடி அரசில் நமது பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை கடுமையாக சமரசம் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் தேசிய நலன்களை சேதப்படுத்துவது பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கையின் சாராம்சமாகிவிட்டது.
சீன வெளியுறவு மந்திரி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை போலவே, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த அவர்கள் தலையிட்டதாகக் கூறினார். ஆனால் இந்த விவகாரத்தில் மோடி முழுமையான மவுனத்தைக் கடைப்பிடித்து வருகிறார்.
மோடி சீன கம்யூனிஸ்ட் குழுவை பா.ஜ.க. அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். பா.ஜ.க, சீன கம்யூனிஸ்ட் குழுவுடன் தொடர்ச்சியான உறவைப் பேணி வருகிறது என தெரிவித்தார்.






