search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரகுவன்ஷ் பிரசாத் சிங், மோடி
    X
    ரகுவன்ஷ் பிரசாத் சிங், மோடி

    முன்னாள் மத்திய மந்திரி ரகுவன்ஷ் பிரசாத் சிங் மரணம் - ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

    ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ரகுவன்ஷ் பிரசாத் சிங் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
    புதுடெல்லி:

    லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் (வயது 74). பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது ஊரக அபிவிருத்தி துறை மந்திரியாக பதவி வகித்தார்.

    கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தை (100 நாள் வேலைதிட்டம்) கொண்டு வந்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. இவர் ஊரக அபிவிருத்தி துறை மந்திரியாக இருந்தபோதுதான் 2006-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரகுவன்ஷ் பிரசாத் சிங் சிகிச்சைக்கு பின் குணம் அடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் ஒரு வாரத்துக்கு பின்னர் அவருக்கு மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி ரகுவன்ஷ் பிரசாத் சிங் நேற்று மரணம் அடைந்தார்.

    ரகுவன்ஷ் பிரசாத் சிங்கின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கிராமப்புற இந்தியாவின் பிரச்சினைகளை அறிந்து மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்ட ரகுவன்ஷ் பிரசாத் சிங்கின் மறைவு மிகுந்த துயரம் அளிப்பதாகவும், அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறி உள்ளார்.

    இதேபோல் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    பீகார் மாநிலம் வைஷாலியில் கடந்த 1946-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி பிறந்த ரகுவன்ஷ் பிரசாத் சிங் 1977-ம் ஆண்டு பீகார் மேல்-சபை உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டார். முதன் முதலாக 1996-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட அவர் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை மந்திரியாக இருந்தார். வைஷாலி தொகுதியில் இருந்து 5 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

    ரகுவன்ஷ் பிரசாத் சிங் கடந்த சில தினங்களுக்கு முன் ராஷ்டிரீய ஜனதாதளத்தில் இருந்து விலகுவதாக கூறி ராஜினாமா கடிதம் அனுப்பினார். ஆனால் அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை.

    அவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
    Next Story
    ×