search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    முககவசம் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம்- காங்கிரஸ் குற்றச்சாட்டு

    கொரோனா நோய் தாக்குதலால் அசாதாரண சூழ்நிலை நிலவும் என்று தெரிந்தும் முக கவசம் ஏற்றுமதிக்கு தடை விதிக்காததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதிலிருந்து தப்பிக்க மக்கள் முககவசம் வாங்கி அணிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

    ஆனால் எந்த மருந்து கடையிலும் முககவசம் கிடைக்கவில்லை. நாட்டில் அனைத்து பகுதிகளிலும இதே நிலை தான் உள்ளது.

    கடந்த 20 நாட்களுக்கு மேலாக முககவசம் சப்ளை முற்றிலும் நின்றுவிட்டதாக மருந்து கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

    இதுசம்பந்தமாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா நோய் தாக்குதலால் அசாதாரண சூழ்நிலை நிலவும் என்று தெரிந்ததுமே உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அதாவது மக்கள் பயன்பாட்டுக்கான முககவசம், டாக்டர்கள்- நர்சுகள் பயன்படுத்துவதற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், கவச உடைகள், சுவாச கருவிகள் போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.

    ஆனால் இவை அனைத்தும் இந்தியாவில் உற்பத்தி ஆன நிலையிலும் அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அனுமதித்துள்ளனர். அதாவது மார்ச் 19-ந்தேதி வரை ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

    எனவே இப்போது அந்த பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களும், நர்சுகளும் கூட பாதுகாப்பு உபகரணம் இல்லாமலும், நோயாளிகளுக்கான சிகிச்சை கருவிகள் இல்லாமலும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    பாதிப்பு வரும் என்று தெரிந்த பிறகும் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு இதுபோன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்வதை தடுப்பதற்கு மத்திய வணிகத்துறை மந்திரி, வணிக செயலாளர் போன்றோர் தவறிவிட்டனர்.

    சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வரும் வேளையில் அதன் பயன் மக்களுக்கு கிடைக்க வேண்டும். ஆனால் லிட்டருக்கு 8 ரூபாய் கலால் வரி உயர்த்தி லாபம் பார்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது தவறானது.

    மக்களை இதுபோன்று கஷ்டப்படுத்துவது இந்த அரசுக்கு வாடிக்கையாக உள்ளது. எல்லாவற்றிலும் வியாபார நோக்கம் தான் அவர்களுக்கு குறிக்கோளாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×