search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா வைரஸ்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலவசமாக மத்திய அரசு வழங்கிய தடுப்பூசியால் நிலைமை கட்டுக்குள் வர தொடங்கியது
    • பலருக்கு நுரையீரல் திறன் பாதிப்பு நிரந்தரமானதாக இருக்கும் என ஆய்வில் தெரிகிறது

    கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் தோன்றி உலகெங்கும் பரவிய கொரோனா வைரஸ் தாக்குதல் 2020 மார்ச் மாத காலகட்டத்தில் இந்தியாவிலும் பரவியது.

    கோவிட் பெருந்தொற்று பரவலை தடுக்க அரசு கொண்டு வந்த நாடு தழுவிய பொது முடக்கத்தினால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்தனர். ஆனாலும், அடுத்தடுத்த மாதங்களில் இந்தியாவில் வெகுவேகமாக லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டனர்.

    2021 ஜனவரி மாதத்தில் இருந்து இந்திய மருந்து நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக அனைவருக்கும் வழங்க தொடங்கியது.

    மக்கள் முன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டதால் சிறிது சிறிதாக நிலைமை கட்டுக்குள் வந்தது.

    இந்நிலையில், வேலூரில் உள்ள கிறித்துவ மருத்துவ கல்லூரி (Christian Medical College) கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான இந்தியர்களின் நுரையீரல் திறன் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது.


    அந்த ஆய்வு, "ஐரோப்பியர்கள் மற்றும் சீனர்கள் ஆகியோருடன் ஒப்பிட்டால், கொரோனா தாக்குதலுக்கு உள்ளான இந்தியர்களின் நுரையீரல் அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஒரு சிலருக்கு காலப்போக்கில் இந்த பாதிப்பு சரியாகலாம்; ஆனால், பலருக்கு அவர்கள் ஆயுட்காலம் முழுவதும் தொடரும் ஒரு நிரந்தர பாதிப்பாகத்தான் இது இருக்கும்" என தெரிவிக்கிறது.

    "பப்ளிக் லைப்ரரி ஆஃப் சைன்ஸ்" (PLOS) எனும் லாப நோக்கற்ற அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வு கட்டுரைக்காக பங்கேற்ற நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பலவித பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

    "அனைத்து விதமான பரிசோதனைகளிலும், அயல்நாட்டினருடன் ஒப்பிட்டால் இந்தியர்களின் நுரையீரல் திறன் மிக குறைவாக இருந்தது" என கிறித்துவ மருத்துவ கல்லூரியின் நுரையீரல் மருத்துவ துறையின் பேராசிரியர் டி. ஜே. கிறிஸ்டோபர் தெரிவித்தார்.

    • முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டி பகல்- இரவு போட்டியாக நடைபெறுகிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் மற்றும் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தில் நெகடிவ் முடிவு வரவில்லை என்றாலும் அவர்களால் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
    • இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.

    சிட்னி

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் , 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.

    டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஜே ரிச்சர்ட்சன் இருவரும் விலகியுள்ளனர்.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் இடம் பிடித்திருந்த டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகத்தில் உள்ளது.

    • கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    • அவரது உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில ஆளுநராக பதவி வகித்து வருபவர் தாவர்சந்த் கெலாட்.

    இந்நிலையில், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார் என ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அவரது உடல்நிலை சீராக உள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள், சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இதுவரை 26 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு 23 ஜே.என்.1.1 வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
    • வடகிழக்கு பருவமழையையொட்டி 26 ஆயிரத்து 837 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 12.28 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று ரூ.27.96 கோடி மதிப்பீட்டில் காசநோயைக் கண்டறிய அதிநவீன விரைவு மூலக்கூறு கண்டறியும் கருவிகள், இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐ.ஓ.சி.எல்.) நிறுவனத்தின் பெரு நிறுவன கூட்டு சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து (சி.எஸ்.ஆர்.) வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி வருமாறு:-

    2025-ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடையும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டு முழுவதும் 20 லட்சம் சளி பரிசோதனைகள் செய்யப்பட்டு இதுவரை தமிழ்நாட்டில் 97 ஆயிரம் காசநோயாளிகள் கண்டறியப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு, 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உதவியுடன் ஊட்டச்சத்து மருந்துகள் தரப்படுகிறது.

    தற்போது ஐ.ஓ.சி.எல். நிறுவனத்துடன் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, காசநோய் மூலக்கூறு கண்டறியும் கருவிகளை வாங்கும்போது 272 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் கண்டறியும் செயல்பாடுகள் அதிகரிக்கும்.

    கொரோனா பாதிப்பு 20 என்ற எண்ணிக்கையில் மட்டும்தான் இருக்கிறது. நேற்று 25 என்றளவில் இருந்தது. அதில் சென்னையில் 15 பாதிப்பு காணப்பட்டது. உருமாறிய ஜே.என்.1 கொரோனா வைரசஸ் உலகளவில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சிங்கப்பூரில் ஆயிரம் என்றளவில் கொரோனா பரவியிருந்தது. 5-வது டோஸ் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதுபற்றி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவர்களுடன் தொடர்ந்து பேசுகிறோம். இந்தியாவில் அதற்கான அவசியம் தற்போது எழவில்லை என்று மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை கூறியுள்ளது.

    வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், சிறு குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பொதுவான இடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்று மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறையும், உலக சுகாதார நிறுவனமும் அறிவுறுத்தியுள்ளன.

    இதுவரை 26 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு 23 ஜே.என்.1.1 வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குழு பாதிப்பு எங்கும் ஏற்படவில்லை.

    வலிநிவாரண மருந்து பயன்பாட்டை தடுக்க முடியாது. மருந்தகங்கள் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை வழங்கினால், 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மூலம் குட்கா, பான்மசாலா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் கண்டறியப்பட்டு 1000-க்கும் மேற்பட்ட கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

    வடகிழக்கு பருவமழையையொட்டி 26 ஆயிரத்து 837 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 12.28 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். மிச்சாங் புயலினால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் 13ஆயிரத்து482 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 7.95 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

    தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழையினால் 7,892 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 48 ஆயிரத்து 604 பேர் பயனடைந்துள்ளனர். ஆக மொத்தம் கடந்த 2 மாதங்களாக 24.13 லட்சம் பேர் மருத்துவ முகாம்களின் மூலம் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் மழைக்கால நோய்களின் தாக்கம் குறைக்கப்பட்டுள்ளது. 40 லட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. மிச்சாங் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும், மருத்துவ கட்டமைப்புகளை சரிசெய்வதற்கு ரூ.49 கோடி தொகை மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் உள்ள 3 பல் மருத்துவக்கல்லூரிகள் மூலம் ஏழை எளிய மக்கள் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள்.
    • இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிந்து செல்ல வேண்டும்.

    சென்னை:

    சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று ரூ.25 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் சிறப்பு பல் ஆஸ்பத்திரி, கலையரங்கம், பாதுகாவலர் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் ஜெ.சங்குமணி மற்றும் டாக்டர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள 3 பல் மருத்துவக்கல்லூரிகள் மூலம் ஏழை எளிய மக்கள் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள். இதேபோல, ரூ.64 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் 620 மாணவர்கள் தங்கும் வகையில் விடுதி கட்டிடம் கட்டும் பணி இந்த மாத இறுதியில் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

    மேலும், ரூ.135 கோடி மதிப்பீட்டில், ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியின் 750 முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்கும் வகையில் விடுதி கட்டிடம் கட்டப்பட உள்ளது. மொத்தம் ரூ.200 கோடி செலவில் ஆயிரத்து 400 மாணவர்கள் தங்கும் வகையில் 2 விடுதி கட்டிடம் இந்த மாத இறுதியில் முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கி வைக்கப்பட உள்ளது. விடுதிகள் கட்டும் பணி 1½ ஆண்டுகளில் முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்படும்.

    ஜே.என்.1 உருமாறிய கொரோனா தொற்று தற்போது பரவி வருகிறது. கேரளாவில் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் குழு பாதிப்பு ஏற்படவில்லை. மிதமான பாதிப்புகள் ஏற்பட்டு 4 நாட்களிலேயே சரியாகிவிடுகிறது.

    எனவே பொதுமக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை. இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிந்து செல்ல வேண்டும். கொரோனாவிற்கு தனி வார்டு அமைக்கப்படுமா என சமூக வலைதளங்களில் சிலர் கேட்கிறார்கள். தேவையற்ற பீதியை கிளப்புகிறார்கள். தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கும் வகையில் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. யாரும் பதற்றம் அடைய வேண்டாம்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 67 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். நிதிநிலை அறிக்கையில் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களும் பயனடையும் வகையில் இந்த திட்டத்தை விரிவுபடுத்த அறிவுறுத்தப்பட்டது.

    அந்த வகையில், மிக விரைவில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும். இதேபோல 2 ஆயிரத்து 242 கிராம சுகாதார நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆயிரத்து 21 டாக்டர்கள் தேர்வு செய்வதில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் முடிவுக்கு வரப்பட்டு தற்போது கொரோனா மதிப்பெண் வழங்கும் பணி நடந்து வருகிறது. ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
    • தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்.

    சென்னை:

    கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகம், தெலுங்கானா, கேரளத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    கொரோனா பரவல் குறித்து மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.

    குறிப்பாக, அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் அறிகுறிகள் உள்ளோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்துமாறு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டார்.

    அதன்படி, தினமும் 350-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் யாருக்கு எல்லாம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தலை சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு செல்வவிநாயகம் வழங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயாளிகள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

    தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தீவிர நுரையீரல் தொற்றுக்கு உள்ளானவர்கள், இன்புளூயன்சா போன்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • புதிய கொரோனா உருமாற்றமானது அதிக அளவிலான கூட்டு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
    • இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும்.

    சென்னை :

    பருவமழையை ஒட்டி சென்னையில் 10வது வார சிறப்பு மருத்துவ முகாமை தரமணியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:-

    * ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

    * தெற்காசிய நாடுகளில் ஜே.என்.1 கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.

    * புதிய வகை கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

    * ஜே.என்.1 வகை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

    * புதிய கொரோனா உருமாற்றமானது அதிக அளவிலான கூட்டு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

    * இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும்.

    * 1.25 லட்சம் படுக்கை வசதியும், 2,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் தயார் நிலையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்து வருகிறது.
    • கொரோனா பாதிப்பில் இருந்து 24 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    சென்னை:

    கொரோனா தொற்று கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் உகான் மாநிலத்தில் பரவி உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த தொற்று தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஊடுருவியது. இதனால், தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகரித்து வந்தது. அதன்பின், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தது. தொடர்ந்து, கொரோனாவிற்கு தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்பட்டு படிப்படியாக கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது.

    இதையடுத்து, மீண்டும் உருமாறிய புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கேரளாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு வேகமாக பரவ தொடங்கியது.

    அதனை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்து வருகிறது. ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. நீண்ட நாட்களாக கொரோனா பாதிப்பில் தமிழ்நாட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் இருந்தது. இந்தநிலையில், நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி (வயது 55) என்பவர் உயிரிழந்தார்.

    தமிழ்நாட்டில் நேற்று 158 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில் 16 பேர், கோவையில் 3 பேர், நீலகிரி, ராணிப்பேட்டை, சேலம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 24 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது.

    மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த சில வாரங்களாக ஜே.என்.1 வகை உருமாறிய கொரோனா தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது.
    • புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் ரத்த மாதிரியையும் சேகரித்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை:

    கொரோனா தொற்று பாதிப்பு சில மாதங்களாக குறைந்திருந்தாலும், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி கொண்டே வருகிறது.

    உலகின் பல நாடுகளில் 50-க்கும் மேற்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுகள் காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஜே.என்.1 வகை உருமாறிய கொரோனா தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் கடந்த 26-ந் தேதி வரை 69 பேர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கோவை புலியகுளத்தை சேர்ந்த 34 வயது பெண்ணுக்கு புதிய வகை ஜே.என்.1 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறையினர் அங்கு விரைந்து சென்று இளம்பெண்ணை தனிமைப்படுத்தினர். மேலும் அவரது பெற்றோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    அந்த பகுதி முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணியும் மேற்கொள்ளப்பட்டது. அவரது பெற்றோரையும் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தினர்.

    அதனை தொடர்ந்து, புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் ரத்த மாதிரியையும் சேகரித்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில், புலியகுளத்தை சேர்ந்த 34 வயது பெண்ணுக்கு ஜே.என்.1 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். அண்மையில் அவர் எந்த பயணத்தையும் மேற்கொள்ளவில்லை என்றார்.

    கோவையில் ஜே.என்.1 வகை கொரோனா ஒருவருக்கு உறுதியானதை அடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் இணைந்து வீடு வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என கேட்பதுடன், பரிசோதனையும் மேற்கொள்கின்றனர்.

    காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகில் உள்ள சுகாதார மையம், ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற அறிவுறுத்தி அனுப்பி வைத்து வருகின்றனர்.

    இதுதவிர மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கிருமி நாசினி தெளிப்பது, கொசு மருந்து அடிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக 100 வார்டிலும் எந்தெந்த பகுதியில் கொரோனா உள்ளதோ அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தும் வருகின்றனர்.

    கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும், அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புதிய வகை கொரோனா பரவுவதை அடுத்து கோவையில் பொது இடங்களில் மக்கள் கூடும்போது முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அத்துடன் மாவட்டம் முழுவதும் 4 நடமாடும் காய்ச்சல் கண்டறியும் குழு, 36 மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தின் எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    • விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

    இதையடுத்து விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலமானார் என்று மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துணை ஆணையர் தீபக் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மருத்துவமனை முன்பு தொண்டர்கள் மிகுந்த சோகத்துடன் காத்திருக்கின்றனர்.

    • புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு அரசு எந்த தடையும் விதிக்கவில்லை.
    • விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிடும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஜேஎன் 1 என்ற மாறுதல் அடைந்த கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்கள் தொடர்பாக கர்நாடக அரசின் அமைச்சரவை துணைக்குழு தடுப்பு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.

    அதன்படி பொது இடங்களில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், பாதிக்கப்பட்ட நபர்களை 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவற்றை கடைபிடிப்பது அவசியம். மேலும் அறிகுறிகளுடன் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் எனவும், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் வேறு நோய் தொற்றுகள் உள்ளவர்கள் கட்டாயம் முன்னெச்சரிக்கை தடுப்பூசி போடுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இருப்பினும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு அரசு எந்த தடையும் விதிக்கவில்லை. இது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிடும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

    ×