search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணிஷ்திவாரி எம்பி
    X
    மணிஷ்திவாரி எம்பி

    சோனியாகாந்தி காங்கிரஸ் தலைவராக நீடிக்க வேண்டும்- மணிஷ்திவாரி எம்பி பேட்டி

    இன்றைய சூழ்நிலையில் காங்கிரஸ் தலைவராக சோனியாகாந்தி நீடிப்பதையே விரும்புகிறேன் என்று மணிஷ்திவாரி எம்பி கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட படுதோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    மீண்டும் பதவியை ஏற்கும்படி மூத்த தலைவர்கள் தொடர்ந்து வற்புறுத்தியபோதும், பிடிவாதமாக இருந்த அவர் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

    இதனால் தற்காலிக தலைவராக சோனியா காந்தியை தேர்வு செய்தனர். விரைவில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் திட்டமிட்டு இருக்கிறது. மார்ச் கடைசியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள்.

    ராகுல்காந்தியே மீண்டும் தலைவராக வரவேண்டும் என்று கட்சியில் பலரும் வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் இதை எதையும் கண்டு கொள்ளாமல் ராகுல் மவுனம் காத்து வருகிறார்.

    எனவே அவர் மீண்டும் தலைவர் பதவிக்கு வருவதற்கு சம்மதிப்பாரா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அப்படியானால் யாரை தலைவராக தேர்வு செய்வது என்ற குழப்பம் காங்கிரஸ் கட்சியில் நிலவுகிறது.

    இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிஷ்திவாரி எம்.பி. கூறியதாவது:-

    இன்றைய சூழ்நிலையில் காங்கிரஸ் தலைவராக சோனியாகாந்தி நீடிப்பதையே விரும்புகிறேன். இதைவிட்டால் வேறு வழிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நான் மட்டுமல்ல காங்கிரசில் உள்ள பல மூத்த தலைவர்களும் சோனியாகாந்தி தலைவராக நீடிப்பதையே விரும்புகிறார்கள்.

    அதாவது பெரும்பாலானவர்கள் சோனியாகாந்தி மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். காங்கிரசில் மூத்த தலைவர்கள் பலரும் எனக்கு நெருக்கமானவர்கள். நான் 40 ஆண்டு காலமாக கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கிறேன்.

    மாணவர் காங்கிரசில் தொடங்கி, இளைஞர் காங்கிரஸ் மற்றும் பல்வேறு அமைப்புகளில் பொறுப்புகளை கவனித்திருக்கிறேன். அந்த வகையில் மூத்த தலைவர்கள் பலரும் என்னோடு பணியாற்றியவர்கள். அவர்களோடு தனிப்பட்ட முறையில் பேசியபோது அவர்கள் அனைவருமே சோனியா தலைவராக நீடிப்பதே சிறந்தது என்று கூறினார்கள்.

    சோனியா காந்தி

    ஏன் என்றால், சோனியாவை பொறுத்த வரை காங்கிரஸ் பல்வேறு சிக்கல்களில் இருந்த நேரத்தில் தலைவராக திறம்பட பணியாற்றி இருக்கிறார். அவருடைய அனுபவம், மதிநுட்பம் போன்றவை காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து வழிநடத்துவதற்கு உதவும்.

    ராகுல்காந்தி தலைவராக விரும்புகிறாரா? என்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. எனவே இந்த நேரத்தில் 2-வது வி‌ஷயம் பற்றி நாங்கள் சிந்திக்க விரும்பவில்லை.

    ராகுல்காந்தி தலைவராக இருந்த காலத்தில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். ஆனால் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்துவிட்டார். அவர் தேர்தல் தோல்விக்கு மற்ற யாரையும் காரணம் காட்டாமல், தான் தான் காரணம் என்று கூறி ராஜினாமா செய்தார்.

    அவரை பல தலைவர்களும் வற்புறுத்தியும் திரும்ப பதவியை ஏற்க முன்வர வில்லை. இந்திய அரசியலில் இதுபோன்ற அபூர்வம் நடப்பது அரிதானது. தற்போது ராகுல்காந்தி தான் இதில் உரிய முடிவு எடுக்க வேண்டும்.

    அவர் முடிவு எடுக்காத வரை அவர் தலைவராவதை பற்றி நாங்கள் யோசிப்பது சரியாக இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×