search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜ்நாத் சிங்
    X
    ராஜ்நாத் சிங்

    இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும்: ராஜ்நாத் சிங்

    இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில், இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் என்று ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
    புதுடெல்லி :

    டெல்லியில், ‘டிபென்ஸ் கனெக்ட் 2019’ என்ற பெயரில் பாதுகாப்பு தளவாட கண்டுபிடிப்புகளின் சாதனைகளை விளக்கும் கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    நமது பிரதமர், 2024-ம் ஆண்டுக்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் (ரூ.350 லட்சம் கோடி) பொருளாதாரத்தை எட்டும் என்று கூறியுள்ளார்.

    இந்தியா கொண்டுள்ள திறமையை வைத்து பார்த்தால், இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்தியா 10 டிரில்லியன் டாலர் (ரூ.700 லட்சம் கோடி) பொருளாதாரத்தை எட்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    ‘ஸ்டார்ட் அப்’ திட்டங்களை பார்த்தால், எனக்கு பெருமையாக இருக்கிறது. பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்து வந்த இந்தியா, இனிமேல் அதை கண்டுபிடிக்கும் நாடாகவும், ஏற்றுமதி செய்யும் நாடாகவும் மாறும்.

    ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தி ஆகியவை கூட்டாக செய்ய வேண்டிய பணி. இதில், அரசு-தனியார் இடையே இணக்கத்தை உருவாக்க வேண்டும். உள்நாட்டிலேயே பாதுகாப்பு சாதனங்கள் உற்பத்தி செய்யப்படுவதற்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும்.

    இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
    Next Story
    ×