search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி
    X
    சோனியா காந்தி

    வாட்ஸ்அப் மூலம் பா.ஜனதா உளவு பார்க்கிறது- சோனியாகாந்தி குற்றச்சாட்டு

    அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் வாட்ஸ்அப்பை பா.ஜனதா உளவு பார்க்கிறது என்று சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக்குழு மற்றும் கட்சி தொடர்பான ஆய்வுக் கூட்டம் புதுடெல்லியில் நடக்கிறது. பா.ஜனதா அரசை கண்டித்து வருகிற 5-ந்தேதி முதல் 10 நாட்களுக்கு நாடு முழுவதும் போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கூறியதாவது:-

    மோடி தலைமையிலான மத்திய அரசு இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனம் மூலம் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரின் வாட்ஸ்- அப்பை உளவு பார்க்கிறது. அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் முறைகேடானது. அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. மிகவும் வெட்கக் கேடானது.

    பல்வேறு பிரச்சினைகளால் இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் பொருளாதார மேலாண்மையில் அரசு ஈடுபடாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வருத்தத்தை உண்டாக்குகிறது. நாட்டின் பொருளாதாரம்  மந்தமாக உள்ள நிலையில் அதுபற்றி பிரதமர் மோடி கவலைப்படாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தன்னை பற்றி பரபரப்பான செய்திகள் வருவதில் மட்டுமே அக்கறை கொள்கிறார். 
    வாட்ஸ்அப்
    இந்த அணுகுமுறை தொடர்ந்தால் நாடு மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும். குறிப்பாக மில்லியன் கணக்கில் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் இளைஞர்கள், விவசாயிகள் இதனால் பெரிதும் பாதிப்படைவார்கள். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி  பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக தெரிகிறது. அந்த ஒப்பந்தத்தில் கையழுத்திட்டால் அது இந்திய பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும். இதன் மூலம் இந்திய விவசாயிகள், சிறு வியாபாரிகள், வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சீனாவின் தரமற்ற தயாரிப்புகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும். இதனால் இந்தியா குப்பை கிடங்காக மாறும். கடந்த 72 ஆண்டுகளில் சீனாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த நாடும் கையெழுத் திடவில்லை.

    பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமான நிலையை எட்டி வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் முதல் காலாண்டில் அதிகபட்சமாக 5 சதவீதமாக இருந்தது. கடந்த 6 ஆண்டுகளில் இதுவே குறைந்த அளவாகும். தற்போது கடும் நெருக்கடியில் நாடு உள்ளது. குறைந்த நுகர்வு, குறைவான முதலீடு ஆகிய காரணங்களால் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. தற்போது வேலை வாய்ப்பின்மையின் அளவு 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு பிறகு புதிய வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 90 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோய் விட்டன. 

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×