search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி - ராகுல் காந்தி
    X
    பிரதமர் மோடி - ராகுல் காந்தி

    அரியானாவில் இன்று பிரதமர் மோடி - ராகுல் காந்தி போட்டி பிரசாரம்

    அரியானா மாநிலத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி இன்று போட்டி பிரசாரம் செய்கின்றனர். மோடியும், ராகுலும் ஒரே நாளில் அரியானாவில் இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் வருகிற 21-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து இந்த இரு மாநிலங்களிலும் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. நாளை மாலையுடன் பிரசாரம் ஓய இருப்பதால் இன்றும் நாளையும் இறுதி கட்ட பிரசாரம் நடக்கிறது.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களாக இந்த இரு மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்து பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசி வருகிறார். இன்று (வெள்ளிக்கிழமை) அவர் அரியானாவில் இரண்டு நகரங்களிலும், மகாராஷ்டிரத்தில் ஒரு இடத்திலும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

    அரியானாவில் கிஷார், கோகா ஆகிய இரு நகரங்களில் மோடி பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு பிரசாரத்தை முடித்து விட்டு மகாராஷ்டிர மாநிலத்திற்கு பிரதமர் மோடி மும்பையில் நடக்கும் பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்று பா.ஜ.க. - சிவசேனா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    அரியானாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அங்கு இன்று மோடிக்கு போட்டியாக சோனியா பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். அந்த பிரசாரம் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது.

    சோனியா காந்தி

    இதையடுத்து இன்று அரியானா மாநிலத்திற்கு ராகுல்காந்தி செல்கிறார். ராகுல் அங்கு நடக்கும் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார்.

    மோடியும், ராகுலும் ஒரே நாளில் அரியானாவில் இருப்பதால் அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் அந்தேரி, ராஜ்புரா, வாணி, கபர்கேடா ஆகிய 4 ஊர்களில் பிரசாரம் செய்கிறார்.

    நாளை அவர் அரியானா, மகாராஷ்டிரா இரு மாநிலங்களிலும் பேச உள்ளார். இந்த இரு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தவிர 64 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தொகுதிகளிலும் நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது.
    Next Story
    ×