search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா
    X
    அமித்ஷா

    சிவசேனா ஆதரவு இல்லாமல் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் - அமித்ஷா

    பாரதிய ஜனதா கட்சி சிவசேனா ஆதரவு இல்லாமல் தனித்து பெரும்பான்மை பலத்தை பெற்று மராட்டியத்தில் ஆட்சி அமைக்கும் என்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    மராட்டிய மாநில சட்ட சபைக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    மொத்தம் உள்ள 288 இடங்களில் 145 இடங்களை பெறும் கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும்.

    கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிட்டு 122 இடங்களை பிடித்தது. சிவசேனா கட்சி 63 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பிறகு இரு கட்சிகளும் கூட்டணி ஏற்படுத்தி ஆட்சி அமைத்தன.

    பா.ஜ.க.வின் பட்னவீஸ் முதல்-மந்திரியாக உள்ளார். இந்த தடவை பாரதிய ஜனதா கட்சியும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பாரதிய ஜனதா 152 இடங்களிலும், சிவசேனா 124 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி தனித்து பெரும்பான்மை பலத்தை பெற்று மராட்டியத்தில் ஆட்சி அமைக்கும் என்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். இது தொடர்பாக ஒருதொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

    மராட்டியத்தில் 3-ல் 2 பங்கு இடங்களை பாரதிய ஜனதா கூட்டணி கைப்பற்றும். கடந்த 5 ஆண்டுகளில் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி அரசு ஏராளமான நலத்திட்ட பணிகளை செய்துள்ளன. இதனால் பாரதிய ஜனதா மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர்.

    இந்த தடவையும் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெறும். இந்த தடவை பாரதிய ஜனதா கட்சி யார் தயவும் இல்லாமல் தனித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    சிவசேனா


    எங்களது ஆட்சியில் வேளாண்மை, கூட்டுறவு, தொழில் உள்பட அனைத்து துறைகளும் மேம்பட்டு உள்ளன. முதலீடுகள் அதிகரித்துள்ளன. பல்வேறு துறைகளில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மராட்டியம் திகழ்கிறது.

    மத்திய அரசும், மராட்டியத்திற்கு அதிக அளவு உதவி செய்து வருகிறது. இதற்கு முந்தைய அரசு மராட்டிய மாநிலத்திற்கு 5 ஆண்டுகளில் 1.22 லட்சம் கோடிதான் கொடுத்து இருந்தது. ஆனால் தற்போது மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு கடந்த 5 ஆண்டுகளில் மராட்டியத்திற்கு ரூ.4.78 லட்சம் கோடி கொடுத்து இருக்கிறது.

    இதன் காரணமாக மராட்டிய மாநிலம் முழுவதும் வளர்ச்சித் திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அடுத்த 20 ஆண்டுகளில் இவை மிகப்பெரிய பலன் அளிக்கும்.

    பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும், பாரதிய ஜனதாவுக்கும் மோதல் ஏற்பட்டு இருப்பதாக தகவலை பரப்புகிறார்கள். இரு கட்சிகளுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. இதை நான் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    அடுத்து வரும் தேர்தலிலும் பாரதிய ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் சேர்ந்தே எதிர்கொள்ளும். பீகாரில் அந்த கூட்டணிக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார்தான் தலைமை வகிப்பார். எனவே எங்கள் கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது.

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.
    Next Story
    ×