search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி 5 ஆண்டுகள் முதல்வராக இருப்பார் - கர்நாடகாவில் நீடித்த இழுபறிக்கு முடிவு
    X

    குமாரசாமி 5 ஆண்டுகள் முதல்வராக இருப்பார் - கர்நாடகாவில் நீடித்த இழுபறிக்கு முடிவு

    காங்கிரஸ் தயவில் கர்நாடகாவில் ஆட்சியமைத்துள்ள குமாரசாமி, 5 ஆண்டுகளும் முதல்வராக இருக்க காங்கிரஸ் ஒத்துழைப்பு அளிக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதையடுத்து நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. #KumaraSwamy #Karnataka #congress
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் ஜே.டி.எஸ். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார். சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்து ஒரு வாரம் ஆகியும் மந்திரிகள் பதவி ஏற்கவில்லை.

    முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வது மற்றும் முக்கிய இலாகாக்கள் ஒதுக்கீடு என காங்கிரஸ் பல்வேறு நிபந்தனைகள் விதித்தது. இதில் முதல்-மந்திரி பதவியை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை, தொடர்ந்து 5 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பேன் என்று குமாரசாமி பிடிவாதமாக மறுத்து விட்டார்.

    இதேபோல் காங்கிரஸ் தங்களுக்கு நிதி, நீர்ப்பாசனம், உள்துறை போன்ற முக்கிய இலாகாக்கள் வேண்டும் என்று கேட்டது. இதற்கும் குமாரசாமி மறுத்து விட்டார். இதுபற்றி காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் மாநில தலைவர்கள் முறையிட்டனர்.



    என்றாலும் இழுபறி நீடித்தது. வேறு வழியில்லாமல் காங்கிரஸ் இதில் பணிந்து விட்டது. காங்கிரஸ் மேலிட தலைவர்கள் பாராளுமன்ற தேர்தல் கூட்டணியை மனதில் வைத்து புதிய சமரச திட்டத்தை தெரிவித்தனர். அதன்படி மாநிலத்தில் குமாரசாமி முதல்-மந்திரியாக நீடித்தால், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஜே.டி.எஸ். கட்சி போட்டியிட வேண்டும் என்று தெரிவித்தது.

    முதலில் தயங்கிய குமாரசாமி பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்குப்பின் சமரசம் ஆனார். முதல்-மந்திரி பதவியில் 5 ஆண்டு நீடிப்பது தொடர்பான உறுதிமொழி ஒப்பந்தத்தை எழுத்துப் பூர்வமாக அளிக்க வேண்டும் என்று குமாரசாமி கேட்டார். அதற்கும் காங்கிரஸ் சம்மதித்தது. இது மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் மேலிட தலைவரும் பொதுச்செயலாளருமான கே.சி.வேணுகோபால் நேற்று பெங்களூர் வந்து மாநில தலைவர்களை சந்தித்து பேசி சமாதானப்படுத்தினார். 5 சுற்று பேச்சுவார்த்தைக்குப்பின் சமாதானம் அடைந்தனர்.

    அதன்பிறகு குமாரசாமியையும் கே.சி.வேணுகோபால் சந்தித்துப் பேசினார். காங்கிரசின் உத்தரவாதத்தை நேரில் அளித்தார். இதையடுத்து காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கூட்டணி உடன்பாடு பற்றி இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதன் பிறகு ஓரிரு நாட்களில் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. #KumaraSwamy #Karnataka #congress

    Next Story
    ×