search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்கு வங்கிக்காக தலித் வேட்பாளர்: பா.ஜ.க. மீது சிவசேனா குற்றச்சாட்டு
    X

    வாக்கு வங்கிக்காக தலித் வேட்பாளர்: பா.ஜ.க. மீது சிவசேனா குற்றச்சாட்டு

    ஜனாதிபதி தேர்தலில் வாக்கு வங்கிக்காக பா.ஜ.க. தலித் வேட்பாளரை நிறுத்தி உள்ளதாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி வருகின்ற ஜூலை 17-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் முனைப்பில் பா.ஜ.க. ஒருபுறமும், காங்கிரஸ் கட்சி ஒருபுறமும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அதேபோல் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கும் பா.ஜ.க. முயற்சி செய்து வந்தது. சோனியா காந்தியும் எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த முயன்று வருகிறார்.

    இந்நிலையில், பீகார் ஆளுநரும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவருமான ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக நேற்று பா.ஜ.க திடீரென அறிவித்தது. ராம்நாத் கோவிந்த் அறிவிப்புக்கு சில எதிர்க்கட்சிகள் ஆதரவும், சில கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். 

    இதனிடையே, பா.ஜ.க. வேட்பாளர் அறித்த உடனேயே மகாராஷ்டிராவில் அதன் கூட்டணி கட்சியான சிவசேனா அவசர கூட்டம் நடத்தியது. பா.ஜ.க அறிவித்த வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 

    இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் வாக்கு வங்கிக்காக பா.ஜ.க. தலித் வேட்பாளரை நிறுத்தி உள்ளதாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், “தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதற்காக மட்டுமே ஒருவரை நீங்கள் நிறுத்தினால் அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதாவது நீங்கள் வாக்கு வங்கி மீது உங்கள் கவனம் உள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலன்கள் சார்ந்தவராக இருக்க வேண்டும். நாங்கள் ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் பசுமை புரட்சிக்கு வித்திட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகிய இரண்டு பெயர்களை பரிந்துரை செய்து இருந்தோம்” என்றார்.
    Next Story
    ×