என் மலர்tooltip icon

    இந்தியா

    • ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், ஹேடன் என்பரை இன்று திருமணம் செய்து கொண்டார்
    • ஆஸ்திரேலிய வரலாற்றில் பிரதமர் ஒருவர் தன் பதவிக்காலத்தில் திருமணம் செய்து கொள்வது இதுவே முதல்முறை.

    2022 முதல் ஆஸ்திரேலியாவின் பிரதமராக செயல்பட்டு வரும் தொழிலாளர் கட்சித் தலைவர் ஆண்டனி அல்பானீஸ்க்கு வயது 62. தனது காதலியான 46 வயது ஜோடி ஹேடன் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.

    கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று ஜோடி ஹேடனிடம் அல்பானீஸ் காதலை கூறிய நிலையில் இன்று பிரதமர் குடியிருப்பில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆஸ்திரேலிய வரலாற்றில் பிரதமர் ஒருவர் தன் பதவிக்காலத்தில் திருமணம் செய்து கொள்வது இதுவே முதல்முறை.

    இந்நிலையில் அவருக்கு இந்திய பிரதமர் மோடி திருமண வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் எனது நல்ல நண்பர் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் திருமதி ஜோடி ஹேடன் ஆகியோரின் திருமணத்திற்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.

    2019ல் தனது முதல் மனைவி கார்மலை அந்தோணி விவாகரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் வருகிற 1-ந்தேதிக்கு முன்பு முடிவு செய்யும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
    • இந்த சந்திப்பின் போது முதல்-மந்திரியின் சட்ட ஆலோசகர் ஏ.எஸ்.பொன்னையா உடன் இருந்தார்.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் செயல்பட்டு வருகிறார்கள்.

    2½ ஆண்டுகள் முடிவடைந்த பிறகும் ஒப்பந்தப்படி முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக சித்தராமையா மறுத்துள்ளார். இதனால் சிவக்குமார் அதிருப்தி அடைந்தார். அவரது ஆதரவாளர்கள் டெல்லியை முற்றுகையிட்டு சிவக்குமாரை முதல்-மந்திரியாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்த அதிகார மோதல் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் வருகிற 1-ந்தேதிக்கு முன்பு முடிவு செய்யும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.



    இதற்கிடையே சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் நேரில் சந்தித்து பேசுமாறு காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து டி.கே. சிவக்குமாருக்கு காலை உணவுக்கு சித்தராமையா அழைப்பு விடுத்தார்.

    இந்த நிலையில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று காலை 10 மணியளவில் முதல்-மந்திரி சித்தராமையா வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது முதல்-மந்திரியின் சட்ட ஆலோசகர் ஏ.எஸ்.பொன்னையா உடன் இருந்தார்.

    பின்னர் சித்தராமையாவும், சிவக்குமாரும் ஒன்றாக காலை உணவு சாப்பிட்டனர். இட்லி, வடை, சாம்பார், சட்னி மற்றும் உப்புமா ஆகியவை காலை உணவாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இந்த சந்திப்பின் மூலம் கர்நாடக முதல்-மந்திரி விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல்-மந்திரி பதவியில் இருந்து சித்தராமையா விலகி சிவக்குமார் முதல்-மந்திரி ஆவாரா? அல்லது முதல்-மந்திரி பதவியில் சித்தராமையா நீடிப்பாரா? என்பது விரைவில் தெரிய வரும்.



    • மாயமான 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • 80 டன் நிவாரண பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் கொழும்புவில் தரையிறங்கி உள்ளது.

    இலங்கையில் 'டிட்வா' புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதனால் காரணமாக பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.

    கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாயமான 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக 20,500 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், 'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் 'ஆபரேஷன் சாகர் பந்து' மீட்பு நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. 80 டன் நிவாரண பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் கொழும்புவில் தரையிறங்கி உள்ளது.

    இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆபரேஷன் சாகர் பந்து" தொடங்குகிறது. தார்பாய்கள், போர்வைகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் சாப்பிடத் தயாராக உள்ள உணவுப் பொருட்கள் உட்பட சுமார் 12 டன் நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற இந்திய விமானப்படையின் C-130 J விமானம் கொழும்பில் தரையிறங்கியது" என்று கூறியுள்ளார்.



    • பக்தர்கள் இருமுடியை தங்களுடன் எடுத்துச் செல்வது தொடர்பாக சர்ச்சை நிலவியது.
    • தேவையான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும் என்றார்.

    புதுடெல்லி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தற்போது பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டிக் கொண்டு சென்று வருகின்றனர்.

    ஆனால் விமானங்களில் ஐயப்ப பத்கர்கள் பயணிக்கும்போது இருமுடி கட்டிக் கொண்டு செல்ல அனுமதி இல்லை. அவர்கள் இருமுடியை தங்களுடன் எடுத்துச் செல்வது தொடர்பாக சர்ச்சை நிலவி வந்தது.

    இந்நிலையில், இருமுடி பைகளை பக்தர்கள் கொண்டு செல்ல மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராமமோகன் நாயுடு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், விமானங்களில் ஐயப்ப பக்தர்கள் தங்களுடன் இருமுடியை எடுத்துச் செல்ல அனுமதிப்பது என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பக்தர்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் பாதிக்கப்படாமல் இருப்பது உறுதிசெய்யப்படும். தேவையான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும் என தெரிவித்தார்.

    • நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது.
    • மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

    கடந்த கூட்டத்தொடரின்போது எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களால், நாடாளுமன்றம் முழுமையாக முடங்கியது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இந்தக் கூட்டத்தொடரை எவ்வித கூச்சல் குழப்பமும் இன்றி சுமுகமாக நடத்தும் நோக்கில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு வரும் 30ம் தேதி (நாளை) அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    நாடாளுமன்ற மரபுப்படி நடைபெறும் இக்கூட்டத்தில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்கப்பட உள்ளது. பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    சமீபத்தில் நடந்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ள நிலையில், இத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

    • சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் 60-வது டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் மாநாடு நடைபெற்றது.
    • இந்த மாநாடு நேற்று தொடங்கி வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் 60-வது டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு நேற்று தொடங்கி வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:

    அடுத்த டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள் மாநாட்டிற்கு முன் இந்தியா நக்சலிசத்திலிருந்து முற்றிலும் விடுபடும்.

    நக்சலிசத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்காக பா.ஜ.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    நக்சலிசத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 2014ல் 126ஆக இருந்தது. இன்று அது வெறும் 11 ஆக குறைந்துள்ளது.

    உளவுத்துறை செயல்பாட்டால் பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு மூளையாக இருப்பவர்களையும் சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நால்வரும் சந்தேகப்படும்படி நடந்து கொண்டதால், உள்ளூர்வாசிகள் தகனத்தை நிறுத்தினர்.
    • பிரீமியத்தை தவறாமல் செலுத்தினார்.

    உத்தர பிரதேசத்தில் காப்பீட்டுப் பணத்திற்காக போலியான இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    உத்தர பிரதேசத்தில் உள்ள கர்முக்தேஷ்வர் கங்கா காட் பகுதிக்கு நான்கு பேர் ஒரு இறந்த உடலை தகனத்திற்காக கொண்டு வந்தனர்.

    சடங்குகளின்படி இறுதிச் சடங்கை செய்வதற்குப் பதிலாக, உடலை நேரடியாகச் சிதைக்கு எடுத்துச் சென்று தகனத்தைத் தொடங்கினர்.

    நால்வரும் சந்தேகப்படும்படி நடந்து கொண்டதால், உள்ளூர்வாசிகள் தகனத்தை நிறுத்தினர். உடலில் இருந்த துணிகள் அகற்றப்பட்டபோது, ஒரு பிளாஸ்டிக் போலி உடல் கண்டெடுக்கப்பட்டது.

    அவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்ற நிலையில் உள்ளூர்வாசிகள் அவர்களில் இருவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் இருவர் தப்பி ஓடிவிட்டனர்.

    போலீசார் பிடிபட்ட இருவரை விசாரித்தபோது, அதிர்ச்சியூட்டும் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

    கைது செய்யப்பட்ட டெல்லியின் கைலாஸ்புரியைச் சேர்ந்த துணிக்கடை நடத்தி வந்த கமல் சோமானி ரூ.50 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கியிருப்பது கண்டறியப்பட்டது. அதிலிருந்து தப்பிக்க, அவர் தனது நண்பர் ஆஷிஷ் குரானாவுடன் ஒரு திட்டம் தீட்டினார்.

    இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கமல் சோமானி, முன்பு தன்னிடம் பணிபுரிந்த அன்ஷுல் குமாரின் ஆதார் மற்றும் பான் கார்டுகளை பய்னபடுத்தி ஒரு வருடம் முன்பு, அன்ஷுலின் பெயரில் ரூ.50 லட்சத்திற்கான ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை வாங்கி, பிரீமியத்தை தவறாமல் செலுத்தினார். காப்பீட்டுத் தொகையைப் பெற, அன்ஷுல் இறந்துவிட்டதாகக் காட்ட போலி இறப்புச் சான்றிதழைப் பெற்றார்.

    பின்னர், நண்பர்களின் உதவியுடன், தான் உடலை தகனம் செய்வதாக அனைவரையும் நம்ப வைக்க போலி இறுதிச் சடங்கு செய்ய முயன்றார்.

    போலீசார் அன்ஷுலைத் தொடர்பு கொண்டபோது, அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், தனது பெயரில் பாலிசி இருப்பது கூட தெரியாது என்றும் கூறினார்.

    இதன் மூலம், கமல் சோமானி மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர். 

    • சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயம் ஆகியவற்றையும் அவர் வெளியிட்டார்.
    • ஆன்மீகம், தேசிய சேவை ஒரே நோக்கத்தில் இணக்கத்துடன் முன்னேறினால்தான், வளர்ந்த இந்தியாவிற்கான நமது இலக்கு நிறைவேறும்.

    கோவாவில் குஷாவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண பார்டகலி ஜீவோத்தம் மடத்தின் 550வது ஆண்டு விழாவையொட்டி, 77 அடி உயர பிரமாண்ட ஸ்ரீ ராமர் வெண்கலச் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, மடம் உருவாக்கிய 'ராமாயண கருப்பொருள் பூங்காவையும் பிரதமர் திறந்து வைத்தார். மேலும், சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயம் ஆகியவற்றையும் அவர் வெளியிட்டார்.

    சிலைத் திறப்புக்குப் பிறகு நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்தியா தற்போது ஒரு பிரம்மாண்டமான கலாசார மறுமலர்ச்சிக்கு சாட்சியாக உள்ளது. இன்றைய இந்தியா புதிய தீர்மானங்கள் மற்றும் புதிதாகக் கிடைத்த நம்பிக்கையுடன் தனது கலாசார அடையாளத்தை முன்னெடுத்துச் செல்கிறது.

    அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படுவது, காசி விஸ்வநாதர் கோவில் மறுசீரமைக்கப்படுவது, மற்றும் உஜ்ஜயினியில் மகாகால்  கோவில் விரிவுபடுத்தப்படுவது ஆகியவை, தேசத்தின் ஆன்மீகப் பாரம்பரியம் புத்துயிர் பெறுவதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

    நம் இளைஞர்களின் ஆற்றல், வளர்ந்து வரும் தன்னம்பிக்கை மற்றும் நமது கலாசார வேர்களுடனான புதுப்பிக்கப்பட்ட தொடர்பு அனைத்தும் இணைந்து ஒரு புதிய இந்தியாவை வடிவமைக்கின்றன.

    ஆன்மீகம், தேசிய சேவை ஒரே நோக்கத்தில் இணக்கத்துடன் முன்னேறினால்தான், வளர்ந்த இந்தியாவிற்கான நமது இலக்கு நிறைவேறும். மேலும் மக்கள் நீர் பாதுகாப்பு மற்றும் சுதேசி பொருட்களை வாக்குகுதல் உள்ளிட்ட உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்" என்று தெரிவித்தார். 

    • 2025 காற்று தர வாழ்க்கை குறியீட்டு (AQLI) அறிக்கையின்படி, டெல்லி மக்கள் தங்கள் ஆயுட்காலத்தில் 8.2 ஆண்டுகளை இழந்துள்ளனர்.
    • டெல்லிக்கு வடக்கில் இமயமலையும், தென்மேற்கில் ஆரவல்லி மலைத் தொடரும் அரணாக அமைந்துள்ளன.

    நாட்டின் தலைநகரமான டெல்லி உலகின் மிகவும் காற்று மாசு கொண்ட நகரங்களில் பட்டியலில் முன்னிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக ஆண்டின் கடைசி மாதங்களில் குளிர்காலத்தில் டெல்லியின் காற்று மாசு மிகவும் மோசமடைகிறது.

    இதனால் சுவாசப் பிரச்சனைகள் உள்ளிட்ட மோசமான உடல்நலப் பிரச்சனைகளை டெல்லி மக்கள் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக டெல்லியில் உள்ள குழந்தைகளுக்கு காற்று விஷமாக மாறும் நிலையை எட்டும் தருவாயில் உள்ளது.

    2025 காற்று தர வாழ்க்கை குறியீட்டு (AQLI) அறிக்கையின்படி, டெல்லி மக்கள் தங்கள் ஆயுட்காலத்தில் 8.2 ஆண்டுகளை இழந்துள்ளனர்.

    மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி 130 ஆக இருந்த டெல்லியின் காற்றின் தரம் நவம்பர் 11-ஆம் தேதிக்குள் 428 என்ற அபாயகரமான நிலையை எட்டியது. 

    இன்றும் டெல்லியின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400க்கும் அதிகம் என்ற மோசமான நிலையிலேயே உள்ளது. அடுத்த வாரத்திலும் இந்த நிலையே நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் மாதத்தில் டெல்லியை சுற்றியுள்ள பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேச விவசாயிகள் பயிர்கழிவுகளை எரிப்பதில் இருந்து வரும் புகையே டெல்லி காற்று மாசுக்கு முக்கிய காரணமாக பொதுவான கருத்து நிலவுகிறது.

    ஆனால் சமீபத்திய ஆய்வுகள் இதை நிராகரிக்கிறது. அதாவது டெல்லி காற்று மாசுக்கு விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதும் ஒரு காரணமே தவிர அதுவே முக்கிய காரணம் கிடையாது.

    மத்திய புவி அறிவியல் துறை வெளியிட்டிருக்கும் முடிவுகளின்படி, அக்டோபர் மாதத்தில் பயிர்க் கழிவுகளுக்கு தீ வைப்பதால் டெல்லிக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. அக்டோபரில் பயிர்க் கழிவு தீ வைப்பால் டெல்லி காற்றுக்கு 2.62 சதவீத பாதிப்பு மட்டுமே ஏற்பட்டது.

    அந்த சமயம் டெல்லி காற்று தரக் குறியீடு 250 என்ற அளவிலேயே இருந்தது. இந்த நவம்பர் 12 டெல்லி காற்று தரக் குறியீடு 418 என்ற 'மிகவும் அபாய' நிலையை எட்டிய நிலையில் இதில் பயிர்க் கழிவுகள் எரிப்பின் பங்கு 22.47 சதவீதம் மட்டுமே ஆகும்.

    நவம்பர் 3 ஆம் வாரத்தில் பயிர்க் கழிவுகள் எரிப்பது குறைந்த போதும் டெல்லி காற்று மாசு குறையவில்லை.

    நவம்பர் 18 முதல் 20 வரை டெல்லி காற்று மாசில் பயிர்த் கழிவுகள் எரிப்பதன் பங்கு 5.4 சதவீதம் முதல் 2.8 சதவீதம் வரை குறைந்தபோதிலும் டெல்லி காற்று தரக் குறியீடு 325-க்கு மேலேயே நீடித்தது.

     இதிலிருந்து தெரிவது என்னவென்றால், பயிர்க் கழிவுகளை எரிப்பது டெல்லி காற்று மாசுக்கு ஒரு காரணிதான் என்றபோதிலும் முக்கிய காரணம் அல்ல என மத்திய புவி அறிவியல் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

    மாறாக டெல்லிக்கு காற்று மாசுக்கு காரணமாக மத்திய புவி அறிவியல் துறை குறிப்பிடும் தரவுகளில், டெல்லி காற்று மாசுக்கு சுற்றுப்புற நகரங்களாக கவுதம் புத்தா நகர், குர்கான், கர்னால், மீரட் உள்ளிட்ட டெல்லியைச் சுற்றியுள்ள நகரங்களின் பங்களிப்பு 29.5 சதவீதம் ஆகும்.

    டெல்லி போக்குவரத்தில் வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை, காற்று மாசுக்கு 19.7 சதவீதம் பங்களிக்கிறது.

    காற்று மாசுக்கு குடியிருப்புகளின் பங்களிப்பு 4.8 சதவீதம் ஆகவும், புறத் தொழிற்சாலைகளின் பங்களிப்பு 3.7 சதவீதம் ஆகவும், மற்றும் கட்டுமானப் தூசு 2.9 சதவீதம் ஆகவும் உள்ளன.

    மாறாக அதிர்ச்சியூட்டும் வகையில் டெல்லி காற்று மாசுக்கு, காரணமே அறியப்படாத, அடையாளம் காணப்படாத காரணிகளின் பங்களிப்பு 34.8 சதவீதம் உள்ளது.

    இந்த மூலங்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்தாவிட்டால், மாசைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஆனால் அவை என்னவென்றே தெரியாமல் கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமற்றது என மத்திய புவி அறிவியல் துறை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

    இதன்மூலம் டெல்லி காற்று மாசுக்கு பல காரணிகள் கூட்டுப் பங்களிப்பை செய்கின்றன. மேலும் டெல்லியின் புவியியலும் காற்று மாசு அதிகளவில் காணப்பட முக்கிய காரணமாகவும்.

    டெல்லிக்கு வடக்கில் இமயமலையும், தென்மேற்கில் ஆரவல்லி மலைத் தொடரும் அரணாக அமைந்துள்ளன. இதனால் குளிர்காலத்தில் தூய காற்று நுழைவதை இந்த இரு அரண்கள் தடுக்கிறது.

    எனவே டெல்லியில் மாசுபாடு காற்றில் தேக்க நிலையை அடைந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டு தரம் குறைவதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    தூய காற்றை சுவாசிப்பது மக்களின் உரிமையாகும். இந்த பிரச்சனைக்கு டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள மாநில அரசுகளும், மத்திய அரசும் ஒருமித்த கருத்துடன் தீர்வை நோக்கிய வியூகத்தை வகுத்து செயல்படுவதே முழுமுதற் தீர்வாகவும். மேலும் மக்களின் ஒத்துழைப்பும் இதற்கு அவசியமாகும்.    

    • ஆகாய ஓட்டல் இயந்திரம் திடீரென பழுதானதால் கீழே இறங்க முடியவில்லை.
    • 2 மணி நேரத்திற்கும் மேலாக முயன்றும் சுற்றுலா பயணிகளை கீழே இறக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    கேரளாவின் மூணாறில் ஆகாய ஓட்டலில் சுற்றுலா பயணிகள் 8 பேர் சிக்கி தவிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    120 அடி உயரம் சென்ற ஆகாய ஓட்டல் இயந்திரம் திடீரென பழுதானதால் கீழே இறங்க முடியவில்லை.

    2 மணி நேரத்திற்கும் மேலாக முயன்றும் சுற்றுலா பயணிகளை கீழே இறக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    அதனால், ஆகாய ஓட்டலில் சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார் ஸ்ரீராமரின் சிலையை உருவாக்கியுள்ளார்

    கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

    மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் நடைபெற்றது.

    இந்நிலையில், கர்நாடகாவின் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடி அங்கிருந்து கோவா பயணமானார். அங்கு மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலையை திறந்துவைத்துள்ளார்.

    இந்த நிகழ்வில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார் ஸ்ரீராமரின் சிலையை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

    • இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.
    • அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இயற்கை பேரிடரால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    டிட்வா புயலால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான மீட்சிக்காக நான் பிரார்த்திக்கிறேன்.

    நமது நெருங்கிய கடல்சார் அண்டை நாடுகளுடன் ஒற்றுமையுடன், இந்தியா ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ் நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான HADR உதவியை அவசரமாக அனுப்பியுள்ளது. மேற்கொண்டு உதவி மற்றும் உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    இந்தியா அதன் தேவைப்படும் நேரத்தில் இலங்கையுடன் தொடர்ந்து உறுதியாக நிற்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×