என் மலர்tooltip icon

    இந்தியா

    • கடுமையாகத் தாக்கி, துப்பாக்கியால் தலையில் சுட்டு, பின்னர் கல்லால் தலையை நசுக்கிக் கொடூரமாகக் கொலை செய்தனர்.
    • மரணத்திலும் எங்கள் காதல் வென்றது; என் தந்தையும் சகோதரர்களும் தோற்றனர் என்று அன்சல் கூறினார்.

    மகாராஷ்டிராவில் ஆணவக்கொலை செய்யப்பட்ட காதலனின் சடலத்துடன் காதலி திருமணம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மகாராஷ்டிராவின் நானந்த் பகுதியை சேர்ந்த 20 வயது சக்ஷம் டேட் மற்றும் அன்சல் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர்.

    இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அன்சலின் குடும்பத்தினர் இவர்களது காதலை கடுமையாக எதிர்த்தனர்.

    எதிர்ப்பை மீறி சக்ஷமைத் திருமணம் செய்துகொள்ள அன்சல் முடிவெடுத்ததை அறிந்த அவரது தந்தையும் சகோதரர்களும், வியாழக்கிழமையன்று சக்ஷமைக் கடுமையாகத் தாக்கி, துப்பாக்கியால் தலையில் சுட்டு, பின்னர் கல்லால் தலையை நசுக்கிக் கொடூரமாகக் கொலை செய்தனர்.

    சக்ஷமின் இறுதிச் சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது, அன்சல் அவர் வீட்டிற்குச் சென்றார்.

    அவர் சக்ஷமின் உடலுக்கு மஞ்சள் பூசி, தன் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு இறந்த காதலனை திருமணம் செய்து கொண்டார்.

    அப்போது, சக்ஷமின் மரணத்திலும் எங்கள் காதல் வென்றது; என் தந்தையும் சகோதரர்களும் தோற்றனர் என்று கூறிய அன்சல், அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    மேலும் சக்ஷமின் வீட்டிலேயே மருமகளாகத் தன் வாழ்நாள் முழுவதும் வாழப்போவதாகவும் அவர் சபதம் எடுத்துள்ளார்.

    கொலை வழக்கில் அன்சல் உடைய தந்தை, சகோதரர்கள் உள்ளிட்ட 6 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

    • சிகிச்சை பலனின்றி நேற்று கனத்தில் ஜமீலா எம்.எல்.ஏ. இறந்தார்.
    • இறுதிச்சடங்கு நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது.

    கேரள மாநிலம் கோயிலாண்டி சட்டமன்ற தொகுதியில் இருந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வெற்றி பெற்றவர் கனத்தில் ஜமீலா.

    கடந்த சில நாட்களாக நோய்வாய்பட்டிருந்த இவர், கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று கனத்தில் ஜமீலா எம்.எல்.ஏ. இறந்தார். அவருக்கு வயது 59.

    கோழிக்கோடு குட்டியாடி பகுதியை சேர்ந்த இவர் பஞ்சாயத்து தலைவர், ஜனநாயக மகளிர் சங்கத்தின் மாநில துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார்.

    இவரது இறுதிச்டங்கு நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது.

    • தனியொரு மனிதனாக வெள்ளைச் சட்டை, வேட்டியுடன் கையில் ஒரு கருப்பு கைப்பையுடன் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்கிறார்.
    • எந்தக் காரியத்துக்கும் வயது ஒரு தடையில்லை என்று கூறினார்.

    கேரளாவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 90 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியர் நாராயணன் நாயர் போட்டியிடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

    எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஆஷமன்னூர் கிராமப் பஞ்சாயத்தின் இரண்டாவது வார்டில் சுயேச்சை வேட்பாளராக நாராயணன் போட்டியிடுகிறார். இதுவே இவருக்கு முதல் தேர்தல் களம் ஆகும்.

    அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஆதரவாளர்களுடன் கூட்டமாகச் செல்ல, வேட்பாளர் நாராயணன் நாயர் தனியொரு மனிதனாக வெள்ளைச் சட்டை, வேட்டியுடன் கையில் ஒரு கருப்பு கைப்பையுடன் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்கிறார்.

    தனது முதுமை குறித்துக் கேட்கப்பட்டபோது, எந்தக் காரியத்துக்கும் வயது ஒரு தடையில்லை என்று நாராயணன் நம்பிக்கையுடன் கூறுகிறார். தனது வார்டு வளர்ச்சிக்காக நிறைய செய்ய வேண்டும் என்பதே தனது இலக்கு என்று அவர் குறிப்பிடுகிறார்.

    போஸ்டர்கள், பேனர்கள் ஆகியவற்றை விட மக்களை நேரடியாகச் சந்தித்தால் தான் பலன் கிடைக்கும். திருமண அழைப்பிதழ்கள் கூட நேரில் சென்று கொடுத்தால் தான் திருமணத்துக்கு வருவார்கள் என நாராயணன் தெரிவிக்கிறார்.

    இவரது நேர்மையான அணுகுமுறைக்கு வாக்காளர்கள் மத்தியிலும் வரவேற்பு நிலவுகிறது.

    கேரளாவில் டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடதப்பட்டு டிசம்பர் 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.   

    • கல்வி, எரிசக்தி, போக்குவரத்து துறை, உள்துறை ஆகியவை தொடர்பான தலா ஒரு மசோதாவும் அடங்கும்.
    • பாராளுமன்ற கூட்டத்தில் எந்த பிரச்சனை குறித்தும் விவாதிக்க தயார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நாளை (1-ந்தேதி) தொடங்குகிறது. வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது. விடுமுறை நாட்கள் நீங்கலாக 15 அமா்வுகள் இந்த கூட்டத்தொடரில் இடம்பெற உள்ளன.

    12 மாநிலங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.), டெல்லி குண்டு வெடிப்பு, வாக்கு திருட்டு, டெல்லி காற்று மாசு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல் வேறு பிரச்சனைகள் குறித்து அவையில் விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு விவாதிக்க மறுக்கும் என்பதால் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்படும்.

    தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் வாக்காளர் தீவிர திருத்தம் தொடர்பான பிரச்சனையை கிளப்புவார்கள்.

    கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடை பெற்ற மழைக்கால கூட்டத் தொட ரில் பீகாா் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களுக்கான விவாதம் குறித்த எதிர்க்கட்சிகளின் அமளியால் பாதிக்கப்பட்டது. மழைக்கால கூட்டத்தொட ரில் மக்களவையின் செயல்பாடு 31 சதவீதமாகவும், மேல்-சபையின் செயல்பாடு 39 சதவீதமாகவும் இருந்தது. குளிா்கால கூட்டத்தொடரில் சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, இந்திய உயா் கல்வி ஆணையம் அமைப் பது, பெருநிறுவன சட்டம் மற்றும் பங்குச்சந்தை உள்ளிட்ட 10 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    10 மசோதாக்களில் 4 நிதித்துறை தொடர்புடையவை, 2 சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்புடையவை. கல்வி, எரிசக்தி, போக்குவரத்து துறை, உள்துறை ஆகியவை தொடர்பான தலா ஒரு மசோதாவும் அடங்கும்.

    வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாடப்படுவதால் அதன் வரலாறு குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாடலில் இருந்து முக்கிய வரிகள் கடந்த 1937-ம் ஆண்டு நீக்கப்பட்டதே இந்தியாவின் பிரிவினைக்கு காரணம் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருந்தார். வந்தே மாதரம் பாடலின் வரலாறு, சுதந்திர இயக்கத்தில் அதன் பங்கு குறித்து இளைஞர்களுக்கு நினைவூட்டுவதற்காக விவாதம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பாராளுமன்ற கூட்டத்தில் எந்த பிரச்சனை குறித்தும் விவாதிக்க தயார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒருமித்த கருத்துடன் அவையை சுமூகமாக நடத்துவதற்கு வேண்டுகோள் விடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு இன்று கூட்டியுள்ளார்.

    • பாரம்பரிய சடங்குகள் இன்றி நடந்த இந்த திருமணத்தில் இருவரும் அரசியலமைப்பு மீது உறுதிமொழி எடுத்தனர்.
    • இதன்மூலம் மொத்தம் 18 யூனிட்கள் ரத்தம் சேகரிக்கப்பட்டன.

    ஒடிசாவின் பெர்ஹாம்பூரைச் சேர்த்தவர் ப்ரீத்திபன்னா மிஸ்ரா (40). இவர் தெலுங்கானாவில் ஐதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆந்திராவின் காக்கிநாடாவை சேர்ந்த பானு தேஜா (43) பெங்களூரில் பணியாற்றி வருகிறார்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ஐதராபாத்தில் ஒரு நிகழ்வில் சந்தித்து காதலித்த நிலையில் நேற்று முன் தினம் அவர்கள் திருமணம் பெர்ஹாம்பூரில் நடைபெற்றது.

    பாரம்பரிய சடங்குகள் இன்றி நடந்த இந்த திருமணத்தில் இருவரும் அரசியலமைப்பு மீது உறுதிமொழி எடுத்து திருமணம் செய்து கொண்டனர்.

    இதன்பின் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ரத்த தான முகாமில் ரத்த தானம் செய்தனர். திருமணத்துக்கு வனத்திருந்த உறவினர்களும் ரத்த தானம் செய்தனர். இதன்மூலம் மொத்தம் 18 யூனிட்கள் ரத்தம் சேகரிக்கப்பட்டன.

    ஒடிசாவில் அரசியலமைப்பின் மீது உறுதிமொழி எடுத்து தம்பதியினர் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

    • தீ கட்டிடத்தின் மேல் தளம் வரை பரவி கடும் பாதிப்பு ஏற்பட்டது.
    • காயமடைந்த பெண் மம்தா (40) 25 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தலைநகர் டெல்லியில் நடந்த தீவிபத்தில் ஒரு சகோதரி மற்றும் சகோதரர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

    தெற்கு டெல்லியில் உள்ள டைக்ரி பகுதியில் நேற்று மாலை நான்கு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள ஒரு ஷூ கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ கட்டிடத்தின் மேல் தளம் வரை பரவி கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த இரண்டு பெண்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

    இறந்தவர்கள் கட்டிடத்தின் உரிமையாளர் சதேந்தர் என்ற ஜிம்மி (38) மற்றும் அவரது சகோதரி அனிதா (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்ற இருவரின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

    காயமடைந்த பெண் மம்தா (40) 25 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய குற்றவியல் மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றன.   

    • இந்தியாவின் 2 மிகப் பழமையான நகரங்களின் சங்கமம் எப்போதும் சிறப்பு வாய்ந்தது.
    • காசி தமிழ் சங்கமம் தமிழ் மொழியை நேசிக்கும் அனைவருக்கும் ஒரு முக்கியமான தளமாக மாறியுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார்.

    தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-

    இந்தியாவின் 2 மிகப் பழமையான நகரங்களின் சங்கமம் எப்போதும் சிறப்பு வாய்ந்தது. நான் காசி தமிழ் சங்கமம் பற்றிப் பேசுகிறேன். 4-வது காசி தமிழ் சங்கமம் வருகிற 2-ந் தேதி வாரணாசியில் தொடங்குகிறது. இந்த ஆண்டு கருப்பொருள் மிகவும் சுவாரசியமானது. அது தமிழ் கற்க என்பதாகும்.

    காசி தமிழ் சங்கமம் தமிழ் மொழியை நேசிக்கும் அனைவருக்கும் ஒரு முக்கியமான தளமாக மாறியுள்ளது. தமிழ் கலாச்சாரம் சிறந்தது. தமிழ் மொழி சிறந்தது. தமிழ் பாரதத்தின் பெருமை.

    விவசாயத் துறையில் இந்தியா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 357 மில்லியன் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்து இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 100 மில்லியன் டன் அதிகரித்து உள்ளது.

    இளைஞர்களின் அர்ப்பணிப்பையும், விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு உணர்வையும் பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனது இதயம் உற்சாகத்தால் நிரம்பி வழிகிறது. இளைஞர்களின் இந்த அர்ப்பணிப்பு வளர்ச்சி இந்தியாவின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாகும்

    வந்தே மாதரம் 150-வது ஆண்டு விழா, மத்திய மண்டபத்தில் அரசியலமைப்பு தின கொண்டாட் டம் மற்றும் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் உள்ள கோபுரத்தில் காவிக்கொடி ஏற்றப்பட்டது ஆகியவை இந்த மாதத்தில் நடந்த உத்வேககரமான முன்னேற்றங்களில் அடங்கும்.

    இவ்வாறு மோடி பேசியுள்ளார்.

    நாடு முழுவதும் தேனீ வளர்ப்பு முயற்சிகள், விளையாட்டுத் துறையில் சாதனைகள், 2030-ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தை இந்தியா வென்றது. ஜி20 உச்சி மாநாடு குறித்தும் பிரதமர் விரிவாகப் பேசினார்.

    • யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி இடம் பெற்றிருந்தனர்.
    • 2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது.

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் ஏ.ஜே.எல். நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது.

    2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'யங் இந்தியன்' நிறுவனத்தில் இயக்குநா்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் பொறுப்பேற்றனா்.

    இதையடுத்து ஏ.ஜே.எல். நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் முடிவு செய்தது. அதைத் தொடா்ந்து அந்தக் கடன் தொகைக்காக ஏ.ஜே.எல்.நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடைபெற்றதா என்று கண்டறிய அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

    அதில் சோனியாவுக்கும், ராகுலுக்கும் யங் இந்தியன் நிறுவனத்தில் 76 சதவீத பங்குகள் உள்ளன. அவா்களின் மேற்பாா்வையில் ஏ.ஜே.எல். நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் அந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கடன் அளித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் சோனியா ராகுல் உள்ளிட்டோர் ரூ.988 கோடிக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.

    குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவா்களான மோதிலால் வோரா, ஆஸ்காா் பொ்னாண்டஸ், யங் இந்தியன் நிறுவன நிா்வாகிகள் சுமன் துபே, சாம் பிட்ரோடா உள்ளிட்டோர், ஒரு தனியாா் நிறுவனம் மற்றும் யங் இந்தியன் நிறுவனம் மீதும் சதி மற்றும் பண முறைகேடு குற்றச்சாட்டை அமலாக்கத்துறை முன்வைத்தது.

    இந்த குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடா்பாக டெல்லி கோர்ட்டில் தொடா் விசாரணையை மேற்கொண் டது. அமலாக்கத் துறையிடம் சில விளக்கங்களையும் கேட்டது.

    இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடா்பான உத்தரவை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

    ராகுல், சோனியா மீது புதிய வழக்கு

    இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ராகுல்காந்தி, சோனியா மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி கோர்ட்டில் இந்த வழக்கை ஒத்திவைத்த மறுநாள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவினர் ராகுல் காந்தி, சோனியா மற்றும் 6 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.

    • லோவி இன்ஸ்டிடியூட் என்ற குழு ‘ஆசிய சக்தி குறியீடு' மூலம் உலகில் தலைசிறந்த நாடுகள் எவை? என்ற பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
    • பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தையும் அதற்கடுத்தபடியாக சீனா 2-வது இடத்தையும் பெற்று இருக்கிறது.

    உலகின் சிறந்த நாடுகள் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு அமைப்புகளால் வெளியிடப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம், ராணுவ பலம், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம், சமூகத்தின் நிலை மற்றும் உலகுக்கு அந்த நாடு அளிக்கும் பங்களிப்பு உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாராகிறது.

    அந்த வகையில் ஆஸ்திரேலியாவை அடிப்படையாக கொண்ட லோவி இன்ஸ்டிடியூட் என்ற குழு 'ஆசிய சக்தி குறியீடு' மூலம் உலகில் தலைசிறந்த நாடுகள் எவை? என்ற பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

    பொருளாதாரத் திறன், ராணுவத்திறன், நிலைத்தன்மை, எதிர்கால வளங்கள், பொருளாதார உறவுகள், பாதுகாப்பு வலையமைப்புகள், ராஜதந்திர செல்வாக்கு, கலாசார செல்வாக்கு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.

    இந்த பட்டியலில் வல்லரசு நாடான அமெரிக்கா முதல் இடத்தையும் (80.5 புள்ளிகள்), அதற்கடுத்தபடியாக சீனா 2-வது இடத்தையும் (73.7 புள்ளிகள்) பெற்று இருக்கிறது. இந்த புள்ளி விவரங்கள் குறியீட்டின்படி, இந்த 2 நாடுகளும் மிக சக்திவாய்ந்த நாடுகளாக சொல்லப்படுகிறது. அதனைத்தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் (40 புள்ளிகள்) உள்ளது. இந்த புள்ளி விவரங்களை வைத்து இந்தியா முக்கிய சக்திவாய்ந்த நாடாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவின் இந்த முன்னேற்றத்துக்கு நாட்டின் பொருளாதார மீட்பு, அதிகரித்த ராணுவ பலம், சர்வதேச அரங்கில் ராஜதந்திர செல்வாக்கு, அரசியல் முக்கியத்துவம் போன்றவை காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. இதனையடுத்து 38 புள்ளிகளுடன் ஜப்பான் 4-வது இடத்திலும், ரஷியா 32.1 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் இருக்கிறது. இந்த நாடுகள் நடுத்தர சக்திவாய்ந்த நாடுகள் என வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    • தென்னிந்தியாவின் சில நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்படலாம் என அறிவிப்பு.
    • விமானங்களின் நிலவரத்தை பயணிகள் இணையதளத்தில் சரிபார்க்குமாறும் அறிவுறுத்தல்.

    டிட்வா புயல் காரணமாக சென்னை மற்றும் தென்னிந்தியாவின் சில நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்படலாம் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    விமான நிலையம் செல்வதற்கு முன், விமானங்களின் நிலவரத்தை பயணிகள் இணையதளத்தில் சரிபார்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உள்பட பல நகரங்களில் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    உதவிக்கு 011-69329333, 011-69329999 என்ற அவசர கால கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • 80 டன் நிவாரண பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் கொழும்புவில் தரையிறங்கி உள்ளது.
    • 'ஆபரேஷன் சாகர் பந்து' திட்டத்தின்கீழ் இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

    இலங்கையில் 'டிட்வா' புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதனால் காரணமாக பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.

    கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாயமான 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக 20,500 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

    'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் 'ஆபரேஷன் சாகர் பந்து' மீட்பு நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. 80 டன் நிவாரண பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் கொழும்புவில் தரையிறங்கி உள்ளது.

    இந்த நிலையில், டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 'ஆபரேஷன் சாகர் பந்து' திட்டத்தின்கீழ் இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

    இலங்கையில் மீட்புப் பணிகளுக்கு உதவ இந்தியாவின் தலா இரு Mi-17, Chetak ரக ஹெலிகாப்டர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

    • ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், ஹேடன் என்பரை இன்று திருமணம் செய்து கொண்டார்
    • ஆஸ்திரேலிய வரலாற்றில் பிரதமர் ஒருவர் தன் பதவிக்காலத்தில் திருமணம் செய்து கொள்வது இதுவே முதல்முறை.

    2022 முதல் ஆஸ்திரேலியாவின் பிரதமராக செயல்பட்டு வரும் தொழிலாளர் கட்சித் தலைவர் ஆண்டனி அல்பானீஸ்க்கு வயது 62. தனது காதலியான 46 வயது ஜோடி ஹேடன் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.

    கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று ஜோடி ஹேடனிடம் அல்பானீஸ் காதலை கூறிய நிலையில் இன்று பிரதமர் குடியிருப்பில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆஸ்திரேலிய வரலாற்றில் பிரதமர் ஒருவர் தன் பதவிக்காலத்தில் திருமணம் செய்து கொள்வது இதுவே முதல்முறை.

    இந்நிலையில் அவருக்கு இந்திய பிரதமர் மோடி திருமண வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் எனது நல்ல நண்பர் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் திருமதி ஜோடி ஹேடன் ஆகியோரின் திருமணத்திற்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.

    2019ல் தனது முதல் மனைவி கார்மலை அந்தோணி விவாகரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×