என் மலர்
தேர்தல் செய்திகள்
என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மற்றும் தமிழக மின் உற்பத்தி- பகிர்மான கழகம் இணைந்து என்.எல்.சி. தமிழ்நாடு மின் நிறுவனத்தின் மூலம் தூத்துக்குடியில் 1000 மெகாவாட் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா தூத்துக்குடி துறைமுக பள்ளி மைதானத்தில் இன்று நடந்தது.
அதில் கலந்து கொள்வதற்காக மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரி துறை மந்திரி பியூஸ் கோயல் இன்று தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
மத்தியில் மோடியும், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்திற்கு நல்ல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். பா.ஜனதா, அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் பிற கட்சிகள் இணைந்திருப்பது தமிழகம் மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் சேர்ந்த கூட்டணி.
இன்று நமது நாடு பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக பயங்கரவாதத்தால் நாம் பல சவால்களை சந்தித்து வருகிறோம். இப்படிப்பட்ட சூழலில் நமக்கு ஒரு வலிமையான தலைவர் தேவைப்படுகிறார். அப்படிப்பட்ட தலைவராக, நாட்டை பாதுகாக்கக்கூடிய தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார்.
தமிழக மக்கள் சரியான முடிவு எடுத்து எங்கள் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். அப்படி வாக்களிக்கும் போது மத்தியில் வலிமையான அரசு அமைவதோடு அனைவருக்கும் எல்லா திட்டங்களும் கிடைக்கின்ற வகையில் நல்லாட்சி அமைய தமிழக மக்கள் உதவி புரிவார்கள்.

காஞ்சிபுரத்தில் வருகிற 6-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேசினார்.
பேட்டியின் போது அமைச்சர்கள் தங்கமணி, கடம்பூர் ராஜூ, மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ் ணன், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், அ.தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐ.ஜே.கே. கட்சிகளும் உள்ளன. அந்த கட்சிகளுக்கு அதிகாரப்பூர்வமாக தொகுதிகள் ஒதுக்கப்படாமல் இருந்தது. திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், இரண்டு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அதன்பின்னர் மதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது, மதிமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது.
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. தலைமையில் இரு அணிகள் மோத உள்ளன.
அ.தி.மு.க. தலைமையிலான அணியில் பா.ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ், த.மா.கா. ஆகியவை இடம் பெற்றுள்ளன. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகியவை இடம் பெற்றுள்ளன.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும், டி.டி. வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் யார் கூட்டணிக்கு வந்தாலும், வராவிட்டாலும் அனைத்து தொகுதிகளிலும் களம் இறங்குவது என்ற முடிவுடன் உள்ளனர். இந்த நிலையில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. என்ன முடிவு எடுக்கும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாக உள்ளது. தே.மு.தி.க. முதலில் டெல்லி சென்று பா.ஜனதாவுடன் பேச்சு நடத்தியது. எனவே அந்த கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தே.மு.தி.க.வுக்கு முன்னதாக பா.ம.க.வுக்கு 7 இடங்களை அ.தி.மு.க. விட்டுக் கொடுத்ததால் அதே போன்று 7 இடங்கள் தங்களுக்கும் வேண்டும் என்று தே.மு.தி.க. தரப்பில் கூறப்பட்டதால் தொடக்கத்திலேயே முட்டுக்கட்டை விழுந்தது.
இதற்கிடையே விஜயகாந்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்து பேசினார்கள். இதனால் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறும் என்று கருதப்பட்டது.
ஆனால் தி.மு.க. கூட்டணியிலும் தே.மு.தி.க.வுக்கு எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை. அதிக பட்சமாக 5 தொகுதிகள் தான் தருவோம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் தி.மு.க. அணியில் இடம் பெறுவதை தே.மு.தி.க. தவிர்த்தது.
தே.மு.தி.க.வுக்காக இனி காத்திருக்க இயலாது என்ற முடிவுக்கு வந்த தி.மு.க. தன் தோழமைக்கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. இன்று அல்லது நாளைக்குள் தி.மு.க.வில் அனைத்து தொகுதிகளுக்கும் உடன்பாடு எட்டப்படும் நிலை உள்ளது.
இந்த நிலையில் அ.தி.மு.க.வினர் மீண்டும் தே.மு.தி.க.வுடன் பேச்சு நடத்தினார்கள். கடந்த வார இறுதியில் அதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த பேச்சுவார்த்தையில் திடீர் சிக்கல் தோன்றியது.
இதற்கு தே.மு.தி.க. தரப்பில் வைக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. அ.தி.மு.க.விடம் 7 தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதமாக பேசி வந்த தே.மு.தி.க. பிறகு சற்று இறங்கி வந்தது.

இந்த குழப்பத்துக்கு இடையே நேற்று விஜயகாந்தை ச.ம.க. தலைவர் சரத்குமார் திடீரென்று சந்தித்து பேசினார். இதனால் தே.மு.தி.க.வின் முடிவுகளில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை.
தே.மு.தி.க. தலைவர்களில் சிலர் டி.டி.வி.தினகரனுடன் பேசி வருவதாக உறுதி செய்யப்படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து தே.மு.தி.க.வை தங்கள் அணியில் இருந்து விட்டுவிடக்கூடாது என்று பா.ஜனதா மூத்த தலைவர்கள் உஷாராகி இருக்கிறார்கள்.
அவர்கள் தே.மு.தி.க. தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். கொஞ்சம் விட்டு கொடுத்து அ.தி.மு.க. அணிக்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அதை விஜயகாந்த் ஏற்பாரா? என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது.
இந்த நிலையில் தே.மு.தி.க.வின் அவசர ஆலோசனை கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு விஜயகாந்த் தலைமை தாங்குகிறார்.
கூட்டத்தில் தே.மு.தி.க. தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்நிலை குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு பற்றி இறுதி முடிவுகள் எடுக்கப்படுகிறது.
எனவே தே.மு.தி.க.வின் முடிவு என்ன என்பது நாளை தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6-ந்தேதி மோடி சென்னைக்கு வருவதால் தே.மு.தி.க.வுடனான பேச்சு வார்த்தையை நாளைக்குள் முடித்து விட வேண்டும் என்று அ.தி.மு.க.-பா.ஜனதா தலைவர்களும் ஆவலுடன் உள்ளனர். எனவே நாளை இதில் ஒரு தெளிவான நிலை தெரிந்து விடும் என்று கூறப்படுகிறது.
அ.தி.மு.க. -தே.மு.தி.க. இடையே இன்று (திங்கட்கிழமை) தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டு விடலாம் என்று நேற்று இரவு ஒரு தரப்பில் கருதப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை நடைபெறுவதாக இருந்த அரசு திட்ட விழாக்களை சற்று தள்ளி வைக்கவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாராக இருந்தார்.
ஆனால் தே.மு.தி.க. தரப்பில் உறுதியான தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வினர் இன்று வழக்கமான பணிகளில் ஈடுபட்டனர்.
தே.மு.தி.க.வின் பிடிவாதத்தால் அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் கடும் அதிருப்தி உருவாகி இருக்கிறது. இது தொடர்பாக மூத்த அ.தி.மு.க. தலைவர் ஒருவர் கூறியதாவது:-
தே.மு.தி.க.வுக்கு முன்பு போல வாக்குவங்கி கிடையாது. அந்த கட்சிக்கு 3 சதவீத வாக்குகளே உள்ளன. இது அனைவருக்கும் தெரியும். என்றாலும் தே.மு.தி.க. இந்த விஷயங்களில் பிடிவாதமாக இருப்பதால் ஒப்பந்தம் தள்ளி போய் உள்ளது.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை தே.மு.தி.க. வந்தால் வரவேற்போம். வராவிட்டால் கவலையில்லை. பா.ஜனதா தான் தொடர்ந்து தே.மு.தி.க.வை இடம் பெற செய்ய வேண்டும் என்று கூறி வருகிறது. அதனால் தான் நாங்கள் தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.
தே.மு.தி.க. 7 தொகுதிகளை கேட்பதில் அர்த்தமே இல்லை. 5 தொகுதிகள்தான் கொடுக்க இயலும். அதற்கு மேல் கொடுத்தால் அ.தி.மு.க. உட்கட்சியில் பிரச்சனைகள் உருவாகி விடும். இதை தே.மு.தி.க. புரிந்துக் கொள்ள வேண்டும். தே.மு.தி.க. தலைவர்களில் சிலர் 5 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்ட பிறகு 21 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் 5 தொகுதிகளை கேட்கிறார்கள். இந்த 21 தொகுதிகளில் திருவாரூர் தவிர 20 தொகுதிகளும் அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். இந்த தொகுதிகளை எப்படி மற்ற கட்சிகளுக்கு கொடுக்க முடியும்?
பா.ம.க., பா.ஜனதா, புதிய தமிழகம் கட்சிகள் இதை புரிந்து கொண்டு 21 தொகுதிகளில் அ.தி.மு.க.வை ஆதரிக்க முன் வந்துள்ளன. தே.மு.தி.க. மட்டும் இதில் பங்கு கேட்பதை எப்படி ஏற்க முடியும்.
விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதில் 20 சதவீத இடங்களை தே.மு.தி.க.வுக்கு விட்டு தர அ.தி.மு.க. சம்மதித்து உள்ளது. அதை ஏற்று தே.மு.தி.க. கூட்டணியில் இடம் பெற முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த மூத்த அ.தி.மு.க. தலைவர் தெரிவித்தார். #LSPolls #ADMK #DMDK #Vijayakanth

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அண்ணா கண்ட பேரியக்கம்; தலைவர் கலைஞர் கட்டிக்காத்த கொள்கைப் பட்டாளமாம் தி.மு.கழகம்; தனது தூய லட்சியப் பாதையில் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் தேர்தல் களத்திற்கு ஆயத்தமாகி விட்டது. மத்தியிலும் மாநிலத்திலும் நடந்திடும் அநியாய அவல ஆட்சி தொடர்ந்திடாமல் தடுத்திட - தவிர்த்திட தகர்த்திட - இனி எக்காலத்திலும் எத்தர் கூட்டம் நம் தாய்நாட்டு மக்களை ஏமாளிகளாக்காமல் காத்திட, இரண்டு ஆட்சியாளர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் பேரணி வீரமிகு விருதுநகரில் மார்ச் 6-ந்தேதி நடைபெற இருக்கிறது.
மார்ச் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு வீறுநடை என்பதே பொருளாகும். ஆறு போல பெருக்கெடுக்கும் வீறுநடையை மார்ச் 6ல் விருதுநகரில் காட்டிடவும், அதனை வெற்றி நடையாக மாற்றிடவும் தலைவர் கலைஞரின் அன்பு உடன் பிறப்புகளை உங்களில் ஒருவனான நான் அன்புடன் அழைக்கிறேன்.
ஜனநாயக மாண்புகள் அனைத்தையும் குழி தோண்டிப் புதைக்கும் மக்கள் விரோத பாசிச மத்திய அரசையும் அதனிடம் மண்டியிட்டு மாநிலத்தின் உரிமைகளை அடகுவைத்த மாநில அரசையும் ஒரு சேர எதிர்க்கும் உணர்வும் வல்லமையும் கொண்ட ஒரே இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் தனது தோழமை சக்திகளுடன் இணைந்து காணப்போகும் மகத்தான வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் விருதுநகர் பேரணி அமையப் போகிறது.

எதிர்ப்புறம் இருப்பவர்களைப் பாருங்கள்! மிரட்டலுக்குப் பயந்து கூனிக்குறுகி கூட்டணி சேர்ந்தவர்கள், நேற்று வரை நாராச நடையில் விமர்சித்து விட்டு இன்று மனசாட்சியை விற்றுவிட்டு அதற்கொரு விலை வைத்து கூட்டணி கண்டவர்கள், எது பற்றியும் கவலையின்றி சுயநல எதிர்பார்ப்புகளையே முதலீடாகக் கொண்டு அரசியல் செய்பவர்கள் என ஒட்டு மொத்த மக்கள் விரோதக் கூட்டமும் ஒன்று சேர்ந்து வரிசையாக நிற்கிறது. தங்களை விற்றுக் கொண்டதுபோல மக்களையும் விலைக்கு வாங்கிவிடலாம் என மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் பணநாயக மமதையை ஜனநாயக ஆயுதம் கொண்டு விரட்டிட, ஆட்சி மாற்றத்தை உறுதி செய்திட, வெற்றிக்கு கட்டியம் கூறிட விருதுநகரில் திரண்டிடுவோம்!
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #DMK #MKStalin #DMKCadres
பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஐ.ஜே.கே. கட்சி உள்ளன. ஆனால் அந்த கட்சிகளுக்கு அதிகாரப்பூர்வமாக தொகுதிகள் ஒதுக்கப்படாமல் இருந்தது. திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.
ம.தி.மு.க. 3 தொகுதிகளையும், விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகளையும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலா 2 தொகுதிகளையும் கேட்டு வந்தன.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய உடன்பாடு ஏற்பட்டது.

சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிட உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏற்கனவே கூறியுள்ளார். எனவே, அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதி சிதம்பரம் என்பது உறுதியாகிவிட்டது. மற்றொரு தொகுதி திருவள்ளூர் அல்லது விழுப்புரம் தொகுதியாக இருக்கலாம் என தெரிகிறது. #LSPolls #DMKAlliance #VCK


தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டத்துறை மாநில செயற்குழு கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. சட்டத்துறை தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். இணைத்தலைவர்கள் எஸ்.கே.நவாஸ், அருணாசலம், மாரியப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக அகில இந்திய காங்கிரஸ் சட்டத்துறை தலைவர் விவேக் தன்ஹா, செயலாளர் விபுல் மகேஸ்வரி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் நிறைவில் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சட்டத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் களப்பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலிமையாகவே இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடக்கூடிய வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கண்டறிந்து இருக்கிறோம். தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு முழுமையடைந்ததும் அதனை தி.மு.க.விடம் சமர்ப்பிப்போம்.

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் கடந்த ஓராண்டாக அவர் சிறையிலேயே உள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டை நியாயப்படுத்தவில்லை. இருந்தாலும் அவருக்கும் ஜாமீன் தருவதற்கு அரசு அச்சம் கொள்வது ஏன்? ஜாமீன் வழங்காதிருக்க என்ன காரணம்? என்பது தெரியவேண்டும். அரசும், முதல்-அமைச்சரும் பதில் அளிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சு.திருநாவுக்கரசர் பேசுகையில், “வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் கடுமையாக உழைத்து, ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதி இடைத்தேர்தலும் நமக்கு மிக முக்கியம். ஏனென்றால் அதன் முடிவானது தி.மு.க.-காங்கிரஸ் ஆட்சிக்கு வித்திடலாம். எனக்கு பதவி முக்கியமல்ல, கட்சிக்கு யார் தலைவராக வந்தாலும் எனது 100 சதவீத ஒத்துழைப்பு நிச்சயம் இருக்கும்”, என்றார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி தொகுதிக்கான தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் உள்ள சர்க்கஸ் மைதானத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் வரும் போதும் கோ பேக் மோடி என்று தைரியமாக சொல்லக்கூடிய மாநிலம் தமிழகம் தான். சாலை வழியாக வந்தால் மக்கள் கருப்பு காட்டுவார்கள் என்று கருதி ஹெலிகாப்டரில் போன போது கருப்பு பலூன் பறக்கவிட்டார்கள். அந்தளவுக்கு பா.ஜ.க. மீது வெறுப்பும், காழ்ப்பும் உள்ளது. அ.தி.மு.க.- பா.ஜ.க. வை மக்கள் வெறுக்கிறார்கள், எதிர்க்கிறார்கள். அவர்கள் இருவரும் தற்போது கூட்டணி வைத்துள்ளனர். மக்கள் வாக்களிப்பதற்கும், வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கும் ஒரு இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியை வாக்குச்சாவடி முகவர்கள் நிரப்பக்கூடியவர்கள்.
இத்தனை வருடமாக எந்த உதவித்தொகையும் போய் சேரவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் தெருவில் இறங்கி போராடினால் தான் அரசு அவர்களது கருத்தை கேட்கும் நிலை உள்ளது. ஆனால் தேர்தல் வருகிறது என புரிந்து கொண்டு ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் பணம், சலுகைகள் கொடுக்கக்கூடிய விஷயங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குழப்பமான ஜி.எஸ்.டி. வரியால் கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற கடலைமிட்டாய் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது. பெரிய முதலாளிகள் மட்டுமே தற்போது கடலை மிட்டாய் தயாரித்து, விற்பனை செய்து லாபம் பார்க்கும் நிலையில் உள்ளனர். சாதாரண நிலையில் உள்ளவர்கள் அந்த தொழிற்சாலையை மூடிவிட்டு செல்லக்கூடிய நிலை உள்ளது. தீப்பெட்டி தொழிலுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகம் பெண்கள் தான் வேலை பார்க்கின்றனர். அவர்கள் வேலை இழந்துள்ளனர். புதிதாக வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத நிலை உள்ளது. இது தான் மோடி அரசின் சாதனை.
மோடியின் எந்தவொரு தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. எடப்பாடி எதை சொன்னாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அதனால், அ.தி.மு.க.- பாரதிய ஜனதா கூட்டணியை நாட்டை விட்டு விரட்ட வேண்டும். அப்போது தான் இந்த நாட்டையும், தமிழகத்தையும் காப்பாற்ற முடியும்.
அ.தி.மு.க. ஆட்சி எப்போது தமிழகத்தை விட்டு அகலும், எப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்து மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என்று மக்கள் காத்து கிடக்கின்றனர். வருகிற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். புதிதாக வேலை தேடுபவர்களுக்கும் வேலை கிடைக்காத நிலை உள்ளது. இது தான் மோடி அரசின் சாதனை.
இவ்வாறு அவர் பேசினார். #kanimozhi #bjp #pmmodi






