என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் சேர தேமுதிக தலைவர் விஜயகாந்த் புதிய நிபந்தனை விதித்துள்ளார். #vijayakanth #admk #parliamentelection

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க அ.தி.மு.க. தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக பா.ஜனதா கட்சிக்கு 5 தொகுதிகள், பா.ம.க.வுக்கு 7 தொகுதி, 1 மேல்சபை எம்.பி.யும் தருவதாக கூறி கூட்டணி அமைத்துள்ளது.

    இதுதவிர புதுச்சேரி தொகுதியை என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும், புதிய தமிழகத்துக்கும் 1 தொகுதியும் ஒதுக்கி கூட்டணியை அமைத்துள்ளது.

    இந்த கூட்டணியில் தே.மு.தி.க கட்சியையும் சேர்க்க வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது. இதற்காக மத்திய மந்திரி பியூஸ் கோயல் விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று முதலில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் பா.ம.க.வுக்கு ஒதுக்கிய தொகுதிகளை விட கூடுதலாக 1 தொகுதி ஒதுக்கி தந்தால் கூட்டணியில் சேருவோம் என்று நிபந்தனை விதித்தார்.

    தே.மு.தி.க. சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருந்த கட்சி. தேர்தல் கமி‌ஷனில் அங்கீகாரம் பெற்ற கட்சி. எனவே பா.ம.க.வை விட ஒரு தொகுதி அதிகம் வேண்டும் என்று உறுதியாக இருந்தனர்.

    இதற்கு மத்திய-மந்திரி பியூஸ் கோயல், நாங்கள் உறுதி சொல்ல முடியாது. அ.தி.மு.க.வினர் உங்கேளாடு பேசுவார்கள் என்று கூறிவிட்டு டெல்லி சென்று விட்டார்.

    அதன்பிறகு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

    தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதியில் இருந்து ஆரம்பித்து கடைசியாக 5 தொகுதிகளும் 1 மேல்சபை எம்.பி.பதவியும் தருவதாக பேசி வந்தனர். இதற்கும் விஜயகாந்த் சம்மதிக்காமல் கூடுதல் தொகுதி கேட்டப்படி இருந்தார்.

    இதனால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் போது 20 சதவீத இடங்களை தே.மு.தி.க.வுக்கு தருவதாக அ.தி.மு.க. தரப்பில் எடுத்துச் சொல்லப்பட்டது.

    ஆனாலும் தே.மு.தி.க. தரப்பில் இருந்து சம்மதம் தெரிவிக்கப்படவில்லை.

    அ.தி.மு.க. தரப்பில் இருந்து மீண்டும் விஜயகாந்தை தொடர்பு கொண்டபோது 5 எம்.பி. தொகுதி, 1 மேல்சபை எம்.பி. பதவி தருவதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இடைத்தேர்தல் நடைபெறும் 21 தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடும். இதற்கு அ.தி.மு.க. ஆதரவு தர வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதாக தெரிகிறது.

    இந்த வி‌ஷயத்தை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்து கூறினார்கள். ஆனால் அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை.


    இடைத்தேர்தல் நடைபெறும் 21 சட்டசபை தொகுதியும், அ.தி.மு.க தொகுதியாகும். இதில் அ.தி.மு.க. நிற்கும். வேறு எந்த கட்சிக்கும் ‘சீட்’ கொடுக்க முடியாது என்று கறராக கூறிவிட்டார்.

    அ.தி.மு.க. பெரிய கட்சி. இதற்கு மேல் தே.மு.தி.க.விடம் இறங்கி போக வேண்டியதில்லை என்று கூறிவிட்டார்.

    நாங்கள் ஒதுக்கும் 5 பிளஸ் 1 எம்.பி. தொகுதிகளை ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வாருங்கள். மற்ற நிபந்தனைகளை விதிக்க வேண்டாம் என்று தே.மு.தி.க. தலைமையிடம் எடுத்து கூறி உள்ளனர். ஆனால் இதற்கு தே.மு.தி.க.வில் இருந்து இதுவரை பதில் வரவில்லை.

    இதுகுறித்து அ.தி.மு.க மூத்த நிர்வாகியிடம் கேட்டதற்கு, “அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்க வேண்டும் என்று பா.ஜனதா விரும்பியதால் தான் நாங்கள் இறங்கி வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால் அவர்கள் நிபந்தனை மேல் நிபந்தனை விதிக்கிறார்கள். எல்லா நிபந்தனைகளுக்கும் நாங்கள் தலையாட்ட முடியாது.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் அவர்களுக்கும் லாபம். வராவிட்டால் அவர்களுக்கு தான் நஷ்டம். முடிவு அவர்கள் கையில்”.

    இவ்வாறு அவர் கூறினார். #vijayakanth #admk #parliamentelection

    அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம் என்று தினகரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். #dinakaran #supremecourt #admkleaf

    மதுரை:

    அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம். எங்களுக்கு மக்கள் ஆதரவு அமோகமாக இருக்கிறது. நாங்கள் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவோம்.

    அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு இல்லை. எனவே தான் அவர்கள் கொள்கை முரணான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளனர்.


    தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்தை வைக்கக்கூடாது என்று குரல் எழுப்பிய கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்துள்ளது. இது தொண்டர்களுக்கு வேதனையை கொடுத்துள்ளது.

    அமைச்சர்கள் சிலர் என்னை தமிழக அரசியலில் தேடப்படும் நபர் என்று சொல்லி வருகிறார்கள். ஆர்.கே. நகர் தேர்தலில் என்ன நடந்தது என்று மக்களுக்கு தெரியும்.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக நான் வேட்பாளர்களை தேடி வருவதாக அமைச்சர் ஒருவர் விமர்சித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் முடிவு வரும்போது யார் வேட்பாளரை தேடினார்கள் என்பது தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #dinakaran #supremecourt #admkleaf

    பார்ப்பதற்கு பிரமாண்டம் போல காட்சி தரும் தி.மு.க. கூட்டணி, பண்டம் இல்லாத காலி டப்பா என்று பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். #ponradhakrishnan #dmk #parliamentelection

    மணவாளக்குறிச்சி:

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். தொடர்ந்து நடந்த சமய மாநாட்டிலும் அவர் பங்கேற்றார்.

    அப்போது பொன்.ராதாகிருஷ்ணனிடம் அ.தி.மு.க.-பாரதீய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இணையுமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    அ.தி.மு.க.- பாரதீய ஜனதா கூட்டணியில் நிச்சயம் தே.மு.தி.க. இணையும். அது தொடர்பான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று அல்லது நாளை அது பற்றி தெரிந்துவிடும். அ.தி.மு.க.-பாரதீய ஜனதா கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி.


    ஐ.ஜே.கே. கட்சி தி.மு.க.வில் இணைந்திருப்பதால் பாரதீய ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாரிவேந்தர் மட்டுமல்ல, எவர் எங்கு சென்றாலும் பாரதீய ஜனதா கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. பார்ப்பதற்கு பிரமாண்டம் போல காட்சி தரும் தி.மு.க. கூட்டணி, பண்டம் இல்லாத காலி டப்பா.

    தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக பிரசாரம் செய்து வரும் பி.ஆர். பாண்டியன் அரசியல் பின்புலம் உடையவர். விவசாயிகளின் தலைவராக அல்லாமல் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்.

    மத சார்பின்மைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக நாஞ்சில் சம்பத் கூறியிருக்கிறார். அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறிய நாஞ்சில் சம்பத் மீண்டும் வந்திருப்பதால் தமிழக மக்களுக்கு மாரடைப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    பாகிஸ்தான் மீதான தாக்குதல் பற்றி பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு தெரியவில்லை என்று குற்றம் சாட்டுவது சரியல்ல. தெரியவேண்டிய அனைவருக்கும் அது தெரிந்துள்ளது.

    பாகிஸ்தான் மீதான தாக்குதல் சம்பவத்தை வைத்து பாரதீய ஜனதா அரசியல் செய்வதாக கூறுவது சரியல்ல. பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்ததன் மூலம் கிடைத்த வெற்றியை அறிவிக்கும் கடமை பிரதமருக்கு உள்ளது. வெற்றியை கொண்டாடும் முதல் கடமை பிரதமருக்கும், 2-வது கடமை எதிர்க்கட்சிக்கும், 3-வது கடமை அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும், 4-வது கடமை மக்களுக்கும் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டணி விவகாரத்தில் விஜயகாந்த் நல்ல முடிவு எடுப்பார் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார். #ministerudayakumar #vijayakanth #parliamentelection

    மதுரை:

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் அலுவலக புதிய கட்டிட பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணி ஜீரோ. ஜீரோவுடன் எத்தனை ஜீரோ சேர்ந்தாலும் ஜீரோதான். அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி ராஜ்ய கூட்டணி. தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி தண்ணீரும், எண்ணையும் போன்று ஒட்டவே ஒட்டாது.

    விஜயகாந்த் மதுரைக் காரர், சூழ்ச்சி தெரிந்தவர். நல்ல முடிவைத்தான் எடுப்பார். டி.டி.வி. தினகரன் வேட்பாளர் இல்லாமல் தேடிக்கொண்டிருக்கிறார்.

    சூழ்ச்சியோடு விசாரித்தவர்கள் யார்? உண்மையாக விசாரித்தவர்கள் யார்? என்பது மதுரையைச் சேர்ந்த விஜயகாந்துக்கு தெரியும்.


    உண்மையோடு விசாரித்தவர்களோடு விஜயகாந்த் வந்து இணைவார். மெகா கூட்டணி நாங்கள் அமைத்துள்ளோம். நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. டி.டி.வி. தினகரன் போன்றோர் களத்தில், அதாவது தேர்தல் களத்தில் உள்ளனரா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. வேட்பாளர்களை அ.ம.மு.க. தேடி வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #ministerudayakumar #vijayakanth #parliamentelection

    அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி சேர இறுதி கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் விஜயகாந்தை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று திடீர் என்று சந்தித்து பேசினார். #sarathkumar #vijayakanth #parliamentelection

    சென்னை:

    அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி சேர இறுதி கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று திடீர் என்று சந்தித்து பேசினார். அ.தி. மு.க.- பா.ஜனதா கூட்டணியை சமீபத்தில் சரத்குமார் விமர்சித்து வந்தார். இந்த நிலையில் அவர் விஜயகாந்தை சந்தித்ததால் பரபரப்பு நிலவியது.

    விஜயகாந்தை சந்தித்து விட்டு வெளியே வந்த சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது அன்பு சகோதரர், இனிய நண்பர் விஜயகாந்தை சந்தித்து விட்டு வருகிறேன். உடல் நலமில்லாமல் இருந்த அவரை சந்திக்க நான் நியூயார்க் வருகிறேன் என்று தெரிவித்தேன். அதற்கு அவர் அங்கு வர வேண்டாம். இங்கே வந்தவுடன் பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

    எனவே இன்று காலை சந்திக்க வந்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு அவரை சந்திக்கிறேன். அவர் குணமாகி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தவர்களில் நானும் ஒருவன். அவர் நலமாக இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது.

    அவர் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய வலிமை பொருந்தியவராக தெரிகிறார். அதனால் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

    இருவரும் அரசியலை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அரசியல் நிலவரத்தை பற்றி பேசினோம். அவருடைய கருத்துக்களை நான் கேட்டுக் கொண்டேன். என்னுடைய கருத்துக்களை நான் தெரிவித்துள்ளேன். ஆனால் விஜயகாந்த்தான் முடிவு எடுக்க வேண்டும்.

    எனது பார்வையில் இப்போது அரசியல் எப்படி இருக்கிறது? எப்படி இருக்க வேண்டும் என்று அவருடன் பகிர்ந்து கொண்டேன். கூட்டணி என்பது அவரது கட்சி முன்னோடிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்டு அவர்கள் எடுக்க வேண்டிய முடிவு. அவர்கள் முடிவில் தலையிட நான் வரவில்லை. ஆனால் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற என்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளேன்.

    நான் கூட்டணி அமைப்பதா? தனித்து போட்டியா? என்பதை 5-ந்தேதி அறிவிப்பேன். 48 மணி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

    கேள்வி:- ரஜினியும், கமலும் இணைந்து இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விஷால் கூறி இருக்கிறாரே?

    பதில்:- நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. நான் பெரிய அரசியல் வாதிகளுக்கு பதில் சொல்லி இருக்கிறேன்.

    கே:- இந்த தேர்தல் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

    ப:- இந்த தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மக்கள் என்றைக்கு பணம் வாங்காமல் ஓட்டு போடுகிறார்களோ அன்றைக்கு நல்லவர்கள் வெற்றி பெறுவார்கள்.

    கே:- அ.தி.மு.க., தி.மு.க. வுக்கு மாற்றாக கூட்டணியை உருவாக்க முயற்சி செய்கிறீர்களா?

    ப:- ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    கே:- டி.டி.வி.தினகரன் தரப்பில் பேசினீர்களா?

    ப:- நான் குழு அமைத்து இதுவரை யாரிடமும் பேச வில்லை. என்னிடம் பலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். எனக்கு பல இயக்கங்களில் நண்பர்கள் இருக்கிறார்கள். நான் தி.மு.க. வில் இருந்து அ.தி.மு.க.வுக்கு வந்து அதன்பிறகு சொந்த கட்சி நடத்திக் கொண்டு ஒரே நிலைப்பாட்டில் இருந்தவன். நான் பல நண்பர்களை சேகரித்து வைத்திருக்கிறேன். எல்லோரும் என்னிடம் நட்பு பாராட்டுவதால் இங்கு இருங்கள், அங்கு இருங்கள் என்று சொல்லலாம்.

    கே:- உங்களிடம் நிறைய பேர் பேசுவதாக கூறினீர்கள். யாருடன் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது?

    ப:- நான் பேரம் பேசுகிற நபர் இல்லை. பேரம் பேசி இவ்வளவு சீட் கொடுங்கள், பணம் கொடுங்கள் என்று கேட்கப் போவதில்லை. மற்றவர்கள் அப்படித்தான் கேட்பார்களா என்று அடுத்த கேள்வி கேட்டு விடாதீர்கள். அது எனக்கு தெரியாது.

    சொல்வதை வைத்துதான் நானும் பேசுகிறேன். என்னை பொறுத்தவரை நிறைய திட்டுகிறவர்கள் ஒன்று சேரும்போது மனசாட்சி எப்படி ஒத்து போகும் என்று தெரியவில்லை. இளைஞர்கள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்று நினைக்கையில் இந்த மாதிரி கூட்டணி அமையும்போது எப்படி அவர்கள் அரசியலை பார்க்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

    கே:- திராவிட கட்சிகளுடன் கூட்டணியே இல்லை என்று சொன்ன பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளதே?

    ப:- அதை டாக்டர் ராமதாசிடம்தான் கேட்க வேண்டும். இவர்தான் சிறந்த கருத்துக்களை பதிவு செய்து கொண்டிருக்கிறார். மாற்றம், முன்னேற்றம், ஏமாற்றம்.

    கே:- காஷ்மீர் சூழ் நிலையை வைத்து பா.ஜனதா அரசியல் செய்கிறதே?


    ப:- அதை அரசியல் செய்வதாக பார்க்கவில்லை. இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. இதில் அரசியல் பேசக்கூடாது. அபிநந்தன் விடுதலையாகி வந்தது நமக்கு கிடைத்த மிகப்பெரிய மதிப்பு. அவர் சிறந்த வீரர். அவர் வீரச்செயலும், பேசிய விதமும், மனஅழுத்தம் இருந்த நிலையிலும் அமைதியாக பதில் சொன்னதை பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார். #sarathkumar #vijayakanth #parliamentelection

    அரசியல்வாதிகள் பையை நிரப்புவதை நிறுத்திவிட்டு சிறிது நேரம் மன நிறைவுடன் பணியாற்றினால் வேலையில்லா திண்டாட்டம் ஒழிந்து விடும் என்று கமல்ஹாசன் பேசியுள்ளார். #kamalhaasan #makkalneedhimaiam

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கல்லூரிகளுக்கு சென்று அங்கு படிக்கும் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்த்தி வருகிறார். வேளச்சேரி குருநானக் கல்லூரி கலை விழாவில் நேற்று கமல்ஹாசன் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:-

    கேள்வி:- மய்யம் என்ற வார்த்தை எப்படி உங்களிடம் உருவானது?

    பதில்:- இது நான் கண்டு பிடித்த ஒன்று அல்ல. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தோன்றியது. அது என்னுள் வராமல் இருந்து இருந்தால் தான் ஆச்சர்யம். புயலில்கூட அமைதியான இடம் அதன் மையம் தான்.

    கேள்வி:- வேலையில்லா திண்டாட்டம், கல்வித் தரம் குறித்து நீங்கள் முதல்வரானால் என்ன தீர்வு செய்வீர்கள்?

    பதில்:- இது பல முறை என்னை நானே கேட்டுக்கொண்ட கேள்வி. வேலையில்லா திண்டாட்டத்துக்கு அரசும் கல்வியும் தான் காரணம். உங்கள் முன் இதை பேசுவதற்கு பதற்றம் இல்லை. உலகத்தின் தேவை 9 லட்சம் பொறியாளர்கள். அவற்றை இந்தியாவிலேயே தயார் செய்துவிட்டால் எப்படி வேலை கிடைக்கும்? ஒரே பாடத்திட்டத்தை எல்லோரும் படிக்கும் நிலையை மாற்றி அவரவர்களுக்கு பிடித்த துறையை படித்து அந்த துறைக்கு சென்றால் இந்த நிலை மாறும். பெற்றோர்கள் குழந்தைகளின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் இல்லாமை இல்லாத நிலையாகி விடும்.

    அரசியல்வாதிகள் பையை நிரப்புவதை நிறுத்திவிட்டு சிறிது நேரம் மன நிறைவுடன் பணியாற்றினால் வேலையில்லா திண்டாட்டம் ஒழிந்து விடும். தமிழ் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் என எதுவுமே சரியாக வரவில்லை என்ற கணிப்பு இருக்கிறது. கல்வித்தரம் உயர வேண்டும். சம்பாதிப்பதற்காக கற்க தொடங்குவதால் கற்பிப்பவர் நோக்கமும் அதுவாகவே இருக்கிறது.

    கேள்வி:- டிராபிக் ராமசாமியையே தோற்கடித்த மக்கள் கொண்ட நாடு இது. உங்கள் வேட்பாளர் தேர்வு எப்படி இருக்கும்?


    பதில்:- பாலசந்தர் இந்த கேள்வியை கேட்டு இருந்தால் நான் இந்த இடத்துக்கே வந்து இருக்க முடியாது. திறமை என்னிடம் இருப்பதை அவர் நம்பியதால் தான் சிவாஜியும் எம்.ஜிஆரும் கோலோச்சிய சினிமாவில் என்னை அறிமுகப்படுத்தினார். அதே போல் திறமை இருக்கும் இடம் எனக்கு தெரிகிறது. திறமையானவர்களை தகுதியானவர்களை பதவிகளில் அமர வைக்காததன் விளைவுதான் இப்போது பார்க்கிறோம். மக்கள் யாரையும் எப்படியும் தோற்கடிப்பார்கள். அதற்கு பெரிய பெரிய தலைவர்களும் விதிவிலக்கு அல்ல. ஆனால் அப்படி தோற்றதற்கு சின்ன சின்ன தவறுகள் தான் காரணங்களாக இருக்கும். பெரிய பெரிய தவறு செய்து தோற்பவர்கள் திருடர்கள்.

    கேள்வி:-இந்தியன் படத்துக்கு பின்னும் லஞ்சம், ஊழல் ஒழியவில்லையே?

    பதில்:- ஊழலும் லஞ்சமும் புதிது அல்ல. ரோம் நாட்டில் கூட இருந்து இருக்கிறது. ஒன்றிரண்டு பேர் தவறு செய்யலாம். ஒட்டுமொத்த மக்களும் தவறு செய்யக் கூடாது. தமிழ்நாட்டில் காசு கொடுத்து ஓட்டு வாங்குபவர்கள் 234 பேர் தான். ஆனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போட தொடங்கினால் அது அழிவுக்கு செல்கிறது. சில பிரச்சினைகளுக்காக கிரிக்கெட் போட்டியை தடை செய்ய வேண்டும் என்று சிலர் சொன்னபோது நான் அதை ஆதரிக்கவில்லை. கிரிக்கெட் போட்டிகளை தடை செய்வதை விட்டு ஜார்ஜ் கோட்டையில் உள்ள 234 பேர் விளையாடும் போட்டியை நிறுத்த வேண்டும். இதை சொன்னபோது புரிய வில்லை என்றார்கள்.

    கேள்வி:- உங்கள் படங்களில் நீங்கள் எப்போதோ சொன்ன அரசியல் எப்படி இப்போதுகூட சாத்தியமாக இருக்கிறது?

    பதில்:- அறிஞர் அண்ணா தனி தமிழகம் கேட்டு அது தோல்வியில் முடிந்தபோது அண்ணா ‘நான் கேட்டதற்கான தேவைகள் அப்படியே தான் இருக்கின்றன’ என்றார். அதுபோல தான் நான் முன்பே சொன்னதை இப்போதுவரை அரசியல்வாதிகள் செய்து காட்டி வருகிறார்கள். சோ பல ஆண்டுகள் தொடர்ந்து ஒரே நாடகத்தை போடும்போது அதற்கு காரணமான அரசியல்வாதிகளுக்கு தான் நன்றி சொன்னார். அதுபோல நானும் இந்த அரசியல்வாதிகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

    கேள்வி:- உங்களுக்கு ஆதரவாக நாங்களும் இறங்குகிறோம் என்றாலும் சாக்கடை சுத்தமாகி விடுமா?

    பதில்:- பானையில் இருக்கும் நல்ல தண்ணீரை துளிகூட சாக்கடைக்குள் இறங்க விடக்கூடாது. என்னை போன்றோரை சாக்கடையில் இறக்கி சுத்தம் செய்யவைத்து அதன் பின்னர் பானைத் தண்ணீரை குடிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். இறங்கினால் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால் அதற்கு பயந்துகொண்டு நின்றுகொண்டே இருக்க முடியாது. எல்லையில் அபிநந்தன் காட்டுவது மட்டுமே வீரம் அல்ல. ஒவ்வொரு இந்தியனும் காட்டவேண்டியது இந்த வீரத்தை தான். நாம் எல்லோரும் இறங்கினால் சாக்கடை நிச்சயம் சுத்தமாகி விடும். உங்களிடம் நான் வணக்கத்தை எதிர் பார்க்க வில்லை. இணக்கத்தை எதிர்பார்க்கிறேன். நம்முடைய தவறுகள் தான் சாக்கடையாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதை சுத்தம் செய்வது நம் கடமை.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #kamalhaasan #makkalneedhimaiam 

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றியை தடுக்க சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தினகரன் தீவிரம் காட்டி வருகிறார். #dinakaran #admk #parliamentelection

    சென்னை:

    டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.

    தமிழகம் முழுவதும் தினகரன் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை திரட்டி வருகிறார். சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

    அ.தி.மு.க-தி.மு.க. தலைமையில் இரு அணி உருவாகி உள்ள நிலையில் தினகரன் ஓசையில்லாமல் தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளார்.

    வெற்றி வாய்ப்புக்கு இல்லை என்றாலும் கணிசமான ஓட்டுகளை பெறுவதன் மூலம் அ.தி. மு.க.வின் வெற்றியை தடுக்க முடியும் என்று அ.ம.மு.க. எதிர்பார்க்கிறது. அதற்கான வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. அ.ம.மு.க. கட்சியுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர சுலைமான் சேட்டு தலைமையிலான முஸ்லிம் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி சென்றுள்ளது.

    மேலும் சில கட்சிகளும் தினகரன் அணியில் சேர வாய்ப்பு உள்ளது. அக்கட்சி தலைவர்கள் தினகரனுடன் பேசி வருகிறார்கள். அங்கீகரிக்கப்படாத சில கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    கூட்டணி இறுதி செய்யப்படுவதால் தனித் தனியாக உள்ள கட்சிகள் எல்லாம் ஏதாவது ஒரு அணியில் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. சிறிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதை தவிர்த்து பெரிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவே விரும்புகின்றன.

    தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வர இருப்பதால் அதற்குள்ளாக கூட்டணியை உறுதி செய்வதில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. #dinakaran #admk #parliamentelection

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் பிரதமர் மோடி நாளை தேர்தல் பிரசாரம் செய்கிறார். #RahulGandhi #Amethi #PMModi
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திரமோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.

    நாளை (3-ந்தேதி) அவர் உத்தரபிரதேச மாநிலம் செல்கிறார். அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் அமேதி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    முன்னதாக அமேதியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். கவுர்வா என்ற இடத்தில் ஏ.கே.47 ரக துப்பாக்கிக்கான குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதை நாளை அவர் தொடங்கி வைக்கிறார்.

    அமேதி தொகுதியை மிக முக்கியமானதாக பா.ஜனதா கருதுகிறது. ஏனெனில் இது ராகுல்காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா சார்பில் தற்போதைய மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

    ஆனால் ராகுல்காந்தி வெற்றி பெற்ற ஓட்டு விகிதத்தை பெருமளவு குறைத்தார். 2009-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் 2014 தேர்தலில் அது 1 லட்சமாக குறைந்தது.

    கடந்த தேர்தலில் தோல்வியை தழுவிய போதிலும் ஸ்மிரிதி இரானி அமேதி தொகுதியில் 5 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

    இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டு ராகுல்காந்திக்கு எதிராக தேர்தல் வியூகம் அமைத்து செயலாற்றுகிறார். அமேதியை ராகுல்காந்தி ஒதுக்கி விட்டதாக குற்றம் சாட்டுகிறார். இந்த முறை ராகுலிடம் இருந்து இந்த தொகுதியை பா.ஜனதா கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  #RahulGandhi #Amethi #PMModi
    தே.மு.தி.க.வுடன் கூட்டணி தொடர்பாக ஓரிரு நாட்களில் நல்ல முடிவு, சந்தோ‌ஷமான முடிவு எட்டப்படும் என்று துணை- முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கூறினார். #ADMK #OPS #DMDK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., என்.ஆர். காங்கிரஸ், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள், என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதி, புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி என கூட்டணியில் மொத்தம் 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன.

    மேலும் தே.மு.தி.க.வை அ.திமு.க. கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பா.ம.க. வுக்கு நிகராக 7 தொகுதிகளை தே.மு.தி.க. கேட்டதாக தெரிகிறது.

    அ.தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் மீதி 26 தொகுதிகளே இருப்பதால் தே.மு.தி.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்க முயாத நிலை ஏற்பட்டது. எனவே தே.மு.தி.க.வுக்கு 3 தொகுதிகளை ஒதுக்குவதாக பேச்சு நடத்தப்பட்டது. அதை தே.மு.தி.க. ஏற்கவில்லை. எனவே அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது.

    இதையடுத்து தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியை தி.மு.க. மேற்கொண்டது. அமெரிக்காவில் சிகிச்சைக்கு சென்று திரும்பிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். அதன் பிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் விஜயகாந்தை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து பேசினார்.



    விஜயகாந்திடம் உடல் நலம் விசாரிப்பதற்கு அவர்கள் சென்றாலும் தே.மு.தி.க.வை தி.மு.க,. கூட்டணியில் சேர்க்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகளை தி.மு.க.வாலும் ஒதுக்க முடியவில்லை. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டி உள்ளது.

    எனவே தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியை தி.மு.க. கைவிட்டது.

    அதே நேரத்தில் தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. உறுதியாக இருந்தது. கூட்டணி கட்சிகளான பா.ஜனதாவும், பா.ம.க.வும் இதை விரும்பியதால் அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வந்தனர். தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளும், 1 மேல் சபை பதவியும் தருவதாக அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் தே.மு.தி.க. தரப்பில் 5 தொகுதிகள், ஒரு மேல்சபை பதவி மற்றும் 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் குறிப்பிட்ட அளவு இடங்கள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

    இதனால் பேச்சு வார்த்தை தொடர்ந்து நீடித்து வந்தது. தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள், 1 மேல்சபை பதவி அல்லது 5 தொகுதிகள், 1 மேல் சபை பதவி என்ற ரீதியில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி அமையலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் சேருவது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தனார். நிர்வாகிகளின் கருத்தையும் கேட்டறிந்தார்.

    அப்போது அ.தி.மு.க. தலைமையிலான கூடணியில் சேர்ந்து போட்டியிட இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இன்றும் விஜயகாந்த் 2-வது நாளாக தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் ஆலோசைனை நடத்தினார்.

    இதற்கிடையே அ.தி.மு.க. அமைச்சர்கள் விரைவில் விஜயகாந்தை சந்தித்து பேச உள்ளனர். அதன்பிறகு விஜயகாந்துடன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசி கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். இன்னும் ஓரிரு நாளில் கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

    இது தொடர்பாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    தே.மு.தி.க.வுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டணி அமைப்பது தொடர்பாக எந்த இழுபறியும் இல்லை. ஓரிரு நாட்களில் நல்ல முடிவு, சந்தோ‌ஷமான முடிவு எட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #OPS #DMDK
    பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ராகுல்காந்தி ஒப்புதல் அளித்து உள்ளார். #RahulGandhi #parliamentelection #kejriwal

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று இணைக்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

    மாநில அரசியலில் காங்கிரசுக்கு எதிராக செயல்படும் கட்சிகளை மெகா கூட்டணியில் ஒன்று இணைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. இது தொடர்பாக 2 முறை எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று திரண்டு ஆலோசனை நடத்தினார்கள்.

    டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சி பா.ஜனதா, காங்கிரசுக்கு எதிராக அங்கு செயல்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த காங்கிரசுடன் கூட்டணி அமைக்க கெஜ்ரிவால் விருப்பம் தெரிவித்தார்.

    ஆனால் காங்கிரஸ் கட்சிதான் கூட்டணிக்காக ஆர்வமில்லாமல் இருந்தது. கெஜ்ரிவால் இதை வெளிப்படையாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக அந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒப்புதல் அளித்து உள்ளார்.


    இது தொடர்பாக டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் கூறும்போது “ஆம் ஆத்மியுடன் நாங்கள் நல்ல நிலையில் உள்ளோம். பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஆம் ஆத்மியுடன் கூட்டணி இறுதி முடிவாகும்” என்றார்.

    டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது. #RahulGandhi #parliamentelection #kejriwal 

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #ADMK #OPS #Puthiyathamizhagam #Krishnasamy
    சென்னை:

    அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெறலாம் என்று காலையிலேயே தகவல் பரவியது.

    பேச்சுவார்த்தைக்கு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் வரலாம் என கருதி போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

    காலை முதல் பத்திரிகையாளர்களும் ஓட்டல் முன்பு திரண்டு இருந்தனர்.

    இந்த நிலையில் காலை 11.30 மணியளவில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு வந்தார்.

    அடுத்த சில நிமிடங்களில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அங்கு வந்தார். அவரை ஓ.பன்னீர்செல்வம் சால்வை அணிவித்து வரவேற்றார்.



    அதை தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும், டாக்டர் கிருஷ்ணசாமியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    பின்னர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கூட்டணி உடன்பாடு செய்துள்ளது. எங்கள் கூட்டணியில் பாராளுமன்ற தேர்தலில் புதிய தமிழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கவும் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் புதிய தமிழகம் முழு ஆதரவை வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:-

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய, மாநிலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அ.தி.மு.க.வுடன் புதிய தமிழகம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

    எங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி எது? என்பதை பின்னர் அறிவிப்பார்கள். நாங்கள் தனி சின்னத்தில் போட்டியிடுவோம். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #OPS #Puthiyathamizhagam #Krishnasamy
    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தே.மு.தி.க. கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் 2-வது நாளாக இன்று ஆலோசனை நடத்தினார். #vijayakanth #dmdk #admk

    சென்னை:

    தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இழுக்க இறுதி கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக இரு கட்சிகளின் மேல்மட்ட நிர்வாகிகளும் மறைமுகமாக பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தே.மு.தி.க.வின் தொகுதி பங்கீடு குழுவினர் கட்சி அலுவலகத்தில் கூடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    பா.ம.க.வுக்கு இணையாக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வரும் நிலையில் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியாகி விட்டது.

    தே.மு.தி.க.வின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவில் உள்ள நிர்வாகிகளுடன் விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். பரபரப்பாகி வரும் தேர்தல் களத்தில் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

    தினமும் பத்திரிகையாளர்களும், ஊடக துறையினரும் கட்சி அலுவலக வாசலில் குவிந்து விடுகின்றனர்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். காலை 10 மணிக்கு தொகுதி பங்கீடு குழு நிர்வாகிகள் எல்.கே.சுதீஷ், அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன், அன்வர் ஆகியோர் பேசி கொண்டிருந்தனர்.


    பத்திரிகையாளர்கள் யாரும் தே.மு.தி.க. அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. வெளியில் காத்து நின்றனர். 11.50 மணிக்கு விஜயகாந்த் பின் வாசல் வழியாக கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அவர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க-தே.மு.தி.க. கூட்டணியில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து எந்தெந்த தொகுதிகளை கேட்டு பெறுவது குறித்து விவாதித்தனர்.

    தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகளை பா.ம.க.வும் கேட்க கூடும் என்பதால் அவற்றில் எது சாத்தியமாகுமோ அவற்றை வலியுறுத்தி பெறுவது பற்றி ஆலோசித்தனர்.

    கடந்த தேர்தலில் போட்டியிட்ட 14 தொகுதிகளையும் விருப்ப பட்டியலாக கொடுக்கலாம் எனவும் அதில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை கட்டாயம் ஒதுக்க வலியுறுத்தலாம் என்பது பற்றியும் விஜயகாந்த் ஆய்வு செய்தார். பின்னர் 12.25 மணிக்கு விஜயகாந்த் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். #vijayakanth #dmdk #admk

    ×