என் மலர்
தேர்தல் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 2018-19 ம் நிதியாண்டில் 1½ லட்சம் பயனாளிகளுக்கு ரூ.700 கோடி மதிப்பில் வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளது. 12,000 பயனாளிகளுக்கு ரூ.5 கோடி மதிப்பில் கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது. 77 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.50 கோடி மதிப்பில் நாட்டுக்கோழிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்பட உள்ளது. இதேபோன்று கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது அ.தி.முக. அரசு. சேலத்தில் தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் கால்நடை பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
கோடைக்காலத்தில் கால்நடைகளுக்கு தீவனங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நிலங்களில் தீவனங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு ஏற்படும் மாவட்டங்களுக்கு உடனடியாக தீவனங்கள் வழங்கப்படும் கோமாரி நோய் தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனை மடங்கு மரம் விழுந்ததோ அதற்கு இணையாக மூன்று மடங்கு மரங்கள் நடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் அமைத்துள்ள மெகா கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும். புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவு ஜல்லிக்கட்டு நடப்பதால் ஜல்லிக்கட்டு காளை சிலை அமைக்கும் பணி புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி அருகே நடந்து வருகிறது. விரைவில் திறப்பு விழா நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterVijayabaskar #ADMK
தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணியை பார்த்து எதிர்கட்சிகள் ஆடிபோய் உள்ளன. எங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மோடி என பிரசாரத்தில் ஈடுபடுவோம்.
முகிலன் வழக்கில் போலீசார் நல்ல நடவடிக்கை எடுப்பார்கள். எங்கள் கூட்டணியில் எதிர்பாராத கட்சிகளும் இணையும். அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி குறித்து விரைவில் நல்ல தகவல் வரும்.
தி.மு.க. கூட்டணி குழப்ப கூட்டணி. அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterKadamburRaju #ADMK #BJP
தூத்துக்குடி:
தூத்துக்குடி விமான நிலையத்தில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமத்துவ மக்கள் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் நிலைபாடு குறித்து வருகிற 5-ந்தேதி தெரிவிக்கப்படும்.
தே.மு.தி.க. இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பதில் தெரிவிக்க நான் விரும்பவில்லை. பா.ஜனதாவை பொருத்த வரையில் தமிழகத்தில் கால் ஊன்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தெரிகிறது.
அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணியை பொருத்த வரையில் நிலைப்பாடு எடுத்தால் தெளிவாக எடுக்க வேண்டும். அரசியலில் விமர்சிக்கலாம். ஆனால் கீழ்த்தரமாக திட்டிவிட்டு எப்படி அருகில் உட்காருகிறார்கள் என்று தெரியவில்லை. நான் அப்படி இருக்கமாட்டேன்.
தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் ரூ.30 கோடி, ரூ.40 கோடி தேவை என்கிற என்ற அச்சம் உள்ளது. மக்களுக்கு சேவை செய்யும் நபர்களை சுதந்திரமாக தேர்ந்தெடுப்போம் என்ற நிலை எப்போது வருகிறதோ அன்றுதான் உண்மையான ஜனநாயகம். பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் நான் போட்டியிடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #sarathkumar #parliamentelection #samathuvamakkalkatchi
பாராளுமன்ற தேர்தல் கூட்டணியில் தே.மு.தி.க. எந்த பக்கம் சாயும் என்பது இழுபறியாக இருந்து வந்த நிலையில் விஜயகாந்த் அ.தி.மு.க. அணியில் சேர திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களில் வெளியாக வாய்ப்பு உள்ளது. இதனால் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி இறுதியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு மேல்-சபை எம்.பி. பதவியும் அளிப்பது என முடிவு செய்யப்பட்ட நாளில் இருந்தே கூட்டணி பரபரப்பு தொற்றிக் கொண்டது.
அ.தி.மு.க. அணியில் பா.ம.க.வுக்கு இணையான இடங்களை தே.மு.தி.க.வுக்கு கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்பதே விஜயகாந்தின் பிரதான கோரிக்கையாக இருந்தது. ஆனால் அ.தி.மு.க.வோ அதற்கு வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக கூறி விட்டது.
இதனால் அ.தி.மு.க. அணியில் சேருவதா? வேண்டாமா? என்று குழப்பமான மனநிலையில் இருந்த விஜயகாந்தை தி.மு.க. பக்கம் இழுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது பலிக்காமல் போய் விட்டது.
அ.தி.மு.க. அணியில் சேர விஜயகாந்த் முடிவு செய்து விட்டதால் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. விஜயகாந்த் வருவார் என்று காத்திருந்த அ.தி.மு.க. தலைமை, தே.மு.தி.க.வுக்கு 4 பாராளுமன்ற தொகுதிகளையும், ஒரு மேல்-சபை தொகுதியையும் ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை விஜயகாந்த் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதன் மூலம் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேர்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. இதுநாள் வரையில் திறந்திருந்த கூட்டணி கதவு மூடப்பட்டு விட்டதாகவே கருதப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் முதலிலேயே ஒதுக்கப்பட்டு விட்டது. கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடமும், புதிதாக சேர்ந்த ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் உள்ள 40 இடங்களில் (புதுவை உள்பட) 12 இடங்கள் மட்டுமே தி.மு.க. கூட்டணியில் முடிவாகி உள்ளது.
கடந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் இப்போது தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. மனிதநேய மக்கள் கட்சியும் இந்த கூட்டணியில் உள்ளது. புதிதாக பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியும் தி.மு.க. கூட்டணியில் சேர உள்ளது.
இதன் மூலம் இந்த 6 கட்சிகளுக்கும் தொகுதிகளை பங்கிட்டு கொடுக்க வேண்டிய கட்டாயம் தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த கட்சிகள் அனைத்துக்கும் தலா ஒரு இடம் மட்டுமே ஒதுக்க தி.மு.க. திட்டமிட்டிருந்தது.

இப்போது தே.மு.தி.க. வராததால், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய 2 கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சிகளின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தி.மு.க.வும் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
2 கம்யூனிஸ்டு கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கும் ஒரு தொகுதியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த 6 கட்சிகளுக்கும் 8 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு உள்ளது. இதுபோன்று தொகுதி உடன்பாடு ஏற்பட்டால் தி.மு.க. கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளில் போட்டியிடும் சூழல் ஏற்படும்.
இதனால் மீதம் உள்ள 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் தொகுதி உடன்பாடு தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த வாரம் நடைபெற்றது. இன்று முதல் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது. இன்றைய பேச்சுவார்த்தைக்கு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தரும் இன்று மு.க. ஸ்டாலினை சந்தித்து தி.மு.க. கூட்டணியில் சேர உள்ளார். ம.தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுடனும் பேச்சு நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் தி.மு.க. கூட்டணியில் இன்னும் சில தினங்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. #LSPolls #DMK #DMDK
மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மகாராஷ்டிரத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மும்பை குடிசை பகுதி மக்களுக்கு குடிசை சீரமைப்பு திட்டத்தின் கீழ் 500 சதுர அடியில் அடுக்குமாடி கட்டிடங்களில் வீடுகள் கட்டித் தரப்படும். பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, எளிய மக்களின் வங்கி கணக்கில் குறைந்தபட்ச உத்தரவாத வருவாய் டெபாசிட் செய்யப்படும்.
ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்ததை போல மகாராஷ்டிரத்திலும் பயிர்க்கடன் முழுமையான தள்ளுபடி செய்யப்படும். ஆட்சிக்கு வந்த 10 நாளில் இதை செய்வோம்.

மேலும் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். அப்போது, ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக பிரதமரை என்னிடம் 5 நிமிடம் பேச விடுங்கள். நான் கேட்கிற கேள்விக்கு அவர் நாட்டை விட்டு ஓடி விடுவார் என பகிரங்கமாக கூறினார்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் முதல்-மந்திரிகள் சுஷில் ஷிண்டே, பிரிதிவிராஜ் சவான், மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், முன்னாள் மத்திய மந்திரி மிலிந்த் தியோரா, முன்னாள் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட், வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். #Congress #RahulGandhi
பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இத்துடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. இணைந்துள்ளன. தே.மு.தி.க.வையும் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
கமல்ஹாசன் தனது மக்கள் நீதிமய்யம் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தனி அணி அமைக்கப்போவதாக கூறினார். தற்போது, தனியாக தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
அ.ம.மு.க.வுடன் கூட்டணி சேர இருப்பதாக இதுவரை எந்த கட்சிகளும் அறிவிக்கவில்லை.
பா.ம.க.வில் இருந்த நடிகர் ரஞ்சித் சமீபத்தில் அதில் இருந்து விலகி தினகரன் கட்சியில் சேர்ந்து இருக்கிறார். அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக இருக்கின்றன.
இந்த நிலையில், தினகரன் ஒவ்வொரு தொகுதியாக சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். பாராளுமன்ற தொகுதிகளை விட இடைத்தேர்தல் நடைபெறும் சட்டமன்ற தொகுதிகளில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.
இடைத்தேர்தல் நடைபெறும் 21 தொகுதிகளில், தினகரன் ஆதரவாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் 18 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 10-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் நோக்கத்தில் தனது கட்சி நிர்வாகிகளை தினகரன் களம் இறங்கியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில், 9 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும். எனவே, தனது கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தனது ஆதரவு இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. எனவே, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று கருதுகிறார். எனவே, 21 தொகுதிகளிலும் தினகரன் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
பாராளுமன்ற தேர்தலில் அதிக ஓட்டுகள் பெற வேண்டும். சட்டசபை தொகுதிகளில்தான் முழு கவனமும் இருக்க வேண்டும் என்று தினகரன் தனது கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதை அறிந்த அ.தி.மு.க. தலைமையும் 21 சட்டசபை தொகுதிகளிலும் முழு கவனம் செலுத்த அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. #AMMK #TTVDhinakaran
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினர் விருப்ப மனு கொடுக்கலாம் என்று கட்சியின் தலைமை அறிவித்தது. கடந்த ஒரு வாரமாக இதற்கான மனுக்கள் அறிவாலயத்தில் வினியோகம் செய்யப்படுகிறது.
இதற்கான மனு ரூ.1000 செலுத்தி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. மனு தாக்கல் செய்யும் போது ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுவரை 562 பேர் விண்ணப்ப மனுக்களை பெற்றுச் சென்றனர்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளான இன்று விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் விண்ணப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். ஒவ்வொரு மனுவுக்கும் ரூ.25 ஆயிரம் வீதம் செலுத்தப்பட்டது.
மனுக்களை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை கழக நிர்வாகி துறைமுகம் காஜா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இன்று மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, சரவணன், தளபதி ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர். அன்பு செழியன், தண்டபாணி ஆகியோர் கோவை தொகுதிக்கும், ராசையா தென்காசி தொகுதிக்கும் விருப்ப மனு கொடுத்தனர்.
உதயநிதி ஸ்டாலின் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சந்திரபாபு கொடுத்தார். விருதுநகர் தொகுதிக்கு தளபதி மகன் துரைதயாநிதி, மகள் மேகலை ஆகியோர் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
தென் சென்னையில் போட்டியிட கவிஞர் காசி முத்துமாணிக்கம் மனு கொடுத்தார். பொள்ளாச்சி தொகுதிக்கு வக்கீல் மனோகரன், வரதராஜன் ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர். தொடர்ந்து விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. வருகிற 7-ந்தேதி வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம். #DMK
ராயபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று உதவிகள் வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்கள் கூட்டணியில் த.மா.கா.வையும் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி விஷயத்தில் ‘ஜெட்’ வேகத்தில் எங்களது பணி நடைபெறுகிறது.
பிரதமர் மோடி 6-ந்தேதி சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச வருவதால் அதே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களையும் இடம் பெற செய்ய ஏற்பாடு நடக்கிறது. எனவே அதற்குள் கூட்டணியை இறுதி செய்ய உள்ளோம். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் விரைவாக நடந்து வருகிறது.
அ.திமு.க.வுக்கு எதிர்க்கட்சி தி.மு.க.தான். துரோகி கட்சி அ.ம.மு.க., தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி துரோக கூட்டணி.
இவ்வாறு அவர் கூறினார். #Vijayakanth #MinisterJayakumar
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல் தி.மு.க.வும், தே.மு.தி.க.வை தங்கள் அணியில் சேர்க்க முயற்சி மேற்கொண்டது.
இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது, பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் விஜயகாந்த் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இன்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி 50-க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து விருப்பமனு தாக்கல் செய்தார். #DMDK #Vijayakanth #LSPolls
கடலூர் கிழக்கு மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை 4-வது நாளாக நெல்லிக்குப்பம் பகுதியில் மக்களை சந்தித்து பேசினார்.
முன்னதாக அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு திரண்டிருந்த மக்கள் முன்பு டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-
இன்று இரட்டை இலை சின்னம் எனக்கு மறுக்கப்பட்டு உள்ளது. இரட்டை இலை சின்னத்தில் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இல்லை. இது உங்களுக்கு தெரியும். இதற்கு காரணம் துரோகிகள் கையில் சிக்கிய சின்னமாக அது உள்ளது. இதனால்தான் ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை மக்களே தோற்கடித்தார்கள். குக்கர் சின்னம் வெற்றி பெற்றது.
இதனை விட பெரிய அங்கீகாரம் நமக்கு தேவையில்லை. நீதிமன்றத்தில் நான் குக்கர் சின்னம் மட்டுமே கேட்டேன். இதற்கு காரணம் குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்று நாம் இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் போராடி வருகிறோம்.
தமிழகம் மற்றும் புதுவையில் வேறு யாருக்கும் குக்கர் சின்னம் கொடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து நமது உரிமையை மீட்டு எடுப்போம். மேலும் ஆர்.கே. நகர் தேர்தலில் குறித்த நேரத்தில் நான் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். இதனால் குக்கர் சின்னம் நமக்கு வழங்க வேண்டும். நாம் உச்சநீதிமன்றத்தில் கண்டிப்பாக குக்கர் சின்னத்தை பெறுவோம். தமிழகம் முழுவதும் குக்கர் சின்னம் பட்டிதொட்டியெல்லாம் தெரிந்து வெற்றி சின்னமாக உள்ளது.
சின்னம் ஒரு பிரச்சனை இல்லை. ஏனென்றால் பழக்கப்பட்ட சின்னத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றால் ஆர்கேநகர் தேர்தலில் 70 ஆண்டு உள்ள உதயசூரியன் சின்னம் டெபாசிட் இழந்தது. இரட்டை இலை சின்னம் அந்த தொகுதியில் இரண்டு முறை ஜெயலலிதாவை வெற்றி பெற செய்தது. இது மக்களுக்கு தெரியாதா? அதனால்தான் சின்னம் என்பது முக்கியமல்ல அது யாரிடம் உள்ளது என்பதுதான் முக்கியம்.
ஆகையால் குக்கர் சின்னம் 100 சதவீதம் எங்களுக்கு கிடைக்கும். உச்சநீதிமன்றம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஒருவேளை எங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் 40 தொகுதியிலும் 40 சின்னத்தில் நின்றாலும் கண்டிப்பாக மக்கள் தெரிந்து கொண்டு வெற்றி பெற செய்வார்கள்.
மக்களை பற்றி கவலைப்படாமல் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க.வுக்கு நீங்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.
தமிழகம் தலை நிமிரவும், மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி மலரவும் இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #AMMK #TTVDhinakaran
பா.ம.க.பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் கடலூருக்கு வருகை தந்தார்.

கே: அ.தி.மு.க.வுடன் நீங்கள் கூட்டணி வைத்தது குறித்து டி.டி.வி. தினகரன் விமர்சித்து பேசி வருகிறாரே?
ப: நான் ஒன்றும் கருத்து சொல்ல விரும்பவில்லை.
கே: அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி பற்றி உங்கள் கருத்து என்ன?
ப: தற்போது அமைத்துள்ள கூட்டணி இயற்கையான கூட்டணி. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும்.
கே: அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததையடுத்து பா.ம.க. மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறதே?
ப: அரசியலில் பல்வேறு விமர்சனங்கள் வரும். அதனை எதிர்கொள்பவன் தான் அரசியல்வாதி. விமர்சனங்களை எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார். #PMK #Ramadoss #ADMKAlliance
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணியும் அமைந்துள்ளது.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தே.மு.தி.க, த.மா.கா. கட்சியையும் கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தே.மு.தி.க. கட்சி அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளிடமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், 1 மேல்-சபை எம்.பி. சீட் ஒதுக்கப்பட்டதால் அதை விட கூடுதலாக 1 தொகுதி ஒதுக்கினால் கூட்டணியில் சேருவதாக விஜயகாந்த் நிபந்தனை விதித்தார். ஆனால் தே.மு.தி.க.வுக்கு அவ்வளவு தொகுதிகளை ஒதுக்க முடியாது என்று அ.தி.மு.க. கூறியது.
தே.மு.தி.க.வுக்கு 5 பாராளுமன்ற தொகுதிகளும், 1 மேல்-சபை சீட்டும் தருவதாக அ.தி.மு.க. தற்போது கூறி உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. கட்சிகள் இருப்பதால் ஓட்டு வங்கி அதிகமாக இருப்பதாகவும், இந்த கூட்டணியில் சேர்ந்தால் வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷிடம் அ.திமு.க. மூத்த நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.
தே.மு.தி.க. கட்சிக்கு தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட சதவீத ஓட்டுகள் இருப்பதால் எப்படியாவது அ.தி.மு.க.கூட்டணியில் சேர்த்து விட வேண்டும் என்று பா.ஜனதா மேலிடம் விரும்புகிறது. இதற்காக டெல்லியில் இருந்தும் மத்திய மந்திரி பியூஸ்கோயல் சுதீஷிடம் பேசியுள்ளார்.
அ.தி.மு.க-பா.ஜனதா இரு தரப்பில் இருந்தும் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் மற்றும் பிரேமலதாவிடம் பேசி வருகின்றனர். இதில் அ.தி.மு.க. கூட் டணியில் சேர விஜயகாந்த் சம்மதம் தெரிவித்து விட்டதாக தெரிகிறது. தே.மு.தி.க.வுக்கு 5 பாராளுமன்ற தொகுதியும் 1 மேல்- சபை சீட்டும் வழங்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், புதுச்சேரி என்.ஆர். காங்கிரசுக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் வருகிற 6-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து தங்களது பலத்தை காட்ட பா.ஜனதா முடிவு செய்துள்ளது.
அதற்கேற்ப அ.தி.மு.க. தே.மு.தி.க. இடையே வருகிற 3-ந்தேதி கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தே.மு.தி.க.வுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்” என்று கூறினார்.
இதே போல் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், “தே.மு.தி.க.வுடன் கூட்டணி குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். ஓரிரு தினங்களில் நல்ல முடிவு கிடைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்க தி.மு.க. கடும் முயற்சி மேற்கொண்டது. 3 எம்.பி. தொகுதியும், 1 மேல்-சபை தொகுதியும் தருவதாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் தி.மு.க. அதிருப்தி அடைந்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி விஜயகாந்தை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டார். கடைசி நேரத்தில் அதில் பலன் இல்லாமல் போய் விட்டது. அதேபோல இப்போது 2-வது முறையாக தி.மு.க. முயற்சி தோல்வி அடைந்துள்ளது. #ADMK #DMDK #LSPolls






