search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election Alliance"

    விஜயகாந்துக்கு உடல் நலக்குறைவு என்று கூறுபவர்கள் ஏன் எங்கள் வீட்டுவாசலில் கூட்டணிக்காக நிற்கிறார்கள் என்று விஜய பிரபாகரன் பேசினார். #DMDK #Vijayakanth #VijayPrabhakaran
    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நேற்று மாலை தஞ்சை சென்றார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு இறகுப் பந்துப் போட்டியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் கும்பகோணம் சென்ற விஜயபிரபாகரன் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    ‘காவிரி டெல்டா பகுதியில் கடந்த காலங்களில் 58 சதவீத விவசாயம் நடைபெற்றது. தற்போது 7 சதவீதம் தான் விவசாயம் நடைபெறுகிறது. காவிரியில் தண்ணீர் வராததால் 51 சதவீதம் விவசாயம் செய்ய முடியாமல் போய் விட்டது.



    விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் காவிரியில் தண்ணீர் வரும். மேலும் பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவிப்பார். அப்படி செய்யாவிட்டால் ஏன் செய்யவில்லை என சட்டையைப் பிடித்துக் கேட்கலாம். விஜயகாந்த்துக்கு வாய்ப்பு கொடுங்கள். தே.மு.தி.கவை சேர்ந்தவர்கள் யாருக்கும் பயப்படாதீர்கள்.

    வருங்காலத்தில் விஜயகாந்தின் ஆட்சி இல்லை என்றால் எதுவும் இல்லை. விஜயகாந்த் எப்போதும் சிங்கம் போல் தான் வருவார். ஆனால் பன்றிகள்தான் கூட்டமாக வரும். அதுபோலதான் சிலர் உள்ளனர்.

    தே.மு.தி.கவுக்கு 2 சதவீதம் வாக்குகள்தான் உள்ளது, விஜயகாந்துக்கு உடல் நலக்குறைவு என்று கூறுபவர்கள் ஏன் எங்கள் வீட்டுவாசலில் கூட்டணிக்காக நிற்கிறார்கள். எங்களிடம் வைத்து கொள்ளாதீர்கள், நாங்கள் ஒதுக்கி கொடுக்கின்ற கட்சி. வருகிற எம்.பி தேர்தலில் விஜயகாந்த் இல்லாமல் ஆட்சி இல்லை. தற்போது டெல்லிக்கு குரல் கொடுப்பதற்கு சரியான தலைவர் இல்லை.

    தமிழ்நாட்டுக்கு திட்டங்களை செய் என்று சொல்லும் தலைவரை கொண்டுவர வேண்டும். இப்போது உள்ளவர்கள் போல் வாயை மூடிகொண்டு சுற்றுகிற ஆள் விஜயகாந்த் இல்லை. இப்போதுள்ள கட்சியினரிடையே தப்பு பண்ணாத தலைவராக விஜயகாந்த் உள்ளார்.

    அவர் மீது எந்தக் குற்றமும் சொல்ல முடியாது. வரும் எம்.பி. தேர்தலில் எதிரிகளுக்கு சவுக்கடி கொடுத்து அவர்களின் முகத்திரையை கிழிக்கணும். எனக்கும் விஜயகாந்த்துக்கும் தஞ்சாவூர் தொகுதி மேல் தனி பாசம் உண்டு.”

    இவ்வாறு அவர் பேசினார். #DMDK #Vijayakanth #VijayPrabhakaran
    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்தவித இழுபறியும் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். #DMDK #PremalathaVijayakanth
    சென்னை:

    விஜயகாந்திடம் இன்று ரஜினி உடல் நலம் விசாரித்து சென்ற பிறகு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதில் எந்தவித இழுபறியும் இல்லை. எனவே விரைவில் தொகுதி பங்கீடு பற்றிய தகவல்கள் வெளிவரும்.



    தமிழகத்தில் தே.மு.தி.க.வுக்கு உள்ள வாக்கு வங்கி பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். எனவே உரிய முடிவை கேப்டன் உரிய நேரத்தில் முடிவு செய்வார்.

    தே.மு.தி.க. வின் நிலைப்பாடு பற்றிய முழு விவரமும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும். கூட்டணியில் எங்களுக்கான தொகுதிகள் கிடைக்கும்.

    இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார். #DMDK #PremalathaVijayakanth
    பாராளுமன்ற தேர்தலுக்கான கவுண்டவுன் தொடங்கியது என்றும் 48 மணி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #Jayakumar
    சென்னை:

    தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் டாக்டர் உ.வே.சா.வின் 165-வது பிறந்த நாளையொட்டி சென்னை மாநில கல்லூரியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுக்கான கவுண்டவுன் தொடங்கியது. 48 மணி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும்.

    கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை வெளிப்படையாக எப்படி கூற முடியும். கூட்டணி விவகாரத்தில் அ.தி.மு.க. தெளிவாக உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையில் தாமதம் எதுவும் இல்லை.

    கூட்டணி வி‌ஷயத்தில் அ.தி.மு.க. விரைவு ரெயில் வேகத்தில் செல்கிறது. தி.மு.க. சரக்கு ரெயில் வேகத்தில் செல்கிறது.


    ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அரசு ஏற்கனவே எடுத்த முடிவு சரியானது. அரசாணை வெளியிட்டது கொள்கை முடிவுதான். ஆலை எந்த காரணத்தை கொண்டும் மீண்டும் செயல்படாது.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று உளறி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Jayakumar #DMK
    தேர்தல் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இருந்து தான் வரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #ADMK #MinisterJayakumar #BJP
    சென்னை:

    தென் சென்னை எம்.பி. ஜெயவர்தன் ஏற்பாட்டில் இன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை இருக்கும். அ.தி.மு.க. கொள்கை என்பது தேர்தலில் மக்களை சந்தித்து அந்த தேர்தல் மூலம் மகத்தான வெற்றி பெற்று மக்களுக்கு நல்ல பல திட்டங்களை செய்வது தான். அதை எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து இப்போது வரை செய்து வருகிறோம். இது எங்களது கொள்கை.

    எனவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை. ரஜினி அவரது கொள்கையை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

    கேள்வி:- பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எந்த அளவில் உள்ளது?

    பதில்:- இது தேர்தல் காலம். இந்த சமயத்தில் பேச்சுவார்த்தைகள், குழு, தேர்தல் அறிக்கை குழு கூட்டணி குறித்து பேசும் குழு, தேர்தல் அறிக்கை குழு என அமைக்கப்பட்டுள்ளது.

    எங்கள் கட்சியில் அவரவர் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே கூட்டணி என்று வரும் போது நிச்சயம் வெளியில் தெரியவரும். தலைவர்கள் சந்திப்பை வைத்து கூட்டணியை உறுதிப்படுத்த முடியாது.

    கட்சித் தலைமையால் வெளியிடப்படுகிற அறிவிப்பு தான் உறுதியான அறிவிப்பாக எடுத்து கொள்ள முடியும். அது நல்ல அறிவிப்பாக நிச்சயமாக இருக்கும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் தான் மெகா கூட்டணி நிச்சயம் அமையும்.

    எனவே தேர்தலில் அ.தி. மு.க. தலைமையிலான கூட்டணிக்கும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும் தான் போட்டியே தவிர வேறு எவரும் போட்டி கிடையாது.



    கே:- பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை 12 மணி வரை நடந்துள்ளதே?

    ப:- எங்கள் தரப்பில் பேசி இருக்கலாம். ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இருந்து தான் வரும். அதுவரை பொறுத்திருங்கள்.

    கே:- தமிழகத்தில் பா. ஜனதாவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

    ப:- எங்களைப் பற்றி கேளுங்கள் பதில் சொல்கிறேன். இந்த கேள்விக்கு நீங்கள் பா.ஜனதாவினரிடம் தான் பதில் கேட்க வேண்டும். அ.தி.மு.க.வை பொறுத்தவரை மக்களை எதிர் கொண்டு மகத்தான வெற்றி பெறும்.

    கே:- தேர்தலில் எதை மையப்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட போகிறீர்கள்?

    ப:- எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது. மாநிலத்துக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் கிடைக்க வேண்டும். இதற்காக முழு அளவுக்கு எங்கள் குரல் எதிரொலிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterJayakumar #BJP
    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை நட்பு அடிப்படையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். #DMDK #Vijayakath #LKSudhish
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் மனைவி பிரேமலதாவும் சென்றுள்ளார்.

    இதன்காரணமாக பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் பா.ஜனதா கட்சியுடனும், மாநில கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக எல்.கே.சுதீஷ் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-



    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது. சிகிச்சை முடிந்து இந்த மாத இறுதியில் அவர் தமிழகம் திரும்புகிறார். பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை நட்பு அடிப்படையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    இந்த தேர்தலில் தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறும். மாநில கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 14 தொகுதியில் போட்டியிட்டோம். அதுவேதான் இப்போதைய கோரிக்கையாகவும் இருக்கிறது.

    விஜயகாந்த் வந்த பின்னர்தான் கூட்டணி குறித்து உறுதி செய்யப்படும். தே.மு.தி.க. இடம்பெறும் கூட்டணி வலிமையானதாக இருக்கும். அந்த கூட்டணி தான் தமிழகத்தில் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMDK #Vijayakath #LKSudhish
    தமிழ்நாட்டு மக்களுக்கு யார் நன்மைகள் செய்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #ADMK #EdappadiPalaniswami
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கட்சியில் சேர்ந்தவர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்தி பேசினார்.

    அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ள உங்கள் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு. நீங்கள் கடுமையாக உழையுங்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை பற்றி தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

    கிராமத்தை பார்க்காதவர் மு.க.ஸ்டாலின். அவர் பார்த்து வளர்ந்தது சென்னையில். உள்ளாட்சியில் எந்த திட்டமும் செய்யவில்லை என்று குறை கூறுகிறார்.

    மு.க.ஸ்டாலின் இதற்கு முன்பு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர். துணை முதல்வராக பணியாற்றியவர். அவர் அதிகாரத்தில் இருந்த போது மக்கள் பிரச்சனையை கண்டு கொள்ளவில்லை.

    அப்போது மு.க.ஸ்டாலின் மக்கள் குறைகளை தீர்த்திருந்தால் சிறந்த அரசியல்வாதி என்று கூறி இருக்க முடியும்.

    முன்பு கிராமங்களுக்கு செல்லாத இவர் இப்போது கிராமங்களுக்கு சென்று குறைகளை கண்டு பிடித்து பேசுகிறார்.

    உள்ளாட்சி தேர்தலை நடத்தாததற்கு அ.தி.மு.க. தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார். ஆனால் அது உண்மையல்ல.

    அம்மா ஆட்சி காலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த ஏற்பாடு செய்து அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் தி.மு.க.தான் கோர்ட்டுக்கு சென்று உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தடை வாங்கியது.


    உள்ளாட்சி தேர்தலை நாங்கள் தள்ளி வைத்ததாக மு.க.ஸ்டாலின் தவறான செய்தியை பரப்புகிறார்.

    கிராமம் முதல் நகரம் வரை குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி, கழிவுநீர் வசதி என அனைத்து அடிப்படை வசதிகளையும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப அ.தி.மு.க. அரசு செய்துகொடுத்து வருகிறது.

    அரசியல் ரீதியாக சந்திக்க முடியாத தி.மு.க. கொல்லைப்புறம் வழியாக மக்களை குழப்பி வருகிறது. ஆனால் அ.தி.மு.க. மக்கள் பிரச்சனையை தீர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

    தி.மு.க.வை பொறுத்த வரை கூட்டணிக்கு நீ வா... நீ வா... என அழைக்கும் நிலையே உள்ளது.

    ஆனால் எங்களை பொறுத்தவரை மத்தியில் தமிழ்நாட்டு மக்களுக்கு யார் நன்மைகள் செய்கிறார்களோ அவர்களைதான் ஆதரிப்போம். அவர்கள்தான் மத்தியில் வர வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்பவர்களை ஆதரிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #EdappadiPalaniswami
    பாஜக - திமுக அரசியல் சந்திப்புகளை வைத்துதான் கூட்டணி என கூறினேன், திமுக உடன் கூட்டணி என்ற கேள்விக்கு முக ஸ்டாலினிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும் என தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #ThambiDurai #DMK #MKStalin
    மணப்பாறை:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, திருச்சி மாவட்டம் மணப்பாறை சூளியாப்பட்டியில் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்தார்.

    கே: பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளதையொட்டியே தொகுதி மக்களை நீங்கள் சந்தித்து வருவதாகவும், பதவிக்காக பா.ஜ.க. வேட்பாளராக கூட போட்டியிடக் கூடும் என்று டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறாரே?

    ப: அந்த கருத்து சரியல்ல. நான் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது புதிதல்ல. தொடர்ந்து சென்று கொண்டு தான் இருக்கிறேன். தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் தொகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறேன். எனவே ஒரு தனி நபரின் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.


    கே: பா.ஜ.க. தலைவர்கள் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்ததை ரகசிய கூட்டணி என்று அ.தி.மு.க.வினர் விமர்சித்து வரும் நிலையில், விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினை அ.தி.மு.க.வை சேர்ந்த நீங்கள் சந்தித்தது கூட்டணியா? என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே. என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளாரே?.

    ப: நான் தனி விமானத்தில் செல்ல முடியாது. விமான நிலையத்திற்கு செல்லும் போது சந்திப்பது வேறு. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. தலைவர்களை அழைப்பது என்பது வேறு.

    அதாவது அரசியல் நிகழ்வுகளும், சாதாரண சந்திப்புகளும் வெவ்வேறானவை. அந்த இரு கட்சிகளின் அரசியல் சந்திப்புகளை வைத்துத்தான் தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி என்று கூறினேன். ஆனால் நானும் மு.க.ஸ்டாலினும் சந்தித்து கொண்டோம் என்பதற்காக எங்களுக்கும் தி.மு.க.வுடன் கூட்டணியா? என்பதை மு.க.ஸ்டாலின் தான் விளக்க வேண்டும். அல்லது அது தொடர்பாக கே. என்.நேரு தான் மு.க.ஸ்டாலினிடம் கேட்டு சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai #DMK #MKStalin
    தினகரனுடைய அ.ம.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேசவும் இல்லை. அவர்களுடன் இணைந்து போட்டியிடுவது குறித்துச் சிந்திக்கவும் இல்லை என்று கமல்ஹாசன் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #TTVDhinakaran
    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான பயிலரங்கம் கோவையில் நடை பெற்றது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

    கேள்வி :- எதற்காக இந்த பயிலரங்கம்?

    பதில் :- நிர்வாகிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட பயிலரங்கம் இது. வெவ்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் இதில் கலந்துகொண்டு அறிவுரை வழங்கினர். தேர்தலை எதிர்கொள்ளும் முறைகளையும் கூறினர்.

    அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகராக இருந்த அவினாஷும் இங்கு வந்து பயிற்சியளித்தார். இன்னும் நிறைய கற்க வேண்டியுள்ளது என்பதைத் தெரிந்துகொண்டோம். அடுத்த பயிலரங்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

    கேள்வி :- தினகரன் கட்சியுடன் கூட்டணி என்று தகவல் வருகிறதே?

    பதில்:- தினகரனுடைய அ.ம.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேசவுமில்லை. அவர்களுடன் இணைந்து போட்டியிடுவது குறித்துச் சிந்திக்கவும் இல்லை.

    கே:- பாஜகவினர் மாற்றுக் கருத்துக்கு ஆற்றும் எதிர் வினை குறித்து?

    ப:- பா.ஜ.கவினர் கருத்துக்கு எதிர் கருத்து சொல்லக் கூடாது என நினைக்கின்றனர். அது, ஜனநாயக நாட்டில் ஒத்துவராத ஒரு வி‌ஷயம்.

    கே:- அ.தி.மு.கவினர் சப்பாணி என படத்தின் கேரக்டரைச் சொல்லி உங்களை கிண்டல் செய்கிறார்களே?

    ப:- பதிலுக்கு நாங்கள் ஏதாவது சொன்னால் வருத்தப்படுவார்கள்.

    ப:- தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் இந்தப் பயிலரங்கில் ஆலோசித்து வருகிறோம். இடைத்தேர்தலைவிட பெரிய களத்தில் இறங்குவோம். அதற்கான நேரம் வந்து கொண்டிருக்கிறது. தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என நிர்வாகிகள் சொல்கின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு விட்டது. மாற்றம் மாற்றம் எனப் பேசிக் கொண்டு இருக்காமல் மாற்றமாகவே செயல்பட்டு வருகிறோம்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையும், பெட்ரோல்-டீசல் விற்கப்படும் விலைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. இதை பார்க்கும் போது மக்கள் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை என்பது அழுத்தமாக தெரிகிறது. தலைமை செயலகத்தில் இருந்த ஊழல் தற்போது சிறை வரை பரவி விட்டது.

    பின்னர் குனியமுத்தூர் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுடன் கமல்ஹாசன் கலந்துரையாடினார். அவர் பேசியதாவது:-

    உங்களையும், எங்களையும் உரையாடுவதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. நமக்கு வெட்டவெளி போதும். நாம் அங்கே நின்று பேசுவோம். நீங்கள் திரளுங்கள். எவ்வளவு தடைகள் வந்தாலும் தகர்த்துக் கொண்டு நீங்கள் சொல்கிற இடத்துக்கு வருவேன்.

    இளைஞர்கள் இளம் வயதில் அரசியலுக்கு வர வேண்டும். தற்போதைய அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும். கறைபடாத ஆட்சியும், மக்களுக்கு பயன்படும் அரசும் தான் இனி வர வேண்டும். வருங்காலத்தில் அரசியலில் புதிய மாற்றத்தை கொண்டு வருவதில் இளைஞர்களின் பங்கு மிகவும் அவசியமானது. இளைய தலைமுறை நினைத்தால் அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

    இளைஞர்கள் யாருக்கும் லஞ்சம் தரக்கூடாது. ஊழலை நீக்க நாம் சரியாக இருக்க வேண்டியது அவசியம். நல்ல வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும்.

    பின்னர் கமல்ஹாசன் பொள்ளாச்சியில் மக்களுடனான பயணத்தை தொடங்கினார். அங்கு அவர் பேசியதாவது:-

    பொள்ளாச்சியில் மக்களை சந்திக்க விடாமல் இருக்க இடையூறுகள் செய்யப்பட்டது. மக்களை சந்தித்து பேச 10 நிமிடம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்கு வழங்கப்பட்ட 10 நிமிடங்கள் வேண்டாம், 3 நிமிடங்களில் கூட புரட்சி உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #TTVDhinakaran
    பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தி.மு.க. பல கட்ட முயற்சிகளை செய்து வருவதாக அரவக்குறிச்சியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #ThambiDurai #DMK #BJP
    கரூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளருமான மு. தம்பித்துரை கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி பேரூராட்சி பகுதியில் இன்று மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு மனுக்கள் பெற்றார்.

    அப்போது அரவக்குறிச்சி கொத்தாம்பாளையம் பகுதியில் தெலுங்கு பேசும் மக்களிடம் தெலுங்கு மொழியில் குறைகளை கேட்டார். பின்னர் பள்ளப்பட்டி பகுதியில் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் மாதிரி கிராமம் திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. இதனால் அந்த திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. கரூரில் சாயப்பூங்கா திட்டத்திற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களையும் சமாதானம் செய்து விரைவில் அந்த திட்டம் செயல்படும் சூழல் ஏற்படுத்தப்படும்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி கவர்னரிடம் மனு அளித்துள்ளது. இறுதி முடிவினை கவர்னர் தான் எடுக்க வேண்டும்.



    தி.மு.க. 1999-ஆம் ஆண்டு முதல் 2004 -ம் ஆண்டு வரை பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்துள்ளது. அந்த உறவினை புதுப்பிப்பதாக அவர்களின் சமீபத்திய நடவடிக்கை அமைந்துள்ளன. தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி வீட்டில் இருந்தபோது பிரதமர் மோடி அவரை சந்தித்தார். அதில் இருந்து உறவு தொடர்கிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தி.மு.க. பல கட்ட முயற்சிகளை செய்து வருகிறது.

    தமிழகத்தில் காவித் தன்மையை கொண்டு வர முடியாததால் திராவிட கட்சிகள் மீது பா.ஜ.க. பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai #DMK #BJP
    தி.மு.க.வுடன் கூட்டணியை முறித்துகொண்டு வெளியே வந்தால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு தயார் என்னும் டி.டி.வி.தினகரன் கருத்துக்கு திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார். #Thirunavukkarasar
    சென்னை:

    சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வந்தால்  அக்கட்சியுடன் புதிதாக தேர்தல் கூட்டணி ஏற்படுத்திகொள்ள தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

    இதுதொடர்பாக, சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், ‘அ.ம.மு.க. செயலாளர் தினகரன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால், நாங்கள் ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் இணைந்திருக்கிறோம் ’என பதிலளித்தார்.


    இதே கேள்விக்கு பதிலளித்த தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், 'தி.மு.க.வுடனான எங்கள் கூட்டணி பலமாகவும், உயிரிப்புடனும் இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி வேறு எந்த கூட்டணிக்கும் காங்கிரசில் இடமில்லை என்று கருதுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். #TNCongAMMKalliance #TTVDhinakaran #Thirunavukkarasar 
    பா.ஜ.க. கூட்டணிக்கு யாரையும் இதுவரை அழைக்கவில்லை என்று மதுரை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #BJP #TamilisaiSoundararajan
    அவனியாபுரம்:

    தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை கடந்த 6 மாதமாக மத்திய அரசிடம் வலியுறுத்தினோம். அதில் எந்தெந்த பொருட்களுக்கு வரிகள் குறைக்க வேண்டும் என்று ஆலோசனைகள் நடத்தப்பட்டு சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி. வரி வசூலிப்பதில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. இதனால் தமிழக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    பிரதமர் மோடி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தபோது வாக்குறுதி அளித்தபடி தற்போது ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளார். இதனால் அந்த நாட்டு மக்களின் பாராட்டை பெற்றிருக்கிறார். இதில் எதிர்மறைகள் இருந்தால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.


    மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை ஒன்றே போதும். அது மதுரை மக்களின் பாராட்டை பெறுவதற்கு போதுமானதாகும்.

    அமித் ஷா ஆலோசனையின் பேரில் மதுரையில் இன்று பா.ஜ.க. மகளிர் மாநாடு நடத்தப்படுகிறது. இதில் சென்னை முதல் குமரி வரையிலான நிர்வாகிகள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டால் பா.ஜ.க.வின் பலம் உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டி.டி.வி. தினகரன் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரமாட்டோம் என்று கூறியிருக்கிறாரே? என்று கேட்டதற்கு, தமிழகத்தில் தேர்தல் வரும் நேரத்தில் கூட்டணி பற்றி தெரிவிக்கப்படும். பா.ஜ.க. ஊழலற்ற ஆட்சியை தருவது என்ற கொள்கையுடைய கட்சியாகும். எங்கள் கூட்டணிக்கு யாரையும் இதுவரை அழைக்கவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்தார். #BJP #TamilisaiSoundararajan
    தேர்தல் வரும் போது அரசியல் கட்சிகள் நிலைமை மாறும் என்று திருச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #PonRadhakrishnan
    திருச்சி:

    திருச்சியில் இன்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கே: மத்திய அரசின் நடவடிக்கைகள் மாநில அரசின் உரிமைகளை பறிப்பது போல் உள்ளது என குற்றச்சாட்டு கூறப்படுகிறதே.

    ப : எந்த நடவடிக்கை அப்படி உள்ளது?

    கே : உயர்கல்வி ஆணையத்தை (யு.ஜி.சி) மத்திய அரசு மாற்றி அமைப்பதாக கூறப்படுகிறது.

    ப : எப்போதும் காலம் காலமாக பயன்படுத்தப்படுகின்ற ஒருமுறையை மாற்றி அமைத்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என்றால் அதை மாற்றி பயன்படுத்துவது நல்லது. அதை செய்யாவிட்டால் மக்களுக்கு செய்யும் துரோகம். மத்திய அரசு அந்தந்த மாநில மக்கள் பயன் பெறும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    கே : தமிழகத்தில் ஊழல் அதிகரித்து விட்டது என அமித்ஷா குற்றச்சாட்டியுள்ளாரே?

    ப : அவர் அ.தி.மு.க. அரசை மட்டும் குறை சொல்லவில்லை. இதில் ஒரு கட்சியை மட்டும் தனிமைப்படுத்தாதீர்கள். அவர் தெளிவாக பேசியுள்ளார். தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான, வெளிப்படையான ஆட்சி வேண்டும் என்பதை தான் அவர் கூறியுள்ளார்.

    கே : ஊழலை ஒழிப்பதாக கூறி வரும் பா.ஜனதா அரசு கடந்த 3 ஆண்டுகளில் யாரை கைது செய்துள்ளது என தம்பிதுரை எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளாரே?


    ப : இந்த கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளிக்க முடியாது. யாரையும் உள்நோக்கத்தோடு கைது செய்ய முடியாது. ஊழல் நிரூபிக்கப்பட்டால் அவர்களை கைது செய்யும் போது அவர்கள் தப்பிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    கே : 2019-ல் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் என்று கூறப்படுவது பற்றி?

    ப : நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்பதை மக்கள் வரவேற்கிறார்கள். ஏன் என்றால் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு தேர்தல் நடந்து கொண்டே இருக்கிறது. இதை மக்கள் விரும்பவில்லை.

    ஒரே நேரத்தில் தேர்தல் வருவதை மக்கள் விரும்புகிறார்கள். இதை கண்டு பயப்படுகிறவர்களுக்கு அது அவர்களது சொந்த பயத்தை காட்டுகிறது.

    கே : பா.ஜனதா நிலை என்ன?

    ப : வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிகபடியான இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும். சட்டமன்ற தேர்தலிலும் ஆளுமையை நிரூபிக்கும். எந்த தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள பா.ஜனதா தயாராக இருக்கிறது.

    கே : வரும் தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கூறியிருப்பது பற்றி பதில் என்ன?

    ப : தேர்தலுக்கு முன்பு யார் வேண்டுமானாலும் எதையும் கூறலாம். தேர்தல் வரும் போது தான் எதை தின்றால் பித்தம் தெளியும் என்றும் கிடைக்கிறதெல்லாம் கிடைக்காதா? என்று அனைத்து அரசியல் கட்சிகளும் நினைப்பார்கள்.

    தேர்தலின் போது இது மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர் தங்க ராஜைய்யன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். #BJP #PonRadhakrishnan #AssemblyElection
    ×