search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress President"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கேவிற்கும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது
    • பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளினால் வெளியே வர நேரமாகி விடும் என தெரிவித்தார்

    இந்தியா முழுவதும் 77வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புது டெல்லியிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவகம் உள்ள ராஜ் காட் பகுதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    இதற்கு பிறகு புது டெல்லியில் உள்ள புகழ் பெற்ற செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதனையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பிறகு பிரதமர் மோடி ஒரு நீண்ட உரையாற்றினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் முக்கிய விருந்தாளிகளுக்கு வழக்கம் போல் முன் வரிசையில் அமர இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கும் இருக்கை ஒதுக்கப்பட்டது.

    ஆனால், கார்கே நிகழ்ச்சிக்கு வரவில்லை. அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கை காலியாக இருந்தது. பிரதமர் உரையாற்றி கொண்டிருக்கும் போது கார்கேயின் இருக்கை காலியாக இருந்த காட்சியின் புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. இது குறித்து கார்கே ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    "எனக்கு கண் பார்வை பிரச்சனை இருக்கிறது. அதனால் சுதந்திர தின விழாவிற்கு வருவதை தவிர்த்து விட்டேன். மேலும் எனது வீட்டிலும், காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திலும் நான் தேசிய கொடி ஏற்றி வைக்க வேண்டி இருந்தது. நான் செங்கோட்டைக்கு வந்திருந்தால், அங்கு பிரதமருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் படி உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சபாநாயகர் அகியோர் வெளியே சென்ற பிறகுதான் நான் வெளியே வந்திருக்க முடியும். அதற்கு பிறகு நான் காங்கிரஸ் கட்சி அலுவகத்திற்கு வந்து கொடி ஏற்றி வைத்திருக்க முடியாது. இந்த காரணங்களால் நான் பிரதமர் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை."

    இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியிருக்கிறார்.

    காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்று, முதல் முறையாக அக்கட்சி அலுவலகத்தில் கார்கே இன்று தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடியை சந்திக்க கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    • சந்திப்பின்போது தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகளை செயல்படுத்துவது குறித்து எங்களுடன் விவாதிக்கவுள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர் எம்.மல்லிகார்ஜுன் கார்கே, கட்சியின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பதற்காக முழு மாநில அமைச்சரவையையும் டெல்லிக்கு அழைத்துள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வரும் 21ம் தேதி அனைத்து அமைச்சர்களும் டெல்லி செல்லவுள்ளனர்.

    மேலும், பிரதமர் மோடியை சந்திக்க கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், சித்தராமைய்யாவும், டி.கே.சிவக்குமாரும் பிரதமரை சந்திப்பது குறித்த உறுதியான தகவலை அவர் தெரிவிக்கவில்லை.

    இந்த பயணத்தின் போது அவர்கள் மத்திய அமைச்சர்களை தனித்தனியாக சந்தித்து மாநிலத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

    இதுகுறித்து கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியதாவது:-

    அமைச்சர்களில் சிலர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்திக்கவில்லை. அதனால், காங்கிரஸ் தலைவரின் அழைப்பின்பேரில் வரும் 21ம் தேதி அன்று அனைத்து அமைச்சர்களும் டெல்லிக்கு செல்கிறோம்.

    அங்கு, தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகளை செயல்படுத்துவது குறித்து எங்களுடன் விவாதிக்கவுள்ளனர். அரசாங்கமாக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை வழங்கவே எங்களை அழைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னிமலை வட்டார காங்கிரஸ் தலைவர் மாநில தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    • குடும்பச்சூழல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கொள்றேன்.

    சென்னிமலை:

    சென்னிமலை வட்டார காங்கிரஸ் தலைவராக உள்ள சி.சி.ராஜேந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக மாநில தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்

    இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரிக்கு சி.சி.ராஜேந்திரன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் 1996-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், விவசாய பிரிவில் மாநில கொள்கை பரப்பு செயலாளர், ஈரோடு தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர்,

    திருப்பூர் வடக்கு மாவட்ட பொது செயலாள ராகவும், மாநில பேச்சாளர், சென்னி மலை வட்டார காங்கிரஸ் தலைவர் உட்பட பல்வேறு பொறுப்பு களில் கடந்த 28 ஆண்டு காலம் பணியாற்றி வந்துள்ளேன்.

    தற்போது குடும்பச்சூழல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கொள்றேன்.

    இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

    • வரும் 15-ந் தேதி மாலை 4 மணிக்கு ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
    • ராகுல் படத்துடன் எனது வீடு ராகுல் வீடு என்ற பதாகை காங்கிரஸ் நிர்வாகிகள் வீடு முன்பு வைக்கப்படும்.

    பல்லடம் :

    பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி நிருப ர்களிடம் கூறியதாவது :- காங்கிரஸ் கட்சி முன்னா ள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி.பதவி பறிப்பு சம்பவத்தை கண்டித்தும் அவருக்கு நியாயம் கிடைக்கும் வரையிலும் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அறவழியில் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக வரும் 15-ந் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு திருப்பூர் ெரயில் நிலையத்தில் ெரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். 16ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ராகுல் படத்துடன் எனது வீடு ராகுல் வீடு என்ற பதாகை காங்கிரஸ் நிர்வாகிகள் வீடு முன்பு வைக்கப்படும். 20ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு பல்லடம் தபால் அலுவலகத்தின் முன்பு முற்றுகை போரா ட்டம் நடத்தப்படும். 24ந் தேதி (திங்கள்கிழமை) காலை 10மணிக்கு பல்லடம் தபால் அலுவலகத்தில் இருந்து பிரதமருக்கு கண்டன கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தப்படும். இதைத்தொடர்ந்து 2ம் கட்ட போராட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவி த்தார்.

    பேட்டியின் போது பல்லடம் நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டார தலைவர்கள் புண்ணிய மூர்த்தி, கணேசன், மாவட்ட பொது செயலாளர் நரே ஷ்குமார், நகர ஆலோசகர் மணிராஜ், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களை அவர்கள் பிரிக்கிறார்கள்.
    • அனைவரும் ஒன்று கூடி அரசியலமைப்பை, ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்.

    மும்பை:

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 138வது நிறுவன நாளையொட்டி மும்பையில் உள்ள சோமையா மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளதாவது:

    இளைஞர்கள், பெண்கள், தலித்துகள், பிராமண சமூகத்தினருக்கு நான் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறேன். நாம் ஒன்று கூடி நமது அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும். பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் அரசியல் சாசனத்தை அழிக்கிறார்கள், சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கிறார்கள். நாங்கள் உங்கள் ஆதரவை விரும்புகிறோம், நீங்கள் எங்களை ஆதரிக்கவில்லை என்றால் ஜனநாயகம் ஆபத்தில் சிக்கும்.

    ஜனநாயகத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் வெறுப்புச் சூழலுக்கு எதிராக போராடும் முயற்சியாகும். கொரோனா காரணமாக பாத யாத்திரை செல்ல கூடாது என்று அவர்கள் (பாஜக) ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்கள். ஆனால் பிரதமர் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மத்தியில் ஆளும் அரசு பொய்யர்களின் அரசாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • காங்கிரஸ் வழிநடத்துதல் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
    • மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் சோனியாகாந்தி உள்ளிட்டோர் ஆலோசனை.

    கடந்த அக்டோபர் மாதம் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே பொறுப்பேற்ற பிறகு, கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு பதிலாக வழி நடத்தல் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவின் முதல் கூட்டம் கார்கே தலைமையில டெல்லியில் இன்று நடைபெற்றது.

    முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மூத்த தலைவர்கள் ப சிதம்பரம், ஆனந்த் சர்மா, மீரா குமார், அம்பிகா சோனி மற்றும் மாநிலங்களுக்கான கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். பாத யாத்திரையில் பங்கேற்றுள்ளதால் ராகுல் காந்தி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 


    இதில் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளதாவது: வெறுப்பு விதைகளை விதைத்து, பிரிவினையின் பலனை அறுவடை செய்யும் ஆளும் கட்சிக்கு எதிராகப் போராடுவது நமது கடமை. ராகுல் காந்தியின் தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை, புதிய வரலாற்றை எழுதி, தேசிய இயக்கமாக உருவெடுத்துள்ளது.

    அடுத்த 30 முதல் 90 நாட்களுக்குள் மக்கள் பிரச்னைகளில் கட்சியின் நடவடிக்கை குறித்து மாநில பொறுப்பாளர்கள் அறிக்கை அளிக்க வேண்டும். உயர்மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். கடமையை நிறைவேற்ற முடியாதவர்கள், அடுத்தவருக்கு வழிவிட வேண்டும். காங்கிரஸ் வலுவாகவும், பொறுப்பாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்று நாட்டு மக்களுக்கு சேவை செய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடந்த 17-ந் தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது.
    • இந்த தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே அபார வெற்றி பெற்றார்.

    கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இதையடுத்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார்.

    இந்நிலையில் காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மல்லிகார்ஜுன் கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு மொத்தம் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் வாக்களித்தனர். இதில் பதிவான வாக்குகள் கடந்த 19-ந் தேதி எண்ணப்பட்டன.

    இதில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூருக்கு 1000 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைய அலுவலகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே இன்று பதவி ஏற்கிறார்.இதன் மூலம் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் கட்சி தலைவர் பதவியை வகிக்க உள்ளது குறிப்பிடத்ததக்கது.

    • ராகுல் காந்தியிடம் மொத்தம் 5 நாட்கள் 50 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
    • கடந்த 21ந் தேதி சோனியா காந்தியிடம் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள 'யங் இந்தியா' நிறுவனம் வாங்கியது. இதில் முறைக்கேடு நடைபெற்றதாக கூறி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் விசாரணை நடத்துகிறது. இதில் ராகுல் காந்தியிடம் 5 நாட்கள் 50 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 21ந் தேதி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் சோனியாகாந்தியுடன் வந்திருந்தனர்.

    இந்த நிலையில் மீண்டும் நாளை (26-ந்தேதி) விசாரணை ஆஜராகுமாறு சோனியாகாந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நாளை சத்தியாகிரக போராட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    நாளை மத்திய அமலாக்க இயக்குநரக அலுவலத்தில் விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராகும்போது அனைத்து மாநில காங்கிரஸ் பிரிவுகளும் அமைதியான முறையில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. டெல்லியில் நடைபெறும் சத்தியாகிரக போராட்டத்தில் அக்கட்சியின் எம்.பி.க்கள், பொதுச் செயலாளர்கள் மற்றும் அகில இந்திய உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    ராகுல்காந்தி நேற்று ஒரே நாளில் மன்மோகன்சிங், சரத்பவார், குமாரசாமி ஆகியோரை சந்தித்து பேசி இருப்பதால், தனது பிடிவாதத்தை கைவிட்டு காங்கிரஸ் தலைவர் பதவியை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து அதுபற்றி ஆலோசனை நடத்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

    ராகுல்காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்தார். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே இடையில் வெளியேறிவிட்டார்.

    ஒரு வாரமாக கட்சியில் எந்த பணிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. மூத்த தலைவர்களை சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். இடையில் ஜவகர்லால் நேரு நினைவு நாள் நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்றார்.

    இந்த நிலையில் நேற்று ராகுல்காந்தி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டுக்கு சென்று அவருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டுக்கும் சென்ற அவர், அவருடன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

    தற்போது காங்கிரசுக்கு 52 எம்.பி.க்கள் உள்ளனர். பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் 55 எம்.பி.க்கள் தேவை. எனவே சரத்பவாரின் தேசியவாத காங்கிரசை (5 இடம்) காங்கிரசோடு இணைத்து விடலாம் என்ற திட்டம் உள்ளது. இதற்காக சரத்பவாரை சந்தித்து பேசி இருக்கலாம் என்று தெரிகிறது.

    பின்னர் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, ராகுல்காந்தியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.



    ஒருவாரமாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் மவுனமாக இருந்து வந்த ராகுல்காந்தி நேற்று ஒரே நாளில் மன்மோகன்சிங், சரத்பவார், குமாரசாமி ஆகியோரை சந்தித்து பேசி இருக்கிறார்.

    இதன் மூலம் அவர் கட்சி பணிகளை மீண்டும் தொடங்கி இருக்கிறார். இதனால் அவர் தனது பிடிவாதத்தை கைவிட்டு காங்கிரஸ் தலைவர் பதவியை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டம் நாளை நடைபெறுகிறது. ராகுல்காந்தி பாராளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    இது சம்பந்தமாக கட்சியின் மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், திக்விஜய் சிங், மல்லிகார்ஜுன கார்கே தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து காங்கிரஸ் கட்சியில் பல மாற்றங்களை கொண்டுவர ராகுல்காந்தி திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. மாநில அளவில் பல தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விரைவில் இந்த மாற்றங்கள் இருக்கும் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கு வசதியாக பல மாநிலங்களின் தலைவர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார். அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்று மேலிட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட காங்கிரசால் பிடிக்க முடியவில்லை.

    இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் அதிருப்தி அடைந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. இதில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். காரிய கமிட்டி கூட்டத்தில் அவர் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். ராகுல்காந்தியின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

    ராகுல்காந்தி அதற்கு சம்மதிக்கவில்லை. ராஜினாமா செய்வதில் பிடிவாதமாக இருந்தார். நேரு குடும்பத்துக்கு பதிலாக வேறு ஒருவரை தலைவராக தேர்வு செய்யலாம். நான் சாதாரண தொண்டனாக இருந்து கொள்கிறேன் என்று ராகுல்காந்தி கூறினார்.

    அதன்பிறகு ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய 3 நாட்களும் ராகுல்காந்தியை சமரசம் செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமையும், திங்கட் கிழமையும் ராகுல்காந்தி யாரிடமும் பேசவில்லை. அவரை சமரசம் செய்ய சென்ற மூத்த தலைவர்களை அவர் சந்திக்க மறுத்துவிட்டார்.

    இந்தநிலையில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில தலைவர்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநில காங்கிரஸ் ஆட்சியிலும் சலசலப்பு ஏற்பட்டது.

    இந்தநிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் ராகுல்காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அப்போது ராகுல்காந்தி அவர்களிடம் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியில் அக்கறை காட்டாத சில மூத்த தலைவர்கள் பற்றி புகார் தெரிவித்ததுடன் தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். தனது ராஜினாமாவை திரும்பபெற முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.



    காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று டெல்லி துக்ளக் சாலையில் உள்ள வீட்டில் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், செய்தி தொடர்பாளர் ரஞ்சித் சுர்ஜிவாலா ஆகியோரும் சென்று ராகுல் காந்தியை சந்தித்து சமரசம் செய்து ஆலோசனை நடத்தினார்கள்.

    அவர்களிடம் ராகுல் காந்தி 3 மாநிலங்களில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சி கவிழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுங்கள் என்று கூறினார். அத்துடன் ராஜினாமா முடிவை வாபஸ் பெற மறுத்துவிட்டார்.

    இந்தநிலையில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகக்கூடாது. இது கட்சிக்கு முக்கியமான காலகட்டம். ராகுல்காந்தி ராஜினாமா செய்வது காங்கிரஸ் கட்சிக்குள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்திவிடும். அவர் கட்சித்தலைவர் பதவியில் இருந்து விலகாமல் இருப்பது நல்லது என்று கருத்து கூறினார்கள்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியிடம் போனில் தொடர்பு கொண்டு பேசி ராஜினாமா முடிவை கைவிடுமாறு கூறினார்.

    ஆனாலும் ராகுல் காந்தி தொடர்ந்து பிடிவாதமாக உள்ளார். அவரது மனநிலை மாறவில்லை. இன்று 5-வது நாளாக ராகுல் காந்தியின் பிடிவாதம் தொடருகிறது.

    ராகுல் காந்தியை சமரசம் செய்வதற்காக ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு மாதிரியான யோசனைகளை தெரிவித்து வருகிறார்கள். ராகுல்காந்தி தலைவர் பதவியிலேயே நீடிக்கட்டும். மேலும் செயல் தலைவர் பதவியை உருவாக்கி செயல் தலைவர்களாக சிலரை நியமிக்கலாம். தலைவர் பொறுப்பை ராகுல் கவனித்தால் கட்சியின் மற்ற நடவடிக்கைகளை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலக வேண்டாம் என்று யோசனை தெரிவித்தனர். ஆனால் அதற்கும் ராகுல் காந்தி உறுதியான பதிலை சொல்லவில்லை.

    ராகுல்காந்தியை நேற்று சந்தித்து பேசிய மூத்த தலைவர்கள் சிலர் ராகுல் தொடர்ந்து 3 மாதங்கள் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும். அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகளை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள். சிலர் புதிது புதிதாகவும் கருத்து சொல்லி வருகிறார்கள்.

    வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ராகுல் காந்தி விரைவில் கேரள மாநிலம் வயநாடு செல்ல இருக்கிறார். அவர் வயநாடு செல்வதை பொறுத்து மீண்டும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூட்டப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் மீண்டும் காரிய கமிட்டி கூடுமா என்று தெரியவில்லை. அதற்கு பதிலாக ராகுல்காந்தியை சமரசம் செய்வதிலேயே மூத்த தலைவர்கள் பலர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால் அவர் சமரசம் ஆகாமல் தொடர்ந்து பிடிவாதமாகவே இருக்கிறார்.

    இதற்கிடையே பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்படலாம் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்மூலம் அவர் அந்த பதவியில் நீடித்த படியே கட்சிப் பணிகளிலும் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என ராகுல் காந்தியிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததால் கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் அதிர்ச்சி அடைந்தார். தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலக முன்வந்தார். இது தொடர்பாக காரிய கமிட்டி கூட்டத்தில் தெரிவித்தபோது, அவரது ராஜினாமா முடிவை காரிய கமிட்டி ஏற்றுக்கொள்ளவில்லை. தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று காரிய கமிட்டி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    மேலும், கட்சியில் செய்ய வேண்டிய அனைத்து மாற்றங்களையும் செய்வதற்கு ராகுல் காந்திக்கு முழு அதிகாரமும் அளிக்க, காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எனினும், ராஜினாமா செய்வதில் ராகுல் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. சோனியா உள்ளிட்ட தலைவர்கள் சமாதானம் செய்தும் தனது முடிவில் பிடிவாதமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தேசிய அளவில் காங்கிரஸ் தோல்வியடைந்தாலும் தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இது காங்கிரசுக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

    இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொலைபேசி மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின், தலைவர் பதவியில் இருந்து விலக விரும்பும் ராகுல் காந்தியை சமாதானம் செய்தார்.



    காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்றும், தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்றும் ராகுல் காந்தியிடம் அவர் கேட்டுக்கொண்டார். தேர்தலில் தோற்றாலும் மக்களின் மனங்களை நீங்கள் வென்றுள்ளீர்கள் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

    இதையடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியையும் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசின் செல்வாக்கு கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்யும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளதால் காங்கிரஸ் காரிய கமிட்டி மீண்டும் கூடுகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 421 தொகுதிகளில் போட்டியிட்டது. மீதமுள்ள 122 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்திருந்தது.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் இந்த தடவை சுமார் 250 தொகுதிகளில் வெற்றியை எதிர்பார்த்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல், அவரது சகோதரியும் பொதுச்செயலாளருமான பிரியங்கா இருவரும் சுமார் 2 மாதங்கள் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் மேற்கொண்டதால் காங்கிரஸ் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும் அதிகரித்திருந்தது.

    கடந்த 23-ந்தேதி தேர்தல் முடிவுகள் வெளியானபோது காங்கிரசுக்கு மீண்டும் வரலாறு காணாத தோல்வி ஏற்பட்டது. 421 தொகுதிகளில் போட்டியிட்டும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரசால் ஜெயிக்க முடிந்தது. 369 தொகுதிகளில் மக்கள் காங்கிரஸ் கட்சியைப் புறக்கணித்தனர்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்ற அமேதி தொகுதியில் சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 2014-ல் துணைத் தலைவராக இருந்தபோதும், 2019-ல் தலைவராக இருக்கும் போதும் காங்கிரஸ் அடுத்தடுத்து வீழ்ச்சி அடைந்ததால் ராகுல் மிகுந்த வேதனை அடைந்துள்ளார்.

    தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக கடந்த சனிக்கிழமை டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடியது. அந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் செயல்பாடுகளை ராகுலும், பிரியங்காவும் கடுமையாக விமர்சித்தனர். பிறகு தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக ராகுல் அறிவித்தார்.

    ஆனால் அவரது ராஜினாமாவை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்க மறுத்தது. சோனியா, பிரியங்கா உள்பட மூத்த தலைவர்கள் அனைவரும் ராகுலை சமரசம் செய்தனர். என்றாலும் ராகுல் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

    காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்துக்குப் பிறகு மூத்த தலைவர்கள் யாரையும் அவர் சந்திக்கவில்லை. நேற்று முன்தினம் மூத்த தலைவர்கள் பலர் ராகுலுடன் போனில் பேச முயன்றனர். ஆனால் ராகுல் பேச மறுத்து விட்டார்.

    நேற்று அவரை அகமது படேல், வேணுகோபால் இருவர் மட்டுமே சந்தித்து பேச முடிந்தது. அப்போது ராகுல் தனது ராஜினாமா முடிவில் மிகவும் உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருந்தார். “எங்கள் குடும்பத்தை சாராத ஒருவரை புதிய தலைவராக தேர்ந்து எடுங்கள். நான் கட்சியில் சாதாரண தொண்டனாக இருந்து பணியாற்றவே விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

    நேற்று ராகுல் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஒப்புதல் அளித்திருந்தார். அந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு வீட்டிலேயே இருந்தார். காங்கிரஸ் எம்.பி.க்களாக தேர்வான 51 பேரும் அவரை சந்திக்க வந்திருந்தனர். ஆனால் புதிய எம்.பி.க்களையும் அவர் சந்திக்க மறுத்து விட்டார்.

    அகமதுபடேல், வேணு கோபால் இருவரிடமும், “காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்ந்து எடுங்கள். அதுவரை காத்திருக்கிறேன்” என்று கூறினார். ராகுலின் இந்த பிடிவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) 4-வது நாளாக நீடித்தது. இன்றும் ராகுல் யாரையும் சந்தித்து பேச மறுத்து விட்டார்.



    இதையடுத்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை மீண்டும் கூட்டி ஆலோசிக்க மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இன்னும் 3 தினங்களுக்குள் காரிய கமிட்டி டெல்லியில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த கூட்டத்தில் ராகுல் காந்தியை சமரசம் செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அப்போதும் ராகுல் தனது ராஜினாமா முடிவில் பிடிவாதமாக இருந்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து மூத்த தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். ஆனால் ராகுலை தவிர்த்து விட்டு கட்சியை நடத்தும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது.

    ராகுல் வழிகாட்டுதலில் புதிய தலைவர் ஒருவர் தேர்ந்து எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பாராளுமன்ற காங்கிரஸ் தலைவராக சசிதரூர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    காங்கிரஸ் கட்சியின் நிர்வாக அமைப்பிலும் மாற்றம் வரும் என்று கூறப்படுகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்படும் என்று தெரிகிறது. ராகுலை உள்ளடக்கிய புதிய குழு ஒன்று ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே ராகுலின் ராஜினாமாவைத் தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து ராகுலுக்கு கடிதம் அனுப்பி வருகிறார்கள். ஏற்கனவே 3 மாநில தலைவர்கள் விலக விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று அசாம், ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களும் விலகல் கடிதம் கொடுத்துள்ளனர்.

    மேலும் சில மாநில காங்கிரஸ் தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்ய தயாராகி வருகிறார்கள். இதனால் காங்கிரஸ் கட்சியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

    ×