search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜினாமா செய்வதில் ராகுல் காந்தி உறுதி - காங்கிரஸ் காரிய கமிட்டி மீண்டும் கூடுகிறது
    X

    ராஜினாமா செய்வதில் ராகுல் காந்தி உறுதி - காங்கிரஸ் காரிய கமிட்டி மீண்டும் கூடுகிறது

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசின் செல்வாக்கு கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்யும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளதால் காங்கிரஸ் காரிய கமிட்டி மீண்டும் கூடுகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 421 தொகுதிகளில் போட்டியிட்டது. மீதமுள்ள 122 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்திருந்தது.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் இந்த தடவை சுமார் 250 தொகுதிகளில் வெற்றியை எதிர்பார்த்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல், அவரது சகோதரியும் பொதுச்செயலாளருமான பிரியங்கா இருவரும் சுமார் 2 மாதங்கள் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் மேற்கொண்டதால் காங்கிரஸ் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும் அதிகரித்திருந்தது.

    கடந்த 23-ந்தேதி தேர்தல் முடிவுகள் வெளியானபோது காங்கிரசுக்கு மீண்டும் வரலாறு காணாத தோல்வி ஏற்பட்டது. 421 தொகுதிகளில் போட்டியிட்டும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரசால் ஜெயிக்க முடிந்தது. 369 தொகுதிகளில் மக்கள் காங்கிரஸ் கட்சியைப் புறக்கணித்தனர்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்ற அமேதி தொகுதியில் சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 2014-ல் துணைத் தலைவராக இருந்தபோதும், 2019-ல் தலைவராக இருக்கும் போதும் காங்கிரஸ் அடுத்தடுத்து வீழ்ச்சி அடைந்ததால் ராகுல் மிகுந்த வேதனை அடைந்துள்ளார்.

    தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக கடந்த சனிக்கிழமை டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடியது. அந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் செயல்பாடுகளை ராகுலும், பிரியங்காவும் கடுமையாக விமர்சித்தனர். பிறகு தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக ராகுல் அறிவித்தார்.

    ஆனால் அவரது ராஜினாமாவை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்க மறுத்தது. சோனியா, பிரியங்கா உள்பட மூத்த தலைவர்கள் அனைவரும் ராகுலை சமரசம் செய்தனர். என்றாலும் ராகுல் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

    காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்துக்குப் பிறகு மூத்த தலைவர்கள் யாரையும் அவர் சந்திக்கவில்லை. நேற்று முன்தினம் மூத்த தலைவர்கள் பலர் ராகுலுடன் போனில் பேச முயன்றனர். ஆனால் ராகுல் பேச மறுத்து விட்டார்.

    நேற்று அவரை அகமது படேல், வேணுகோபால் இருவர் மட்டுமே சந்தித்து பேச முடிந்தது. அப்போது ராகுல் தனது ராஜினாமா முடிவில் மிகவும் உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருந்தார். “எங்கள் குடும்பத்தை சாராத ஒருவரை புதிய தலைவராக தேர்ந்து எடுங்கள். நான் கட்சியில் சாதாரண தொண்டனாக இருந்து பணியாற்றவே விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

    நேற்று ராகுல் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஒப்புதல் அளித்திருந்தார். அந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு வீட்டிலேயே இருந்தார். காங்கிரஸ் எம்.பி.க்களாக தேர்வான 51 பேரும் அவரை சந்திக்க வந்திருந்தனர். ஆனால் புதிய எம்.பி.க்களையும் அவர் சந்திக்க மறுத்து விட்டார்.

    அகமதுபடேல், வேணு கோபால் இருவரிடமும், “காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்ந்து எடுங்கள். அதுவரை காத்திருக்கிறேன்” என்று கூறினார். ராகுலின் இந்த பிடிவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) 4-வது நாளாக நீடித்தது. இன்றும் ராகுல் யாரையும் சந்தித்து பேச மறுத்து விட்டார்.



    இதையடுத்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை மீண்டும் கூட்டி ஆலோசிக்க மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இன்னும் 3 தினங்களுக்குள் காரிய கமிட்டி டெல்லியில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த கூட்டத்தில் ராகுல் காந்தியை சமரசம் செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அப்போதும் ராகுல் தனது ராஜினாமா முடிவில் பிடிவாதமாக இருந்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து மூத்த தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். ஆனால் ராகுலை தவிர்த்து விட்டு கட்சியை நடத்தும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது.

    ராகுல் வழிகாட்டுதலில் புதிய தலைவர் ஒருவர் தேர்ந்து எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பாராளுமன்ற காங்கிரஸ் தலைவராக சசிதரூர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    காங்கிரஸ் கட்சியின் நிர்வாக அமைப்பிலும் மாற்றம் வரும் என்று கூறப்படுகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்படும் என்று தெரிகிறது. ராகுலை உள்ளடக்கிய புதிய குழு ஒன்று ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே ராகுலின் ராஜினாமாவைத் தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து ராகுலுக்கு கடிதம் அனுப்பி வருகிறார்கள். ஏற்கனவே 3 மாநில தலைவர்கள் விலக விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று அசாம், ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களும் விலகல் கடிதம் கொடுத்துள்ளனர்.

    மேலும் சில மாநில காங்கிரஸ் தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்ய தயாராகி வருகிறார்கள். இதனால் காங்கிரஸ் கட்சியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

    Next Story
    ×