search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் கூட்டணி"

    • பாட்டாளி மக்கள் கட்சியை அ.தி.மு.க.விடம் இருந்து தட்டி பறிக்க தமிழக பாரதிய ஜனதா அதிரடி திட்டம் ஒன்றுடன் களத்தில் இறங்கி உள்ளது.
    • ராமதாஸ் விடுத்துள்ள கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்று நிறைவேற்றுவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிக மிக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.

    தி.மு.க. கூட்டணிக்கு சவால் விட வேண்டும் என்றால் தங்கள் கூட்டணியில் டாக்டர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சியும், பிரேமலதா விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகமும் சேர வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்கள் விரும்புகிறார்கள். இதற்காக அந்த 2 கட்சிகளுடனும் பா.ஜ.க. தலைவர்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பா.ம.க. வையும், தே.மு.தி.க.வையும் நழுவ விட்டு விடக்கூடாது என்பதில் அ.தி.மு.க.வும் தீவிரமாக உள்ளது. அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தொடர்ந்து இந்த இரு கட்சி தலைவர்களிடமும் மாறி மாறி பேசி வருகிறார்கள்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் தங்களிடம் தொடர்ந்து பேசுவதால் பா.ம.க., தே.மு.தி.க. இரு கட்சி தலைவர்கள் தங்களது கோரிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    தே.மு.தி.க.வை விட பா.ம.க.வை தங்கள் அணியில் வைத்திருக்க வேண்டும் என்பதில்தான் அ.தி.மு.க. தீவிரமாக உள்ளது. ஏனெனில் வட மாவட்டங்களில் கணிசமான அளவுக்கு செல்வாக்கு வைத்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தங்களுடன் இருந்தால் பல எம்.பி. தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்று அ.தி.மு.க. தலைவர்கள் கணக்கு போடுகிறார்கள்.



    இதை கருத்தில் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி கேட்கும் இடங்களை ஒதுக்கி கொடுக்க அ.தி.மு.க. தலைவர்கள் சம்மதித்து உள்ளனர். குறிப்பாக பா.ம.க. கேட்கும் 8 தொகுதிகளை ஒதுக்கி கொடுக்க அ.தி.மு.க. முன் வந்துள்ளது.

    பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தர்மபுரி, கடலூர், சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், விருதுநகர் உள்பட 8 தொகுதிகளை வலியுறுத்தி கேட்கிறார்கள். இதில் தர்மபுரி தொகுதியில் டாக்டர் அன்புமணி ராமதாசை களம் இறக்க முடிவு செய்தி ருப்பதாக கூறப்படுகிறது.

    தென் மாவட்டங்களில் விருதுநகர், திண்டுக்கல்லில் தங்கள் கட்சியில் உள்ள தென்மாவட்ட தலைவர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க பா.ம.க. தலைவர்கள் விரும்புகிறார்கள். இதை அ.தி.மு.க. தலைமை ஏற்றுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமியுடன் 3 பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்று நிறைவேற்றுவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியை அ.தி.மு.க.விடம் இருந்து தட்டி பறிக்க தமிழக பாரதிய ஜனதா அதிரடி திட்டம் ஒன்றுடன் களத்தில் இறங்கி உள்ளது. அதன்படி பா.ம.க. வுக்கு அ.தி.மு.க. தருவதை விட கூடுதல் தொகுதிகள் தருவதாக பாரதிய ஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது 12 எம்.பி. தொகுதிகள், 2 மேல்சபை எம்.பி. இடங்கள், ஒரு மத்திய மந்திரி பதவி ஆகியவற்றை ஒதுக்கி தருவதாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவரிடம் பாரதிய ஜனதா மேலிடம் கூறியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. பா.ம.க.விடம் ஆசை காட்டும் வகையில் இந்த தொகுதி ஒதுக்கீட்டை பா.ஜ.க. தலைவர்கள் கையில் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த விஷயத்தில் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை என்று தெரிகிறது. அ.தி.மு.க.வுடன் மீண்டும் பேசி விட்டு இறுதி முடிவு எடுக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

    இதன் காரணமாக அ.தி.மு.க. அணியில் பா.ம.க. சேருமா? அல்லது பாரதிய ஜனதா பக்கம் செல்வார்களா? என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    • அ.தி.மு.க. சார்பில் 5-ல் இருந்து 7 இடங்கள் வரையில் தருவதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
    • கூட்டணியில் சேருவதற்கு தயக்கம் வேண்டாம் என்று பாரதிய ஜனதா கட்சி தே.மு.தி.க.வை கேட்டுக்கொண்டுள்ளளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தி.மு.க. கூட்டணியில் நேரடி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் ரகசியமாக பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மற்ற கட்சிகளை போன்று தே.மு.தி.க.வும் தயாராகி வருகிறது. வருகிற தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் தே.மு.தி.க.வின் குரலை ஒலிக்க செய்துவிட வேண்டும் என்பதில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா உறுதியோடு உள்ளார்.

    அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அந்த கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து பிரேமலதாவும் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவதற்கே காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


    14 எம்.பி. தொகுதி மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. தொகுதியை தரும் கட்சியுடனே கூட்டணி என்று பிரேமலதா கூறியிருந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் 5-ல் இருந்து 7 இடங்கள் வரையில் தருவதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக விரைவில் நேரடிப் பேச்சுவார்த்தையை நடத்தி போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்வதற்கு அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேருவதை தடுக்க பாரதிய ஜனதா கட்சி தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

    அ.தி.மு.க. தருவதைவிட கூடுதலாக இடங்களை தருவதாக தே.மு.தி.க.விடம் பாரதிய ஜனதா கட்சியினர் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பாரதிய ஜனதா கூட்டணியில் 8 தொகுதிகள் வரையில் நாங்கள் உறுதியாக தருகிறோம். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்பை விட செல்வாக்கு பெற்றுள்ளது.

    எனவே கூட்டணியில் சேருவதற்கு தயக்கம் வேண்டாம் என்று பாரதிய ஜனதா கட்சி தே.மு.தி.க.வை கேட்டுக்கொண்டுள்ளளது. இதனால் தே.மு.தி.க. எந்த பக்கம் சாய்வது? என்பது பற்றி முடிவெடுக்க முடியாமல் தவித்து வருகிறது.

    • தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் பலமான கூட்டணி அமையும் என கூறியுள்ளார்.
    • பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க கூட்டணி அமைத்துதான் போட்டியிடும் என அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் தெரிவித்து இருந்தார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசியுள்ளனர்.

    சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சதாசிவம், சிவக்குமார், வெங்கடேஷ் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.

    இந்த சந்திப்பானது சுமார் 25 நிமிடம் நடைபெற்று உள்ளது.


    ஏற்கனவே, தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் பலமான கூட்டணி அமையும் என கூறியுள்ளார்.

    இதேபோல் பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க கூட்டணி அமைத்துதான் போட்டியிடும் என அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவில் பணிகளை முடித்து விட்டு இப்போது தான் சென்னை திரும்பி இருக்கிறேன்.
    • எங்கள் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பணிகள் நல்ல முறையில், நடந்து கொண்டு இருக்கின்றன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளன.

    ஆனால் கூட்டணியில் இடம் பெற்றுள்ளதாக கருதப்படும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு யாரும் அழைக்கவில்லை.

    இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில், இடம் பெற்றுள்ளதா? அந்த கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுமா? என்பது போன்ற கேள்விகளும் எழுந்தன.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தி.மு.க. தலைவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்று தெரிவித்திருந்தனர்.

    கமல்ஹாசன் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ப்பது பற்றி இறுதி முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். அமெரிக்காவில் 19 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு கமல்ஹாசன் இன்று சென்னை திரும்பினார்.

    சென்னை விமான நிலையத்தில் வைத்து பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கமல்ஹாசனிடம் நிருபர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    நான் தக் லைப் முன்னேற்பாடுகளுக்காக, அமெரிக்கா சென்றிருந்தேன். அமெரிக்காவில் பணிகளை முடித்து விட்டு இப்போது தான் சென்னை திரும்பி இருக்கிறேன்.

    இன்னும் இரண்டு தினங்களில், நல்ல செய்திகளுடன் நான் உங்களை சந்திக்கிறேன். இப்போதைக்கு இதுதான் செய்தி.

    ஏனென்றால் நான் அமெரிக்காவில் இருந்து செய்திகளை கொண்டு வரவில்லை. இங்கிருந்து தான் உருவாக்க வேண்டும்.

    நான் இங்கு கூட்டணி கட்சிகளுடன் பேசிவிட்டு, அடுத்த இரண்டு நாட்களில், உங்களை மீண்டும் சந்திக்கிறேன். அப்போது எல்லா தகவல்களையும் கூறுகிறேன். இரண்டு நாட்களில் அந்த வாய்ப்பு மீண்டும் அமையும்.

    எங்கள் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பணிகள் நல்ல முறையில், நடந்து கொண்டு இருக்கின்றன.

    கூட்டணி கட்சிகள் இடையே நடக்கும் பேச்சுவார்த்தை குறித்து, அடுத்த இரண்டு நாட்களில் நான் நிச்சயமாக கூறுவேன்.

    காங்கிரஸ் கட்சியுடன் நடக்கும் பேச்சுவார்த்தை குறித்தும், இரண்டு நாட்களில் கூறுவேன். இப்போது எதுவும் நான் கூறக்கூடாது.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா நாளை மறுநாள் (21-ந்தேதி) ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதில் கலந்து கொள்ளும் கமல்ஹாசன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசனுக்கு ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்படும் என்று வெளியாகி வரும் தகவல்கள் கட்சியினர் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவது போல 2 அல்லது 3 இடங்களையாவது ஒதுக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.

    ஆனால் இதற்கு வாய்ப்பு இல்லை என்பதே தி.மு.க. தலைவர்களின் பதிலாக உள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் தேனி தொகுதியை தவிர 8 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்த முறை 7 அல்லது 8 தொகுதிகள் மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அப்படி ஒதுக்கப்படும் தொகுதிகளில் கமல்ஹாசனுக்கு ஒரு தொகுதியை ஒதுக்கி கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனை கமல்ஹாசன் ஏற்றுக் கொள்வாரா? என்பது நாளை மறுநாள் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்தான் தெரியவரும்.

    • தி.மு.க.வில் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, நிர்வாகிகளுடன் ஆலோசனை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    தி.மு.க.வில் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வில் கடந்த வாரம் தேர்தல் அறிக்கைக் குழு கூடி ஆலோசனை நடத்தியது. தொகுதி பங்கீட்டுக் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அதிமுக பிரசாரக் குழு, விளம்பரக் குழுவின் ஆலோசனை கூட்டங்களும் நடைபெற்றன.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நாளை ஆலோசனை நடத்துகிறது.

    விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    அப்போது தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என ராமதாஸ் கருத்து கேட்க உள்ளார்.

    ×