என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து கமல்ஹாசன் விருப்ப மனுக்களை பெற்றார். #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவரது கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்கான விருப்பமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது.

    தங்கள் கட்சி உறுப்பினர்கள் அல்லாதவர்களும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமனுத் தாக்கல் செய்யலாம் என அறிவித்தது. இதனால் மக்கள் நீதி மய்யத்தில் விருப்பமனு வாங்கும் அளவுக்குக் கூட கட்சியில் உறுப்பினர்கள் இல்லையா என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

    கமல் விருப்பமனு வி‌ஷயத்தில் இன்னொரு புதுமையையும் செய்தார். மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் விருப்பமனுக்களில் தங்கள் சாதி மற்றும் மதம் ஆகியவற்றைக் குறிப்பிடத் தேவையில்லை என அறிவித்துள்ளார்.

    இது தமிழக அரசியல் சூழலில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றது. சினிமாவில் புதுமைகளை மேற்கொண்ட கமல் அரசியலிலும் அதை பின்பற்றுகிறார் என்று பாராட்டுகள் குவிந்தன.



    மக்கள் நீதி மய்யம் சார்பில் ‘கட்சியின் பொறுப்பாளர்களை நியமிக்கும் போதுகூட அந்தந்த வட்டாரங்களில் பெரும்பான்மை சாதி, மதத்தை சேர்ந்தவர்களை மக்கள் நீதி மய்யம் சார்பில் நியமிக்கவில்லை.

    எனவே விருப்பமனுக்களில் சாதி, மதம் ஆகியவற்றைக் குறிப்பிடத் தேவையில்லை. ஆனால் தனித் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களின் சாதியைப் பார்க்க வேண்டியது கட்டாயமாகிறது’ என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை கமல்ஹாசனிடம் நேரடியாக இன்றும் நாளையும் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசனிடம் விருப்ப மனுக்களை அளிக்க தொடங்கினார்கள்.

    இதற்காக காலை 9 மணி முதலே கட்சி அலுவலகத்திற்கு நிர்வாகிகளும் தொண்டர்களும் குவிய தொடங்கினார்கள். விருப்ப மனுக்கள் மீதான பரிசீலனை நாளை முதல் நடைபெற இருக்கிறது. இதற்காக கட்சி துணை தலைவர் மகேந்திரன் தலைமையில் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. 7 தொகுதிகள் கேட்டு வலியுறுத்தி வருவதால் கூட்டணி ஒப்பந்தம் தாமதமாகியுள்ளது. எனினும் இன்று உடன்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. #LSPolls #ADMK #DMDK #BJP
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இந்த கூட்டணியில் தே.மு.தி.க.வைச் சேர்க்க திட்டமிடப்பட்டது. இதற்காக பா.ஜனதா தலைவர்கள் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினர். அப்போது தே.மு.தி.க. தரப்பில் பா.ம.க.வுக்கு கொடுக்கப்பட்டது போல 7 தொகுதிகளை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அ.தி.மு.க. ஏற்கவில்லை.

    இதன் காரணமாக அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க. இணைவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விஜயகாந்தின் மனதை மாற்றி எப்படியாவது கூட்டணிக்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க., பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    ஆனால் விஜயகாந்த் தனது முடிவில் இருந்து பின் வாங்காமல் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறார்.

    கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பாரதிய ஜனதா தலைவர்கள் மட்டுமே விஜயகாந்தை சந்தித்து பேசி இருந்த நிலையில், அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் அவரை சந்திக்காமலேயே இருந்தனர். இதனால் அ.தி.மு.க., தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்று விஜயகாந்த் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

    நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், விஜயகாந்தை திடீரென சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்துக்கு நேரடியாகவே அழைப்பு விடுக்கப்பட்டது.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், தே.மு.தி.க.வுடனான கூட்டணி விரைவில் முடிவாகும் என்றார்.



    கூட்டணியில் சேருவது தொடர்பாக தே.மு.தி.க. தரப்பில் இருந்து ‘கிரீன்சிக்னல்’ கிடைத்து விட்டதாகவும், இதன் தொடர்ச்சியாகவே ஓ.பன்னீர்செல்வம், விஜயகாந்தை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் அ.தி.மு.க. அணியில் இணைவது பற்றி விஜயகாந்த் நேற்றே அறிவிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது.

    கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய விஜயகாந்த் கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் அறிவிக்காமலேயே வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

    அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க.வைச் சேர்ப்பதற்காக கடந்த மாதம் 20-ந் தேதியில் இருந்தே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கி விட்டது. அன்று தான் பியூஸ்கோயல், விஜயகாந்தை சந்தித்து பேசினார். இதன் பிறகு பல கட்டங்களாக ரகசிய பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. இறுதியாக ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசி விட்டார்.

    ஆனால் அ.தி.மு.க. அணியில் இணைவது பற்றி விஜயகாந்த் தரப்பில் இருந்து இன்னும் எந்தவிதமான தகவல்களும் வெளியாகாமலேயே உள்ளது. அரசியல் களத்தில் வட மாவட்டங்களில் செல்வாக்குமிக்க கட்சியாக திகழும் பா.ம.க.வுக்கு போட்டியாகவே தே.மு.தி.க. வளர்ச்சி கண்டுள்ளது.

    இதனால் அக்கட்சிக்கு இணையான அல்லது அதற்கும் அதிகமான தொகுதிகளை கேட்டுப்பெற்றால் மட்டுமே கூட்டணிக்கு சம்மதிக்க முடியும் என்று விஜயகாந்த் தொடர்ந்து கூறி வருகிறார்.

    இதன் காரணமாகவே அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி அமைவதில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனை பேச்சுவார்த்தை மூலம் விரைவில் முடிவுக்கு கொண்டு வர அ.தி.மு.க. பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு விட்டன. கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு இடமும், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சிக்கு ஒரு இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 15 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு அ.தி.மு.க. விட்டுக் கொடுத்துள்ளது. இன்னும் 25 தொகுதிகள் மட்டுமே மிச்சமிருக்கிறது. இதில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கி விட்டு தி.மு.க.வை போல 20 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று அ.தி.மு.க. கருதுகிறது.

    ஆனால் விஜயகாந்தோ 7 தொகுதிகளை எப்படியாவது கேட்டுப்பெற்று விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். பாரதிய ஜனதா கட்சியும், விஜயகாந்தை விட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் உள்ளது. இதனால் இந்த வி‌ஷயத்தில் ஜெயிக்கப்போவது அ.தி.மு.க.வா? தே.மு.தி.க.வா? என்பதே இப்போது மிகப்பெரிய கேள்வியாகி உள்ளது.

    இருப்பினும் அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே இன்று தொகுதி உடன்பாடு ஏற்பட உள்ளது. தே.மு.தி.க.வுக்கு 7 தொகுதிகள் கிடைக்குமா? இல்லை 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுமா? என்பது அப்போது தெரிந்து விடும்.

    இது தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் இன்று ஏற்பட்டால் மாலையில் நடக்கும் மோடி தலைமையிலான கூட்டத்தில் விஜயகாந்தும், பிரேமலதாவும் பங்கேற்பார்கள்.

    இன்று உடன்பாடு ஏற்படாமல் போனால் அ.தி. மு.க.- தே.மு.தி.க. கூட்டணி நாளை இறுதி செய்யப்படவே வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. #LSPolls #ADMK #DMDK #BJP
    அதிமுக தேர்தல் அறிக்கையை தலைமை கழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பொன்னையன் நாளை மாலை சமர்ப்பிக்கிறார். #ADMK #ADMKManifesto #LSPolls
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்குள் தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்து முடிக்கப்பட்டு விட்டது.

    அ.தி.மு.க.வில் தேர்தல் கூட்டணி இன்றுடன் பேசி முடிவு செய்ய உள்ளனர். இந்த கூட்டணியில் தே.மு.தி.க. சேருமா? சேராதா? என்பது இன்று தெரிந்து விடும்.

    இந்த நிலையில் இன்னும் 4 நாட்களில் அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதி விவரங்கள் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக எந்தெந்த தொகுதியில் யார்-யார் போட்டியிட உள்ளனர் என்ற பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ஒருங்கிணைந்து வேட்பாளர் பட்டியலை தயாரித்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நல்ல நாள் பார்த்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட அ.தி.மு.க. தயார் நிலையில் உள்ளது.

    இதற்கிடையே அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்களான முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் கடந்த 1 மாதமாக அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதற்காக தமிழகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சனைகளை அறிந்து அதை தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்துள்ளனர். விவசாயிகள்-மாணவர்களுக்கு சலுகைகள், நெசவாளர்களுக்கு மானியம், மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கான புதிய அறிவிப்புகள், பெண்களுக்கு புதிய கடன் உதவி திட்டம் என்று பல்வேறு அம்சங்களுடன் மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளனர்.



    ஆங்கிலம்-தமிழ் இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையை தலைமை கழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பொன்னையன் நாளை மாலை சமர்ப்பிக்கிறார்.

    தேர்தல் அறிக்கையில் ஏதும் திருத்தம் செய்ய வேண்டுமானால் அதை சரி செய்து பின்னர் முறையாக மக்கள் பார்வைக்கு வெளியிடப்படும். #ADMK #ADMKManifesto #LSPolls #EdappadiPalaniswami
    பாராளுமன்ற தேர்தலில் ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது என மாநில தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். #ParliamentElection #Congress
    ஜெய்ப்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி கட்சிகள், தொகுதி பங்கீடு உள்ளிட்ட வேலைகளில் முழு மூச்சாக உள்ளன.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது என மாநில தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக மாநில தலைவர் சச்சின் பைலட் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வருகிறது. மார்ச் 8ம் தேதி நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு விடும்.

    கட்சி தொண்டர்களின் விருப்பம், வேட்பாளரது வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவற்றை ஆராய்ந்து பார்த்து வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார். #ParliamentElection #Congress
    பாராளுமன்றத் தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலையும் நடத்தும்படி தலைமை தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. #LSPolls #ECteam
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அத்துடன், பாராளுமன்ற தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்பதற்காகவும், தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

    அவ்வகையில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள ஜம்மு காஷ்மீரில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது நேற்று ஸ்ரீநகரில் 12 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, மக்களவைத் தேர்தலுடன் மாநில சட்டமன்றத் தேர்தலையும் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்று ஜம்முவில் தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.



    தேர்தல் ஆணைய கூட்டத்தில், தேசிய மாநாட்டுக் கட்சியின் பொதுச்செயலாளர் அலி முகமது சாகர் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, மக்களவைத் தேர்தலுடன் மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடும்படி தேர்தல் ஆணையத்திடம் அலி முகமது சாகர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெகபூபா முப்தி தலைமையிலான பிடிபி கட்சியும் இதே கோரிக்கையை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. #LSPolls #ECteam
    திமுக கூட்டணியில் காஞ்சிபுரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் அங்கு ரவிக்குமார் போட்டியிடுவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். #LSPolls #VCK #Thirumavalavan

    சென்னை, மார்ச்.5-

    தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    தங்கள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம், காஞ்சீபுரம் ஆகிய 3 தொகுதி களில் 2 தொகுதிகளை ஒதுக்கி தருமாறு மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் பட்டியல் கொடுத்துள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தற்போது சிதம்பரம் தொகுதியை ஒதுக்குவது உறுதியாகி விட்டது. திருமா வளவன் போட்டியிடுவதற் காக இந்த தொகுதி ஒதுக்கப் படுகிறது.

    இன்னொரு தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் போட்டியிடு வதற்காக விழுப்புரம் அல்லது காஞ்சீபுரம் தொகுதியை தருமாறு மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

    ஆனால் விழுப்புரம் தொகுதியில் வன்னியர்கள் செல்வாக்கு உள்ளதால் இங்கு தி.மு.க. வேட்பாளரை நிறுத்தினால்தான் வெற்றி பெற முடியும் என்று மு.க. ஸ்டாலினிடம் பொன்முடி கருத்து தெரிவித்துள்ளதால் விழுப்புரம் தொகுதியை தி.மு.க. வைத்துக் கொள்ள விரும்புகிறது.

    இந்த நிலையில் விழுப் புரம் தொகுதி கிடைக்கா விட்டால் காஞ்சீபுரம் தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தருமாறு திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி போட்டியிட்டு தோல்வி அடைந்ததால் இந்த முறை திருவள்ளூர் தொகுதிக்கு பதில் காஞ்சீ புரம் தொகுதியை தருமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் அங்கு ரவிக்குமார் போட்டியிடுவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித் தனர்.

    பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்ததையடுத்து, 20 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #LSPolls #DMKAlliance #MDMK
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

    திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது.

    இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக தொகுதிகள் ஒதுக்கப்படாமல் இருந்தது. திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

    இந்நிலையில், வைகோ தலைமையிலான நிர்வாகிகள் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை சீட்டும் தருவதற்கு திமுக தலைமை முன்வந்தது. இதனை மதிமுக ஏற்றுக்கொண்டதையடுத்து, ஒப்பந்தம் கையெழுத்தானது.



    இத்தகவலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உறுதி செய்தார். மேலும் பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். மதிமுக போட்டியிடும் தொகுதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கூறினார்.

    இதன்மூலம் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில், திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. மனித நேய மக்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை.

    தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டதாகவும், மீதமுள்ள 20 தொகுதிகளிலும் திமுக போட்டியிடும் எனவும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    இதையடுத்து, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும். #LSPolls #DMKAlliance #MDMK
    சென்னையில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். #LSPolls #PMModi #ADMK #PMK #BJP
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.

    தேர்தல் அட்டவணை வெளியாவதற்கு முன்பு தோழமைக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. விஜயகாந்தின் தே.மு.தி.க.வும் இந்த கூட்டணியில் சேரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய 9 கட்சிகள் உள்ளன. டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன் தனியாக போட்டியிடும் நிலையில் உள்ளனர்.

    இந்த நிலையில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுலும் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை கடந்த மாதமே தொடங்கி விட்டனர். மாநிலம், மாநிலமாக சென்று அவர்கள் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்கள்.

    அந்த வகையில் பிரதமர் மோடி ஏற்கனவே 3 தடவை தமிழகம் வந்து மதுரை, திருப்பூர், கன்னியாகுமரி பொதுக்கூட்டங்களில் பேசினார். தேர்தல் தேதி அட்டவணை அறிவிக்கும் முன்பு மீண்டும் ஒரு தடவை பிரதமர் மோடியை தமிழ்நாட்டுக்கு அழைத்து வர பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்தனர்.

    இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி 6-ந்தேதி (நாளை) தமிழகம் வர சம்மதித்தார். இந்த தடவை மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பிரதமர் மோடி பேசுவதற்கான இடம் தயார் செய்யப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தின் போது சில அரசு திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதை கருத்தில் கொண்டு அரசு திட்டங்கள் விழாவுக்கு தனி மேடையும், பிரசாரம் செய்வதற்கு தனி மேடையும் அமைக்கப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் அமர நாற்காலிகள் போடப்பட்டு வருகின்றன.

    பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை) காலை கர்நாடகா வருகிறார். அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பிறகு பெங்களூரில் இருந்து விமானத்தில் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அதன் பிறகு மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் புறப்பட்டு செல்கிறார். அங்கு மாலை 4.30 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். சுமார் 2 மணி நேரம் அவர் சென்னை கூட்டத்தில் இருப்பார் என்று தெரிகிறது.

    மாலை 5.30 மணிக்கு பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 6 மணிக்கு பிரதமர் மோடி சென்னையில் இருந்து டெல்லிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு செல்வார்.

    சென்னையில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அ.தி.மு.க. சார்பில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.



    பா.ம.க. சார்பில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கிறார்கள். புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் கலந்து கொள்ள உள்ளார்.

    இதற்கிடையே அ.தி. மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வையும் சேர்த்துக் கொண்டு, நாளைய பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்தையும் பங்கேற்க செய்ய வேண்டும் என்பதில் அ.தி.மு.க. - பா.ஜனதா மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இதை கருத்தில் கொண்டே துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார்.

    அப்போது தொகுதி பங்கீடு பற்றி சுமார் 1 மணி நேரம் பேசப்பட்டது. சில சிறிய வி‌ஷயங்கள் தவிர பெரிய கோரிக்கைகள், நிபந்தனைகள் அனைத்தும் பேசி தீர்க்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. எனவே அ.தி.மு.க. கூட்டணியில் இன்று தே.மு.தி.க. சேரும் என்று தெரிகிறது.

    அது உறுதியாகும் பட்சத்தில் நாளை பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்க வாய்ப்புள்ளது. அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் நாளை ஒரே மேடைக்கு வருவதால் சென்னை கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. #LSPolls #PMModi #ADMK #PMK #BJP
    பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. #LSPolls #DMKAlliance #CPM
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

    திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐ.ஜே.கே. கட்சிகளும் உள்ளன. அந்த கட்சிகளுக்கு அதிகாரப்பூர்வமாக தொகுதிகள் ஒதுக்கப்படாமல் இருந்தது. திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

    பின்னர் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. மதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. எனவே, இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், சென்னையில் இன்று திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 2 தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை முன்வந்தது. பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணியின்  வெற்றியை கருத்தில் கொண்டு, இந்த தொகுதிகளை பெற்றுக்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் தெரிவித்தது. அதன்படி கூட்டணி ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.



    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், பாராளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். மார்க்சிஸ்ட் போட்டியிடும் 2 தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    அப்போது, 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பாலகிருஷ்ணன், பாராளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தல் வந்தால் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்பது என ஏற்கனவே முடிவு எடுத்திருப்பதாக கூறினார்.

    தற்போதுள்ள நிலவரப்படி திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சிக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. அந்த கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பிறகு, திமுக போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். #LSPolls #DMKAlliance #CPM
    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி வருகிற 8-ந்தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைபெறுவதற்கான பட்டியலும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. #LSPolls #ElectionCommission
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

    கூட்டணி அமைப்பது, தொகுதி ஒதுக்கீடு போன்றவற்றில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் செய்து வருகிறது.

    நாடுமுழுவதும் பல்வேறு கட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுடன் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகளும் இந்த கோணத்தில் தான் கூட்டணி அமைத்து வருகின்றன.

    பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு இதுவரை 3 முறை வந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். வருகின்ற 6-ந்தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். அவருடன் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பேச இருக்கிறார்கள். தொடர்ந்து நாடுமுழுவதும் பல்வேறு புதிய திட்டங்களை மோடி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார்.



    இதுபோல் தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவது உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இன்னும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    தேர்தல் தேதி அறிவித்த பிறகு புதிய திட்டங்களை தொடங்க முடியாது. எனவே பிரதமரும், முதல்- அமைச்சரும் தொடர்ந்து புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்கள்.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி வருகிற 8-ந்தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைபெறுவதற்கான பட்டியலும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

    நாடுமுழுவதும் பல்வேறு கட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன. எனவே தமிழ்நாட்டில் பாராளுமன்ற, 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒரேகட்டமாக நடைபெறும் என்று தெரிகிறது. அடுத்து, தமிழ்நாட்டில் கோடைக்காலம் எனவே முதல் கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் கமி‌ஷன் சிபாரிசு செய்துள்ளது. எனவே முதல் கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கும். இது ஒரே கட்டமாக நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது என்று தேர்தல் கமி‌ஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #LSPolls
    பாராளுமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் எம்எல்ஏ திவாகரனை நிறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. #MLADivakaran #ThiruvananthapuramLSseat
    திருவனந்தபுரம்:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி ஒப்பந்தம் மற்றும் வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணியின் (எல்டிஎப்) முக்கிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் முன்னாள் மாநில அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான சி.திவாகரனை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல், திரிசூர் தொகுதியில் ராஜாஜி மேத்யூ தாமஸ், மாவேலிக்கரை தொகுதியில் எம்எல்ஏ சித்தயம் கோபகுமார், வயநாடு தொகுதியில் பி.பி.சுனீர் ஆகியோரை வேட்பாளராக அறிவிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் 2 எம்எல்ஏக்களை மக்களவைத் தேர்தலில் களமிறக்க கட்சி முடிவு செய்துள்ளது.



    இந்த 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து மாநிலக் குழு கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 7-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    திருவனந்தபுரம் தொகுதியில் 2009 மற்றும் 2014  தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் அடுத்தடுத்து வெற்றி பெற்றார். இந்த முறையும் அவர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை எதிர்த்து திவாகரன் களமிறங்குகிறார். பாஜக வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. #MLADivakaran #ThiruvananthapuramLSseat
    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்குள் தே.மு.தி.க.வை வரவழைக்கும் இறுதிக்கட்ட முயற்சியாக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். இன்று மாலை விஜயகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #OPSmeetsVijayakanth #AIADMKDMDKpact
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. தலைமையில் இரு அணிகள் மோத உள்ளன.

    அ.தி.மு.க. தலைமையிலான அணியில் பா.ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ், த.மா.கா. ஆகியவை இடம் பெற்றுள்ளன. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. என்ன முடிவு எடுக்கும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாக உள்ளது. தே.மு.தி.க. முதலில் டெல்லி சென்று பா.ஜனதாவுடன் பேச்சு நடத்தியது. எனவே அந்த கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தே.மு.தி.க.வுக்கு முன்னதாக பா.ம.க.வுக்கு 7 இடங்களை அ.தி.மு.க. விட்டுக் கொடுத்ததால் அதே போன்று 7 இடங்கள் தங்களுக்கும் வேண்டும் என்று தே.மு.தி.க. தரப்பில் கூறப்பட்டதால் தொடக்கத்திலேயே முட்டுக்கட்டை விழுந்தது.

    இதற்கிடையே விஜயகாந்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்து பேசினார்கள். இதனால் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறும் என்று கருதப்பட்டது.

    ஆனால், தி.மு.க. கூட்டணியிலும் தே.மு.தி.க.வுக்கு எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை. அதிக பட்சமாக 5 தொகுதிகள் தான் தருவோம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் தி.மு.க. அணியில் இடம் பெறுவதை தே.மு.தி.க. தவிர்த்தது.

    தே.மு.தி.க.வுக்காக இனி காத்திருக்க இயலாது என்ற முடிவுக்கு வந்த தி.மு.க. தன் தோழமைக்கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. இன்று அல்லது நாளைக்குள் தி.மு.க.வில் அனைத்து தொகுதிகளுக்கும் உடன்பாடு எட்டப்படும் நிலை உள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வினர் மீண்டும் தே.மு.தி.க.வுடன் பேச்சு நடத்தினார்கள். கடந்த வார இறுதியில் அதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த பேச்சுவார்த்தையில் திடீர் சிக்கல் தோன்றியது.

    இதற்கு தே.மு.தி.க. தரப்பில் வைக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. அ.தி.மு.க.விடம் 7 தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதமாக பேசி வந்த தே.மு.தி.க. பிறகு சற்று இறங்கி வந்தது.

    5 தொகுதிகள் கொடுத்தால் போதும் என்று கூறிய தே.மு.தி.க. தலைவர்கள் மேல்-சபையில் ஒரு இடம் வேண்டும் மேலும் 21 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்தது. இந்த நிபந்தனையால்  அ.தி.மு.க.-தே.மு.தி.க. பேச்சு வார்த்தையில் குழப்பம் நீடிக்கிறது.

    இந்த நிலையில் தே.மு.தி.க.வின் அவசர ஆலோசனை கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு விஜயகாந்த் தலைமை தாங்குகிறார்.



    இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்நிலை குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு பற்றி இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    பிரதமர் மோடி வரும் 6-ந்தேதி சென்னைக்கு வருவதால் தே.மு.தி.க.வுடனான பேச்சு வார்த்தையை நாளைக்குள் முடித்து விட வேண்டும் என்று அ.தி.மு.க.-பா.ஜனதா தலைவர்களும் ஆவலுடன் உள்ளனர். 

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்குள் தே.மு.தி.கவை வரவழைக்கும் இறுதிக்கட்ட முயற்சியாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று மாலை 5.45 மணியளவில் விஜயகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். #OPSmeetsVijayakanth #AIADMKDMDKpact
    ×