search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sunil Arora"

    தேர்தல் ஆணையர்களுக்குள் கடந்த காலங்களிலும் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளதால் அசோக் லவாசா தெரிவித்த கருத்து சகஜமானதுதான் என தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் புகாரில்  தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்  அசோக் லவாசா இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரியவந்தது.

    எனது கருத்தை அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் கடந்த 4-ம் தேதி ஒரு கடிதம் எழுதி இருந்தார்.



    அதில் ‘‘பிரதமர் மோடி, அமித்ஷா தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளனர். பிரதமர் மோடி அமித் ஷாவுக்கு எதிரான 6 தேர்தல் விதிமுறை மீறல்களில் எனது கருத்து ஏற்கப்படவில்லை.

    அமித் ஷா மற்றும் பிரதமருக்கு எதிரான 11 நடத்தை விதிமீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு எனக்கு ஏற்புடையதல்ல. எனது கருத்துக்களை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏற்றுக்கொள்ளவில்லை. எனது கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமின்றி, எனது எதிர்ப்புகளும் பதிவு செய்யப்படாததால் இனிவரும் தேர்தல் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை’’ என்று அசோக் லவாசா குறிப்பிட்டிருந்தார்.

    கடிதத்தின் நகலுடன் இந்த தகவல் ஊடகங்களில் வெளியான பின்னர் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 14-ம் தேதி நடைபெற்ற ஆணையத்தின் கூட்டத்தில் 13 விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்கு ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. அவற்றில் ஒன்று நடத்தை விதிமீறல் தொடர்பானது.

    தேர்தல் கமிஷனில் ஆணையாளர்களாக பதவி வகிக்கும் மூன்று பேருமே மற்றவர்களின் ‘குளோனிங்’ (நகல்) ஆக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. இதற்கு முன்னரும் பல முறை சில விவகாரங்களில் ஆணையாளர்களுக்குள் மாறுபட்ட கருத்துகள் இருந்துள்ளன. இதுபோன்ற முரண்பாடுகள் இருக்கக்கூடியது, இருக்க வேண்டியதும்கூட. ஆனால், அவை அனைத்துமே தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாராளுமன்றத் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 2-ம் தேதி சென்னை வர உள்ளார். #LokSabhaElectoins2019 #ElectionCommissioner
    சென்னை:

    நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன. தேர்தலை சுமுகமாக நடத்தி முடிக்க, தேர்தல் அதிகாரிகள் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர். வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்கும்படி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் செலவுகளை கண்காணிக்க அனைத்து தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

     


    தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகள், 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் வரும் 2-ம் தேதி சென்னை வர உள்ளனர். தேர்தல் தொடர்பாக 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த உள்ளார். #LokSabhaElectoins2019 #ElectionCommissioner
    பாராளுமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அனைத்துக் கட்சிகளுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். #ParliamentElection #PMModi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார்.

    இந்நிலையில், வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:

    ஜனநாயகத்துக்கான தேர்தல் திருவிழா துவங்கியது. 2019 லோக்சபா தேர்தலில் அனைவரும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். இத்தேர்தல் வரலாற்று திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இந்திய குடிமகன்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். குறிப்பாக, முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் தங்களது வாக்குகளைப் பதிவுசெய்து சாதனையை உருவாக்க வேண்டும்.

    பல வருடங்களாக தேர்தல்களை சிறப்பாக நடத்தி வரும் தேர்தல் கமிஷனால் இந்தியாவுக்கு பெருமை கிடைத்துள்ளது. தேர்தலை சிறப்பான முறையில் நடத்த தேர்தல் கமிஷன், அதிகாரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    2019 லோக்சபா தேர்தலை சந்திக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். கட்சிகளால் நாம் வேறுபட்டு இருந்தாலும் அனைவரது குறிக்கோளும் ஒன்றே. அது இந்தியாவின் வளர்ச்சி மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் அதிகாரமளிக்க வேண்டும் என்பதுதான் என பதிவிட்டுள்ளார். #ParliamentElection #PMModi
    பாராளுமன்ற தேர்தல் குறித்து அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்பதற்காக இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோரா அடுத்த வாரம் தமிழகம் வருகிறார். #ParliamentElection #SunilArora
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தப் பணிகளை மேற்கொள்ள வருகிற 23 மற்றும் 24 ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1 லட்சத்து 31 ஆயிரத்து 931 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் சென்னையில் அதிக பட்சமாக 14,221 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்பதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அடுத்த வாரம் சென்னை வருகிறார்.

    அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்ட பிறகு அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார்.



    தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 21 சட்டசபை தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருவதால் அது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஓசூர் தொகுதி இன்னும் காலி இடம் என அறிவிக்கப்படவில்லை. எனவே மீதம் உள்ள 19 தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ParliamentElection #SunilArora
    பழைய வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. #SunilArora #ElectionCommission
    புதுடெல்லி:

    2014-ம் ஆண்டு தேர்தலின் போது மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை உருவாக்கியது.

    ஆனால் இந்த சர்ச்சையின் பின்னணியில் காங்கிரசின் சதி திட்டம் இருப்பதாக பா.ஜனதா தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

    இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலின் போது மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை தவிர்த்து விட்டு பழைய வாக்குச் சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி உள்ளன. தி.மு.க., பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனீல் ஆரோரா டெல்லியில் நடந்த ஒரு விழாவில் பேசும் போது கூறியதாவது:-



    வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர மாட்டோம். ஓட்டுப்பதிவுக்கு மின்னணு எந்திரங்களே தொடர்ந்து பயன் படுத்தப்படும். அதில் எந்த வித மாற்றமும் இல்லை.

    பழைய வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வருவதில் நிறைய பிரச்சினைகள் உள்ளது. அதை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஓட்டுப்பதிவு தொடர்பாக புதிய ஆலோசனைகளை அரசியல் கட்சிகள் தெரிவிக்கலாம். அதுபற்றி தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யும். ஆனால் பழைய முறைக்கு செல்ல இயலாது.

    இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் சுனீல் ஆரோரா கூறினார். #SunilArora #ElectionCommission   
    தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு இனி திரும்ப முடியாது என்று தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறினார். #SunilArora #CEC #India #Ballot
    புதுடெல்லி:

    கடந்த 1-ந் தேதி தலைமை தேர்தல் கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்ட சுனில் அரோரா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமீபத்தில் நடந்துமுடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் 1.76 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் மிக குறைந்த அளவு (ஒரு சதவீதத்துக்கும் குறைவான) எந்திரங்களில் மட்டுமே கோளாறு ஏற்பட்டது. இதில் எங்களுக்கு திருப்தி இல்லை. எந்திரங்களில் கோளாறு ஏற்படுவதை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    எந்திரங்கள் சேதப்படுத்தப்படுவது வேறு, கோளாறு ஏற்படுவது வேறு. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வாக்குகளை பதிவு செய்யும் ஒரு கருவி தான். அது கம்ப்யூட்டர் போல திட்டமிடப்பட்டதோ, பண்பட்டதோ அல்ல.

    2014 நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் ஒரு தேர்தல் முடிவு வந்தது. அடுத்து அங்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் முற்றிலும் மாறுபட்ட முடிவு வந்தது. சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் இப்போது ஒரு முடிவும், அங்கு முன்பு நடந்த இடைத்தேர்தல் களில் ஒரு முடிவும் வந்தது.

    ஒருவேளை தேர்தல் முடிவு ‘எக்ஸ்’ என்று வந்தால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றி யாரும் குறை கூறுவதில்லை. அதே முடிவு ‘ஒய்’ என்று வந்தால் மின்னணு எந்திரங்களில் கோளாறு என்கிறார்கள். தேர்தல் கமிஷனையோ, அதன் பாரபட்சமற்ற நடவடிக்கையையோ தேர்தலில் முக்கிய பங்கேற்பாளர்கள் என்ற முறையில் அரசியல் கட்சிகள் கேள்வி கேட்கின்றன. அது அவர்களது உரிமை.

    ஆனால் மின்னணு எந்திரங்களை கால் பந்தாட்டத்தில் ‘டாஸ்’ போடுவதுபோல பயன்படுத்துவது எங்களை காயப்படுத்துகிறது. தேர்தலில் வாக்காளர்களுக்கு அடுத்ததாக அரசியல் கட்சிகள் தான் முக்கிய பங்கேற்பாளர்கள். தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு இனி திரும்ப முடியாது. இப்போதுள்ள நடை முறையே தொடரும்.

    அடுத்து நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வர உள்ளது பற்றி நாங்கள் அறிவோம். அதற்கான அலுவலக ரீதியான முன்னேற்பாடு நடவடிக்கைகள் ஏற்கனவே சில நாட்கள் முன்பு தொடங்கிவிட்டது. அனைத்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் கவனத்துடன் தயாரிக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

    முக்கிய நிகழ்வான நாடாளுமன்ற பொதுத்தேர்தலை வெற்றிகரமாக நடத்த அரசியல் கட்சிகள், வாக்காளர்கள், தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரின் முழு ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு சுனில் அரோரா கூறினார். #SunilArora #CEC #India #Ballot
    தலைமை தேர்தல் கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்ட சுனில் அரோரா பாராளுமன்ற தேர்தலை நடத்த தயாராகி வருகிறோம் என்று கூறினார். #SunilArora #ParliamentElection
    புதுடெல்லி:

    இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ஓ.பி.ராவத் பதவி வகித்து வந்தார். அவருடைய பதவி காலம் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) முடிவடைந்தது. இதையொட்டி தேர்தல் கமிஷனர்களில் ஒருவரான 62 வயது சுனில் அரோராவை தலைமை தேர்தல் கமிஷனராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் நியமித்தார்.

    இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் தலைமை அலுவலகத்தில் நேற்று தலைமை தேர்தல் கமிஷனராக சுனில் அரோரா பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவர் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை இப்பதவியை வகிப்பார். இவர் நாட்டின் 23-வது தலைமை தேர்தல் கமிஷனர் ஆவார்.



    இவருடைய தலைமையில்தான் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் காஷ்மீர், ஒடிசா, மராட்டியம், ஆந்திரா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது.

    பதவி ஏற்ற பிறகு நிருபர்களிடம் சுனில் அரோரா கூறியதாவது:-

    நாட்டில் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும், நம்பகத்தன்மையுடனும், பாரபட்சம் இன்றியும், நெறிமுறைகளோடு முற்றிலும் அமைதியாக நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் முன்னுரிமை அளிக்கும். அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலும் மிகுந்த கவனத்துடன் நடத்தப்படும்.

    இதற்காக பொதுமக்கள், தேர்தல் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல் கட்சிகள், ஊடகங்கள், சிவில் சமூக அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் எங்களுக்கு தகுந்த ஒத்துழைப்பை அளிக்கவேண்டுகிறோம்.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தேர்தல் கமிஷன் இப்போதே தயாராகி வருகிறது.

    குறிப்பாக மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் ஒப்புகை சீட்டு எந்திரங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைப்பது உள்பட அனைத்துக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தேர்தல் குறித்தும், தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் பற்றியும் வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேர்தலில் சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த கேள்விக்கு சுனில் அரோரா பதில் அளிக்கையில், “இது தொடர்பாக துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்கா இந்த மாத இறுதியில் அறிக்கை தாக்கல் செய்வார். அதன் அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

    1980-ம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுனில் அரோரா நிதி, ஜவுளி, திட்டக் கமிஷன் அமைச்சகங்களில் பணியாற்றியவர்.

    1999-2002-ம் ஆண்டுகளில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் இணை செயலாளராகவும், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தலைமை நிர்வாக இயக்குனராக 5 ஆண்டுகளும் பணியாற்றி உள்ளார். 36 ஆண்டுகள் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி தேர்தல் கமிஷனராக அவர் நியமிக்கப்பட்டார்.  #SunilArora #ParliamentElection
    இந்திய தேர்தல் கமிஷனின் 23-வது தலைமை ஆணையாளராக சுனில் அரோரா இன்று பொறுப்பேற்று கொண்டார். #SuniArora #ChiefElectionCommissioner #CECofIndia #CEC
    புதுடெல்லி:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் 22-வது தலைமை ஆணையாளராக கடந்த 23-1-2018 அன்று பொறுப்பேற்ற ஓ.பி.ராவத் பதவிக்காலம் இன்றுடன் முடிவதை தொடர்ந்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் ஜனாதிபதி மாளிகை அறிவித்திருந்தது.



    இந்நிலையில், டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையம் தலைமையகத்தில் சுனில் அரோரா இந்நாட்டின் தேர்தல் ஆணையத்தின் 23-வது தலைமை ஆணையாளராக இன்று பொறுப்பேற்று கொண்டார். #SuniArora #ChiefElectionCommissioner #CECofIndia #CEC
    தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் முடிய உள்ளதால் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். #NewCEC #ChiefElectionCommissioner
    புதுடெல்லி:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்தின் பதவிக்காலம் டிசம்பர் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய  தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். சுனில் அரோரா டிசம்பர் 2-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ளார்.



    ராஜஸ்தானைச் சேர்ந்த சுனில் அரோரா 1980-ம் ஆண்டில் ஐஏஎஸ் முடித்தார். தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, நிதித்துறை, ஜவுளித்துறை மற்றும் திட்டக் கமிஷனில் பணியாற்றியுள்ளார். இந்தியன் ஏர்லைன்ஸ் சேர்மனாகவும் 5 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி ஓய்வு பெற்றதையடுத்து, தேர்தல் ஆணையத்தில் சேர்க்கப்பட்டார்.

    ராஜஸ்தானில் வசுந்தரா ராஜேவின் முந்தைய ஆட்சிக் காலத்தின்போது, அவரது மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக விளங்கினார் அரோரா. 2005 முதல் 2008 வரை வசுந்தராவின் முதன்மைச் செயலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. #NewCEC #ChiefElectionCommissioner
    ×