என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    அதிமுக, பா.ஜனதா கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி, பிரதமர் மோடி பலமான தலைவர் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். #KSAlagiri #Congress
    தூத்துக்குடி:

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி வருகிற 13-ந் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக கன்னியாகுமரி வருகிறார். அதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிடுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வந்தார். பின்பு அங்கிருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார்.

    தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    கன்னியாகுமரியில் ராகுல்காந்தி பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அமைந்த கூட்டணி எங்களது கூட்டணி.



    ஆனால் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி ஜாதி, மதப்பெயரால் உருவான கூட்டணி. அந்த கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. மோடி பலமான தலைவர் என்று பலர் கூறுகின்றனர். ஆனால் அவர் பலமான தலைவர் இல்லை. பாகிஸ்தான் போர் விவகாரத்திலேயே அதனை தெரிந்து கொள்ளலாம்.

    பிரதமர் மோடி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை மிரட்டி கூட்டணி அமைத்திருக்கிறார். அதில்தான் அவர் பலமானவர் என்று கூற முடியும். காமராஜரையும், மோடியையும் ஒப்பிட்டு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை பேசியது தவறு. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விபரம் கன்னியாகுமரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, விஜயதரணி, முன்னாள் எம்.எல்.ஏ. பீட்டர்அல்போன்ஸ், இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் முரளிதரன், சீனிவாசன், பொருளாளர் பாரகன் அந்தோணிமுத்து, வர்த்தக பிரிவு தலைவர் டேவிட் பிரபாகரன், எடிசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.  #KSAlagiri #Congress
    எதிர் தலைவர்களுடன் கூட்டணி வைத்துள்ளதால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் அவர்கள் அணிக்காக ஜெயலலிதா படத்தை பயன்படுத்தக்கூடாது என்று டிடிவி தினகரன் கூறி உள்ளார். #TTVDhinakaran #ADMK
    மதுரை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தி.மு.க. கூட்டணி அமைத்துவிட்டது. அ.தி.மு.க. கூட்டணி அமைத்து வருகிறது.

    டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. தனி அணி அமைத்து போட்டியிடுகிறது. எஸ்.டி.பி.ஐ. கட்சி இந்த கூட்டணியில் இணைந்துள்ளது. மேலும் ஒரு கட்சி இந்த கூட்டணியில் சேரும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து டி.டி.வி. தினகரன் அளித்த பேட்டி வருமாறு:-

    நாங்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம். அது தமிழகம் முழுவதும் மக்களிடம் சேர்ந்துள்ளது. எனவே அந்த சின்னத்தை கேட்பதில் தவறு இல்லை. இடைத்தேர்தல் வந்தால் அ.ம.மு.க.வுக்கு சின்னம் வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் உள்ளது. அ.தி.மு.க.வின் ஒரு அணிதான் அ.ம.மு.க. என்று குறிப்பிட்டு இருப்பதால் கட்சியின் பெயரை பதிவு செய்யவில்லை.

    தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். கட்சிக்கான வாக்கு வங்கி என்பது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி காலத்துடன் முடிந்து விட்டது. பாராளுமன்ற கூட்டணி தொடர்பாக பல கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தின.



    நாங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்களுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. ஆனால் ஜெயலலிதாவுக்கு எதிராக மோசமாக பேசியவர்களுடன் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கூட்டணி வைத்துள்ளனர். எனவே அவர்கள் அணிக்காக ஜெயலலிதா படத்தை பயன்படுத்தக்கூடாது.

    தற்போது ஒவ்வொரு தேர்தலிலும் புதிய கணக்குதான் எடுபடுகிறது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எங்கள் கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.

    இந்த இரண்டு கட்சிகளுக்கும் தலா ஒரு இடம் ஒதுக்கப்படும். மீதம் உள்ள 38 இடங்களில் அ.ம.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறுவோம். மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ADMK

    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. கூட்டணிக்கு வந்தால் தான் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்ற நிலையில்லை என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். #LSPolls #ADMK #ThambiDurai #DMDK
    புதுக்கோட்டை:

    கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள மெய்யனம் பட்டி, தளிஞ்சி, கதவம் பட்டி, கிளிக்குடி, பரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து குறைகள் அடங்கிய மனுக்களை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பெற்றுக்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    18 ஆண்டுகால தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அப்போது தமிழக மக்களுக்கு எதுவும் செய்யாதவர்கள் மீண்டும் வந்தால் மக்களுக்கு நல்லது செய்யமாட்டார்கள்.

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி பயனற்ற கூட்டணி. அந்த கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும் என்பது தான் எங்களது குறிக்கோள். அதற்காகத்தான் நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். அ.தி.மு.க. பல தேர்தல்களில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றுள்ளது கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டும் வெற்றி பெற்றுள்ளது.

    தே.மு.தி.க. வந்தால் தான் அ.தி.மு.க. வெற்றி பெரும் என்ற நிலையில்லை. இருப்பினும் தே.மு.தி.க. கூட்டணிக்கு வரவேண்டும் என்பதே எங்களது ஆவல். ஒரு கட்சி என்றால் தேர்தல் நேரத்தில் பல கட்சிகளோடு கூட்டணி பேச்சுவார்ததை நடத்துவது என்பது வழக்கம்.



    ஆனால் தே.மு.தி.க. தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது குறித்து துரைமுருகன் விமர்சித்திருப்பது அநாகரிகமான செயல். இதை வைத்தே தி.மு.க. எப்படிப்பட்ட கட்சி என்று தெரிய வருகிறது. இவர்கள் வந்தால் மொழியையோ இனத்தையோ காப்பாற்ற முடியாது. ஸ்டாலின் கற்பனையில் பேசி வருகிறார். ஸ்டாலினால் அவர் வீட்டில் உள்ள பிரச்சனைகளையே தீர்க்க முடியவில்லை, நாட்டில் உள்ள பிரச்சனைகளையா தீர்க்க போகிறார்கள்.

    ஜெயலலிதா இருந்த போதிலிருந்தே பா.ஜ.க. அ.தி.மு.க. நட்புடன் தான் இருந்து வருகிறது. இருந்தாலும் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்ததால்தான் நானும் அவர்களை விமர்சனம் செய்தேன். ஆனால் மத்திய பா.ஜ.க. தலைவர்கள் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யவில்லை. அ.தி.மு.க.வோடு விருப்பப்பட்டே பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது. விருப்பம் இல்லாமலா குமரிக்கு வந்த பிரதமர் மோடி எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசினார்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #ADMK #ThambiDurai #DMDK
    கன்னியாகுமரியில் வருகிற 13-ந் தேதி ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் தொடங்குவதாகவும், இதில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். #RahulGandhi
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு விவகாரங்களில், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, பிரசார வியூகம் அமைப்பு உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன. இதில் தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமையில் 2 பிரதான கூட்டணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

    இதன் தொடர்ச்சியாக பிரசார களத்தில் அவை தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக தேசிய கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் பா.ஜனதாவை பொறுத்தவரை பிரதமர் மோடி மற்றும் கட்சித்தலைவர் அமித்ஷா ஆகியோர் தமிழகத்தில் பிரசார பொதுக்கூட்டங்களை நடத்தி உள்ளனர்.

    இதைப்போல காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களும் தமிழகத்தில் தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் மாநில தலைவர்களுடன் சந்தித்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கட்சித்தலைவர் ராகுல் காந்தி வருகிற 13-ந் தேதி தமிழகத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    இந்த கூட்டம் கன்னியாகுமரியில் நடப்பதாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட ஜனநாயக, மதசார்பற்ற கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு சிறப்பாக நடந்து முடிந்து உள்ளது. தி.மு.க. முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதியின் அணுகுமுறையுடன், கூட்டணி கட்சிகளுக்கு நியாயமான முறையில் தொகுதி பங்கீட்டை அற்புதமாக செய்து முடித்திருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தொண்டர்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழகத்தில் மதசார்பற்ற சக்திகளின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவைப்பதற்காக ராகுல்காந்தி வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) கன்னியாகுமரிக்கு வருகிறார். அங்கு பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்கள்.

    இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கும் இந்த பிரசாரம் நாடு முழுவதும் எதிரொலிக்கப்போகிறது. தேசிய அளவில் ஏற்படுகிற மாற்றத்தில் தமிழகம் முன்னணி வகிக்கும் வகையில் கன்னியாகுமரி கூட்டம் அமையப்போகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #RahulGandhi
    எது சந்தர்ப்பவாத கூட்டணி? என்ற பிரதமரின் கேள்விக்கு விருதுநகர் மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். #MKStalin #DMK
    விருதுநகர்:

    விருதுநகர் பட்டம்புதூரில் தென்மண்டல தி.மு.க. மாநாடு நேற்று நடைபெற்றது. விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    அவலம் மிகுந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விருதுநகர் மண்ணில் நடைபெறும் இந்த பேரணி பொதுக்கூட்டம், மாவட்ட மாநாடா, மாநில மாநாடா என்று வியக்கும் வகையில் உள்ளது.

    விருதுநகர் மாவட்ட செயலாளர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் குறுகிய காலஅவகாசத்தில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். சிவகங்கை சமஸ்தானத்தில் தளபதிகளாக பெரிய மருது, சின்ன மருது இருந்தனர். சிவகங்கை சமஸ்தானத்தில் ஆட்சி செய்தாலும், அவர்கள் பிறந்தது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்குளம் தான். அதேபோன்று இவர்கள் 2 பேரும் பெரிய மருது, சின்ன மருதுவாக செயல்பட்டு இந்த மாநாட்டு ஏற்பாட்டை செய்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் 2 முதல்-அமைச்சர்களை தந்த மாவட்டம். பி.எஸ்.குமாரசாமி ராஜா, பெருந்தலைவர் காமராஜர் ஆகிய 2 பேரும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். தமிழ்நாடு என்று பெயர் வைக்க உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனார் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் தான்.

    இவ்வாறு அரசியல் பாரம்பரியமிக்க விருதுநகர் மண்ணில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    சென்னைக்கு அருகில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறி கேள்வி எழுப்பி உள்ளார். எது சந்தர்ப்பவாத கூட்டணி? தி.மு.க.வும், காங்கிரசும் இந்திராகாந்தி முதல் சோனியாகாந்தி தொடர்ந்து, ராகுல்காந்தி வரை கூட்டணி அமைத்துள்ளோம். இதுதவிர நாடு ஆபத்தை சந்திக்கும்போதெல்லாம் தி.மு.க.வும், காங்கிரசும் கைகோர்த்து உள்ளது.



    பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் அமைத்துள்ள கூட்டணி, என்ன கூட்டணி என்று தெரியவில்லை. ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என கூறும் பிரதமர் மோடி, தமிழகத்தில் குட்கா ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ள நிலையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார்.

    கூட்டத்தில் பேசிய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சி கண்டுள்ளது என்று கூறியுள்ளார். தமிழகத்தில் ஏதேனும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா? ஜெயலலிதா இருந்தால், பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்திருப்பார் என்று கூறியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர பிரதமர் மோடி, ஜெயலலிதாவை நேரில் வந்து சந்தித்தார். பல தூதர்களை அனுப்பினார். ஆனால் ஜெயலலிதா உடன்படாமல் மோடியா அல்லது இந்த லேடியா என்று கூறினார்.

    பிரதமர் மோடி, தற்போது தமிழகத்திற்கு அடிக்கடி வரத்தொடங்கியுள்ளார். கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் பேசும்போது, எனக்கு குடும்பம் கிடையாது. நாட்டின் 130 கோடி மக்கள் தான் என் குடும்பம். நான் வாழ்ந்தாலும் மக்களுடன் தான் வாழ்வேன். வீழ்ந்தாலும் மக்களுடன் தான் வீழ்வேன் என்றார். ஆனால் உண்மையில் 130 கோடி மக்களையும் நடுத்தெருவில் நிற்கவைத்துவிட்டார்.

    1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நள்ளிரவில் அறிவித்து, நாட்டின் பொருளாதாரத்தை பாழ்படுத்தி மக்களை நடுத்தெருவில் நிற்கவைத்துவிட்டார். தற்போது அவர் மேடையிலேயே ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். ஜெயலலிதா சாதனைகளை வரும் தலைமுறையும் மறக்க முடியாது என்று பேசுகிறார்.

    ஜெயலலிதாவுடன் நமக்கு கருத்து வேறுபாடு, மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவர் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், அவர் தற்போது சசிகலாவுடன் தான் இருந்திருப்பார். ஊழல் குற்றச்சாட்டுகளால் 2 முறை முதல்-அமைச்சர் பதவியை துறந்தவர். பெங்களூருவுக்கு முதல்-அமைச்சராக விமானத்தில் சென்ற அவர், அங்கு நீதிமன்றத்தால் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதான் ஜெயலலிதாவின் சாதனை.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மோடியின் ஆட்சியில் தமிழகம் முன்னேற்றம் அடைந்தது என்று கூறியுள்ளார். என்ன முன்னேற்றம் கண்டுள்ளது?

    எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி விலைவாசி உயராமல் கட்டுப்படுத்தியுள்ளார் என்று கூறுகிறார். நான் கேட்கிறேன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதாவது ஒரு கிராமத்தை தத்தெடுத்து அங்கு வரட்டும். நானும் அங்கு வருகிறேன். அவர் தொகுதியில் உள்ள கிராமத்தை கூட அவர் தேர்வு செய்யட்டும். விலைவாசி உயர்ந்துள்ளதா என்பதை கிராம மக்கள் கூறுவர். சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்கிறார்கள். குட்கா ஊழலால், அவர் அமைச்சரவையில் இருக்கும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ. வழக்கு உள்ளது.

    அமைச்சர் வீட்டிலும், தலைமை செயலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை வழக்குகள் உள்ளன. பதவியில் இருக்கும் டி.ஜி.பி. மீது குட்கா ஊழல் தொடர்பான வழக்கு உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது தமிழக சட்டம்-ஒழுங்கு உள்ளது.

    பாராளுமன்ற துணை சபாநாயகராக இருக்கும் தம்பித்துரை, பா.ஜ.க. ஆட்சியில் எந்த திட்டமும் வெற்றி அடையவில்லை என குற்றம் சாட்டுகிறார். அவர் இந்த குற்றச்சாட்டினை பாராளுமன்றத்திலேயே தெரிவிக்கிறார். ஆனால் தற்போது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடியின் அருகிலேயே தம்பிதுரை அமர்ந்துள்ளார். ஒட்டுமொத்தத்தில் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கும், ஆட்சியை காப்பாற்றிக்கொள்வதற்கும்தான் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பரபரப்பாக பேசினார்.  #MKStalin #DMK
    காஞ்சிபுரத்தின் கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், கருணாநிதியின் ஆட்சியை கலைத்த காங்கிரசுடன் திமுக வைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி என குற்றம்சாட்டினார். #Kilambakkam #ADMKAlliance #Election2019 #PMModi
    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: 

    பா.ஜ.க. தலைமையிலான மத்திய ஆட்சியில் 19,000 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து மீட்கப்பட்டனர். மேலும், இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு 14000 வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆப்கானிஸ்தானில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழக பாதிரியாரை மத்திய அரசு மீட்டு வந்தது. சவுதி இளவரசரிடம் பேசி அங்குள்ள தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    பாகிஸ்தானிடம் சிக்கிய தமிழக விங் கமாண்டர் அபிநந்தன் இரண்டு நாட்களிலேயே எப்படி மீட்கப்பட்டார் என்பது உலகிற்கே தெரியும். உலகில் தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் மத்திய அரசு ஓடோடி செல்கிறது.

    இந்தியாவை பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி முனையமாக்குவது எங்கள் லட்சியம். எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்காக வலிமையான நாட்டையும், ராணுவத்தையும் விரும்பவில்லை.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் முடிவுகளை மக்கள்தான் எடுக்கிறார்கள். காங்கிரசால் மாநில நலன்களைப் பூர்த்தி செய்யமுடியாது. ஏனென்றால் அவர்களுக்கு குடும்பமே முக்கியம்.

    காங்கிரஸ் வலிமை மிக்க மாநில தலைவர்களை அவமானப்படுத்துகிறது. காங்கிரசால் காமாராஜர் எப்படி அவமானப்படுத்தப்பட்டார் என்பதை தமிழகம் மறக்காது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அரசை கலைத்தது காங்கிரஸ் கட்சிதான். அரசியலுக்காக மாநில அரசை கலைத்ததும் காங்கிரஸ்.

    ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும், மூச்சையும் 130 கோடி மக்களுக்காக செலவிட விரும்புகிறேன். ஊழல்களை களைவதில் எந்த சமரசமும் கிடையாது.

    எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கலப்பட கூட்டணியிடம் அவர்களது தலைமை யார்? அவர்களது நோக்கம் என்ன? திட்டம் என்ன? என்பதை மக்கள் கேட்க வேண்டும்.

    உங்களுடைய கனவுகளை நனவாக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாய்ப்பு கொடுங்கள். நாளை நமதே... நாற்பதும் நமதே என தெரிவித்துள்ளார். #Kilambakkam #ADMKAlliance #Election2019 #PMModi
    காஞ்சிபுரத்தின் கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தீயசக்திகளை அழிக்கவே அதிமுக வெற்றி கூட்டணியை அமைத்துள்ளது என தெரிவித்துள்ளார். #Kilambakkam #ADMKAlliance #Election2019 #PMModi #OPanneerselvam
    சென்னை:

    சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

    தீயசக்திகளை அழிக்கவே அதிமுக வெற்றி கூட்டணியை அமைத்துள்ளது. சென்னையில் ராகுல் காந்தியை பிரதமர் என கூறிய ஸ்டாலினுக்கு கொல்கத்தாவில் அதை சொல்ல தைரியமில்லை.

    யார் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க தைரியம் இல்லாத ஸ்டாலின் அதிமுக கூட்டணியை விமர்சிக்கிறார். நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என நாடே சொல்கிறது. #Kilambakkam #ADMKAlliance #Election2019 #PMModi #OPanneerselvam
    பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக அதிமுக மற்றும் பாஜகவுடனான பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்தார். #LSPolls #Vijayakanth #DMDK #ADMK
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு இடமும், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சிக்கு ஒரு இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாகவே இருந்தது.

    பாமகவுக்கு கொடுக்கப்பட்டது போல், 7 தொகுதிகளை ஒதுக்கும்படி தேமுதிக வலியுறுத்தியது. இதனை அதிமுக ஏற்கவில்லை. இதனால் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நீண்டது.

    விஜயகாந்தின் மனதை மாற்றி எப்படியாவது கூட்டணிக்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க., பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டினர். நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், விஜயகாந்தை திடீரென சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்துக்கு நேரடியாகவே அழைப்பு விடுக்கப்பட்டது.

    எனவே, பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருவதற்கு முன்பாக, தேமுதிக கூட்டணிக்கு வருவது இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சென்னை வந்த மத்திய மந்திரி பியூஷ் கோயலும் தெரிவித்தார்.  கூட்டணி விவகாரத்தில் ஆச்சரியங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.

    ஆனாலும், தொகுதிகள் ஒதுக்கீட்டில் இழுபறி நீடித்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்து, கூட்டணி தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். அதேசமயம், தேமுதிகவுக்கு  2 தனித் தொகுதிகள் உள்பட 4 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்திருப்பதாகவும், இதனால் தேமுதிக அதிருப்தியில் இருப்பதாகவும் செய்தி வெளியானது.

    இந்த பரபரப்பான தருணத்தில், கூட்டணி தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் இறுதிக்கட்ட ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை முடிந்ததும் அவர் எந்த தகவலையும் வெளியிடாமல் புறப்பட்டுச் சென்றுவிட்டார். எனவே, அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.


    ஆனால், கூட்டணிக்கு தேமுதிக வருவதை துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உறுதி செய்தார். அத்துடன், தேமுதிக நிர்வாகிகள் அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு வரவுள்ளதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் அதிமுக அணியில் தேமுதிக இணைவது உறுதியானது.

    இது ஒருபுறமிருக்க, கூட்டணி தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. சென்னை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் மத்திய மந்திரி பியூஷ் கோயலை அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் சிறிது நேரத்தில் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ், அங்கு வந்து ஆலோசனையில் கலந்துகொண்டார். இந்த ஆலோசனையின்போது உறுதியான முடிவு எட்டப்படவில்லை.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், ‘அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும்’ என்று கூறினார்.

    “மத்திய மந்திரி பியூஷ் கோயல் நேற்று இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை சந்திக்குமாறு பேசினார். அதன் அடிப்படையில் இன்று அவரை சந்தித்து பேசினேன்.  பாஜகவுடன் கூட்டணி என்கிற முடிவை தலைவர் எடுத்தார். அதன்படி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    தற்போது சென்னையில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பியூஸ் கோயல் செல்வதால் மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும். தேமுதிகவின் பலத்தின் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எங்கள் கட்சியின் பலம் எங்களுக்குத்தான் தெரியும், எங்கள் தேவையை தெரிவித்துள்ளோம். நாளை அல்லது நாளை மறுநாள் கூட்டணி இறுதியாகலாம்.  தமிழகத்தில் அடுத்த முறை பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பார்” என சுதீஷ் தெரிவித்தார். #LSPolls #Vijayakanth #DMDK #ADMK
    தேமுதிக நிர்வாகிகள் சிலர் இன்று தன்னை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசியதாகவும், திமுகவில் சீட் இல்லை என்று கூறி அனுப்பியதாகவும் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார். #DMDK #DMK #DuraiMurugan
    சென்னை:

    சென்னை கோட்டூர்புரத்தில் இன்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுடன் தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்ட சிலர் சந்தித்து பேசினர்.

    தனது இல்லத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள் சந்தித்தது பற்றி தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.

    தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க. நிர்வாகிகள் வந்தனர். அ.தி.மு.க. கூட்டணியில் சேர விருப்பமில்லை என தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். முதலில் சுதீஷ் தொலைபேசியில் பேசி திமுக கூட்டணியில் சேர விரும்புவதாக தெரிவித்தார். அதிமுக கூட்டணியிலிருந்து விலகி திமுக அணிக்கு வர விரும்புவதாக சுதீஷ் கூறினார்.

    தே.மு.தி.க. இணைந்தால் கொடுப்பதற்கு எங்களிடம் போதிய சீட் இல்லை தருவதற்கு, மன்னிக்கவும் என சுதீஷிடம் கூறிவிட்டேன். அ.தி.மு.க. உடனான தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏதோ தவறு இருக்கிறது.



    நேரில் சந்தித்தவர்களிடமும் தெளிவாகக் கூறிவிட்டோம். கூட்டணியில் தேமுதிகவை இணைப்பது பற்றி ஸ்டாலின் தான் முடிவு செய்வார். தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டணிக்கு வருவதாக விருப்பம் தெரிவித்தது பற்றி ஸ்டாலினிடம் பேசுவேன். திமுக கூட்டணியில் இணைய தேமுதிக தொடர்ந்து முயற்சி செய்தால் பரிசீலிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே தனிப்பட்ட காரணங்களுக்காக துரைமுருகனை சந்தித்ததாக இளங்கோவன் தெரிவித்தார்.  #DMDK #DMK #DuraiMurugan
    அரசு விழா மற்றும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோர் வரவேற்றனர். #Modiinchennai
    சென்னை:

    சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் இன்று மாலை அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இது தவிர அரசு திட்டங்கள் தொடக்க விழாவும் நடைபெறுகிறது. அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக மற்றொரு மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவரை, கவர்னர் பன்வாரிலால் புரோகித் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த வரவேற்பைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு மோடி புறப்பட்டு சென்றார். முதலில் அரசு விழா நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மத்திய அரசு நிறைவேற்றி உள்ள பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

    விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்கின்றனர். #ModiInChennai
    அகில பாரத இந்து மகா சபா கட்சியின் ஆதரவை அ.தி.மு.க தலைமையிலான பா.ஜ.க கூட்டணிக்கு அளிப்பது என்று நிர்வாகிகள் ஆலோசன் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. #LSPolls
    ஈரோடு:

    அகில பாரத இந்து மகா சபா கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு கட்சியின் மாநிலத்தலைவர் சுபாஸ் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கங்காதரன் முன்னிலை வகித்ததார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறும்.

    அகில பாரத இந்து மகா சபா கட்சியின் ஆதரவை அ.தி.மு.க தலைமையிலான பா.ஜ.க கூட்டணிக்கு அளிப்பது எனவும், கூட்டணியின் வெற்றிக்கு தமிழகம் முழுவதும் கட்சியின் சார்பாக தேர்தல் பணிகளை செய்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.

    கூட்டணியின் ஆதரவு குறித்து ஆதரவு கடிதத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கட்சி நிர்வாகிகளுடன் நேரில் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    கூட்டணி வெற்றிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டணியின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் தேர்தல் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள், தெருமுனை கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் தஞ்சை.இளையராஜா, மாநில இளைஞரணி தலைவர் சிவக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் ரஜினி செந்தில், மாநில மாணவரணி தலைவர் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40 ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
    அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க முன்வந்திருப்பதாகவும்,இதனால் தேமுதிக அதிருப்தி அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #LSPolls #Vijayakanth #DMDK #ADMK
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு இடமும், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சிக்கு ஒரு இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 15 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு அ.தி.மு.க. விட்டுக் கொடுத்துள்ளது. இன்னும் 25 தொகுதிகள் மட்டுமே மிச்சமிருக்கிறது. ஆனால் தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாகவே இருந்தது. பாமகவுக்கு கொடுக்கப்பட்டதுபோல், 7 தொகுதிகளை கண்டிப்பாக ஒதுக்கும்படி தேமுதிக கூறியது. இதனை அதிமுக ஏற்கவில்லை. இதனால் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நீண்டது.



    விஜயகாந்தின் மனதை மாற்றி எப்படியாவது கூட்டணிக்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க., பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டினர். நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், விஜயகாந்தை திடீரென சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்துக்கு நேரடியாகவே அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே, பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வரும்போது, தேமுதிக கூட்டணிக்கு வருவது உறுதி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

    இதனை உறுதி செய்யும் வகையில் மத்திய மந்திரி பியுஷ் கோயலின் பதிலும் அமைந்தது. ஆச்சரியங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.  தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்து, கூட்டணி தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளை மட்டுமே அதிமுக ஒதுக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 2 தனித் தொகுதிகள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

    தனித் தொகுதிகளை ஏற்க தேமுதிக தயங்குவதே இழுபறிக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக பாமக வலுவாக உள்ள தொகுதிகளை தேமுதிக தவிர்ப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. 

    அதிமுகவின் முடிவால் தேமுதிக தலைமை அதிருப்தி அடைந்துள்ளது. தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது, அதிமுக கொடுக்கும் 4 தொகுதிகளை பெறுவதை விட தனித்தே நிற்கலாம் என சில நிர்வாகிகள் யோசனை கூறியதாகத் தெரிகிறது. 

    தொடர்ந்து இழுபறி நீடிப்பதால், கூட்டணிக்கான வாய்ப்பு மங்கி வருகிறது. அதிமுக கூட்டணியில் இணைவதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது தொடர்பாக விரைவில் தேமுதிக தலைமை அறிவிக்கும். #LSPolls #Vijayakanth #DMDK #ADMK
    ×