என் மலர்
தூத்துக்குடி
- சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது.
- மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதி காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடைபெற்றது.
காலை 10.30 மணிக்கு 'சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது.
கோவில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மீகச் சொற்பொழிவு, காலை 10.30 மணிக்கு பொது விவரக் குறிப்பேடு வெளியிடப்பட்டது. மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

தமிழ் புத்தாண்டு மற்றும் விடுமுறை தினம் என்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் குவிந்தனர்.

அவர்கள் காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று தமிழ் புத்தாண்டு தினம் என்பதால் சுமார் 5 மணிநேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் தரிசனம் செய்ய முடிந்தது. திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் மற்றும் வாகன மிகுதியால் போக்குவரத்து ஸ்தம்பித்து.
- கடந்த தேர்தலின்போது 3.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றார்.
- சிலிண்டரின் விலையை குறைப்பதாக பா.ஜ.க. நாடகமாடி வருகிறது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்செந்தூரில் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியா கூட்டணியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அத்தை கனிமொழி எம்.பி.க்கு வாக்கு கேட்டு இங்கு வந்தேன். ஆனால் இங்கு வந்த பிறகு உங்களது எழுச்சியை பார்க்கும்போது தேர்தல் முடிந்து 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி எம்.பி. வெற்றி பெறபோவது இப்போதே தெரிகிறது.
இதே எழுச்சியோடும், உணர்வோடும் வருகிற 4 நாட்களும் நீங்கள் கடுமையாக பிரசாரம் செய்ய வேண்டும். வருகிற 19-ந் தேதி தேர்தல் நாள் அன்று வாக்குப்பதிவு எந்திரத்தில் முதலாவததாக இடம் பெற்றுள்ள நமது வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் தேர்தலில் மோடிக்கு வைக்கும் வேட்டு ஆகும். கடந்த தேர்தலின்போது 3.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை இருமடங்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் மொழி உரிமை, கல்வி உரிமை, நிதி உரிமைகளை ஒன்றிய அரசு முழுவதும் பறித்து விட்டது. அதனை மீண்டும் பெற இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ரூ.100 கோடியில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.1000 கோடியில் பர்னிச்சர் பூங்கா, ரூ.29 கோடியில் அலுமினிய பூங்கா தொடங்கப்பட்டுள்ளது. ரூ.30 கோடியில் மினி டைட்டல் பூங்கா பணிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மேலும் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அனல் மின் நிலைய பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உங்கள் தொகுதி எம்.பி. கனிமொழி முயற்சியால் கொண்டு வரப்பட்டது.மேலும் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி மருதூர் அணைக்கட்டு முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளும் பலப்படுத்தப்படும். உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் செய்தபடி ரூ.850 கோடி மதிப்பீட்டில் பெரு வளர்ச்சி திட்டம் அமல்படுத்தப்படும்.

திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூரில் நவீன வசதிகளுடன் கூடிய மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அந்த துறைக்கு நான்தான் அமைச்சர். எனவே நிச்சயமாக அந்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி தருவேன்.
2014-ம் ஆண்டு ரூ.400-க்கு விற்கப்பட்ட கியாஸ் சிலிண்டர் விலை இப்போது ரூ.1200-க்கு விற்கப்படுகிறது. ரூ.800-யை உயர்த்தி விட்டு தேர்தல் நேரத்தில் பெயர் அளவுக்கு ரூ.100-யை பிரதமர் மோடி குறைத்துள்ளார்.தற்போது சிலிண்டரின் விலையை குறைப்பதாக பா.ஜ.க. நாடகமாடி வருகிறது.
ஆனால் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும்.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75-ம், டீசல் லிட்டருக்கு ரூ.65-ற்கும் விற்கப்படும்.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும். இதனால் நீங்கள் ஒன்றிய அரசுக்கு செலுத்த வேண்டிய வரித்தொகை இனி செலுத்த தேவையில்லை. எனவே மாநில உரிமைகளை மீட்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
தமிழ்நாட்டு மக்கள் சுயமரியாதை மிக்கவர்கள். எனவே நீங்கள் தேர்தல் மூலம் மானமிகு சுயமரியாதை உள்ள ஒருவரை தேர்வு செய்ய இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
இரக்கமற்ற சர்வாதிகாரி பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் கடந்த 2010-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டாலும் அப்போதைய முதல்-அமைச்சர் கலைஞர் கவுன்சிலிங் முறையில் மருத்துவப்படிப்பு சேர்க்கையை நடத்தினர்.இதன் மூலம் ஏராளமான ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பை பெற்றனர்.
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலத்திலும் தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நீட் தேர்வு நுழைந்தது. இதனால் அரியலூர் அனிதா முதல் குரோம்பேட்டை ஜெகதீசன் வரை இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
தமிழ்நாட்டு மக்கள் ஜி.எஸ்.டி.யில் செலுத்தும் ஒரு ரூபாய்க்கு ஒன்றிய அரசு 29 பைசாவை மட்டுமே திருப்பி தருகிறது. ஆனால் பா.ஜ.க. ஆளும் உத்தரபிரதேசத்திற்கு 3 ரூபாயும், பீகாருக்கு 7 ரூபாயும் திருப்பி வழங்குகிறது. ஆனால் கடுமையான நிதி நெருக்கடியிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
விடியல் பயணம் மூலம் தமிழகம் முழுவதும் இலவச பஸ்களில் பெண்கள் இதுவரை 460 கோடி முறை பயணம் செய்துள்ளனர். தூத்துக்குடியில் மட்டும் 6 கோடி முறை பயணம் செய்துள்ளனர்.
அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி பெற மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. மாநில முழுவதும் 3 லட்சம் பேர் பயன்பெறும் நிலையில் தூத்துக்குடியில் 3 ஆயிரம் மாணவிகள் இந்த திட்டத்தில் பயன் பெறுகின்றனர்.
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 31 ஆயிரம் அரசு பள்ளிகளை சேர்ந்த 18 லட்சம் மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனர். இதேபோல் எதிர்கட்சிகள் நடக்கவே நடக்காது, செய்யவே முடியாது என்று கூறிய கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கடும் நிதி நெருக்கடியிலும் செயல்படுத்தி உள்ளோம். இத்திட்டத்திற்காக 1 கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் 1 கோடியே 18 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த துறைக்கு நான்தான் அமைச்சர். நான் கூறுகிறேன் தேர்தல் முடிந்த பிறகு தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் 100 சதவீதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
கொரோனா காலத்தில் மக்களை காப்பாற்றாமல் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கூறியவர் பிரதமர் மோடி. இதேபோல் கடும் வெள்ளப் பாதிப்பின் போது நெல்லை, தூத்துக்குடி மக்களை நேரில் சந்திக்க ஒருமுறை கூட பிரதமர் மோடி வரவில்லை. ஆனால் உங்கள் தொகுதி எம்.பி. கனிமொழி 2 மாதங்கள் இங்கேயே தங்கி இருந்து வீட்டுக்கு வீடு நலத்திட்டங்கள் வழங்கி அவர்கள் சகஜ நிலைக்கு திரும்பும் வரை மக்களுடன் இருந்தார்.
முதல்-அமைச்சர் நெல்லை, தூத்துக்குடிக்கு 10 அமைச்சர்களை அனுப்பி நிவாரண பணிகளை முடுக்கிவிட்டார். நெல்லை, தூத்துக்குடிக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கிய ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. எனவே வருகிற தேர்தலில் இந்தியா கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
கனிமொழி எம்.பி. தமிழ்நாட்டிலேயே முதலாவதாக தூத்துக்குடியில் 6 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த ஆண்டு ரூ.20-க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
- போராட்டம் வருகிற 22-ந் தேதி வரை நடைபெறும் என நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கோவில்பட்டி:
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டியில் 90 சதவீதம் தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டகளில் அதிகளவு தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த தொழிலை நம்பி 4 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக தீப்பெட்டி தொழிலுக்கு பிரச்சினை வந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டர்கள் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஒரு சிகரெட் லைட்டர் விற்பனை 20 தீப்பெட்டி விற்பனையை தடை செய்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு ரூ.20-க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இருந்த போதிலும் சீனாவில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்கு பிளாஸ்டிக் லைட்டர்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ரூ.8 முதல் ரூ.10 வரை பிளாஸ்டிக் லைட்டர்கள் விற்பனை செய்யப்படும் நிலை இருப்பதால் தீப்பெட்டி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலகோடி ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன.
இந்நிலையில் இதனை கண்டித்து இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இந்த போராட்டம் வருகிற 22-ந் தேதி வரை நடைபெறும் என நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதனால் பகுதி மற்றும் முழு எந்திரம் என சுமார் 700 தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளது மட்டுமின்றி, 4 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழக்கும் நிலை ஏற்படும். மேலும் நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடி தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உள்ளது.
இது குறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் கூறுகையில், இந்த தொழில் நலிந்து போவதற்கு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்கள் ஒரு காரணமாக இருக்கும். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும் அதிகாரிகள் லைட்டர்கள ஒழிக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தீப்பெட்டி உற்பத்தி, விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்க முடியாத நிலை இருப்பதால் 10 நாட்கள் தீப்பெட்டி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
- காலை 8.30 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரியும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடக்கிறது.
- 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.
4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது.
காலை 8.30 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரியும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடக்கிறது.
காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகம் தொடர்ந்து உச்சிகால தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.
கோவில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மீகச் சொற்பொழிவு நடக்கிறது. காலை 10.30 மணிக்கு பொது விவரக்குறிப்பேடு வெளியிடப்படுகிறது.
மாலை 3 மணிக்கு இந்து தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- பணத்தை பறிமுதல் செய்து விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
விளாத்திகுளம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி விளாத்திகுளத்தை அடுத்து சின்னவநாயக்கன்பட்டியில் தனியார் மில் அருகே இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.இதில் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி ரூ.60ஆயிரத்து 50 கொண்டு சென்றது தெரிய வந்தது.மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் விருதுநகர் மாவட்டம், ராஜீவ்காந்திபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் விக்ரம் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
- தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
- சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நனைந்தபடியே சென்றனர்.
ஸ்ரீவைகுண்டம்:
தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 5 தினங்களுக்கு பல்வேறு இடங்களில் பலத்த மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
தூத்துக்குடியில் இன்று காலையில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதே போல ஏரல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காலை முதலே மிதமான மழை பெய்தது.
இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நனைந்தபடியே சென்றனர். கார்களில் சென்றவர்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.
தொடர்ந்து கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், ஏரல் பகுதியில் இன்று சுமார் 1 மணி நேரமாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கோவில்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை போனது.
- மீண்டும் அரசு அதிகாரி வீட்டில் ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் சிங்கராஜ். இவர் கயத்தாரில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாமா. இவர்களுக்கு மனோகரன் என்ற மகனும், சரவணசெல்வி என்ற மகளும் உள்ளனர். மனோகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சரவணசெல்விக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பாமா, அவரது மகன் மனோகரன் ஆகிய இருவரும் சரவணசெல்வியை பார்ப்பதற்காக சென்னை சென்றனர். நேற்று காலையில் சிங்கராஜ் பணிக்கு சென்றுவிட்டார். நேற்று இரவு வேலை முடிந்து சிங்கராஜ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 48 லட்சம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து சிங்கராஜ் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ்ஆனந்த மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
அப்போது சிங்கராஜ் வேலைக்கு சென்றதையும், அவரது குடும்பத்தினர் சென்னை சென்றதையும் நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.
பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை மோப்பம் பிடித்தது. போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவில்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை போனது. இந்நிலையில் மீண்டும் அரசு அதிகாரி வீட்டில் ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பா.ஜ.க. எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரானது.
- இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் ரூ.500-க்கு வழங்கப்படும்.
திருச்செந்தூர்:
தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் இன்று பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-
சிறுபான்மை மக்களுடன் எப்போதும் இருக்க கூடிய கட்சிகள், அவர்களுக்காக பாடுபடக்கூடிய கட்சிகள் இந்தியா கூட்டணி இடம்பெற்றுள்ள கட்சிகளாகும். பா.ஜ.க. எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரானது.
தேவையில்லாத சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மையினருக்கு பல்வேறு கஷ்டங்களை கொடுத்தது பா.ஜ.க. ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மாநாட்டில் மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்க முடியாது. எனவே இந்தியா கூட்டணிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் ரூ.500-க்கு வழங்கப்படும்.
பெட்ரோல் ரூ.75-க்கு விற்கப்படும். இன்னும் பல்வேறு சலுகைகள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவாறு நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தல் பறக்கும் படை அலுவலர் தலைமையிலான அலுவலர்கள், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
- 14 அட்டைப்பெட்டிகளில் மூடப்பட்ட நிலையில் பொருட்கள் இருந்தன.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட, 5.88 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நாணயங்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் வரும், 19ல், லோக்சபா தேர்தல் நடக்கிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் பட்டுவாடாவை தவிர்க்கும் வகையில், 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணம், பொருட்கள் எடுத்து செல்லப்படுவதை தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் 11:30 மணியளவில், காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., அலுவலகம் எதிரில் கிருஷ்ணகிரி தர்மபுரி சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையிலான அலுவலர்கள், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த க்யூரல் கூரியர் நிறுவன பிக்கப் வேனை மடக்கி சோதனையிட்டனர். அதில், 14 அட்டைப்பெட்டிகளில் மூடப்பட்ட நிலையில் பொருட்கள் இருந்தன. இது குறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, அதில் காவேரிப்பட்டணம், திருப்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜூவல்லரிகளுக்கு ஓசூர், சிப்காட்டில் உள்ள டைட்டான் ஜூவல்லர்ஸிலிருந்து தங்க நாணயங்கள் எடுத்து செல்வதாக கூறியுள்ளனர். ஆனால் அதற்கான பில்கள் உள்பட உரிய ஆவணங்கள் இல்லை.
அவர்கள் கையில் வைத்திருந்த டெலிவரி ஆர்டர்களில் மட்டும், எடுத்து செல்லப்படும் தங்கத்தின் மதிப்பு, 5 கோடியே, 88 லட்சத்து, 14 ஆயிரம் ரூபாய் என இருந்தது. உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பாபுவிடம் ஒப்பட்டைத்தனர். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு கூடுதலாக இருப்பதால், சம்பந்தப்பட்டவர்கள், உரிய பில்கள், ஆவணங்களுடன் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்து அவர்களது பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் கூறினர்.
- விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.
- கோவில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். திருச்செந்தூர் கோவிலுக்கு அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வாரவிடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே காணப்படும். அதே போல இன்று வாரவிடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர்.

இதற்காக பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வழி என அனைத்திலும் வரிசையில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
- திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வசந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
- சுவாமி தங்க தேரில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவில் சேர்கிறார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை வசந்த திருவிழா வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வசந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு சித்திரை வசந்த திருவிழா வருகிற 14-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
விழா நாட்களில் கோவில் நடை வழக்கம்போல் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வ ரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
மதியம் உச்சிகால பூஜையை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரத்தில் ராஜகோபுர வாசல் எதிரே உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வார்.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தங்க சப்பரத்தில் எழுந்தருளி, மேளதாளம் முழங்க, பக்தர்கள் கப்பல் பாடல்கள் பாடி வசந்த மண்டபத்தை 11 முறை சுவாமி சுற்றி வலம் வந்து தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி தங்க தேரில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவில் சேர்கிறார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை கீழ ஈரால் அருகே உள்ள எத்திலப்பன் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் பிரபாகரன் (வயது 28). 108 ஆம்புலன்ஸ் டிரைவர்.
இவருக்கும் கயத்தாறு வடக்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த தாவீது என்ற குருசாமி மகள் லாவண்யாவுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்டு லாவண்யா தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று முன்தினம் கயத்தாறில் கோவில் கொடை விழா நடைபெற்றுள்ளது.இதற்காக பிரபாகரன் மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மனைவி மற்றும் குழந்தைகளை தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
இதனால் அவருக்கும் அவரது மாமனார் குரு சாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த குருசாமி மற்றும் அவரது மகன்கள் மாரியப்பன்(30), சோலையப்பன்(28) ஆகிய 3 பேரும் சேர்ந்து பிரபாகரனை சரமாரியாக அடித்து தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பிரபாகரன் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த கயத்தாறு இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ் பெக்டர் தமிழ்செல்வன் ஆகியோர் குருசாமி மற்றும் அவரது மகன்கள் மாரியப்பன், சோலையப்பன் ஆகியோரை கைது செய்த னர்.






