search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்செந்தூர் கோவிலில் சித்திரை வசந்த திருவிழா 14-ந்தேதி தொடங்குகிறது
    X

    திருச்செந்தூர் கோவிலில் சித்திரை வசந்த திருவிழா 14-ந்தேதி தொடங்குகிறது

    • திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வசந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • சுவாமி தங்க தேரில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவில் சேர்கிறார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை வசந்த திருவிழா வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.

    இதுகுறித்து கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வசந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு சித்திரை வசந்த திருவிழா வருகிற 14-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    விழா நாட்களில் கோவில் நடை வழக்கம்போல் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வ ரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    மதியம் உச்சிகால பூஜையை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரத்தில் ராஜகோபுர வாசல் எதிரே உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வார்.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தங்க சப்பரத்தில் எழுந்தருளி, மேளதாளம் முழங்க, பக்தர்கள் கப்பல் பாடல்கள் பாடி வசந்த மண்டபத்தை 11 முறை சுவாமி சுற்றி வலம் வந்து தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி தங்க தேரில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவில் சேர்கிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×