என் மலர்
புதுக்கோட்டை

அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே தண்டலை கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு எப்போதாவது மட்டுமே பக்தர்கள் சென்று வழிபடுவார்கள். மீதி நேரம் பூட்டியே கிடக்கும்.
இந்நிலையில் நேற்று அந்த கோவில் வழியாக விவசாயிகள் சிலர் சென்றனர். அப்போது கோவில் வளாகத்தில் இருந்து கடும் துர்நாற்றம் வந்தது. இதையடுத்து கோவிலுக்கு சென்று பார்த்த போது 60 வயது மதிக்கத்தக்க 2 பேர் இறந்து கிடந்தனர். அதிர்ச்சியடைந்த விவசாயிகள் இது குறித்து உடனடியாக மணமேல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கோட்டைப்பட்டினம் போலீஸ் டி.எஸ்.பி. காமராஜ், மணமேல்குடி இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது இறந்து கிடந்தவர்களில் ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம் குளக்குடியை சேர்ந்த செல்லக்கண்ணு (வயது 60) என்பதும் மற்றொருவர் புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைகாடு பகுதியை சேர்ந்த அடைக்கலம் (60) என்பதும் தெரியவந்தது. அவர்களது உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன. மேலும் உடல் பாதி அழுகிய நிலையில் இருந்தது.
இதனால் அவர்கள் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிகிறது. உடல் அருகே உருட்டு கட்டைகள் மற்றும் கற்கள் கிடந்தது. இதனால் மர்மநபர்கள் அவர்களை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல் களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
செல்லக்கண்ணு, அடைக்கலம் இருவரும் மூங்கில் கூடை முடைந்து விற்பனை செய்து வந்த தோடு, கன்னிவலை விரித்து வைத்து உடும்பு, முயல்கள் ஆகியவற்றை பிடித்து வந்துள்ளனர். இந்த பிரச்சினையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதில் இறந்தனரா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அய்யனார் கோவில் அருகே ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தற்போது 2 பேர் கொலை செய்யப்பட்டு கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 27). இவரது மனைவி சரண்யா (25). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சரண்யா புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சரண்யா, அறந்தாங்கியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு குழந்தையுடன் சென்று விட்டார். அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார்.
இன்று காலை அவர் அலுவலகத்திற்கு சென்றதும், அங்கிருந்த பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு உதயகுமார் அரிவாளுடன் வந்தார். அவரை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சரண்யா அங்கிருந்து தப்பிக்க முயன்றார். இருப்பினும் உதயகுமார் ஆத்திரத்தில் சரண்யாவை மடக்கி பிடித்து அரிவாளால் சரமாரி வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார் .
இதில் சரண்யாவின் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. காலை நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சரண்யாவை அப்பகுதி பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் உதயகுமார், சரண்யாவை வெட்டினாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி உதயகுமாரை தேடி வருகின்றனர்.
அரிவாள் வெட்டில் காயமடைந்த சரண்யாவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்ட போது எடுத்தப்படம்.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதவாத பா.ஜ.க.விற்கு சரியான பாடத்தை ஆர்.கே. நகர் மக்கள் கற்று கொடுத்துள்ளனர். மேலும் மத்திய அரசிற்கு அடிமைகளாக இருக்கும் அ.தி.மு.க.விற்கும் சரியான பாடத்தை அளித்துள்ளனர். மத்திய அரசிற்கு கொத்தடிமைகளாக செயல்படும் தமிழக அரசை மக்கள் விரும்பவில்லை என்பதையே தேர்தல் முடிவு காட்டுகிறது.
அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிரிந்து நின்ற போதிலும் அது தி.மு.க. கூட்டணிக்குத்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாக்குகள் எங்கே போனது என்பதை கூட்டணி கட்சிகள் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்கு பணப்பட்டுவாடா ஒரு காரணம். மற்றொரு காரணம் குறித்து ஆய்வு செய்வதற்கு தி.மு.க. குழு அமைத்துள்ளது. அதே போன்று காங்கிரஸ் கட்சி சார்பிலும் மாநிலத் துணைத்தலைவர் தாமோதரன் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு 4 நாட்களுக்குள் அறிக்கையை அளிக்கும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு ஜெயலலிதாவிற்கு பிறகு அ.தி.மு.க. தலைமை என்பது தினகரனுக்குத்தான் என்பதை அ.தி.மு.க. தொண்டர்களும் மக்களும் முடிவு செய்து விட்டார்கள் என்பதையே காட்டுகிறது.
இனி அ.தி.மு.க.வில் இருந்து பலர் விலகி தினகரன் அணிக்கு வரலாம். இதனால் ஆட்சி கவிழலாம். எத்தனை காலம் இந்த ஆட்சி இருக்கும் என்று தெரியாது.
காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ந்தேதி கன்னியாகுமரியிலிருந்து எனது தலைமையில் ரத யாத்திரை தொடங்கி அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளோம். ஒன்றரை மாதம் நடக்கும் ரத யாத்திரையில் மக்களை சந்தித்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த உள்ளோம்.
வரும் உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். கூட்டணியில் அதிக இடங்களை நிச்சயம் காங்கிரஸ் கட்சி கேட்கும். இறுதியில் கொடுக்கின்ற தொகுதிகளை பெற்றுக்கொள்வோம். ரஜினி ,கமல் மட்டுமல்ல அனைவரும் கட்சி தொடங்கலாம். ஆனால் அவர்கள் சீக்கிரம் கட்சி தொடங்கினால் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை,டிச.22-
புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு குறித்த கருத்த ரங்கம் மாவட்ட கலெக் டர் கணேஷ் தலைமை யில் நடைபெற்றது.கருத்தரங்கில் கலெக்டர் பேசியதாவது:
இந்தியாவில் வருங்கால சிறந்த குடிமகன்களை உருவாக்குவது ஆசிரியர்கள் ஆவர். எனவே சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து மாணவர்களிடையே விளக்கமாக எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வருங்கால ஆசிரியர்களாகிய கல்வியியல் கல்லூரி மாணவர் களிடையே சாலைப் பாதுகாப்பு விழிப்பு ணர்வு கருத்தரங்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்படும் பல்வேறு சாலை விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணம் அடிப்படை சாலை விதிகள் குறித்த விழிப்பு ணர்வு இல்லாததே ஆகும்.
புதுக்கோட்டை மாவட்ட த்தில் வருடத்திற்கு சராசரி யாக சுமார் 320 நபர்கள் சாலை விபத்து களினால் இறக்கிறார் கள். தமிழக த்தில் ஆண்டிற்கு சராசரி யாக 16,500 நபர்கள் சாலை விபத்துகளால் இறக்கி றார்கள். சாலை விபத்து களில் வாகன பழுது காரணமாக 5 சதவீதத்திற்கும் குறைவாகவே விபத்து ஏற்படுகிறது.இவ்வாறு ஏற்படும் விபத்துகளிலும் உயிரிழப்பு மிகக் குறைவு. மீதமுள்ள விபத்துகள் மற்றும் உயிரிழப்பு ஏற்படுவதற்கு கவனமின்மை, அலட்சியம், சாலை விதிகளை மதிக்கா மல் இருத்தல் போன்ற காரணங்க ளினால் ஏற்படு கிறது. இருசக்கர வாகனங் களினால் அதிக விபத்து ஏற்படு கிறது.
முக்கிய சாலைகளில் வாகன ங்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும். துணை சாலையில் இருந்து முக்கிய சாலைக்கு செல்லும் பொழுது வாகனத்தின் வேகத்தினை 0 வேகத்திற்கு கொண்டு வந்து வாகனத்தை நிறுத்தி சாலையின் இரு புறமும் பார்த்து செல்ல வேண்டும்.இத்தகைய விபத்து களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் 150 நபர்கள் இறந்துள்ளனர். வேகத்தடை, சிக்கனல் உள்ளிட்ட சாலை விதிகளை மதிக்க வேண்டும். வாகன ஓட்டிகள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
வாகன ஓட்டிகள் விபத்து தமக்கு ஏற்படாது என்ற எண்ணத்தை தவிர்த்து, சாலை விதிகளை கடைப் பிடிக்காமல் கவனமின்மை யாக இருந்தால் தமக்கும் விபத்து ஏற்படும் என்பதை உணரவேண்டும். இத்தகைய விழிப்புணர்வின் மூலம் விபத்தை தடுக்கலாம். எனவே பொது மக்கள் அனைவரும் சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி களப்பக்காடு சிலோன் காலணியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது24). கூலி தொழிலாளி. இவரது பெற்றோர் இறந்து விட்டனர். இதனால் அவர் அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனிமையில் குடியிருந்து வந்தார்.
இந்த நிலையில் சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்த மாரியப்பன், கடந்த 20-ந் தேதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






