என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை அருகே குடும்ப தகராறில் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கீழ்வேளூர்:

    நாகை வெளிப்பாளையம் வாய்க்காங்கரை தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 40). இவர் நாகையில் உள்ள ஒரு கடையில் டெய்லராக வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி அஜந்தா (வயது 33) இவர்களுக்கு ஹரிசங்கரன் (13), வசந்தகுமார் (11) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    ஹரிசங்கரன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பும், வசந்தகுமார் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் முருகானந்ததுக்கும் அஜந்தாவுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு குடும்ப தகராறு ஏற்பட்டது. மேலும் இரு மகன்களையும் வேறொரு பள்ளியில் சேர்ப்பது குறித்தும் இருவருக்கும் இடையே கருத்து ஏற்பாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று முருகானந்தம் வழக்கம்போல் வேலை முடிந்து இரவு 11 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

    நீண்ட நேரமாக சத்தம் கொடுத்தும் மனைவி அஜந்தா கதவை திறக்காததால் அவர் சந்தேகம் அடைந்தார். இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மனைவியும், 2 மகன்களும் வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் உடனே மயங்கி கிடந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத் திரிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

    அப்போது ஹரிசங்கரன், வசந்தகுமார் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. மயங்கிய நிலையில் இருந்த அஜந்தாவை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் பற்றி நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வி‌ஷம் குடித்து பலியான ஹரிசங்கரன், வசந்தகுமார் ஆகியோர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    2 மகன்களை கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு தமிழகத்துக்கு காவிரி நீர் விரைவில் கிடைக்கும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியுள்ளார்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் மேலவீதியில் அ.தி.மு.க சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் செல்லையன், ஒன்றிய செய லாளர்கள் ராஜமாணிக்கம், ஜெயராமன், நகர செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் கழக செயலாளர் போகர்ரவி வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயபால், தலைமை கழக பேச்சாளர் நல்லாற்று நடராசன், எம்.எல்.ஏ.க்கள் பாரதி, பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முன்னதாக மாவட்ட செயலாளரும் , தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் மே தினம் உழைக்கும் மக்களின் நினைவை போற்றும் வகையில் கொண்டாடப் பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர் தி.மு.க. வை விட்டு பிரிந்து அண்ணா திமுக என்ற பெயரில் தனி கட்சி தொடங்கிய போது சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள், ஒட்டுனர்கள், உழைக்கும் வர்க்கத்தினர் தான் எம்.ஜி.ஆருக்கு முதலில் ஆதரவு அளித்தனர். அன்று முதல் உழைக்கும் மக்களின் உயர்வை போற்றும் வகையில் அ.தி.மு.க சார்பில் ஆண்டுதோறும் மே தின பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    காவிரியை பற்றி பேச தி.மு.க. விற்கு எந்த தகுதியும் கிடையாது. காவிரி நீரை பற்றியும், காவிரி மேலாண்மை பற்றியும் பேச தகுதி உள்ள கட்சி அ.தி.மு.க மட்டும்தான். தற்பொழுது தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் பொதுமக்களிடம் தவறான பிரச்சாரம் செய்து வருகிறார்.இதை பொதுமக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள். விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு தமிழகத்திற்கு உரிய தண்ணீர் பெறப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ சக்தி, மாவட்ட பேரவை செயலாளர் நற்குணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகரன், மாவட்ட மீனவரணி செய லாளர் நாகரத்தினம், நகர பேரவை செயலாளர் மணி, கூட்டுறவு சங்க தலைவர்கள் அஞ்சம்மாள், பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே டிராக்டர் சக்கம் ஏறி பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தலைஞாயிறு:

    வேதாரண்யம் அடுத்த செட்டிபுலம் தியாகராஜபுரம் வீரமணி என்பவரது மனைவி கவிதா (வயது30). இவர்களுக்கு 2 பெண் குழந்தையும், 1 ஆண் குழந்தையும் உள்ளனர். வீரமணி மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கவிதா உறவினர் ஒருவருடன் வாரசந்தைக்கு காய்கறிகள் வாங்கி வர மொபட்டில் சென்றார். கரியாப்பட்டினம் கீழக்காடு என்கிற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ஜல்லி ஏற்றி சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டில் இருந்து கவிதா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் டிராக்டரின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே கவிதா பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கரியாப்பட்டினம் போலீசார் இறந்த கவிதாவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகை அருகே இட பிரச்சனை காரணமாக இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது மர்ம கும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி:

    நாகை அடுத்த சிக்கல் பகுதியை சேர்ந்தவர் ஆர்.பார்த்திபன். இவர் நாகை மாவட்ட இந்து மக்கள் கட்சியின் செயலாளராக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு நாகை அடுத்த பொரவாச்சேரி என்ற இடத்தில் பார்த்திபன், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 3-க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் திடீரென பார்த்திபனை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த உருட்டுக் கட்டையால் சரமாரியாக பார்த்திபனை தாக்கினர். இதில் பார்த்திபன் பலத்த காயமடைந்து நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    காயம் அடைந்த பார்த்திபன், நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பற்றி நாகை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில், இட பிரச்சினை காரணமாக பார்த்திபன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் சாமிநாதன் , நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்திபனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் கூறும் போது, பார்த்திபன் மீது தாக்குதல் நடத்திய மர்ம கும்பலை உடனடியாக போலீசார் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்றார்.

    தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மைத்துனருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர் ஆன அவரை பணிமாற்றம் செய்ததால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் திருவெண்காட்டை சேர்ந்தவர் டாக்டர் ராஜமூர்த்தி (வயது 55). இவர் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் ஆவார். இவர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 28 ஆண்டுகளாக டாக்டராக பணியாற்றி வருகிறார். 9 ஆண்டுகளாக செம்பனார்கோவில் வட்டார மருத்துவ அலுவலராக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சங்கத்திலும் பொறுப்பு வகித்து வருகிறார்.

    தற்போது ராஜமூர்த்தி ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராக பணியாற்றி வருகிறார். அவர் நேற்று பணியில் இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நிவேதா முருகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், அருட்செல்வம் மற்றும் கட்சியினர் ஆஸ்பத்திரிக்கு வந்து ராஜமூர்த்தியிடம் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

    பின்னர் ராஜமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு சென்றேன். அப்போது நாகை மாவட்ட சுகாதார பிரிவு துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து என்னை போனில் தொடர்பு கொண்டு உங்களை நாகைக்கு இடமாற்றம் செய்துள்ளோம். எனவே ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வெளியேறுங்கள் என்று கூறினர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நான், நான் எங்கே செல்வது, எனது இடத்திற்கு யார் வந்து பொறுப்பு ஏற்று கொள்ளபோகிறார் என்று கேட்டேன் அதற்கு துணை இயக்குனர் பார்த்துகொள்வார் என கூறினர். இந்த சம்பவத்தால் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த அக்டோபர் மாதம் ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலை புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட ஆளுங்கட்சியினர் தளவாட பொருட்கள் ஏன் கொண்டு வரவில்லை என்று பிரச்சனை செய்து என்னை பணி மாற்றம் செய்தனர். இதற்கு கோர்ட்டை அணுகி இடைகால தடை பெற்றேன் இருந்தபோதிலும் ஆளுங்கட்சியினர் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர். தற்போது இடமாற்றம் செய்து நாகை செல்லும் படி வற்புறுத்துகின்றனர். என்னை விருப்ப ஓய்வு பெற சொன்னால் அதை ஏற்று இருப்பேன். என் உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கு ஆளுங்கட்சியினர் தான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் ராஜமூர்த்தி மேல் சிகிச்சைக்காக சென்னை உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேதாரண்யத்தில் தண்டியாத்திரை நினைவு நாளையொட்டி அங்குள்ள நினைவு ஸ்தூபியில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள், பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உப்புசத்தியாகிரக 88-ம் ஆண்டு நினைவு நாளை யொட்டி அங்குள்ள நினைவு ஸ்தூபியில் காங்கிரஸ் கட்சியினர், மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் பொது மக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    வேதாரண்யம் வடக்குவீதியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவுகட்டிடத்திலிருந்து ஊர்வலமாக காங்கிரஸ் கட்சியினர், மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் பொதுமக்கள் அகஸ்தியன்பள்ளிக்கு சென்றனர். வேதாரண்யத்தில் இருந்து 5 கிலோமீட்டர் நடந்து ஊர்வலமாக சென்ற காங்கிரசார் வழிநெடுகிலும் தேசப் பக்தி பாடல்களையும் வந்தே மாதரம் கோ‌ஷத்தையும் முழங்கி சென்றனர்.

    பின்பு அகஸ்தியன் பள்ளியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    வேதாரண்யத்தில் 1930 ஆண்டு நடைபெற்ற உப்புசத்தியாகிர போராட்டம் ராஜாஜி, சர்தார்வேதரெத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு ஆங்கில அரசுக்கு எதிராக உப்பு அள்ளும் போராட்டத்தை நடத்தினர். அதன் 88-ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன், சர்தார் வேதரெத்தினத்தின் பேரன்கள் வேதரெத்தினம் கேடிலியப்பன் மற்றும் உப்பு சத்தியாகிரக நினைவு கமிட்டிபொதுச் செயலாளர் சக்தி.செல்வ கணபதி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சங்கரவடிவேல், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போஸ் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் சம்மந்தம்பிள்ளை துரைராஜ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கணக்கோனர் ‘‘வந்தே மாதரம்’’ கோ‌ஷங்களை எழுப்பி உப்பு அள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
    கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் இருந்து மீனவர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    நாகப்பட்டினம்:

    கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் குறித்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் நாகை மாவட்டத்தை சேர்ந்த 54 மீனவ கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியபோது கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் தொடர்பான புதிய வரைபடத்துக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனால் கலெக்டர் சுரேஷ்குமார் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினார். அப்போது மீனவர்கள் கலெக்டருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி விட்டு வெளிநடப்பு செய்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தின்போது மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் எந்த திட்டத்துக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டது.

    இதுகுறித்து தேசிய மீன் தொழிலாளர் சங்க துணை தலைவர் குமரவேலு நிருபர்களிடம் கூறியதாவது.

    கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் குறித்த வரைபடம் சட்டத்துக்கு ஒத்து போகாத வகையில் உள்ளது. இதுபோன்ற வரைபடத்தை வைத்துக்கொண்டு பொதுமக்களின் கருத்துகளை கேட்பது தேசிய பசுமை தீர்ப்பாணையத்தின் தீர்ப்புக்கு எதிரானது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக தகவல் தெரிவித்தும் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

    இவ்வாறு அவர் கூறினார்.
    எடப்பாடியால் சேலத்தில் இருந்து கேன்களை கொண்டு சென்று தான் கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை கொண்டு வர முடியும் என்று டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டி உள்ளார். #Dinakaran #EdappadiPalaniswami #Cauveryissue

    மயிலாடுதுறை:

    காவிரி மேலாண்மை வரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் மாநில அரசை கண்டித்தும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை சின்ன கடைவீதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக 2 வார கால அவகாசம் கேட்டுள்ளது. அதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் லோக்சபா தேர்தல் வரையிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு இழுத்தடிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    நடைபயணம் சென்று விட்டோம் என்று ஓய்வெடுத்து கொண்டிருக்கும் கட்சிக்காரர்களும் காவிரிக்காக தொடர்ந்து போராட வலியுறுத்த வேண்டும்.

    திவாகரனிடம் நான் ஆலோசனை கேட்க வில்லை என்று தான் அவர் வாய்க்கு வந்ததை எல்லாம் கூறிகொண்டு இருக்கிறார்.அவருக்கு தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஓய்வு எடுத்தால் நல்லது. பாரதிராஜா, சங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்களை விட சிறந்த இயக்குனர் மன்னார்குடியில் தான் உள்ளார். என்னை விட எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் நல்லவர்கள் என்று கூறுவது காமெடியாக உள்ளது.

    நமது காவிரி நீரை எடப்பாடியால் தான் கொண்டு வர முடியும் என்று அமைச்சர்கள் பேசுகிறார்கள். எடப்பாடியால் சேலத்தில் இருந்து கேன்களை கொண்டு சென்று தான் கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை கொண்டு வர முடியும். வேறு எதுவும் முடியாது.

    திருவாரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு வரும் எடப்பாடிக்கு அ.ம.மு.க. பொறுப்பாளர்கள் கேன்களில் தண்ணீர் கொண்டு கொடுக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும். எடப்பாடியையும், ஓ.பி.எஸ்.சையும் தமிழக மக்கள் விரும்ப வில்லை. ஆளும் கட்சியினர் உளவுத் துறையை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால் மீண்டும் நாம் ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

    கேள்வி: ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து என்ன கூறுகிறீர்கள்.

    பதில்: ஓ.பன்னீர்செல்வம் பதவி பறிக்கப்பட்டு இருந்தால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Dinakaran #EdappadiPalaniswami #Cauveryissue

    சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அகற்றக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்ததற்கு வரவேற்பு தெரிவித்துள்ள டிடிவி தினகரன், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். #TTVDhinakaran
    நாகப்பட்டினம்:

    தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என திமுக எம்.எல்.ஏ அன்பழகன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல, ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக கொறடா சக்கரபாணி மற்றும் டிடிவி தினகரன் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்திருந்தனர்.

    இந்த வழக்குகளை விசாரித்து வந்த தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி தலைமையிலான அமர்வு, இன்று இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரு வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால் அதிமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேற்கண்ட இரு வழக்கிலும் சட்ட போராட்டம் தொடரும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அகற்றக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்ததற்கு டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சட்ட ஆலோசனைக்கு பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் மயிலாடுதுறையில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran
    காவிரி உரிமையை மீட்க இறுதிவரை போராடுவோம் என்று நாகையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். #CauveryIssue
    நாகப்பட்டினம்:

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் பெற்று தர மத்திய அரசை வலியுறுத்தி நாகை அவுரித்திடலில் நேற்று இரவு அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் பூராசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் ஓ.எஸ். மணியன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி பிரச்சனையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் தற்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் அ.தி.மு.க. அரசு அறப்போராட்டங்கள் மற்றும் சட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

    தற்போது பல கட்சியினர் , இயக்கத்தினர் காவிரி பிரச்சனைக்கு குரல் கொடுப்பதாக கபட நாடகம் நடத்தி வருகின்றனர். காவிரி பிரச்சனைக்கு முக்கிய காரணமானவர் கருணாநிதி தான். ஆனால் தற்போது தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நடை பயணம், சைக்கிள் பயணம், மனித சங்கிலி போராட்டம் என கபட நாடகம் ஆடுகிறார். ஆனால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.

    மத்தியில் இணைக்கமாக இருந்த போது தி.மு.க. காவிரி பிரச்சனை பற்றி பேசாமல் இருந்தனர். ஆட்சி போன பிறகு அவர்களுக்கு காவிரி ஞாபகம் வருகிறது. காவிரி பிரச்சனையை பற்றி பேசுவதற்கும் முழக்கமிடுவதற்கும் தார்மீக பொறுப்புள்ளவர்கள் அ.தி.மு.க. வினர் தான்.

    இலங்கையில் 2009-ம் ஆண்டில் மிகப்பெரிய போர் நடந்தது. அப்போது ஆட்சி செய்த கருணாநிதி கவலைப்படவில்லை. இதனால் இலங்கையில் 2 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். மத்தியில் காங்கிரசும், தமிழகத்தில் கருணாநிதியும் தான் ஆட்சி செய்தனர். அப்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவை பார்த்து இவர்கள் ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தால் இலங்கையில் இன படுகொலை நடந்திருக்காது.

    காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 3-ந் தேதி வருகிறது. அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம். காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிச்சயமாக நிலைநாட்டுவோம். அதுவரை போராடுவோம். உறங்கமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சிக்கல் கடைத்தெருவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கீழ்வேளூர்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த சிக்கல் கடைத்தெருவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் சிவக்குமார், நாகை ஒன்றிய செயலாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் ராஜா (தலைஞாயிறு), வெங்கட்ராமன் (கீழையூர்), ஒன்றிய தலைவர்கள் சந்திரகுமார் (கீழ்வேளூர்), தமிழ்மாறன் (கீழையூர்) உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்க உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். 

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து கீழ்வேளூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 100 பேரை கைது செய்து, அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் நாகை - திருவாரூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    நாகை திருக்குவளையில் பெண்ணை ஏமாற்றி ஏ.டி.எம் கார்டில் பணம் எடுத்த கர்நாடக வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 13 போலி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    கீழ்வேளூர்:

    நாகை மாவட்டம் திருக்குவளையைச் சேர்ந்தவர் பட்டம்மாள். இவர் நேற்று திருக்குவளையில் உள்ள ஒரு ஏ.டி.எம் சென்டரில் பணம் எடுக்க சென்றார். அவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கு வந்த ஒருவரிடம் பணம் எடுத்து தரும்படி கேட்டுக்கொண்டார்.

    அந்த நபர் அவரது கார்டை வாங்கி வைத்து கொண்டு போலிகார்டை ஏ.டி.எம் எந்திரத்தில் வைத்து பார்த்து விட்டு பணம் வரவில்லை என்று பட்டம்மாளிடம் திருப்பி கொடுத்து விட்டார். அவர் அங்கிருந்து சென்றதும் அந்த நபர் பட்டம்மாள் ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.1000 எடுத்துள்ளார்.

    இந்த நிலையில் வேறு ஏ.டி.எம்மில் பணம் எடுக்க முயன்ற பட்டம்மாள் மர்ம நபர் போலி கார்டை கொடுத்து விட்டு தனது கார்டில் இருந்து ரூ.1000 எடுத்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி முதலில் பணம் எடுக்க முயன்ற வங்கி ஏ.டி.எம் எந்த வங்கிக்கு உரியது என்பதை கேட்டறிந்து அந்த வங்கியில் புகார் செய்தார். அதன்பேரில் வங்கி ஊழியர்கள் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது மர்ம நபர் உருவம் அதில் பதிவாகி இருந்தது. அதனை வைத்து கீழ்வேளூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 29) என்பவர் ஏ.டி.எம்மில் பணம் எடுத்தது தெரியவந்தது. அவர் கீழ்வேளூர் வல்லவிநாயக கோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வசிப்பது கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 13 போலி ஏ.டிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர். அவர் ஏ.டி.எம்முக்கு வரும் வயதானவர் களையும், படிப்பறிவு இல்லாதவர்களையும் நோட்டமிட்டு அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து ஏ.டி.எம் பின் நம்பரை தெரிந்து கொண்டு போலி கார்டுகளை அவர்களிடம் கொடுத்து விட்டு பண மோசடியில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்தார். அவர் பலரிடம் இதுபோல் மோசடியில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    அவருக்கு போலி கார்டுகளை தயாரித்து கொடுத்து பின்னணியில் வேறு நபர்கள் மூளையாக செயல்பட்டார்களா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் திருக்குவளையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#tamilnews
    ×