என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்று மயிலாடுதுறையில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #Tamilisaisoundararajan
    மயிலாடுதுறை:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தராஜன் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகாவில் பா.ஜனதா கட்சியின் வெற்றி உறுதி. தமிழகத்தில் பா.ஜனதா கட்சி கிளை அளவில் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளை அமைத்து வலுப்படுத்தி வருகிறோம்.

    கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு விரைவில் காவிரி நீர் கிடைக்கும். நெல்லை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற போலீஸ்காரர் ஜெகதீசன் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். மதுக்கடையை மூடவலியுறுத்தி மாணவர் தினேஷ் என்பவர் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். மதுக்கடை விவகாரத்தில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? சாராய ஆலைகள் மூடப்பட வேண்டும். நேர்மையான அரசை தான் மக்கள் விரும்புகிறார்கள். கேரளாவில், ‘நீட்’ தேர்வு எழுதிய ஒரு மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு, அந்த மாநில போலீசார் பதில் சொல்ல வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

    ‘நீட்’ தேர்வு மூலம் கடைக்கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ சீட், மருத்துவ கல்வி கிடைக்கும். 24 ஆயிரம் மாணவ-மாணவிகள் தமிழில் ‘நீட்’ தேர்வு எழுத மத்திய அரசு ஏற்பாடு செய்தது வரவேற்கக் கூடியது. இதன் மூலம் மாணவர்கள் சுலபமாக தேர்வு எழுத முடிந்தது என்று கூறி உள்ளனர்.

    சமூக வலைதளங்கள் பொதுமக்களின் களமாகவும், தளமாகவும் உள்ளது. எனவே, சமூக வலைதளங்களின் பதிவுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். அமைச்சர் செல்லூர் ராஜூ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மற்றும் வயதானவர்களின் மனம் புண்படாமல் பேச வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #Tamilisaisoundararajan
    காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தில் நீதி கிடைக்காது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
    கீழ்வேளூர்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    நாகை பஸ் நிலையத்தில் வந்த வைகோ அங்கு பேசியதாவது:-

    தமிழக மாணவர்களை வெளி மாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுத செய்த அநீதி இதுவரை எந்த காலத்திலும் நடைபெற்றது இல்லை.

    உச்சநீதிமன்றத்தில் வருகிற 14-ந்தேதி காவிரி பிரச்சனை தொடர்பான வழக்கில் விசாரணை நடைபெற உள்ளது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்துக்கு நீதி கிடைக்காது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது.

    காவிரி நீர் மறுக்கப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும். காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழக மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழகம் கிளர்ச்சி களமாக மாறாத வரை காவிரி பிரச்சனையில் தமிழகத்துக்கு நீதி கிடைக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்றும் பூமிக்கும், ஆகாயத்தக்கும் இடையே தான் வெற்றிடம் உள்ளது என்றும் ரஜினிகாந்த்துக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் கிண்டலாக பதில் அளித்துள்ளார். #TNPolitical #TNMinister #OSManiyan
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பொறையாறு காட்டுச்சேரி ஊராட்சி தேவசேனா கிராமத்தில் புதிய பாலம் கட்டுவதற்கு நடந்த பூமி பூஜையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 100 சதவீத விவசாயிகள் காப்பீட்டு தொகை பெற்று உள்ளனர். ஆனால் நாகை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு அலுவலக குளறுபடி காரணமாக 50 சதவீத விவசாயிகள் தான் பயிர் காப்பீட்டு தொகை பெற்று உள்ளனர். இதற்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனம் தான் காரணம்.

    தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை நிரப்பப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவர் கூறியது போல தமிழக அரசியலில் எந்த வெற்றிடமும் இல்லை.


    பூமிக்கும் ஆகாயத்துக்கும் இடையே 37 ஆயிரம் அடி தூரம் வெற்றிடம் உள்ளது. அதைத்தான் ரஜினி குறிப்பிட்டு இருப்பார்.

    டெல்டா மாவட்டங்களில் தற்போது நிலத்தடி நீரை கொண்டு குறுவை சாகுபடி தொடங்கி உள்ளது. நாகை மாவட்டத்திலும் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுப்பட்டுள்ளனர். கர்நாடக அரசு 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதால் ஜூன் 12-ந்தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை.

    தமிழகத்தில் நீட்தேர்வால் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக 2 பெற்றோர் இறந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNPolitical #TNMinister #OSManiyan
    காவிரி பிரச்சனையில் ஒட்டுமொத்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களை முடக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். #MDMK #Vaiko #CauveryIssue
    மயிலாடுதுறை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு தமிழகம் அழிவை நோக்கி செல்ல சமுக நீதியை குழி தோண்டி புதைக்கும் நோக்கில் செயல்படுகிறது. அதன் வெளிப்பாடுதான் தமிழக மாணவ- மாணவிகளை வெளி மாநிலங்களில் நீட் தேர்வை எழுத அலைக்கழிப்பது. இவ்வாறான அநீதி எந்த காலத்திலும் நடைபெற்றதில்லை.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த வழக்கு வருகிற 14-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் தமிழகத்திற்கு நீதி கிடைக்காது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது. கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமையாது.

    சுப்ரீம் கோர்ட்டு அட்டார்னி ஜெனரல் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் காவிரியில் தண்ணீர் கிடைத்துவிடுமா? என எழுப்பிய கேள்வி இதற்கு சான்று.


    காவிரி நீர் மறுக்கப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும். அதை பயன்படுத்தி அப்பகுதி மக்களிடம் நிலங்களை குறைந்த விலையில் பெற்று ஷேல், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் வாயு போன்றவை எடுக்க தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தில் விட்டு லாப ஈட்டும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது.

    கர்நாடகாவில் புதிய அணை கட்ட முயற்சிக்கிறார்கள். இதை தடுக்கவோ, உடைக்கவோ முடியாது. அவ்வாறு கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காது . காவிரி பிரச்சனையில் தமிழக மக்களிடம் தற்போது ஏற்பட்டுள்ள தன்னெழுச்சி வரவேற்கத்தக்கது. நம் உரிமையை ஒரு காலம் விட்டு தரக்கூடாது. மேலும் மக்களிடம் கொந்தளிப்பு வேண்டும். அது வன்முறையாக கூடாது. கிளர்ச்சிக்களமாக தமிழகம் மாறாதவரை காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்காது.

    எனவே ஒட்டுமொத்த தமிழர்கள் நமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களை முடக்க வேண்டும். தமிழர்களை ஏளனமாக நினைத்த மத்திய அரசு தமிழர்களின் எழுச்சியை காணவேண்டும்.

    இவ்வாறு வைகோ கூறினார். #MDMK #Vaiko #CauveryIssue
    தலைஞாயிறு அருகே கல்லூரி மாணவியிடம் செயினை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலைஞாயிறு:

    நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த கரியாப்பட்டினம் அருகே உள்ள கீழகாடுவைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் மைதிலி (வயது 18). கரியாப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் கடந்த மார்ச் 17-ந் தேதி கல்லூரி முடிந்து மாலை வீட்டிற்கு செல்ல கரியாப்பட்டினம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் மைதிலி அருகே வந்து ஒரு பெண்ணின் பெயரை கூறி அவரை தெரியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு மைதிலி பதில் கூறியபோது திடீரென மைதிலி கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்து தப்பி விட்டு சென்றார்.

    இதுகுறித்து கருணாநிதி கரியாப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் செம்போடை கடை தெருவில் சந்தேகப்படும்படி நின்ற ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் மைதிலிடம் செயினை பறித்தவர் என தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர் குறவகுளத்தை சேர்ந்த வேதையன் மகன் சவுந்தர்ராஜன் (35) என தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்த 2 பவுன் செயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வேதாரண்யத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்து டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் முருகவேலு மற்றும் போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்ட போது வேதாரண்யம் கரியாப்பட்டினம் சாலையில் வேகமாக வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் எந்தவித அனுமதியும் இல்லாமல் மணல் அள்ளி கடத்தியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த டிராக்டரை பறிமுதல் செய்து டிரைவர் மதியழகன் (39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    நாகை மாவட்டம் கீழ்வேளூரில் மின்சாரம் தாக்கியதில் சகோதரர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கீழ்வேளூர்:

    நாகை அடுத்த கீழ்வேளூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 37). கொத்தனார். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு மணிகண்டன் (11) என்ற மகன் உள்ளான்.

    கணேசனின் தம்பி ராஜீ (30). கொத்தனாரான இவர் மனைவி விஜயாவுடன் கீழ்வேளூரை அடுத்த பாதகுறிச்சியில் வசித்து வந்தார். இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இன்று அதிகாலை கீழ்வேளூர் பகுதியில் சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது.

    இந்த நிலையில் கணேசன், தனது வீட்டில் டி.வி. சுவீட்சை சரிசெய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர்  மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கணேசன் பரிதாபமாக இறந்தார்.

    மின்சாரம் தாக்கி அண்ணன் பலியான தகவல் தெரிந்து ராஜீ அதிர்ச்சி அடைந்தார். அண்ணன் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அண்ணன் உடலுக்கு மாலை அணிவிப்பதற்காக கடைவீதிக்கு ராஜீ சென்றார். பின்னர் மாலை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தார்.

    அப்போது சம்பவம் பற்றி கேள்விப்பட்டு கீழ்வேளூர் போலீசார், கணேசன் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இதனால் போலீசாரிடம் அண்ணன் கணேசன், மின்சாரம் தாக்கி பலியான சம்பவத்தை அழுதுக் கொண்டே ராஜீ கூறினார். பின்னர் அண்ணன் கணேசன், எப்படி டி.வி. சுவிட்சில் கையை வைத்தார்? மின்சாரம் தாக்கியது எப்படி? என்று போலீசார் முன்பு ராஜீ நடித்து காட்டினார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக ராஜீவை மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

    ராஜீ மின்சாரம் தாக்கி பலியானதை கண்டு போலீசாரும், உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

    அண்ணன் இறந்த சோகம் மறைவதற்குள் தம்பியும் மின்சாரம் தாக்கி இறந்தது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அண்ணன்-தம்பி இருவரும் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் நாகை கீழ்வேளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews

    மத்திய அரசின் அநீதியை தமிழக அரசு மூடி மறைக்க முடியாது என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
    மயிலாடுதுறை:

    ம.தி.மு.க. 25-ம் ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு மயிலாடுதுறை வண்டிபேட்டை பகுதியில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கட்சிக் கொடியேற்றி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீட் தேர்வு முறையை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு எழுந்த போதே கடுமையான அழுத்தம் கொடுத்து நீட்தேர்வை தடுத்திருக்க வேண்டியது மாநில அரசின் கடமை. வெளிமாநிலங்களில் தேர்வு மையம் போடப்பட்டதை கண்டித்து, மத்திய அரசிடம் கடுமையாக போராடி தமிழகத்தில் தேர்வு மையத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி கேரளாவில் மாரடைப்பால் இறந்துள்ளார். அந்த மாணவர் நீட்தேர்வில் வெற்றிபெறாவிட்டாலும் தமிழக அரசால் டாக்டராக்க முடியும். மத்திய அரசின் அநீதியை தமிழக அரசு மூடி மறைக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட செயலாளர் மோகன், நகர செயலாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி சுப்ரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
    நாகையில் டாஸ்மாக் கடை ஊழியர்களை தாக்கி பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீழ்வேளூர்:

    நாகையை அடுத்த வேளாங்கண்ணியில் செயல்படும் டாஸ்மாக் மதுபான கடையில் நேற்று இரவு 9.30 மணியளவில், சூப்பர்வைசர் பாஸ்கரன், சேல்ஸ்மேன்கள் பிரபாகரன், லெட்சுமணன், ஆகியோர் பணியில் இருந்தனர்.

    அப்போது திடீரென கையில் பட்டா கத்தியுடன் முகமூடி அணிந்து 3 பேர் வந்தனர். அவர்கள் கடையில் மது வாங்கி கொண்டிருந்தவர்களை மிரட்டி அப்புறப்படுத்தி விற்பனையாளரை தள்ளி விட்டு ஒருவர் கடைக்குள் நுழைந்தார்.

    ஒருவர் வாசலில் பட்டாக் கத்தியுடன் காவலுக்கு நின்று கொண்டார். மற்றொருவர் இருசக்கர வாகனத்தில் வெளியே காத்திருந்தார். கடைக்குள் நுழைந்த கொள்ளையன் சூப்பர்வைசரை மிரட்டி விற்பனையான பணம் முழுவதையும் கேட்டான். அதற்கு சூப்பர்வைசர் விற்பனை பணத்தை கொடுத்து அனுப்பி விட்டதாக கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் சூப்பர்வைசரை தாக்கி கல்லாவில் இருந்த ரூ.15 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சி.சி.டி கேமராவை ஆய்வு செய்து கேமராவில் பதிவாகி உள்ள கொள்ளையர்கள் உருவ படத்தை வைத்து அவர்களை தேடி வருகின்றனர்.

    மன உளைச்சலுடன் கேரளாவுக்கு நீட் தேர்வு எழுத செல்கிறேன் என்று நாகை மாணவி துர்காதேவி தெரிவித்துள்ளார். #neet

    குத்தாலம்:

    மருத்துவ படிப்பில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஆண்டு முதல் மத்திய அரசு நீட் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதுடன், ஏழை மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்வதற்கே பல ஆயிரம் கடன் வாங்கி செல்ல வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    நாகை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அருகே எலந்தங்குடி கிராமத்தில் கொத்தனார் வேலை பார்க்கும் முருகன் என்பவரின் மகள் துர்காதேவி அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகிறார். இவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இவருக்கு தற்போது எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு, ஹால்டிக்கெட் வந்ததை கண்டு துர்காதேவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.


    இதுகுறித்து துர்காதேவி கூறும்போது, டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஏழை குடும்பத்தில் பிறந்தாலும் எனது ஆசையை நிறைவேற்ற பெற்றோர் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். நீட்டிற்கு விண்ணப்பித்த போது விருப்ப தேர்வு மையங்களாக புதுச்சேரி, திருச்சி, கோவை ஆகிய தமிழக மாவட்டங்களைத்தான் தேர்வு செய்திருந்தேன். ஆனால் நான் தேர்வு செய்யாத வெளி மாநிலமான எர்ணாகுளத்தில் எனக்கு தேர்வு மையத்தை ஒதுக்கியுள்ளனர். இது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

    இதுகுறித்து மாணவியின் தந்தை முருகன் கூறுகையில் கொத்தனார் வேலை பார்த்து வந்தாலும் எனது மகள் துர்காதேவி டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் கடன்வாங்கி படிக்க வைத்து வருகிறேன். நீட் தேர்வு எழுத கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்ல வேண்டி உள்ளது. அங்கு செல்வதற்கு ரூ.5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை செலவு ஆகும். அதற்கும் கடன் வாங்கித்தான் செல்கிறோம்.

    தமிழக அரசு ரூ.1000 உதவித்தொகையை அறிவித்துள்ளது. எப்படி நாங்கள் அரசு உதவித்தொகையை பெற முடியும். மாணவர்களுக்கு எந்தெந்த மாநிலங்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு அதற்கான அனைத்து செலவுத் தொகையையும் முழுமையாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்றார். #tamilnews #neet

    சீர்காழி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற ரவுடியை கைது செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே திருவெண்காடு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் நேற்று மாலை நாங்கூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை நிறுத்தி சோதனை நடத்திய போது அவர் ஆயுதத்தை பதுக்கி எடுத்து வந்தது தெரியவந்தது. அப்போது இந்த நபர் சப்-இன்ஸ்பெக்டர் கணேசனை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றார்.

    இதில் அவர் கீழே விழுந்தார். இதையடுத்து போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அவர் மேலநாங்கூர் பகுதியை சேர்ந்த இலக்கியராஜ் (வயது 35). என்பதும், பிரபல ரவுடியான இவர் மீது திருவெண்காடு, சீர்காழி, பொறையார் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து இலக்கிய ராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தாக்குதலில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மயிலாடுதுறையில் திடீரென அரை அடிக்கு உள்வாங்கிய 2 மாடி கட்டிடத்தை பாதுகாப்பு தன்மை இல்லாததால் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள அகரகீரங்குடி பகுதியில் நஜிபுனிஷா என்பவருக்கு சொந்தமான 2 மாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் 5 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இதே கட்டிடத்தில் மர இழைப்பகமும் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த 2 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென குலுங்கியது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் 30-க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஏதோ பூகம்பம் வந்துவிட்டதோ? என்று மிரண்டுபோன அவர்கள் குழந்தைகளையும், உடைமைகளையும் தூக்கிக்கொண்டு பதறியடித்தப்படி வெளியே ஓடிவந்தனர்.

    கட்டிடம் திடீரென குலுங்கியதால் சுமார் அரை அடிக்கு உள்வாங்கி இருந்தது. மேலும் பைசா கோபுரம் போல் ஒரு பக்கம் சற்று சாய்ந்த நிலையில் இருந்தது.



    நல்லவேளையாக குடியிருப்பில் வசித்து வந்த அனைவரும் தப்பி ஓடி வந்ததால் உயிர்சேத அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. பின்னர் இந்த சம்பவம் பற்றி மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த தீயணைப்பு நிலையத்தினர், குடியிருப்பில் இருந்த கியாஸ் சிலிண்டர்களை அப்புறப்படுத்தினர். மேலும் அங்கு வசித்து வந்தவர்களின் உடைமைகளையும் அப்புறப்படுத்தினர்.

    இதையடுத்து வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மயிலாடுதுறை தாசில்தார் விஜயராகவன் மற்றும் அலுவலர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கட்டிடத்தின் உறுதி தன்மையை பற்றி ஆய்வு செய்தனர். அப்போது இந்த கட்டிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது என்று தெரியவந்தது. மேலும் வயல்வெளியில் கட்டிடம் கட்டப்பட்டதாலும் சரியான அடிமட்டம் அமைக்காததாலும் கட்டிடம் உள்வாங்கியது தெரியவந்தது.

    இதையடுத்து கட்டிடம் பாதுகாப்பு தன்மை இல்லாததால் உடனடியாக அதற்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து இந்த கட்டிடம் கட்ட முறையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா? என்று அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    மயிலாடுதுறை பகுதியில் 2 மாடி கட்டிடம் திடீரென உள்வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    ×