என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    கீழையூரில் பூட்டி கிடக்கும் அரசு மருத்துவமனையை உடனே திறக்கக்கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் கீழையூரில் பூட்டி கிடக்கும் அரசு மருத்துவமனையை உடனே திறக்க வலியுறுத்தியும், கீழையூர் ஊராட்சியில் உடனே 100 நாள் வேலையை தொடங்க கோரியும் கீழையூர் கடைத்தெரு நாகை-திருத்துறைப்பூண்டி சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் பாலசுப்பிரமணியன், மாதர் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை செயலாளர் மல்கோத்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பக்கிரிசாமி, ராஜேந்திரன், பன்னீர்செல்வம், தவமணி, செல்வராஜ், மதியழகன், கிருஷ்ணமூர்த்தி, சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்த தகவலறிந்த கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிமணி, கீழ்வேளூர் தாசில்தார் தையல்நாயகி ஆகியோர் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி யளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப் பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் நாகை-திருத்துறைப்பூண்டி சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி வேளாங்கண்ணியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கலைந்து சென்றனர்.
    வேளாங்கண்ணி:

    வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு 2016-2017-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. நாகைமாலி, தி.மு.க. மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் பூவைமுருகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கடந்த 2016-2017-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்காத மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியபோக்கை கண்டித்தும், காப்பீடு தொகை வழங்காத கொளப்பாடு கூட்டுறவு கடன் சங்கத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதுகுறித்து தகவலறிந்த நாகை நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவன அலுவலர் தினேஷ், வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் வருகிற ஜூன் மாதம் 15-ந்தேதிக்குள் விடுப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். 

    இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த முத்துபெருமாள், ஜீவானந்தம், வரதன் உள்பட விவசாயிகள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். 
    நாகையில் திறன் பயிற்சி விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வு பிரசார மின்னணு திரை வாகனத்தை கலெக்டர் சுரேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், திறன் பயிற்சிக்கு பதிவு செய்தவர் களுக்கு அடையாள அட்டையை வழங்கினார். அப்போது கலெக்டர் கூறிய தாவது:-

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் வாயிலாக வழங்கப்பட்டு வரும் பல்வேறு திறன் பயிற்சிகள் குறித்து கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்திலுள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திறன் பயிற்சிகள் மற்றும் அவற்றைப் பற்றிய விவரங்கள் அடங்கிய விளம்பர படத்தினை நாகை மாவட்டம் முழுவதும் செய்தி மக்கள் தொடர்புத்துறை மின்னணு திரை வாகனம் மூலம் திரையிடப்பட்டு இளைஞர்களிடையே பிரசாரம் செய்யப்படவுள்ளது.

    இதன் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்றோருக்கு பல்வேறு திறன் பயிற்சிகள் பற்றிய விவரங்கள் எளிதில் சென்றடையும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) பிரகாசம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஜீவானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
    காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க கோரி நாகை கடலில் இறங்கி போராட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். #Cauveryissue #TNFarmers #Protest
    கீழ்வேளூர்:

    காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க கோரி நாகை கடலில் இறங்கி விவசாயிகள் இன்று தற்கொலை செய்யும் போராட்டத்தை நடத்தினர்.

    இன்று காலை 10 மணியளவில் நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டனர். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் தனபாலன் தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டம் காரணமாக நாகை புதிய பஸ் நிலைய பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    அப்போது விவசாயிகள் "வேண்டும்.. வேண்டும்.. காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்..." என்று கோ‌ஷமிட்டப்படி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதையடுத்து ஊர்வலமாக செல்ல முயன்ற விவசாயிகளை அங்கு நின்ற போலீசார், தடுத்து நிறுத்தினர். ஊர்வலத்துக்கு அனுமதியில்லை என்று போலீசார் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஊர்வலமாக செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அங்கு கலெக்டர் சுரேஷ்குமாரிடம் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் "காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கும் பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. எனவே உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். 2016-2017-ம் ஆண்டு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதில் பாக்கி தொகை ரூ.160 கோடியை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதேபோல் 2017-2018-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்.

    டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால், குளங்கள் தூர்வார வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதற்கிடையே நாகை புதிய கடற்கரைக்கு சுமார் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்று கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தை நடத்தினர்.

    அப்போது கடலில் இறங்கிய விவசாயிகள் ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.. மத்திய- மாநில அரசுகளே விவசாயிகளை வஞ்சிக்காதே...’ என்று கோ‌ஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. #Cauveryissue #TNFarmers #Protest
    வேதாரண்யத்தில் 45 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட மாணவர்களும் ஆசிரியர்களும் பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தனர். பின்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கத்தரிபுலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 1973-ம் ஆண்டு முதல் படித்த முன்னாள் மாணவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் 45 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் படித்த மாணவர்களும் அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    விழாவில் இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்று பல்வேறு ஊர்களில் வாழ்ந்துவரும் ஆசிரியர்கள் ஆதிநெடுஞ்செழியன், நாகராஜன், ரசல், ராஜ்குமார், ராமநாதன், வீரப்பத்திரன், வடிவேல், சுந்தரேசன், ராமசந்திரன், கணேசன், ராமலிங்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மாணவர்களும் ஆசிரியர்களும் பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தனர். பின்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

    கொல்கத்தா, சென்னை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வேதாரண்யம் பகுதிகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் கத்தரிப்புலம் கிராமத்தில் பிறந்து இப்பள்ளியில் படித்த தமிழரசன் கொல்கத்தாவில் அரசு பணியில் உள்ளார். அவர் வாட்ஸ்-அப்பில் இந்த சந்திப்பு விழா அழைப்பை பார்த்து கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து அங்கு உள்ள தனது குடும்பத்தாரையும் அழைத்து கொண்டு வந்து விழாவில் கலந்து கொண்டார்.

    விழா ஏற்பாடுகளை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சாம்பசிவம், சிவகடாட்சம், தருமையன், இளவழகன், சாமியப்பன், ஜெகநாதன், சரவணன், வீரமணி, ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் கூறும்போது, 45 ஆண்டுகளுக்கு பிறகு தங்களுடன் படித்தவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் ஆசிரியர்களை சந்தித்து ஆசி வாங்கியதை பெருமையாக நினைக்கிறோம். நாங்கள் படித்த பள்ளியை மேம்படுத்தவும், இப்பகுதி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஜ.ஏ.எஸ் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த உள்ளோம் என்றனர்.

    வேதாரண்யம் கடற்கரையில் அமைக்க இருக்கும் உரக்கிடங்கிற்கு எதிராக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் ரூ.3 கோடியே 44 லட்சம் செலவில் உரக்கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான விழா சமீபத்தில் நடந்தது. இங்கு உரக்கிடங்கு அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று வேதாரண்யம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இப்பணி தொடர்ந்து நடந்ததால் உரக்கிடங்கு அமைக்கும் திட்டத்தை நிறுத்த உடனே கோரி வேதாரண்யம் பகுதியில் வசிக்கும் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    தற்போது மீன்பிடி தடை காலம் என்பதால் விசை படகில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் பைபர் படகில் சென்று மீன் பிடித்து வந்தனர். இதனால் மீன்களே கிடைத்து வந்தது. இந்த நிலையில் இன்று பைபர் படகில் சென்றும் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் உரக்கிடங்கு திட்டத்தை நிறுத்தும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாகவும், இன்று முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.
    சீர்காழி அருகே மீனவர்கள் வலையில் கஞ்சா மூட்டைகள் சிக்கிய சம்பவம் திருவெண்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #fishermen

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு அடுத்த கீழமூவர்கரை என்ற மீனவ கிராமம் உள்ளது. இதே பகுதி சுனாமி தெருவை சேர்ந்த சரவணன் (வயது 32) என்ற மீனவர் நேற்று அதிகாலை பைபர் படகில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றார்.

    அவருடன் அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ், பெருமாள், செல்லப்பன், தங்கத்துரை ஆகியோரும் படகில் சென்றனர்.

    நேற்று மாலை அவர்கள் படகில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் கடலில் வீசிய வலையை வெளியே இழுத்து கொண்டிருந்தனர். ஆனால் வலையை இழுக்க முடியவில்லை. இதனால் ஏதோ பெரிய மீன் சிக்கியிருக்கலாம் என்று நினைத்து அவர்கள் சேர்ந்து போராடி வலையை இழுத்து வெளியே கொண்டு வந்தனர்.

    அந்த வலையில் 10 மூட்டைகள் இருந்தன. இதனால் அதில் என்ன இருக்கிறது? என பிரித்து பார்த்த போது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த மூட்டையில் கஞ்சா இருந்தது. அவைகள் அனைத்தும் பாக்கெட் செய்யப்பட்டு இருந்தது.

    பின்னர் கஞ்சா மூட்டைகளை பத்திரமாக கரைக்கு நேற்று இரவு மீனவர்கள் கொண்டு வந்தனர். வலையில் கஞ்சா மூட்டைகள் சிக்கியது குறித்து திருவெண்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்து கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டனர். 10 மூட்டைகளிலும் மொத்தம் 42 கிலோ கஞ்சா இருந்தது. இவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இலங்கைக்கு கஞ்சா மூட்டைகள் கடத்தி செல்லும் போது கடலோர போலீசாருக்கு பயந்து கடலில் வீசப்பட்டதா? கஞ்சாவை கடலில் வீசிய கும்பல் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    மீனவர்கள் வலையில் கஞ்சா மூட்டைகள் சிக்கிய சம்பவம் திருவெண்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #fishermen

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாகையில் நாளை விவசாயிகள் கடலில் மூழ்கி தற்கொலை செய்யும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். #CauveryIssue #TNFarmers #Protest
    கீழ்வேளூர்:

    நாகையில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் தனபாலன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கும் பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. கடந்த 2016-2017-ம் ஆண்டு வறட்சியால் கடைமடை பகுதியில் முற்றிலும் விவசாயம் பாதிக்கப்பட்டது. பயிர்கள் கருகியதால் விவசாயிகள் மன உளைச்சலில் உயிரிழந்தனர்.

    2016-2017-ம் ஆண்டு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதில் ரூ.160 கோடிக்கு மேல் பாக்கிஉள்ளது. காவிரி நீர் கடைமடை வரை வந்து சேராததால் கதிர் வரும் பருவத்தில் பயிர்கள் கருகியது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டது. 2017-2018-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்.


    டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் வாய்க்கால், குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இது அரசின் மெத்தன போக்கை காட்டுகிறது.

    எனவே, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்தும் நாளை (செவ்வாய்க்கிழமை) நாகையில் கடலில் மூழ்கி தற்கொலை செய்யும் போராட்டம் நடத்தப்படும். அதன்படி நாளை நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று நாகை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கிறோம். பின்னர் அங்கிருந்து நாகை கடலுக்கு சென்று கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #CauveryIssue #TNFarmers #Protest
    நாகக்குடையான் ஊராட்சியில், பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் பல்வேறு ஊராட்சிகளில் அரசின் செலவில் சிறுவர்களின் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கிற்காக பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பூங்காக்களில் சறுக்கு விளையாட்டு உபகரணம், ஊஞ்சல், உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பல்வேறு ஊராட்சிகளில் சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பு இன்றி துருப்பிடித்து சேதமடைந்துள்ளன. இதே போல நாகக்குடையான் ஊராட்சியில் ஜீவா நகர் சாலையில் ஊராட்சி சேவைக்கட்டிடத்தின் எதிர்புறத்தில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது. பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளது. ஆடு, மாடுகள் கட்டும் இடமாக மாறியுள்ளது.

    மேலும், சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. பல லட்ச ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மக்களுக்கு உபயோகப்படாமல் உள்ளது.

    எனவே பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்காவை சீரமைத்து பழுதடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை மாற்றி அமைக்கசம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என அந்த பகுதி பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 
    குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    குத்தாலம்:

    குத்தாலம் தாலுகா, வலுவூர் ஊராட்சி மேலத்தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அங்குள்ள உயர்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து வரும் குடிநீரை பிடித்து பயன்படுத்தி வந்தனர். இந்த தொட்டியில் உள்ள மின்மோட்டார் பழுதாகி கடந்த 4 மாதமாக மேலத்தெரு பகுதிக்கு குடிநீர் வரவில்லை.

    இதனால் அந்த பகுதியில் உள்ள பெண்கள் அனைவரும் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர்.

    இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மேலத்தெருவைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை- திருவாரூர் செல்லும் வழுவூர் மெயின் ரோட்டில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குத்தாலம் தாசில்தார் திருமாறன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 1 நாளில் மோட்டார் பழுது பார்த்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதைதொடர்ந்து பேச்சு வார்த்தையில் உடன்பட்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

    குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சீர்காழி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழியை அடுத்த நாதல் படுகையைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது31). விவசாயி.

    இவர் நேற்று இரவு நாதல்படுகையில் இருந்து சீர்காழி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுச்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறையில் வெற்றிலை வியாபாரியிடம் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை நாச்சிமுத்து நகரை சேர்ந்தவர் ரசாக்(வயது 65). வெற்றிலை வியாபாரி.

    இவர், கடந்த 7-ந் தேதி பையில் ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மயிலாடுதுறை காந்திஜி ரோட்டில் உள்ள தனது கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    மயிலாடுதுறை போலீஸ் நிலைய சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து கொண்டு 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் ரசாக் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து, அவர் மீது மிளகாய் பொடியை தூவினர். இதில் மிளகாய் பொடி கண்ணில் விழுந்ததால், அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்ட கொள்ளையர்கள், ரசாக்கிடம் இருந்த பணப்பையை பறித்து சென்றனர். அப்போது பையில் இருந்த ரூ.30 ஆயிரம் மட்டும் கீழே விழுந்துவிட்டது.

    இதையடுத்து கொள்ளையர்கள் தங்கள் கையில் சிக்கிய ரூ.4 லட்சத்து 30 ஆயிரத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    போலீசாரின் விசாரணையில் பணம் பறிப்பு சம்பவத்தில் ரசாக் தினமும் செல்லும் ஆட்டோவில் டிரைவராக இருக்கும் அமீன் (வயது 39) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    மேலும் அவரது ஆலோசனைப்படி சம்பவத்தன்று கூறைநாட்டை சேர்ந்த நஜீர் (35), கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த நாசர் (39) ஆகியோர் ரசாக்கிடம் பணம் பறித்தது உறுதி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அமீன், நஜீர், நாசர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.2½ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    ×