என் மலர்
நீங்கள் தேடியது "merchant money snatch"
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை நாச்சிமுத்து நகரை சேர்ந்தவர் ரசாக்(வயது 65). வெற்றிலை வியாபாரி.
இவர், கடந்த 7-ந் தேதி பையில் ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மயிலாடுதுறை காந்திஜி ரோட்டில் உள்ள தனது கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
மயிலாடுதுறை போலீஸ் நிலைய சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து கொண்டு 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் ரசாக் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து, அவர் மீது மிளகாய் பொடியை தூவினர். இதில் மிளகாய் பொடி கண்ணில் விழுந்ததால், அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்ட கொள்ளையர்கள், ரசாக்கிடம் இருந்த பணப்பையை பறித்து சென்றனர். அப்போது பையில் இருந்த ரூ.30 ஆயிரம் மட்டும் கீழே விழுந்துவிட்டது.
இதையடுத்து கொள்ளையர்கள் தங்கள் கையில் சிக்கிய ரூ.4 லட்சத்து 30 ஆயிரத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில் பணம் பறிப்பு சம்பவத்தில் ரசாக் தினமும் செல்லும் ஆட்டோவில் டிரைவராக இருக்கும் அமீன் (வயது 39) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மேலும் அவரது ஆலோசனைப்படி சம்பவத்தன்று கூறைநாட்டை சேர்ந்த நஜீர் (35), கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த நாசர் (39) ஆகியோர் ரசாக்கிடம் பணம் பறித்தது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அமீன், நஜீர், நாசர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.2½ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.






