என் மலர்
நாகப்பட்டினம்
கீழ்வேளூர்:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது. அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து நாகை மீனவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர், சமந்தான் பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 10 ஆயிரம் பைபர் படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
மேலும் மீனவர்கள் நாகை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட பொது மக்களை விடுதலை செய்ய வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமான மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டை கைது செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். #SterliteProtest #BanSterlite
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு அதியமானபுருசன் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 45). இவர் கேரளாவில் லாரி டிரைவராக வேலைப்பார்த்து வந்தார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு சியாமளா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் மகள் சியாமளாவுக்கும், விஜய் என்ற வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த திருமணம் அடுத்த மாதம் (ஜூன் ) 3-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. மகள் திருமணத்திற்காக கேரளாவில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சேட்டு ஊருக்கு வந்திருந்தார். அங்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மகளின் திருமண அழைப்பிதழை வழங்கி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சேட்டு வீட்டில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் முகமுடி அணிந்த 6 பேர் கும்பல் வந்தனர்.
வீட்டுக்கு வெளியில் நின்று அவர்கள் சேட்டுவின் பெயரை கூறி அழைத்தனர். இதனால் வீட்டுக்குள் இருந்த சேட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது 6 பேர் கும்பல் திடீரென தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சேட்டுவை சரமாரியாக வெட்டினர். இதை சற்றும் எதிர்பாராத சேட்டு நிலைகுலைந்து கீழே விழுந்தார். அப்போது அவர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.. என்று சத்தம் போட்டார்.
அவரது சத்தத்தை கேட்டு மனைவி சித்ரா வெளியே ஓடி வந்தார். முகமூடி கும்பல் கணவரை சரமாரியாக வெட்டியதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர், முகமூடி கும்பலை தடுக்க சென்றார். அப்போது ஆத்திரம் அடைந்த கும்பல் சித்ராவையும் வெட்டினர். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து கும்பல் சேட்டுவை தொடர்ந்து வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலயே பரிதாபமாக இறந்தார். சேட்டு இறந்ததை உறுதி செய்த முகமூடி கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மணல்மேடு போலீசார் விரைந்து வந்து சேட்டு உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த சித்ரா மயிலாடுதுறை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
லாரி டிரைவர் சேட்டு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது மகளின் திருமணத்தையொட்டி ஏதேனும் பிரச்சினையில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லாரி டிரைவர் முகமூடி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
நாகை மாவட்டம் திருமருகல் அருகே ஆதினக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தனபாலன். இவருடைய மகன் முத்துகுமாரன் (வயது35). இவர் திருமருகல் துணை மின் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிடாமங்கலம் உள்ள உயர் மின் அழுத்த பாதையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முத்துகுமாரனை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கிவீசப்பட்ட முத்துகுமாரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துகுமாரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நம்பியார்நகர் மீனவ கிராமம் அருகே புதிய கடற்கரை உள்ளது. இதில் சிறுவர் பூங்கா, கலை நிகழ்ச்சிகள் நடை பெறும் கலையரங்க மேடை உள்ளிட்டவைகள் உள்ளன. இது நாகை மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக விளங்கி வருகிறது.
இந்த கடற்கரை நகராட்சி கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது இந்த கடற்கரை பெரும் சேதமடைந்தது. சிறுவர் பூங்காவில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கலையரங்க மேடை உள்ளிட்டவைகள் பேரலையில் இழுத்து செல்லப்பட்டன.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள் பங்களிப்புடன் மீண்டும் கடற்கரையை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.
இதையடுத்து நாகை புதிய கடற்கரைக்கு நாள்தோறும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். மேலும், காலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்டவைகளுக்காக வந்து செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் அமருவதற்காக கருங்கற்களாலான இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கடற்கரையில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடைவிழா நடத்தப்பட்டது. கோடைவிழாவை முன்னிட்டு புதிய கடற்கரையில் உள்ள பூங்கா உள்ளிட்டவைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொழிவுடன் காட்சியளித்தன.
இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். இந்த நிலையில் விழா முடிந்த மறுநாள் இரவில் மர்ம நபர்கள் சிலர் புதிய கடற்கரை பூங்காவில் உள்ள அனைத்து இருக்கைகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
நேற்று காலை பொதுமக்கள் வழக்கம் போல் நடைபயிற்சிக்காக கடற்கரைக்கு சென்றபோது இருக்கைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், புதிய கடற்கரையில் இருக்கைகளை உடைத்து சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும், நாகையில் உள்ள ஒரே பொழுதுபோக்கு அம்சமாக விளங்கும் நாகை புதிய கடற்கரையில் சுழற்சி முறையில் போலீசார் நியமித்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் மேலவீதியில் வசிப்பவர்கள் குமரசாமி (வயது 55), குமரேசமூர்த்தி (54). இருவரும் சகோதரர்கள். குமரேசமூர்த்தி அரசு கல்லூரி பேராசிரியர்.
குமரசாமி வேதாரண்யத்தில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இவர் மேல வீதியில் உள்ள கடை மற்றும் வீடுகளை சமமாக பிரித்துக்கொண்டனர். இதில் மேலத்தெருவிற்கு செல்ல பொதுப்பாதை ஒன்று இருந்து வருகிறது.
இந்த பொதுப்பாதையில் தென்னை மட்டைகளை குமரசாமி போட்டிருந்தாராம். இதை அவரது தம்பி குமரேசமூர்த்தி அப்புறப்படுத்தியுள்ளார். இதை குமரசாமி தட்டிக்கேட்டதில் தகராறு ஏற்பட்டு குமரேசமூர்த்தியை குமரசாமியும், அவரது நண்பரும் சேர்ந்து கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த குமரேசமூர்த்தி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்பு தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதேபோல் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ள குமரசாமியும் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே உள்ள சம்பூராயர் கோடங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை. அ.தி.மு.க பிரமுகர். இவர் நேற்று சம்பூராயர் கோடங்குடியில் இருந்து சீர்காழிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நெம்மேலி அருகே கார் சென்று கொண்டிருந்த போது கையில் உருட்டு கட்டை, கற்ளை வைத்து கொண்டு 3 நபர்கள் காரை வழிமறித்தனர்.
உடனே அதிர்ச்சியுடன் ராஜதுரை காரை நிறுத்தினார். தொடர்ந்து 3 நபர்களும் கையில் வைத்திருந்த உருட்டு கட்டை மற்றும் கற்கலால் கார் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் ராஜதுரைக்கு காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் 3 பேரை தேடி வருகின்றனர்.
கீழ்வேளூர்:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை மது விலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ் பெக்டராக பணியாற்றி வருபவர் சுகுணா (வயது 45).
இவரை கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாகை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து நாகை ஆயுதப்படை பணிக்கு இன்ஸ்பெக்டர் சுகுணா சென்றார்.
இந்த நிலையில் நேற்று இரவு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்ஸ் பெக்டர் சுகுணா இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக போலீசார் அவரை மீட்டு நாகையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். இதையடுத்து முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே இன்ஸ்பெக்டர் சுகுணா ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்ததாகவும், மேலும் பணிசுமை காரணமாக அதிகளவில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல் பரவியது. இது போலீசார் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நாகை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இன்ஸ்பெக்டர் சுகுணா வீடு திரும்பினார்.
பின்னர் அவர் கூறும்போது, ‘‘ பணிசுமை காரணமாக தூக்க மாத்திரை தின்றதாக கூறப்படுவது தவறு. எனக்கு குறைந்த ரத்த அழுத்தம் உள்ளது. இதனால் எனக்கு சிறிது சோர்வு ஏற்பட்டதில் மயங்கி விழுந்தேன். வேறொன்றும் சொல்வதிற்கு இல்லை’’ என்றார்.
நாகையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், அவுரித்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமுதவிஜயரெங்கன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர்கள் குமார், ரகுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் சிவக்குமார் கலந்துகொண்டு பேசினார்.
வருவாய்த்துறையை அதன் பணித்தன்மையினை கருத்தில் கொண்டு சிறப்புத்துறையாக அறிவித்து தலைமை செயலக அலுவலர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். பணி நிமித்தமாக சென்னை செல்லும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தங்க வசதியாக விடுதி வளாகம் ஏற்படுத்தி தரவேண்டும். குறுவட்ட வருவாய் ஆய்வாளர் முதல் மாவட்ட வருவாய் அலுவலர் வரை செல்போனுக்கு இன்டர்நெட் வசதியுடன் மாதாந்திரக் கட்டண தொகையை உயர்த்தி வழங்கவேண்டும். குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு மாதாந்திர நிரந்தரப் பயணப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்.
கள ஆய்வுப்பணிக்கு சமூக பாதுகாப்பு திட்டப் பிரிவிற்கு என பிரத்யேகமாக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடம் தோற்றுவிப்பது. பதிவறை எழுத்தர்களுக்கு ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட தர ஊதியத்தை வழங்குவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில துணை தலைவர் பிரபாகரன், மாவட்ட பொருளாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் மேலவளவுகுடி பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 27). இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செங்கொடி செல்வி (24) என்ற இளம் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. இதையடுத்து கடந்த 18.1.2018 அன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு அன்பரசன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். உனது பெற்றோரிடம் சென்று புது மோட்டார் சைக்கிள், 10 பவுன் நகை வாங்கி வா என்று கூறி செங்கொடி செல்வியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார். இதனால் வேதனையடைந்த அவர் இது பற்றி சீர்காழி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசித்ரா மேரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள நாங்கூர் வடக்கு அக்ரஹார தெருவை சேர்ந்தவர் அண்ணா சீனிவாசன் (வயது 45). இவர் சீர்காழியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் அண்ணா சீனிவாசன், தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.
இன்று காலை அண்ணா சீனிவாசன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சென்னையில் இருந்த ஆசிரியர் அண்ணா சீனிவாசனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் இதுபற்றி திருவெண்காடு போலீசுக்கு தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அண்ணா சீனிவாசன் வீட்டில் பீரோவில் இருந்த ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது.
நள்ளிரவில் மர்ம கும்பல் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.
மேலும் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போய் உள்ளதா? என தெரியவில்லை. சென்னையில் இருந்து அண்ணா சீனிவாசன் வந்த பிறகு கொள்ளை போன நகை- பணம் குறித்த விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
ஆசிரியர் வீட்டில் கொள்ளை நடந்ச சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews






