search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sterile protest 10 dead"

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 3 பேரை நேற்று கைது செய்த டவுன் போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். #SterliteProtest #BanSterlite

    சேலம்:

    சேலம் தலைமை தபால் நிலையம் அருகே கடந்த 26-ந் தேதி மார்க்சிஸ்டு லெனினிஸ்டு மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் கையில் வைத்திருந்த பிளக்ஸ் பேனரில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் படங்கள் இடம் பெற்றிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீசார் அவர்களிடம் இருந்து அந்த பிளக்ஸ் பேனரை பிடுங்க முயன்றனர்.

    அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் மணிமாறன், செல்வக்குமார், மூர்த்தி ஆகிய 3 பேரை நேற்று கைது செய்த டவுன் போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.#SterliteProtest #BanSterlite

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது கண்டித்து நாகை மீனவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். #SterliteProtest #BanSterlite

    கீழ்வேளூர்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது. அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து நாகை மீனவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகை அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர், சமந்தான் பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 10 ஆயிரம் பைபர் படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    மேலும் மீனவர்கள் நாகை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட பொது மக்களை விடுதலை செய்ய வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமான மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டை கைது செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். #SterliteProtest #BanSterlite

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு இன்று ஒரளவு அமைதி திரும்பி உள்ளது. மூன்று நாட்களுக்கு பிறகு இன்று கடைகள் திறக்கப்பட்டுள்ளன. #SterliteProtest #BanSterlite

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் பெருமளவில் வன்முறை வெடித்தது. கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

    தூத்துக்குடி கலவர பூமியாக மாறி கடைகள் அடைக்கப்பட்டு பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சிறிய வாகனங்கள் கூட ஓடாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    வெளி மாவட்டங்களில் இருந்து போலீஸ் படை வர வழைக்கப்பட்டு தூத்துக்குடி நகரில் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். அதிரடிப் படையினரும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் நகரின் முக்கிய வீதிகளில் ரோந்து வந்து கண்காணித்தனர்.

    தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதை தடுக்க இணையதள சேவை முடக்கப்பட்டது.

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையான மாவட்ட கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும் மாற்றப்பட்டு உடனடியாக புதிய கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பதவி ஏற்றனர்.


    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு உறுதி அளித்ததுடன் முதல் கட்டமாக ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    புதிய கலெக்டர் பொறுப்பு ஏற்றதும் ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறி மக்களுக்கு நம்பிக்கையூட்டினார். மக்களுக்கு பால், குடிநீர், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

    முதல் கட்டமாக தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் 2 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து காய்கறிகள் வாங்கி சென்றனர். இதனால் நேற்று மக்கள் நடமாட்டம் காணப்பட்டது.

    இன்று அரசு ஆஸ்பத்திரி எதிரில் உள்ள அம்மா உணவகம் திறக்கப்பட்டது. மார்க்கெட்டுக்கு புதிய காய்கறிகள் வரத்தொடங்கியது. சிறு சிறு உணவகங்களும் திறக்கப்பட்டன. பால் வினியோகம் வழக்கம்போல் இருந்தது. பெட்ரோல் நிலையங்கள் திறக்கப்பட்டன.


    ஆனால் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்தன. புறநகர் பகுதிகளான புதுக்கோட்டை, முத்தையாபுரம், ஸ்பிக் நகர், ஆத்தூர், முக்காணி, வாகைக்குளம், ஒட்டப்பிடாரம், குறுக்கு சாலை ஆகிய இடங்களில் கடைகள் திறக்கப்பட்டன.

    ஸ்பிக், தெர்மல் உள்ளிட்ட ஆலைகளுக்கு வரும் லாரிகள் சில நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்தன. அவைகள் தொழிற்சாலைக்கு வரத் தொடங்கின. துறைமுக பணிகளும் முழுமையாக தொடங்கின.

    இன்று காலை 10 மணிக்கு மேல் தூத்துக்குடியில் இருந்து பஸ்கள் ஓடத் தொடங்கின. இதற்காக டெப்போக்களில் இருந்த பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து முதலில் நெல்லைக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. தொடர்ந்து மற்ற ஊர்களுக்கும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கார்- ஆட்டோ, இரு சக்கர வாகனங்களும் ஓடுகின்றன.


    தூத்துக்குடியில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று அது முடிவடைந்ததைத் தொடர்ந்து 27-ந்தேதி வரை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

    வெளியூர்களில் இருந்து வந்த போலீஸ் படை தொடர்ந்து தூத்துக்குடியிலேயே முகாமிட்டு உள்ளனர். கமாண்டோ படை வீரர்களும் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். தூத்துக்குடியில் அமைதி திரும்பினாலும் முழு அமைதி ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை வெளி மாவட்ட போலீஸ் பாதுகாப்பு நீடிக்கும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #SterliteProtest #BanSterlite 

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துக்கு தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. #SterliteProtest #BanSterlite

    மதுரை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

    சேலம் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பு ஏற்று முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். இதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இதில் ஈடுபட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    சாலை மறியல் போராட்டத்தை கைவிடக்கோரி போலீசார் வற்புறுத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும் 2 பெண்கள் உள்பட 30 பேரை கைது செய்னர்.

    மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.


    இதில் சி.ஐ.டி.யூ., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நேற்று மாலை புதிய பஸ் நிலையம் எதிரே அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தி.மு.க., ஆதி தமிழர் கட்சி, தமிழ்ப்புலிகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரத்தில் புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர். கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை கண்டித்தும், ‘ஸ்டெர்லைட்’ ஆலையை உடனே மூடக்கோரியும், தூத்துக்குடி மாவட்டத்தில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்யக்கோரியும், எடப்பாடி பழனிச்சாமி அரசை பதவி விலகக்கோரியும் கோ‌ஷம் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 54 பேரை கைது செய்தனர்.

    ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் புதிய பஸ் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்திராகாந்தி சிலை அருகே மாணவர் கூட்டமைப்பு சார்பிலும், காமராஜர் சிலை அருகில் மனித உரிமைகள் இயக்கம் சார்பிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ராஜா தியேட்டர் சந்திப்பிலும் மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 172 பேர் கைது செய்யப்பட்டனர்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., ஆஸ்டின் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசையும், போலீசையும் கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

    நாகர்கோவில் வேப்பமூட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. #SterliteProtest #BanSterlite

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துக்கு சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். #SterliteProtest #BanSterlite

    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டம், கோட்டை முற்றுகை போன்றவை நடைபெற்றது.

    அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட கலெக்டர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.

    முன்னாள் எம்.எல்.ஏ. பீமாராவ், மத்திய குழு உறுப்பினர் சம்பத் ஆகியோர் தலைமையில் நடந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் சாலையில் அமர்ந்து தமிழக அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள்.ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ததால் இந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.


    புரட்சி கர இளைஞர் முன்னணி சார்பில் திலீபன் தலைமையில் கோட்டை முற்றுகை போராட்டம், அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரிசர்வ் வங்கி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். வங்கியின் எதிர் புறத்தில் புரட்சிகர மாணவர் அமைப்பினர் கூடினர். கோட்டையை முற்றுகை முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் சாலையில் அமர்ந்து அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள். மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கலங்கர விளக்கம் அருகில் தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மீனவர் பிரிவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று காலையில் டெப்போ நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    321 போக்குவரத்து கழக பணிமனைக்கு முன்பு தொழிற்சங்க நிர்வாகிகள், டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னையில் உள்ள 32 பணிமனைகளிலும் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ. டி.யூ.சி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    டெப்போவில் இருந்து பஸ்களை இயக்குவதற்காக அதிகாலையில் வந்த தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். #SterliteProtest #BanSterlite

    ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஆரம்பத்திலேயே பா.ஜ.க. போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்கவில்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #SterliteProtest #BanSterlite #PonRadhakrishnan

    கோவை:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு-

    கேள்வி- ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

    ப- நான் அரசு முறை பயணமாக வெளிநாடு சென்று விட்டு இன்று காலை தான் சென்னை திரும்பினேன். நேரடியாக இங்கு வந்து விட்டேன். எங்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் பொள்ளாச்சியில் இன்று நடக்கிறது.

    அதில் பங்கேற்க செல்கிறேன். நான் யாரையும் சந்திக்கவில்லை. அவசரமாக இன்று மாலை டெல்லி புறப்பட்டு செல்கிறேன்.

    கே- உங்கள் கட்சி சார்பில் யாராவது தூத்துக்குடி செல்வார்களா?

    ப- அதனை கட்சி முடிவு செய்யும்.

    கே-ஸ்டெர்லைட் கலவரம் சம்பந்தமாக உங்கள் கருத்து என்ன?


    ப- ஸ்டெர்லைட் ஆலை வரக்கூடாது என ஆரம்பத்திலே பாரதீய ஜனதா போராட்டம் நடத்தியது. போராட்ட களத்தில் நானே இறங்கி போராடினேன். சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தேன். 3 நாட்கள் உண்ணாவிரதம் நடந்த போது என்னை கைது செய்தனர். அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கும் 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன். ஸ்டெர்லைட் ஆலை அமைந்தால் என்னென்ன நடக்கும் என்பதை அறிந்து ஆரம்பத்திலே போராடினோம்.

    தற்போது பலர் வே‌ஷம் போடுகிறார்கள். ஆரம்பத்திலே எதிர்ப்பு தெரிவித்தது பாரதிய ஜனதாதான். அப்போது மக்கள் ஆதரவு தரவில்லை.

    ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி கொடுத்தது தி.மு.க. உள்ளிட்ட அதன் பின்னர் வந்த மற்ற கட்சிகள் தான்.

    தற்போது துப்பாக்கி சூடு, பிணம் கிடப்பதற்கு காரணம் இவர்கள் தான். பாரதிய ஜனதா போராடும் போது மக்கள் ஆதரவு அளித்து இருந்தால் இன்று இந்த சம்பவம் நிச்சயம் நடைபெற்று இருக்காது. இது வருத்தமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் துப்பாக்கி சூட்டில் அதி நவீன ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டு இருக்கிறதே? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பொன். ராதாகிருஷ்ணன் பதில் அளிக்கும் போது, சம்பவத்தின் முழு விவரத்தை படிக்கவில்லை. என்னை பொறுத்தவரை இந்த சம்பவத்தில் முழு ஆய்வு நடத்தப்பட வேண்டும். அதன் பின்னணி, முடிவு தெரியாமல் கருத்து சொல்ல விரும்பவில்லை. காவல் துறையை பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கை காப்பாற்றும் வகையில் இருக்க வேண்டும் என்றார். #SterliteProtest #BanSterlite #PonRadhakrishnan

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துக்கு பாமக கட்சி தலைவர் ஜி.கே.மணி கண்டனம் தெரிவித்துள்ளார். #SterliteProtest #BanSterlite #PMK

    மேட்டூர்:

    பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர்கள் இறந்தது மிகவும் கண்டித்தக்கத்தது, வருத்தத்தை அளிக்கிறது.

    அதுமட்டுமின்றி 26 பேர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மக்களை காக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது மிகவும் கண்டித்தக்கது ஆகும். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #SterliteProtest #BanSterlite #PMK

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தை கண்டித்து திண்டுக்கல், பழனியில் போராட்டம் நடைபெற்றது. #SterliteProtest #BanSterlite

    திண்டுக்கல்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராகவும், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகவும் கோ‌ஷமிட்டனர்.


    இதனையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 54 பேரை கைது செய்தனர்.

    பழனியில் பைபாஸ் ரவுண்டானா அருகே டி.ஒய்.எப். ஐ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மற்றும் அவர்களுக்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இதற்கு மேலும் ஸ்டெர்லைட் ஆலையை அங்கு தொடர அனுமதிக்க கூடாது என்று கோ‌ஷங்கள் எழுப்பினர். #SterliteProtest #BanSterlite

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்ட படுகொலை என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #SterliteProtest #BanSterlite #Thirumavalavan

    சென்னை:

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மே 22- அரசப் பயங்கரவாதத்தின் கொடுந்துயர நாளாக அமைந்துவிட்டது. காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில்  மூன்று பெண்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

    பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து கவலைக் கிடமான வகையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50-க்கும் மேலானோர் காயமுற்று மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

    இந்தப் பெருந்துயர வன்கொடுமைகளைக் காவல் துறையினர் அரங்கேற்றியிருப்பது சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவதற்காகத் தான் என்று சொன்னால் அது ஏற்கக்கூடியதில்லை.

    இது திட்டமிட்ட ஒரு கொடூரமான அரசப் பயங்கரவாத ஒடுக்கு முறை! இனி எப்போதும் பொதுமக்கள் ஓரிடத்தில் பல்லாயிரக் கணக்கில் ஒன்று கூடும் எண்ணம் எழவே கூடாது என்கிற வகையில் முடிவெடுத்து நடத்தப்பட்ட ஒரு ‘பெருந்திரள் படுகொலை’.

    ஜல்லிக்கட்டு உரிமைக்காக மெரினாவில் மக்கள் கட்டுக்கடங்காத அளவில் குவிந்ததைப் போல, கட்சி சார்பற்ற பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் ஓரிடத்தில் திரளுவது, அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களை வெகுவாக அச்சுறுத்தியுள்ளது.

    அவ்வாறு இன்று தூத்துக்குடியில் பொது மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டெழுந்தது ஆளும் வர்க்கத்தினருக்குக் கடும் எரிச்சலை மூட்டியுள்ளது. அன்று மெரினா, இன்று தூத்துக்குடி (நாளை) எங்கோ என்கிற வகையில் அடுத்தடுத்து ‘பெருந்திரள் எழுச்சித்’ தொடர்ந்துவிடக் கூடாதென்கிற ஒரு தீர்க்கமான முடிவுக்கு அதிகார வர்க்கம் வந்துள்ளது. தூத்துக்குடியோடு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றே ஆளும் வர்க்கம் திட்டமிட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் தான் அவர்கள் அரங்கேற்றியுள்ள இந்தக் கோழைத்தனமான, காட்டு மிராண்டித்தனமான துப்பாக்கிச்சூடு.

    ஈழத்தில் முள்ளிவாய்க் காலில் சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலைக்கும் தூத்துக்குடியில் தமிழக அரசு நடத்தியுள்ள இந்தப் படுகொலைக்கும் என்ன வேறுபாடு? காலத்தாலும் மன்னிக்க முடியாத இக்கொடுஞ்செயலுக்குப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலகுவதுதான் தற்போதைக்கு ஆறுதலளிப்பதாக அமையும்.

    படுகொலை செய்து விட்டு பின்னர் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவதுதான் ஒரு மக்களரசின் அணுகு முறையாகுமா? உயிர் கொடுத்தேனும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம் எனப் போராடிப் பலர் களப்பலி ஆகியுள்ள நிலையில், அரசு உடனடியாக அந்த ஆலையை நிலையாக மூடுவதுதான் மக்களுக்கான அரசின் நடவடிக்கையாக அமையும்.

    இவ்வளவு கொடூரமான படுகொலைகளுக்குப் பின்னரும் அந்த ஆலை இயங்க அரசு அனுமதிக்குமேயானால், தமிழகத்தில் தன்னியல்பாக மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும். அது காலத்தால் தவிர்க்கமுடியாததாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #SterliteProtest #BanSterlite #Thirumavalavan

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது கண்டித்து ஊத்தங்கரையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #SterliteProtest #BanSterlite

    ஊத்தங்கரை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியானார்கள். இதையடுத்து ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய , மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் க.ஈழமுரசு, மாவட்ட பொறுப்பாளர்கள் வெங்கடேசன், விஷ்வா, செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை ஊத்தங்கரை போலீசார் கைது செய்தனர். #SterliteProtest #BanSterlite

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய தமிழக அரசு உடனே பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். #SterliteProtest #BanSterlite

    திண்டுக்கல்:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திண்டுக்கல்லில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 100 நாட்களாக அந்த மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை.

    மேலும் அவர்கள் போராட்டத்தை கண்டுகொள்ளவே இல்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டும் முயற்சியிலேயே அரசு தொடர்ந்து ஈடுபட்டு வந்தது.

    கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி பின்னர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

    தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ள நிலையில் அதைப்பற்றி கவலைப்படாத அரசு நச்சுக்காற்றினால் மனித உயிர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஏன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    மக்களுக்காக ஆட்சி செய்வதை விட்டு விட்டு முதலாளிகளுக்காக அவர்கள் ஆட்சி செய்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்கள் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் இதுவாகும்.

    10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் உயிருக்கு போராடி வருகின்றனர். இதற்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #SterliteProtest #BanSterlite

    ×