என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாணவர்கள் மறியல் போராட்டம்
    X

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாணவர்கள் மறியல் போராட்டம்

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துக்கு சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். #SterliteProtest #BanSterlite

    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டம், கோட்டை முற்றுகை போன்றவை நடைபெற்றது.

    அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட கலெக்டர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.

    முன்னாள் எம்.எல்.ஏ. பீமாராவ், மத்திய குழு உறுப்பினர் சம்பத் ஆகியோர் தலைமையில் நடந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் சாலையில் அமர்ந்து தமிழக அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள்.ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ததால் இந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.


    புரட்சி கர இளைஞர் முன்னணி சார்பில் திலீபன் தலைமையில் கோட்டை முற்றுகை போராட்டம், அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரிசர்வ் வங்கி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். வங்கியின் எதிர் புறத்தில் புரட்சிகர மாணவர் அமைப்பினர் கூடினர். கோட்டையை முற்றுகை முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் சாலையில் அமர்ந்து அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள். மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கலங்கர விளக்கம் அருகில் தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மீனவர் பிரிவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று காலையில் டெப்போ நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    321 போக்குவரத்து கழக பணிமனைக்கு முன்பு தொழிற்சங்க நிர்வாகிகள், டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னையில் உள்ள 32 பணிமனைகளிலும் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ. டி.யூ.சி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    டெப்போவில் இருந்து பஸ்களை இயக்குவதற்காக அதிகாலையில் வந்த தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். #SterliteProtest #BanSterlite

    Next Story
    ×