search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் அமைதி திரும்புகிறது
    X

    தூத்துக்குடியில் அமைதி திரும்புகிறது

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு இன்று ஒரளவு அமைதி திரும்பி உள்ளது. மூன்று நாட்களுக்கு பிறகு இன்று கடைகள் திறக்கப்பட்டுள்ளன. #SterliteProtest #BanSterlite

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் பெருமளவில் வன்முறை வெடித்தது. கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

    தூத்துக்குடி கலவர பூமியாக மாறி கடைகள் அடைக்கப்பட்டு பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சிறிய வாகனங்கள் கூட ஓடாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    வெளி மாவட்டங்களில் இருந்து போலீஸ் படை வர வழைக்கப்பட்டு தூத்துக்குடி நகரில் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். அதிரடிப் படையினரும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் நகரின் முக்கிய வீதிகளில் ரோந்து வந்து கண்காணித்தனர்.

    தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதை தடுக்க இணையதள சேவை முடக்கப்பட்டது.

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையான மாவட்ட கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும் மாற்றப்பட்டு உடனடியாக புதிய கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பதவி ஏற்றனர்.


    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு உறுதி அளித்ததுடன் முதல் கட்டமாக ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    புதிய கலெக்டர் பொறுப்பு ஏற்றதும் ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறி மக்களுக்கு நம்பிக்கையூட்டினார். மக்களுக்கு பால், குடிநீர், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

    முதல் கட்டமாக தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் 2 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து காய்கறிகள் வாங்கி சென்றனர். இதனால் நேற்று மக்கள் நடமாட்டம் காணப்பட்டது.

    இன்று அரசு ஆஸ்பத்திரி எதிரில் உள்ள அம்மா உணவகம் திறக்கப்பட்டது. மார்க்கெட்டுக்கு புதிய காய்கறிகள் வரத்தொடங்கியது. சிறு சிறு உணவகங்களும் திறக்கப்பட்டன. பால் வினியோகம் வழக்கம்போல் இருந்தது. பெட்ரோல் நிலையங்கள் திறக்கப்பட்டன.


    ஆனால் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்தன. புறநகர் பகுதிகளான புதுக்கோட்டை, முத்தையாபுரம், ஸ்பிக் நகர், ஆத்தூர், முக்காணி, வாகைக்குளம், ஒட்டப்பிடாரம், குறுக்கு சாலை ஆகிய இடங்களில் கடைகள் திறக்கப்பட்டன.

    ஸ்பிக், தெர்மல் உள்ளிட்ட ஆலைகளுக்கு வரும் லாரிகள் சில நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்தன. அவைகள் தொழிற்சாலைக்கு வரத் தொடங்கின. துறைமுக பணிகளும் முழுமையாக தொடங்கின.

    இன்று காலை 10 மணிக்கு மேல் தூத்துக்குடியில் இருந்து பஸ்கள் ஓடத் தொடங்கின. இதற்காக டெப்போக்களில் இருந்த பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து முதலில் நெல்லைக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. தொடர்ந்து மற்ற ஊர்களுக்கும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கார்- ஆட்டோ, இரு சக்கர வாகனங்களும் ஓடுகின்றன.


    தூத்துக்குடியில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று அது முடிவடைந்ததைத் தொடர்ந்து 27-ந்தேதி வரை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

    வெளியூர்களில் இருந்து வந்த போலீஸ் படை தொடர்ந்து தூத்துக்குடியிலேயே முகாமிட்டு உள்ளனர். கமாண்டோ படை வீரர்களும் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். தூத்துக்குடியில் அமைதி திரும்பினாலும் முழு அமைதி ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை வெளி மாவட்ட போலீஸ் பாதுகாப்பு நீடிக்கும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #SterliteProtest #BanSterlite 

    Next Story
    ×