search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பாஜக போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்கவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பாஜக போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்கவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

    ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஆரம்பத்திலேயே பா.ஜ.க. போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்கவில்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #SterliteProtest #BanSterlite #PonRadhakrishnan

    கோவை:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு-

    கேள்வி- ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

    ப- நான் அரசு முறை பயணமாக வெளிநாடு சென்று விட்டு இன்று காலை தான் சென்னை திரும்பினேன். நேரடியாக இங்கு வந்து விட்டேன். எங்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் பொள்ளாச்சியில் இன்று நடக்கிறது.

    அதில் பங்கேற்க செல்கிறேன். நான் யாரையும் சந்திக்கவில்லை. அவசரமாக இன்று மாலை டெல்லி புறப்பட்டு செல்கிறேன்.

    கே- உங்கள் கட்சி சார்பில் யாராவது தூத்துக்குடி செல்வார்களா?

    ப- அதனை கட்சி முடிவு செய்யும்.

    கே-ஸ்டெர்லைட் கலவரம் சம்பந்தமாக உங்கள் கருத்து என்ன?


    ப- ஸ்டெர்லைட் ஆலை வரக்கூடாது என ஆரம்பத்திலே பாரதீய ஜனதா போராட்டம் நடத்தியது. போராட்ட களத்தில் நானே இறங்கி போராடினேன். சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தேன். 3 நாட்கள் உண்ணாவிரதம் நடந்த போது என்னை கைது செய்தனர். அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கும் 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன். ஸ்டெர்லைட் ஆலை அமைந்தால் என்னென்ன நடக்கும் என்பதை அறிந்து ஆரம்பத்திலே போராடினோம்.

    தற்போது பலர் வே‌ஷம் போடுகிறார்கள். ஆரம்பத்திலே எதிர்ப்பு தெரிவித்தது பாரதிய ஜனதாதான். அப்போது மக்கள் ஆதரவு தரவில்லை.

    ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி கொடுத்தது தி.மு.க. உள்ளிட்ட அதன் பின்னர் வந்த மற்ற கட்சிகள் தான்.

    தற்போது துப்பாக்கி சூடு, பிணம் கிடப்பதற்கு காரணம் இவர்கள் தான். பாரதிய ஜனதா போராடும் போது மக்கள் ஆதரவு அளித்து இருந்தால் இன்று இந்த சம்பவம் நிச்சயம் நடைபெற்று இருக்காது. இது வருத்தமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் துப்பாக்கி சூட்டில் அதி நவீன ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டு இருக்கிறதே? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பொன். ராதாகிருஷ்ணன் பதில் அளிக்கும் போது, சம்பவத்தின் முழு விவரத்தை படிக்கவில்லை. என்னை பொறுத்தவரை இந்த சம்பவத்தில் முழு ஆய்வு நடத்தப்பட வேண்டும். அதன் பின்னணி, முடிவு தெரியாமல் கருத்து சொல்ல விரும்பவில்லை. காவல் துறையை பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கை காப்பாற்றும் வகையில் இருக்க வேண்டும் என்றார். #SterliteProtest #BanSterlite #PonRadhakrishnan

    Next Story
    ×