என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    திருக்குவளை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    கீழ்வேளூர்:

    நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம், திருக்குவளை அருகே உள்ள மேலவாக்கரையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள மக்கள் அங்குள்ள போர்வெல் மூலமாக குடிநீர் பெற்று பயன்படுத்தி வந்தனர். தற்போது போர்வெல் பழுது ஏற்பட்டதாலும், நிலத்தடி நீர் குறைந்து விட்டதாலும், சுமார் 2 மாதமாக அந்த பகுதிக்கு குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பெண்கள் பக்கத்து ஊருக்கு சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.

    குடிநீர் பற்றாக்குறை குறித்து பல முறை அதிகாரிகளிடம் அந்த பகுதியில் உள்ளவர்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மேலவாக்கரை மெயின் ரோட்டில் இன்று காலை காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். 

    தகவலறிந்து அங்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி மற்றும் திருக்குவளை போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 1 வாரத்திற்குள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மயிலாடுதுறை அருகே லாரி டிரைவர் கொலை வழக்கில் தாய்மாமன் உள்பட 3 பேர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தனர். மேலும் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள அதிமானபுருஷன் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது48). லாரி டிரைவர். இவர் கடந்த 24-ந் தேதி அவரது வீட்டு வாசல் முன்பு வெட்டிக்கொல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது மனைவி சித்ராவும் படுகாயம் அடைந்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட சேட்டுவின், தாய்மாமன் அதிமானபுருஷன் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் காந்தி (54), இவருடைய உறவினர் பாபு(27), பாபுவின் நண்பர் சென்னையை சேர்ந்த சக்தி(24) ஆகிய 3 பேர் சேட்டு கொலை தொடர்பாக காளி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் வினோத்திடம் சரண் அடைந்தனர். உடனே கிராம நிர்வாக அலுவலர் 3 பேரையும் மணல்மேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காந்திக்கும், சேட்டுக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல், காந்திக்கு சொந்தமான இடத்தில் மதுக்கடை அமைத்ததை தடுத்தது, சேட்டுவின் மகள் திருமண பத்திரிக்கையில் காந்தியின் பெயர் போடாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சேட்டுவுக்கும், காந்திக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இந்த முன்விரோதம் காரணமாக ஒருவரை ஒருவர் கொலை செய்ய திட்டம் தீட்டியதும், இதில் காந்தி முந்திக்கொண்டு கூலிப்படை உதவியுடன் சேட்டுவை கொலை செய்ததும் தெரியவந்தது.

    இந்நிலையில் சேட்டுவை கொலை செய்ததற்கு பணம் வாங்குவதற்காக கூலிப்படையை சேர்ந்த ஒரு வாலிபர் மணல்மேடு பகுதிக்கு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மணல்மேட்டில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல்மேடு பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், கும்பகோணம் சாக்கோட்டை மருதாநல்லூரை சேர்ந்த கார்த்தி (29) என்பதும், அவர் சேட்டை கொலை செய்த கூலிப்படையை சேர்ந்தவரில் ஒருவர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் காந்தி, பாபு, சக்தி, கார்த்தி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை, மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சேட்டு கொலை வழக்கு தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 
    சீர்காழி நகரில் சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்கவும் குற்றங்களை தடுக்கவும் 38 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க உள்ளதாக எஸ்.பி. கூறியுள்ளார்.
    சீர்காழி:

    சீர்காழி காவல் நிலையத்தில் நாகப்பட்டிணம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சஞ்சய்சேகர் அலுவல் ஆய்வு பணி மேற்கொண்டார்.அப்போது காவல்நிலையத்தில் உள்ள பதிவேடுகள், குற்றபதிவேடுகள், ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வுசெய்தார். வழக்கு விவரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது நிருபர்களிடம் எஸ்.பி. தேஷ்முக்சஞ்சய் கூறுகையில், சீர்காழியில் போக்குவரத்தை சீரமைக்கும் வகையிலும், குற்ற நடவடிக்கைகளை தடுத்திடும் வகையிலும், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்கவும் 38 இடங்களில் உயர் அதி நவீன கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படவுள்ளது. அதன் கன்ட்ரோல்யூனிட் மற்றும் கண்காணிப்பு மானிட்டர்கள் என அனைத்து கணினி சேவைகளும் மகளிர் காவல்நிலையத்தில் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படவுள்ளது.

    தேர்வு பெற்ற காவலர்களுக்கு பயிற்சி காலம் முடிந்தவுடன் உயர் காவல் அதிகாரிகளின் உத்தரவின்படி போதிய காவலர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். போக்குவரத்து நெருக்கடியை சீரமைக்கும் வகையில் சைரன் வைத்த இருசக்கரவாகனத்தில் ரோந்து போலீசார் நகர் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுப்படுத்தப்படுகின்றனர் என்றார். ஆய்வின்போது டி.எஸ்.பி சேகர், இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு ஆகியோர் உடனிருந்தனர்.#tamilnews
    நாகையில் அஞ்சல் ஊழியர்கள் நேற்று 10-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே அமல்படுத்தக்கோரியும், சங்க உறுப்பினர் சரிபார்ப்பை உடனே வெளியிட வலியுறுத்தியும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்று 10-வது நாளாக நடைபெற்றது. போராட்டத்தை தொடர்ந்து நேற்று நாகை தலைமை தபால் நிலையம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து அஞ்சலக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஜி.டி.எஸ். கோட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தை கோட்ட அஞ்சல் செயலாளர் விஜயராகவன் தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் அன்பழகன், திருவாரூர் கிளை செயலாளர்கள் ரேணுகா, கோவிந்தராஜ், சண்முகநாதன், மீனாட்சிசுந்தரம், சட்டநாதன், பிரபாகரன், ராஜா, குமரவேலு, அரிதாஸ் உள்பட அனைத்து ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தை சேர்ந்த முருகானந்தம் நன்றி கூறினார்.

    அஞ்சல் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக தபால் நிலையத்தில் கடந்த 10 நாட்களாக பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தபால் நிலையம் முன்பு உள்ள ஏ.டி.எம். மையமும் 10 நாட்களாக மூடப்பட்டுள்ளது. 
    வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்தில் பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 29-ந்தேதி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் தங்களை ஒரு தனியார் மாத இதழின் நிருபர்கள் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேடு அதிகம் உள்ளதாகவும் இது குறித்து பத்திரிகையில் செயல் அலுவலர் பெயருடன் செய்தி வெளியிடாமல் இருக்க தங்களுக்கு பணம் தர வேண்டும் என்று கேட்டு ஊழியர்களிடம் மிரட்டல் விடுத்தனர். இதன்பின் அவர்கள், தாங்கள் மீண்டும் வரும் போது தங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறிவிட்டு அலுவலகத்தில் இருந்து வெளியேறினர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 3 பேரும் மீண்டும் வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.

    அப்போது அவர்கள் தங்களின் பத்திரிகையின் 10-ம் ஆண்டு நிறைவு விழா விரைவில் கொண்டாடப்பட உள்ளதால் பணம் தர வேண்டும். அல்லது பேரூராட்சியில் சுத்தம் இல்லை என செயல் அலுவலர் பெயர் மற்றும் படங்களுடன் செய்தி வெளியிடுவோம் என்று மிரட்டினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பேரூராட்சி ஊழியர்கள் உடனே நாகையில் உள்ள சில பத்திரிக்கையாளர்களை தொடர்பு கொண்டு இதுகுறித்து கூறியுள்ளனர். உடனே நாகையில் உள்ள பத்திரிக்கையாளர்கள் சிலர் வேளாங்கண்ணிக்கு சென்று விசாரணை செய்தபோது அவர்கள் போலி நிருபர்கள் என்பது தெரியவந்தது. உடனே இது குறித்து வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் தஞ்சை மாவட்டம் பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சரவணன்(வயது39), சென்னை சிட்லபாக்கம் வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் மகன் கோபாலகிருஷ்ணன்(32), சீர்காழி எடமணல் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முத்துராஜா(21 ) என்பதும், இவர்கள் போலி நிருபர்கள் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் போலி நிருபர்கள் 3 பேர் மற்றும் கார் டிரைவர் பழனிவேல்(45)ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
    குத்தாலம் அருகே டியூசன் முடிந்து வந்த 10-ம் வகுப்பு மாணவனை கும்பல் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குத்தாலம்:

    குத்தாலம் அருகே உள்ள பெரிய செங்குந்தர் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 45). கொத்தனார். இவரது மனைவி புவனேஷ்வரி (36). இவர்களுடைய மகன் அபினேஷ்வரன் (14). பேரளந்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இந்நிலையில் நேற்று அபினேஷ்வரன் பள்ளிக்கு டியூசன் சென்றுள்ளான். பின்னர் டியூசன் முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக பேரளந்தூர் பகுதியில் உள்ள கோமல் ரோட்டில் பஸ்சிற்காக காத்திருந்துள்ளான். இதை நோட்டம் விட்டு கொண்டிருந்த 2 நபர்கள் புவனேஷ்வசனிடம் பேச்சு கொடுத்து நாங்கள் உன்னை வீட்டில் விட்டு விடுகிறோம் என்று கூறி அபினேஷ்வரனை மோட்டார் சைக்கிளில் ஏற்றி உள்ளனர். அவர்கள் கூறியதை நம்பி அபினேஷ்வரனும் மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளான்.

    உடனே 2 நபர்களும் அவன் வாயை மூடி மயிலாடுதுறை அருகே கொண்டு சென்றுள்ளனர். இதையறிந்த அபினேஷ்வரன் வாயை மூடிய நபர் கையை கடித்து அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளான். அவர்கள் இருவரும் அபினேஷ்வரனை துரத்தியுள்ளனர். பின்னர் மயிலாடுதுறை ரெயில்வே நிலையத்திற்கு சென்றுள்ளான். அங்கு காவலுக்கு நின்று கொண்டிருந்த போலீசார் அபினேஷ்வரன் பதட்டமாக வருவதை பார்த்து அவனை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதைதொடர்ந்து போலீசார் அபினேஷ்வரனை மீட்டு அவனது வீட்டிற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு உதவி மைய அலுவலர் சிவராமன் முன்னிலையில் அபினேஷ்வரனை அவனது தாய் புவனேஷ்வரியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி கணவரை கொன்ற சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் அண்ணாநகரை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 48).

    இவர் கோவையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரேகா (வயது 33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. ரேகாவுக்கும் மேல பாதியைச் சேர்ந்த ராஜசேகர் (38) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த கள்ளக்காதல் விவகாரம் அறிவழகனுக்கு தெரியவந்தது.

    இதனால் அவர் மனைவி ரேகாவை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவையில் இருந்து அறிவழகன் செம்பனார்கோவிலுக்கு வந்தார். வழக்கம் போல் கள்ளக்காதல் குறித்து மனைவியிடம் தகராறு செய்தார்.

    தொடர்ந்து கணவர் அறிவழகன் கள்ளக்காதலுக்கு இடையூறு செய்து வந்ததால் ரேகா ஆத்திரமடைந்தார். இதனால் கள்ளக்காதலன் ராஜசேகரை சந்தித்து கணவர் அறிவழகனை கொல்ல திட்டம் தீட்டினார். அதற்கு ராஜசேகரும் உடன் பட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மது குடித்து விட்டு அறிவழகன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் குடிபோதையில் மனைவி ரேகாவிடம் அவரது கள்ளக்காதல் குறித்து தரக்குறைவாக திட்டினார். பின்னர் சிறிது நேரம் பேசிய அறிவழகன் அப்படியே தூங்கி விட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரேகா, அறிவழகனை கொல்ல முடிவு செய்து கள்ளக்காதலன் ராஜசேகரனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் அங்கு வந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த அறிவழகனை ராஜசேகரும், ரேகாவும் தலையணையால் அமுக்கினர். இதில் மூச்சு திணறி அறிவழகன் பரிதாபமாக இறந்தார்.

    இருவரும் மாரடைப்பால் அறிவழகன் இறந்ததாக கூறி உறவினர்களை நம்பவைத்து விடலாம் என்று திட்டம் போட்டனர். அதன்படி ரேகா, அறிவழகன் தூங்கும் போது மாரடைப்பால் இறந்ததாக உறவினர்களிடம் தெரிவித்தார். இதனால் உறவினர்கள் இன்று காலை அறிவழகன் வீட்டுக்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது அவர்கள் ரேகா பேச்சில் சந்தேகம் அடைந்தனர். இதனால் அறிவழகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் செம்பனார் கோவில் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் மயிலாடுதுறை டி.எஸ்.பி. வெங்கடேசன் மற்றும் போலீசார் அறிவழகன் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ரேகாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கள்ளக்காதலன் ராஜசேகருடன் சேர்ந்து கணவர் அறிவழகனை கொலை செய்து விட்டதாக கூறினார்.

    இதையடுத்து போலீசார் ரேகாவை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக இருந்து வரும் ராஜசேகரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி கணவரை கொன்ற சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி அருகே விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பம் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கொடி கம்பங்களை மர்ம கும்பல் உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் மருவத்தூர் கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி அப்பகுதியில் டியூப் லைட்டுகளை கட்டி வைத்திருந்தனர். இதை நேற்று இரவு ஒரு மர்ம கும்பல் அடித்து உடைத்துள்ளனர். இந்த சம்பவம் கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் மருவத்தூர் கிராமம் காந்தி நகரில் அமைக்கப்பட்டிருந்த வி.சிறுத்தை கட்சிகளின் கொடிகம்பம் உடைக்கப்பட்டு சேதப்படுத்த பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு பார்வையிட்டனர்.

    இதேபோல் விடுதலை சிறுத்தை கட்சி கொடிகம்பம் சேதப்படுத்த பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கொடிகம்பம் உள்ளது. இதையும் மர்ம கும்பல் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த கம்யூனிஸ்டு கட்சியினரும் பார்வையிட்டனர்.

    இந்த சம்பவங்கள் குறித்து தனித்தனியாக வைத்தீஸ்வரன் கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிங்கார வேலு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கொடி கம்பங்களை சேதப்படுத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    தமிழகம் முன்னேற ஆட்சி மாற்றம் தேவை என்று வேதாரண்யத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார். #BJP #HRaja
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கரியாப்பட்டினம் கடைத்தெரு பகுதியில் பா.ஜனதா சார்பில் ‘‘உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்’’ மாநில கல்வியாளர் பிரிவு செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. தஞ்சை கோட்ட பொறுப்பாளர் வரதராஜன், நாகை தெற்கு மாவட்டத் தலைவர் நேதாஜி, மாவட்டச் செயலாளர் தமிழ்நேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

    காவிரி பிரச்சனைக்கு முக்கிய காரணம் தி.மு.க.வும், அதற்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சியும்தான். 50 ஆண்டு கால ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்யாமல் அதற்கு போடப்பட்ட நீதிமன்ற வழக்கையும் தள்ளுபடி செய்து துரோகம் செய்தது தி.மு.க.தான். மக்களை ஏமாற்றும் கட்சியாகவும், துரோகியாகவும் உள்ள தி.மு.க. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் கம்யூ. கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றனர். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தனது செயல்பாடுகள் மற்றும் பேச்சுகள் மூலம் தான் அரசியலில் இருப்பதற்கு தகுதியில்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

    தற்போது தமிழகம் உலகிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக உள்ளது. 50 ஆண்டு காலமாக தமிழ்நாடு திராவிட கட்சிகளால் முன்னேறவில்லை. தமிழகம் முன்னேற ஆட்சி மாற்றம் தேவை.

    இவ்வாறு எச்.ராஜா பேசினார்.

    முன்னதாக கோவில் பத்து ஊராட்சியிலிருந்து மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் தொடங்கிய சைக்கிள் பேரணியை மாநில செயலாளர் வேதரத்தினம் தொடங்கி வைத்தார். #BJP #HRaja
    கம்யூனிஸ்டு கட்சி கொடி கம்பங்களை சேதப்படுத்திய பா.ம.க.வினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு காடந்தெத்தி பேருந்து நிறுத்தம் அருகில் அ.தி.மு.க., தி.மு.க., இந்திய கம்னியூஸ்டு, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்டு பாமக ஆகிய அரசியல் கட்சிகளின் கொடி மரங்கள் உள்ளன. நேற்று பா.ம.க. கொடி மரத்தில் இருந்த பழைய கொடியை அகற்றிய அக்கட்சியினர் புதிய கொடியை ஏற்றி காடுவெட்டி குரு இறந்ததையொட்டி அரைக்கம்பத்தில் பறக்க விட்டிருந்தனர். 

    அப்போது அந்த இடத்தில் இருந்த தி.மு.க., அ.தி.மு.க, கம்னியூஸ்டு கட்சிகளின் கொடி கம்பங்களை சேதப்படுத்தி உளளனர்.இதைத் தொடர்ந்து கொடி கம்பங்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி இந்திய கம்னியூஸ்டு கட்சி ஒன்றியச் செயலாளர் மகேந்திரன், தலைமையில் தி.மு.க., அ.தி.மு.க., கம்னியூஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    இதுபற்றி தலைஞாயிறு போலீசார் வழக்கு பதிவுசெய்து காடந்தெத்தியைச் சேர்ந்த பா.ம.க. ஒன்றிய விவசாய சங்க ஒன்றியத்தலைவர் காந்தி மற்றும் முருகேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    காடுவெட்டி குரு மரணம் அடைந்ததால் மயிலாடுதுறை மற்றும் சுவாமிமலையில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    மயிலாடுதுறை:

    பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராகவும், வன்னியர் சங்க தலைவராகவும் இருந்து வந்தவர் காடுவெட்டி குரு (வயது 57).

    இவர் கடந்த 12-ந் தேதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு உடல்நிலை மோசமானதால் காடுவெட்டி குரு மரணம் அடைந்தார்.

    மரணம் அடைந்த காடுவெட்டி குரு, கடந்த 2001-ம் ஆண்டில் ஆண்டிமடம் தொகுதியிலும், 2011-ம் ஆண்டில் ஜெயங்கொண்டம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

    காடுவெட்டி குருவின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பா.ம.க. நிர்வாகிகள், கட்சியினர், மற்றும் கிராம மக்கள் காடுவெட்டி உட லுக்கு அஞ்சலி செலுத் தினர்.

    இந்த நிலையில் காடுவெட்டி குரு மரணம் அடைந்த செய்தியை அறிந்து பா.ம.க. வினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் மயிலாடுதுறை பகுதியில் இன்று அதிகாலை அரசு பஸ்சை கல்வீசி கண்ணாடிகளை தாக்கி உடைத்தனர்.

    மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சி பகுதியில் சிவபிரியா நகர் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஒரு அரசு பஸ் வந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் திடீரென அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    பின்னர் அங்கிருந்து மர்ம கும்பல் தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் பற்றி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார், அரசு பஸ்சை உடைத்த மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.

    மயிலாடுதுறை நகரில் இன்று காலை 10 மணியளவில் திடீரென வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். காடுவெட்டி குரு மரண மடைந்ததையொட்டி கடை அடைக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மயிலாடுதுறை பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதையொட்டி அப்பகுதியில் பதட்டமான நிலை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கும்பகோணம் அருகே சுவாமி மலை பகுதியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன.

    சுவாமிமலை சன்னதி தெருக்கள், மற்றும் திருவையாறு மெயின் ரோடு பகுதிகளில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் சுவாமிமலை பகுதியில் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காடுவெட்டி குரு மரணம் அடைந்ததையொட்டி சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய இடங்களில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    சீர்காழி அருகே நேற்று நள்ளிரவில் விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பத்தை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே சட்ட நாதபுரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் உள்ளது. இந்த கொடி கம்பத்தில் கடந்த ஏப்ரல் மாதம் திருமாவளவன் கொடியேற்றி வைத்தார்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை வெட்டி சாய்த்து சேதப்படுத்தினர்.

    கொடி கம்பம் சேதப்படுத்திய தகவல் கிடைத்ததும் கட்சி நிர்வாகிகள் திரண்டனர். தொகுதி பொறுப்பாளர் தாமு இனியவன், செய்தி தொடர்பாளர் தேவா, மாவட்ட துணை செயலாளர் காமராஜ் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்து பார்வையிட்டனர்.

    பின்னர் இந்த சம்பவம் பற்றி சீர்காழி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை சேதப்படுத்திய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×