என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன உளைச்சலுடன் கேரளாவுக்கு நீட் தேர்வு எழுத செல்கிறேன்- நாகை மாணவி பேட்டி
    X

    மன உளைச்சலுடன் கேரளாவுக்கு நீட் தேர்வு எழுத செல்கிறேன்- நாகை மாணவி பேட்டி

    மன உளைச்சலுடன் கேரளாவுக்கு நீட் தேர்வு எழுத செல்கிறேன் என்று நாகை மாணவி துர்காதேவி தெரிவித்துள்ளார். #neet

    குத்தாலம்:

    மருத்துவ படிப்பில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஆண்டு முதல் மத்திய அரசு நீட் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதுடன், ஏழை மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்வதற்கே பல ஆயிரம் கடன் வாங்கி செல்ல வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    நாகை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அருகே எலந்தங்குடி கிராமத்தில் கொத்தனார் வேலை பார்க்கும் முருகன் என்பவரின் மகள் துர்காதேவி அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகிறார். இவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இவருக்கு தற்போது எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு, ஹால்டிக்கெட் வந்ததை கண்டு துர்காதேவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.


    இதுகுறித்து துர்காதேவி கூறும்போது, டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஏழை குடும்பத்தில் பிறந்தாலும் எனது ஆசையை நிறைவேற்ற பெற்றோர் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். நீட்டிற்கு விண்ணப்பித்த போது விருப்ப தேர்வு மையங்களாக புதுச்சேரி, திருச்சி, கோவை ஆகிய தமிழக மாவட்டங்களைத்தான் தேர்வு செய்திருந்தேன். ஆனால் நான் தேர்வு செய்யாத வெளி மாநிலமான எர்ணாகுளத்தில் எனக்கு தேர்வு மையத்தை ஒதுக்கியுள்ளனர். இது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

    இதுகுறித்து மாணவியின் தந்தை முருகன் கூறுகையில் கொத்தனார் வேலை பார்த்து வந்தாலும் எனது மகள் துர்காதேவி டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் கடன்வாங்கி படிக்க வைத்து வருகிறேன். நீட் தேர்வு எழுத கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்ல வேண்டி உள்ளது. அங்கு செல்வதற்கு ரூ.5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை செலவு ஆகும். அதற்கும் கடன் வாங்கித்தான் செல்கிறோம்.

    தமிழக அரசு ரூ.1000 உதவித்தொகையை அறிவித்துள்ளது. எப்படி நாங்கள் அரசு உதவித்தொகையை பெற முடியும். மாணவர்களுக்கு எந்தெந்த மாநிலங்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு அதற்கான அனைத்து செலவுத் தொகையையும் முழுமையாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்றார். #tamilnews #neet

    Next Story
    ×