என் மலர்
செய்திகள்

நாகையில் டாஸ்மாக் கடை ஊழியர்களை தாக்கி பணம் கொள்ளை
கீழ்வேளூர்:
நாகையை அடுத்த வேளாங்கண்ணியில் செயல்படும் டாஸ்மாக் மதுபான கடையில் நேற்று இரவு 9.30 மணியளவில், சூப்பர்வைசர் பாஸ்கரன், சேல்ஸ்மேன்கள் பிரபாகரன், லெட்சுமணன், ஆகியோர் பணியில் இருந்தனர்.
அப்போது திடீரென கையில் பட்டா கத்தியுடன் முகமூடி அணிந்து 3 பேர் வந்தனர். அவர்கள் கடையில் மது வாங்கி கொண்டிருந்தவர்களை மிரட்டி அப்புறப்படுத்தி விற்பனையாளரை தள்ளி விட்டு ஒருவர் கடைக்குள் நுழைந்தார்.
ஒருவர் வாசலில் பட்டாக் கத்தியுடன் காவலுக்கு நின்று கொண்டார். மற்றொருவர் இருசக்கர வாகனத்தில் வெளியே காத்திருந்தார். கடைக்குள் நுழைந்த கொள்ளையன் சூப்பர்வைசரை மிரட்டி விற்பனையான பணம் முழுவதையும் கேட்டான். அதற்கு சூப்பர்வைசர் விற்பனை பணத்தை கொடுத்து அனுப்பி விட்டதாக கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் சூப்பர்வைசரை தாக்கி கல்லாவில் இருந்த ரூ.15 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சி.சி.டி கேமராவை ஆய்வு செய்து கேமராவில் பதிவாகி உள்ள கொள்ளையர்கள் உருவ படத்தை வைத்து அவர்களை தேடி வருகின்றனர்.






