search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister OS Manian"

    வேதாரண்யம் அருகே வாக்குப்பதிவு எந்திரம் செயல்படாததால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் 22 நிமிடம் காத்திருந்து வாக்களித்தார். #Loksabhaelections2019 #OSManian
    வேதாரண்யம்:

    தமிழகம் முழுவதும் இன்று பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரடியன்புலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று காலை வாக்களிக்க வந்தார். அப்போது வாக்குப்பதிவு எந்திரம் செயல்படாததால் 22 நிமிடம் காத்திருந்து வாக்களித்தார்.

    இதேபோல வேதாரண்யம் எஸ்.கே.சுப்பையா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு எந்திரங்களை அதிகாரிகள் கையாள தெரியாததால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குபதிவு 45 நிமிடம் தாமதமாக 7.45 மணிக்கு தொடங்கியது. சீர்காழி ச.மு.இ. மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் எந்திரம் பழுதாகி 6 பேர் போட்ட ஓட்டு டெலிட் ஆகிவிட்டது. பின்னர் அதில் 4 பேர் மீண்டும் அழைத்து வரப்பட்டு அவர்கள் ஓட்டை பதிவு செய்தனர். #Loksabhaelections2019 #OSManian
    நாகை மாவட்டத்தில் புயல் பாதிக்கப்பட்ட 181 கிராமங்களில் இதுவரை 157 கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார். #GajaCyclone #OSManian
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு விவரங்களை கிராம நிர்வாக அலுவலர் மூலம் கணிணியில் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது.

    இந்த பணியினை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதையடுத்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:-

    நாகை மாவட்டத்தில் உள்ள 236 கிராம புறங்களில் 181 கிராமங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்ற வருகிறது.

    இதுவரை 157 கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி முழுமையாக முடிக்கப்பட்டு 82 கிராமங்களின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் 75 கிராமங்களின் விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகின்றன. 24 கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் மற்றும் வேளாண்மை உற்பத்தித்துறை ஆணையர் சுகன்தீப் சிங் பேடி, மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். #GajaCyclone #OSManian
    எழும்பூரில் உள்ள கோ.ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டுமாளிகையில் தீபாவளி சிறப்பு விற்பனை நிலையத்தை கைத்தறி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
    சென்னை:

    கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி நிறுவனம் அகில இந்திய அளவில் முன்னணி கைத்தறி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. எழும்பூரில் உள்ள கோ.ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டுமாளிகையில் தீபாவளி சிறப்பு விற்பனை நிலையத்தை கைத்தறி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், அனைத்து விற்பனை நிலையங்களிலும் கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் அரசு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. தீபாவளியையொட்டி கோ- ஆப்டெக்ஸ்சில் 1000 புட்டா, சில்க் காட்டன் சேலைகள், மகளிருக்கான பட்டு துப்பட்டாக்கள், பருத்தி துப்பட்டாக்கள், ஆடை ரகங்கள், அலங்காரகைப்பைகள், ஆண்களுக்கான பருத்தி சட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

    முன்னதாக கோ-ஆப் டெக்சின் 2017-18-ம் ஆண்டு தங்கமழை திட்டத்தின் கீழ் சென்னை மண்டலத்தில் வெற்றிபெற்ற வாடிக்கையாளர்கள் 5 பேருக்கு முதல் பரிசாக 8 கிராம் தங்க காசுகளையும் 15 பேருக்கு 2-ம் பரிசாக 4 கிராம் தங்க காசுகளையும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கைத்தறி, கதர்துறை அரசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் வெங்கடேஷ், கதர்துறை இயக்குனர் முனியநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது இலங்கை மீனவர்கள் தான் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார். #OSManiyan #FishermenAttacked
    சென்னை:

    கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் கடந்த சில தினங்களாக நடுக்கடலில் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். துப்பாக்கியுடன் திடீரென வந்து சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தும் மர்ம நபர்கள், தமிழக மீனவர்களிடம் இருந்து மீன்கள் மற்றும்  மீன்பிடி பொருட்களை கொள்ளையடித்துச் செல்கின்றனர். அவர்கள் கடற்கொள்ளையர்களாக இருக்கலாம் என தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.



    இந்நிலையில் இன்று கோடியக்கரை அருகே இரு வேறு இடங்களில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் 9 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜிபிஎஸ் கருவிகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்டவற்றை பறித்து சென்றுள்ளனர்.  தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுபற்றி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறும்போது, தமிழக மீனவர்களை தாக்கியது இலங்கை மீனவர்கள்தான் என்று தெரிவித்தார்.  தாக்குதல் குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், கடல் எல்லையில் ரோந்துப் பணியினை துரிதப்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் அவர் கூறினார். #OSManiyan #FishermenAttacked
    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கட்சியில் படிப்படியாக பதவிகளில் இருந்து உயர்ந்தவர். அப்படிப்பட்டவரை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சிப்பது கண்டனத்துக்குரியது என்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். #DMK #Thirunavukkarasar
    கோவை:

    கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்று அவர் கூடுதலாக சில பகுதிகளுக்கு செல்வதால் அவர் கோவை வருவதில் தாமதம் ஆகி இருக்கிறது என்றார்.

    கேள்வி-எத்தனை கட்சிகள் கூட்டணி வைத்தாலும் பா.ஜனதாவை வீழ்த்த முடியாது என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சொல்லி இருக்கிறாரே?

    பதில்- பொன்.ராதாகிருஷ்ணன் அப்படித்தான் சொல்லி ஆக வேண்டும். தமிழகத்தில் பா.ஜனதா கட்சிக்கு வாய்ப்பே இல்லை. தமிழகத்தில் பா.ஜனதா இப்போதும் வீழ்ந்து தான் கிடக்கிறது. அதை வீழ்த்தவேண்டிய அவசியம் இல்லை.

    கேள்வி- மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக தகுதி கிடையாது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியிருக்கிறாரே?

    பதில்- தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கட்சியில் படிப்படியாக பதவிகளில் இருந்து உயர்ந்தவர். அனுபவம் மிக்கவர். அப்படிப்பட்டவரை அமைச்சராக இருக்கும் தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சிப்பது, தரம் தாழ்ந்து பேசுவது கண்டனத்துக்குரியது.

    கேள்வி-நீங்கள் பா.ஜனதாவுக்கு சென்றால் காங்கிரசுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருக்கிறாரே?

    பதில்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் யோசனைகளுக்கு நன்றி. அவர், அவரது எதிர்காலத்தை பற்றி முடிவு செய்யட்டும். அவர் இது போன்று பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    கேள்வி-அ.தி.மு.க.வின் உட்கட்சி பூசல் பற்றி என்ன கருதுகிறீர்கள்.

    பதில்- ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் விரிசல் ஏற்பட்டு உடைந்து இருக்கிறது. மதுசூதனனுக்கும், அமைச்சர் ஜெயகுமாருக்கும் இடைப்பட்ட பிரச்சினையை பஞ்சாயத்து செய்யும் நிலையில் முதல்-அமைச்சர் இருக்கிறார். ஒரே தலைமை இல்லாமல் இரட்டை குதிரையில் அ.தி.மு.க. சவாரி செய்வதால் கட்சியும், ஆட்சியும் சரியில்லாமல் இருக்கிறது. அ.தி.மு.க. போய் சேரவேண்டிய இடம், போய் சேராது.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #Thirunavukkarasar
    தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #MinisterOSManian

    மதுரை:

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கைத்தறி ஆதவுத் திட்டம் குறித்து கைத்தறி நெசவாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, கருத்துகளை கேட்பதற்காக காஞ்சீபுரம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது.

    அதேபோன்று இன்று மதுரையில் 3-வது கூட்டம் நடைபெற்றது. இதில் கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கலெக்டர் வீரராகவ ராவ், கதர் துறையின் அரசு முதன்மை செயலர் பணீந்திரரெட்டி , கோஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசும் போது, தமிழகத்தில் மிக கவுரவமான தொழில் கைத்தறி தொழில் மட்டுமே.

    இந்த ஆண்டும் நெசவாளர் மக்களுக்கு பசுமை வீடு மற்றும் விலையில்லா மின்சாரம் வழங்கப்படும்.

    அரசின் கைத்தறி துறை இன்னும் ஒரு சில கஷ்டத்தை சந்திக்க உள்ளது. அது என்னவென்றால் தரமான பட்டு மற்றும் பருத்தி ஆகியவற்றின் உண்மை தன்மை மக்களுக்கு புரியாமல் உள்ளது. கலப்பட பொருட்களை தான் மக்கள் விரும்புகிறார்கள்.

    ஸ்மார்ட் கார்டு வந்த பின் இலவச வேஷ்டி சேலைகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கைத்தறி என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்துள்ளது.

    கூட்டம் முடிந்ததும் அவர் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழ்நாட்டிற்கு ஆதரவாக எந்த திட்டம் வந்தாலும் ஆதரிப்போம், மாறாக பாதிப்பாக வந்தல் மத்திய அரசை எதிர்ப்போம் இளைஞர்கள் மேலைநாட்டின் உடைகளை விரும்பி அணிவதால் புடவை விற்பனை குறைகிறது.

    அதற்கு ஏற்றவாறு கைத்தறியிலும் சுடிதார் உள்ளிட்ட ஆடைகளை தயாரிக்க மாற்றம் கொண்டு வந்துள்ளோம். முதன் முதலாக தேர்தல் பிரசாரத்தை தொடங்குவது அ.தி.மு.க. அது போல தற்போதும் தொடங்கி இருக்கிறோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.#MinisterOSManian

    தமிழகத்தில் தீவிரவாதம், பயங்கரவாதம் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பிதற்றி வருகிறார் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.53 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள கட்சிகள் மீது பயம் ஏற்பட்டுள்ளதால், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தீவிரவாதம், பயங்கரவாதம் என பிதற்றி வருகிறார்.

    தமிழகத்தில், தீவிரவாதம் எங்கு இருக்கிறது? என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விளக்க வேண்டும்.

    இந்தியாவிலேயே அமைதி தவழும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இங்கு தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #OSManian

    நாகை மாவட்டத்தில் 450 மீனவ குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வானகிரி, மேலையூர் கிராமங்களைச் சேர்ந்த 450 மீனவ குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கி பேசும்போது கூறியதாவது:-

    “2004 ம் ஆண்டு சுனாமி எனும் பேரிடரை தமிழகம் சந்தித்த போது, முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா அரசு அலுவலர்களை முடுக்கி விட்டு, சுனாமியால் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், வீடு, உடைமைகள் உள்ளிட்டவற்றை இழந்து, உணவு, உடையின்றி தவித்த மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், போர்க்கால அடிப்படையில் செய்திட அறிவுறுத்தினார். இதன் மூலம் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது.

    இந்த போர்க்கால நடவடிக்கையினை பார்த்து உலகமே வியந்தது. இயல்பு நிலைக்கு திரும்பினாலும் அவர்களது நிரந்தர வாழ்விடத்தை உறுதி செய்யும் வகையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்க உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து, தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு நிதியின் மூலம் தனியாரிடம் நிலம் வாங்கி நில ஆர்ஜிதம் செய்து, குடியிருப்புகள் கட்டப்பட்டு, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்புகளுக்கு அடிமனைப் பட்டா வழங்கப்படாமல் இருந்தது. தற்போது கிராம மற்றும் வட்ட கணக்குகளில் உரிய பயனாளிகளின் பெயரில் மாற்றம் செய்து பட்டா வழங்கப்படுகிறது.

    சுனாமி நிரந்தர குடியிருப்புகள் வழங்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த நிலையில், அந்த குடியிருப்புகளை பழுது நீக்கம் செய்து கொள்ளவும், அல்லது வங்கிக்கடன் பெற்று புதிதாக கட்டிக்கொள்ள ஏதுவாகவும், பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இன்றைய தினம் வானகிரி, மேலையூர் கிராமங்களைச் சேர்ந்த 450 மீனவ குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படுகிறது.

    மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக் கைகள் மேற்கோண்டு வருகிறது. சுனாமி வீடு பழுதுபார்ப்பதற்கு ரூ.50 ஆயிரம் ஒதுக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீன்வளக் கல்லூரியில் பயில மீனவர்களின் வாரிசுதாரர்களுக்கு 5 சதவீத இடஓதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வானகிரி, செருதூரில் முகத்து வாரங்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    நாகப்பட்டினத்தில் மீன்வளப் பல்கலைக்கழகமும், தலைஞாயிறில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தரங்கம்பாடி, வெள்ளப்பள்ளம் ஆகிய இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைத்திட தமிழக அரசு மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் மயிலாடுதுறை ஆர்.கே.பாரதிமோகன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பவுன்ராஜ் (பூம்புகார்), பி.வி.பாரதி (சீர்காழி), மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி, தாசில்தார் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×