என் மலர்
மதுரை
- மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்று வருகிறது.
- இப்புகைப்படங்களை மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பகிர்ந்துள்ளார்.
மதுரையில் நடைபெற்றுவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இயக்குநர்கள் வெற்றிமாறன், சமுத்திரக்கனி, ஞானவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை சந்தித்து சமுத்திரக்கனி, ஞானவேல் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதனையடுத்து மாநாட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸ் சிலையுடன் சமுத்திரக்கனி மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இப்புகைப்படங்களை மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் சலுகை.
- அதிகபட்சமாக 5000 ரூபாய் வரை சிறப்பு சலுகை வழங்கப்படும்.
மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் (அதிகபட்சம் ரூ.5000) சிறப்பு சலுகை வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
வரிகள் செலுத்த வசதியாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள் ஏற்படுத்தும் என்றும், ஏப்ரல் மாத சனி, ஞாயிறுக்கிழமைகளிலும் இந்த மையங்கள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது.
- கும்பாபிஷேகத்துக்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளன.
- குடமுழுக்கு முடிந்த பின்னர் ஐ.ஐ.டி. குழுவினரை கொண்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யலாம்.
மதுரை:
தென்காசி ரெயில் நகரை சேர்ந்த நம்பிராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் 14-ம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. இதற்காக புண்ணிய தலமான காசியில் இருந்து புனித நீர் வரவழைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்திய தொல்லியல்துறை மேற் பார்வையில் இந்த கோவில் உள்ளது.
இந்தநிலையில் கோவிலின் செயல் அலுவலரின் வாய்மொழி உத்தரவின் பேரில் கோவில் பகுதியில் இருந்து 100 டிராக்டர்களில் மண் அள்ளப்பட்டது. இதனால் கோவிலின் கட்டிடம் உறுதியிழந்து உள்ளது. காசி விஸ்வநாதர் கோவிலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2023-ம் ஆண்டு ஆலோசனை நடத்தப்பட்டு, கோவிலை மறுசீரமைப்பு செய்வதற்காக அரசு நிதி ஒதுக்கியது. ஆனால் அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை.
குறிப்பாக, கோவிலின் தூண்களை சீரமைக்கவில்லை. ராஜகோபுரத்தில் மழைநீர் கசிவு சரிசெய்யப்படவில்லை. இதனால் பழமையான கோவிலை இழக்கும் நிலையும், பக்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையும் உள்ளது.
கோவிலை புனரமைக்க ஒதுக்கிய நிதி முறைகேடு செய்யப்பட்டது விசாரணையில் உறுதியாகி உள்ளது. இதற்கிடையே வருகிற 7-ந்தேதி அங்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன. புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கும் வரை கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனர் நியமிக்க வேண்டும். அரசு நிதியை மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த ஐகோர்ட், புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனர், ஐ.ஐ.டி. குழுவி னரை நியமித்தும், அதுவரை கும்பாபிஷேகம் நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு விட்டன. கோவில் புனரமைப்புக்கான நிதி முறையாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. கும்பாபிஷேகத்துக்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளன. எனவே இதில் ஆய்வு செய்ய தேவையில்லை. குடமுழுக்கு முடிந்த பின்னர் ஐ.ஐ.டி. குழுவினரை கொண்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யலாம். கணபதி ஹோமம் முடிந்த பின்னர் குடமுழுக்கை நிறுத்துவது ஏற்கத்தக்கது அல்ல. எனவே கும்பாபிஷேகத்துக்கு விதித்த தடையை நீக்கம் செய்ய வேண்டும் என வாதாடினார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டனர்.
- தங்க நகை கடன் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை சட்டவிரோதமானது.
- நகர்ப்புறங்களில் கிராமுக்கு ரூ.5000, கிராமப்புறங்களில் ரூ.7000 வழங்கப்படும்.
மதுரையை சேர்ந்த பிச்சைராஜன், மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் கடந்த 2024 செப்டம்பர் 30-ந்தேதி சுற்ற றிக்கை ஒன்றை வெளி யிட்டார். அதில் பல வழி காட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. ஒரே பேன் கார்டு எண்ணை பயன்படுத்தி பல நகைக்க டன்களை பெறுவது, நகைக்கடன்களை குறிப்பிட்ட தொகை செலுத்தி திருப்பி வைப்பது, புதுப்பிப்பது ஆகியவை தொடர்பாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழிகாட்டுதல்கள் மிகவும் தெளிவற்றவையாக வெளியிடப்பட்டு உள்ளன. பொது நலனுக்கு எதிராக இந்த முரண்பட்ட வழிகாட்டுதல்கள் உள்ளன. தற்போதைய வழிகாட்டுதலின்படி முழு தொகையையும் நகை திருப்பும் போது செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏழை மக்கள் அவ்வாறு செலுத்த இயலாமல், நகைகளை இழக்கும் நிலை ஏற்படும்.
தற்போது வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் படி, ஒரு நபர் 5 முறை மட்டுமே நகைக் கடன்களை பெற இயலும். அதோடு நகர்புறங்களில் ஒரு கிராமுக்கு 5 ஆயிரம் ரூபாயும் கிராமப்புறங்களில் 7 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாகுபாட்டினை ஏற்க இயலாது. இது அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது.
ஆகவே தங்க நகைக் கடன் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை சட்ட விரோதமானது, செல்லாது என அறிவித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, வழக்கு தொடர்பாக ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
- கச்சத்தீவை மீட்க போராடுவோம் என 4 கட்சிகள் நாடகம் போடுகிறார்கள்.
- கச்சத்தீவை மீட்டால் நாம் தமிழர் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்த தயாராக உள்ளோம்.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் தியாகிகளின் நினைவு நாளை முன்னிட்டு நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்தியில் பிரதமராக வாஜ்பாய், ஐ.கே. குஜ்ரால், வி.பி. சிங், தேவகவுடா, மன்மோகன் சிங் ஆகியோர் ஆட்சியில் இருந்தபோது கூட்டணியில் இருந்த தி.மு.க. 18 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்கு வகித்தது. அப்போதெல்லாம் தி.மு.க. கச்சத்தீவை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது தேர்தலை கருத்தில் கொண்டும், மீனவர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கச்சத்தீவு மீட்பு குறித்து தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
கச்சத்தீவை மீட்க போராடுவோம் என 4 கட்சிகள் நாடகம் போடுகிறார்கள். தேர்தல் நேரம் என்பதால் இந்த பிரச்சனையை அவர்கள் கையில் எடுத்து உள்ளார்கள். கச்சத்தீவை மீட்டால் நாம் தமிழர் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்த தயாராக உள்ளோம்.
இந்துக்களின் வாக்குகளை பெறுவதற்காக பா.ஜ.க. இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள், சிக்கல்கள் உள்ள நிலையில் வக்பு பிரச்சனை தேவையானது தானா? திராவிட ஆட்சியிலும் வக்பு வாரிய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
46 ஆண்டுகளாக மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் கட்டாமல் இப்போது வாக்குகளுக்காக மணிமண்டபம் கட்டுவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களை காரணமேயின்றி மத்திய அரசு கிடப்பில் போடுவது ஜனநாயக விரோதமானது.
- நாட்டின் அரசியல் ஒற்றை தலைமையை நோக்கி செல்கிறது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டு கருத்தரங்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மாநில அரசுகள், மத்திய அரசின் பிரச்சார வாகனங்கள் போல நடத்தப்படுகின்றன.
மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக நமது குரலை உயர்த்த வேண்டும்.
மாநில அரசுகளின் ஆலோசனையின்றி தொகுதி மறுசீரமைப்பு நடைபெறுவதால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்.
மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களை காரணமேயின்றி மத்திய அரசு கிடப்பில் போடுவது ஜனநாயக விரோதமானது.
நாட்டின் அரசியல் ஒற்றை தலைமையை நோக்கி செல்கிறது. கூட்டாட்சி தத்துவத்தை நிலை நாட்டுவதற்காக ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.
சர்க்காரியா கமிஷன் அளித்த நல்ல பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என நினைப்பவர்களின் எண்ணம் ஈடேறாது.
- மாநிலங்களை அழிக்கும் பாசிச பாஜக ஆட்சியை ஒழித்தாக வேண்டும்.
திமுக கூட்டணியில் பிளவு ஏற்படாதா என நினைத்து கொண்டிருப்பவர்களின் எண்ணம் ஈடேறாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்நடில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் மேலும் கூறியதாவது:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டின் காரணமாக தூங்கா நகரமான மதுரை சிவப்பு நகரமாக மாறியுள்ளது.
கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என நினைப்பவர்களின் எண்ணம் ஈடேறாது.
கூட்டாட்சி என்ற சொல்லே மத்திய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி ஆகிவிட்டது. மத்திய அரசால் அதிக பாதிப்பு அடைவது நானும், கேரள முதல்வரும்தான். எங்கள் பேச்சுக்களை வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளலாம்.
மாநிலங்களை அழிக்கும் பாசிச பாஜக ஆட்சியை ஒழித்தாக வேண்டும்.
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் முழுநேர அரசியல் வாதியாக செயல்பட வைக்கிறார்கள். மாநிலங்களே இருக்க கூடாது என நினைக்கிறார்கள். வக்ஃப் சட்டத்தை நள்ளிரவில் நிறைவேற்றி உள்ளார்கள்.
கூட்டாட்சி தத்துவத்தை தொகுதி மறுசீரமைப்பு மூலம் சிதைக்க நினைக்கிறார்கள். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும்தான் இந்தியாவில் சுயாட்சி காப்பாற்றப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கோவிலை மறுசீரமைப்பு செய்வதற்காக அரசு தரப்பிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது.
- இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு விசாரணைக்கு வந்தது.
மதுரை:
தென்காசி சேர்ந்த நம்பிராஜன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலின் செயல் அலுவலர் முருகனின் வாய்மொழி உத்தரவின் பேரில் கோவில் பகுதியில் இருந்து 100 டிராக்டருக்கும் அதிகமான மண் அள்ளப்பட்டது. இதனால் கோவிலின் கட்டிடம் உறுதியிழந்து உள்ளது.
காசி விஸ்வநாதர் கோவிலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2023 ஆம் ஆண்டு கூட்டம் போடப்பட்டு, கோவிலை மறுசீரமைப்பு செய்வதற்காக அரசு தரப்பிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை. இதனால் பழமையான கோவிலை இழக்கும் நிலையும், பக்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையும் உள்ளது. இது தொடர்பாக தென்காசி மாவட்ட உதவி ஆணையர் ஆய்வு செய்ததில் பணிகள் முழுமை செய்யப்படாததும், அரசின் பணம் மோசடி செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதோடு நாள்தோறும் பணிகளை செய்தால் மட்டுமே ஏப்ரல் 7-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பாக பணிகளை முடிக்க இயலும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிப்பதோடு, தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தும், அரசு வழங்கிய நிதியை மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளனர்.
- அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் தொடங்கி வைத்தார்.
- ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை:
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு நேற்று 2-ந் தேதி தொடங்கி வருகிற 6-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள கலையரங்கில் நடைபெறும் இந்த மாநாடு தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
முதல் நாள் தொடக்க நிகழ்ச்சியாக வெண்மணி தியாகிகள் நினைவு செங்கொடியை மத்திய குழு உறுப்பினர் வாசுகியிடமிருந்து கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஏ.கே.பத்ம நாபன் பெற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் மாநாட்டு கொடியை மேற்கு வங்காள மூத்த தலைவர் பிமன்வாசு ஏற்றி வைத்தார். இதையடுத்து மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. இந்த மாநாட்டுக்கு திரிபுரா முன்னாள் முதல்-அமைச்சர் மாணிக் சர்கார் தலைமை தாங்கினார்.
அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் தொடங்கி வைத்தார். கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தாகாரத், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, விடுதலை அமைப்பின் பொது செயலாளர் தீபங்கர் பட்டச்சாரியா, புரட்சிக்கர சோசியலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவராஜன், மார்க்சிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஜி.ராம கிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
முன்னதாக கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மாநாட்டின் வரவேற்பு குழு உறுப்பினரான பால கிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாநில செயலாளர் சண்முகம், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோரும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
நேற்று மாலை பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, சினிமா டைரக்டர்கள் ராஜூ முருகன், நடிகர் சசிகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் வரலாற்று புகைப்படங்களின் கண்காட்சி, புத்தக கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள், இடதுசாரி தலைவர்கள் குறித்த கருத்தரங்கம், தியாகிகள் சுடர் சங்கமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இன்று 3-வது நாள் மாநாடு மாலை 5 மணியளவில் கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கமாக நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கம் மதுரை தமுக்கம் மைதானத்தில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் மதுரையில் பெய்து வரும் மழை காரணமாக இந்த நிகழ்ச்சியை ராஜா முத்தையா மன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த கருத்தரங்கில் மத்திய குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன் வரவேற்று பேசுகிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் நோக்க உரையாற்றுகிறார்.
மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா ஆகியோர் சிறப்புரை யாற்றுகிறார்கள். முடிவில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறுகிறார்.
இந்த கருத்தரங்கில் நெய்யாற்றிங்கரை பெண்கள் குழுவினரின் சிங்காரி மேளம் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கருத்தரங்கில் பங்கேற்ப தற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் 2.25 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார்.
மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து காரில் மதுரைக்கு வரும் மு..க.ஸ்டாலின் அழகர் கோவில் ரோட்டில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
பின்னர் அங்கிருந்து அவர் ராஜா முத்தையா மன்றம் சென்று கருத்த ரங்கில் பங்கேற்க ஏற்பா டுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்கும் மாநாடு காரணமாக தல்லா குளம், கோரிப்பாளையம் பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை (4-ந்தேதி) 3-ம் நாள் மாநாடு மாலை 5 மணிக்கு கேரள மாப்ளா முஸ்லீம் பெண்கள் குழுவினரின் ஆடல், பாடல் நிகழ்ச்சியுடன் தொடங்கு கிறது. இதனை தொடர்ந்து சென்னை கலை குழுவினரின் நாடகம் கானா விமலா பாடல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
சினிமா நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, இயக்குநர் வெற்றி மாறன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் திட்டமிட்டபடி தமுக்கம் கலையரங்கில் நடைபெறு கிறது.
- எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் தனித்தனியாக டெல்லி சென்று வந்தது மீண்டும் பேசும் பொருளானது.
- போஸ்டரில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா, ராஜன் செல்லப்பா, வேலுமணி, தங்கமணி ஆகியோரின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
திருமங்கலம்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் இடையே எழுந்த விரிசல் சமீபத்தில் சமரசம் ஆனதாக பரவலாக பேசப்பட்டது. இதற்கிடையே அவர்கள் இருவரும் தனித்தனியாக டெல்லி சென்று வந்தது மீண்டும் பேசும் பொருளானது.
இந்தநிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதி மற்றும் கள்ளிக்குடி ஆகிய இடங்களில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செங்கோட்டையனுக்கு ஒய் பிளஸ் செக்யூரிட்டி பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் அந்த போஸ்டரில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
அதில் எடப்பாடி பழனிசாமி படம் இடம் பெறாமல் போஸ்டர் அச்சிடப்பட்டுள்ளது மதுரை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
- ஆளில்லா விமானங்கள் பறக்க விடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை:
மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலம் திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடி வருகிற 6-ந்தேதி வருகிறார். அன்றைய தினம் அவர் மதுரைக்கு வான்வழியாக வருகை தருகிறார். மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி மதுரை விமான நிலையம், அதனை சுற்றியுள்ள பகுதிகள் உள்பட மதுரை மாவட்ட பகுதிகளில் 6-ந்தேதி டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா விமானங்கள் பறக்க விடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிமன் பாசு செங்கொடியை ஏற்றி வைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
- . வருகிற 6-ந்தேதி மதுரை பாண்டி கோவில் எல்காட் அருகில் இருந்து சுமார் 25 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடக்கிறது.
மதுரை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று தொடங்கி வருகிற 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
அகில இந்திய மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக இன்று காலை மதுரை தமுங்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள திடலில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, வெண்மணி தியாகிகள் நினைவு செங்கொடியை வழங்க, மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் பத்மநாபன் செங் கொடியை பெற்றுக்கொண் டார். பின்னர் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிமன் பாசு செங்கொடியை ஏற்றி வைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கொடியேறி பாலகிருஷ்ணன் நினைவு அரங்கில் கட்சியின் பொது மாநாடு தொடங்கியது. மாநாட்டிற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினரும், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக்க சர்க்கார் தலைமை தாங்கினார். வரவேற்பு குழு தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, சி.பி.ஐ. எம்.எல். விடுதலை பொதுச் செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யா, ஆர்.எஸ்.பி. பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையில் பொது மாநாடு தொடங்கி நடைபெற்றது.
முன்னதாக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று மாலை மதுரை வந்தார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மாநாட்டு அரங்கினை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், மாநில செயலாளர் சண்முகம், முன்னாள் மாநில செயலாளர் பால கிருஷ்ணன், வெங்கடேசன் எம்.பி. ஆகியோர் பார்வையிட்டனர்.
மாநாட்டின் முக்கிய நிகழ்வாக நாளை மாலை 5 மணிக்கு கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்னும் தலைப்பில் மாநில உரிமைகள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. கருத்தரங்கிற்கு மத்திய குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.
மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன் வரவேற்கிறார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் உரையாற்றுகிறார். கருத்தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, சி.பி.ஐ.எம். ஒருங்கிணைப் பாளர் பிரகாஷ் காரத் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
மாநாட்டில் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, வெற்றிமாறன், பிரகாஷ் ராஜ், மாரி செல்வராஜ், ஞானவேல், சசிக்குமார், பிரகாஷ்ராஜ், ராஜூமுருகன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்கின்றனர். பொது மாநாட்டை தொடர்ந்து இன்று பிற்பகல் தொடங்கி வரும் 6-ந்தேதி வரை 5 நாட்களுக்கு பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 1,000 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
மாநாடு நடைபெறும் 6 நாட்களும் மாலை நேரங்களில் தோழர் ஜானகி அம்மாள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள திறந்த வெளி மேடையில் கலை நிகழ்ச்சிகள் கருத்தரங்கள் நடைபெறுகின்றன. வருகிற 6-ந்தேதி மதுரை பாண்டி கோவில் எல்காட் அருகில் இருந்து சுமார் 25 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடக்கிறது. இதனை வாச்சாத்தி போராளிகள் தொடங்கி வைக்கின்றனர். அன்று மாலை 4 மணிக்கு வண்டியூர் ரிங் ரோடு சுங்கச்சாவடி அருகே பிரம்மாண்ட பொதுக்கூட்டம் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.
அந்நிகழ்வில் கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், கேரளா முதல்வர் பினராய் விஜயன், அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ராமகி ருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், வாசுகி, சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் ரெயில், வாகனங்கள் மூலம் நேற்று காலை முதலே மதுரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் மதுரை மாநகர் முழுவதும் செங்கொடிகள் பறக்க விடப்பட்டு ஆங்காங்கே வரவேற்பு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மாநாடு என்பதால் அகில இந்திய அளவில் கட்சியின் பிரதிநிதிகள் முக்கிய தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.






